கேரளத்தில் தலித் பூசகர்கள் -கடிதங்கள்

images

கேரள தலித் அர்ச்சகர் நியமனம்

கேரள தலித் அர்ச்சகர் நியமனம்’ பதிவினை வாசிக்கும் போது சிந்தனை மனநிலைக்குப் பதிலாக உற்சாக மனநிலையை அடைந்தேன். எனக்கு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில வரலாற்று தகவல்கள் பற்றிய அறிமுகம் இல்லாதிருந்தாலும் கூட, உங்கள் பதிலின் மையம், என்னுள் வார்த்தைகளாக உருப்பெறாதாக சிந்தனைகளை சிறு பிசின்றி பிரதிபலிக்கக்கூடியதாக இருந்தது. அதனை உங்கள் எழுத்தில் கண்டதும் உற்சாகமாக உணர்ந்தேன். Love u j.

இம்முறையாவது கலந்து கொள்ள வேண்டுமென்று ‘விஷ்ணுபுரம் விருது’ விழாவினை எதிர் நோக்கி இருக்கிறேன்.

அன்புடன்
ரியாஸ்

***

அன்புள்ள ரியாஸ்,

நன்றி

காலையில் இருந்தே மின்னஞ்சல்களில் வசைகள். பெரும்பாலானவை மொட்டை வசைகள். எல்லாமே நான் ஆலயத்தின் குறியீட்டுச்சடங்குகளை மாற்றக்கூடாது, ஆகவே தலித்துக்களை உள்ளே விட்டது தவறு என எழுதியிருப்பதாக எண்ணி எடுக்கப்பட்ட வசைகள். வாட்ஸபில் சில பகுதிகளை வாசித்துவிட்டு எழுதியவர்கள் பலர். ஆனால் கணிசமான ’பெரியாரியர்கள்’ முழுக்கட்டுரையையும் வாசித்து அப்படிப் புரிந்துகொண்டவர்கள்.

இன்னொரு சாரார் ஆலயத்தின் கருவறைக்குள் சக்திகள் நுண்வடிவில் குடியிருப்பதனால் அங்கே உயர்சாதியினர் அன்றி பிறர் செல்லக்கூடாது என நான் எழுதியிருப்பதாகப் புரிந்துகொண்டவர்கள். பெரியாரியர்களுக்காக தனியாக ஒரு தளம் அமைத்து தந்தி நாளிதழ் ஊழியர்களைக்கொண்டு கட்டுரைகளை திரும்ப எழுதவைக்கலாமா என்றுகூட குழம்பிவிட்டேன்

எனக்குத்தான் ஏதாவது மொழிப்பிரச்சினையா என கட்டுரையை நானும் பலமுறை வாசித்துப்பார்த்துவிட்டேன். ஒன்றும் தெரியவில்லை. உங்கள் கடிதம் கண்டதும் ஒரு நிம்மதி. அப்பாடா மொழி எல்லாம் ஒரு சிக்கல் இல்லை.

ஜெ

***

அன்புள்ள ஜெ

கேரள ஆலயங்களில் தலித் பூசாரிகள் நியமிக்கப்படுவதைப்பற்றிய உங்கள் கட்டுரை மிகத்தெளிவு. நாராயணகுரு கேரளத்தில் உருவாக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளின் பின்புலத்தை உங்கள் தளத்தில் உள்ள கட்டுரைகளில் இருந்தே புரிந்துகொண்டவர்களுக்கு மேலும் புரியக்கூடிய கட்டுரை

நாராயணகுரு அனைத்து மக்களுக்கும் அனைத்து மத உரிமைகளும் அனைத்து மெய்ஞானங்களும் சொந்ந்தமாக ஆகும் ஒரு காலகட்டத்தை முன்வைத்து அதற்கான பணிகளைத் தொடங்கியவர். அவருடைய எண்ணம் இன்று நிறைவேறியிருக்கிறது. இன்னும் நெடுங்காலம் ஆகும். மற்ற மாநிலங்கள் கேரளத்தைத் தொடர இன்னும் அரைநூற்றாண்டாகும்

ராமச்சந்திரன்

***

அன்புள்ள ராமச்சந்திரன்

கேரளத்திலும் கூட ஓரளவு எதிர்ப்புகளும் விவாதங்களுமாகவே இந்த பிரச்சினை நன்முதிர்ச்சியை நோக்கிச் செல்லும் என நினைக்கிறேன்.மானுடம் முன்னோக்கியே செல்லும் என்பதே நம்பிக்கை

ஜெ

முந்தைய கட்டுரைகுழந்தையிலக்கியம் பட்டியல்கள்
அடுத்த கட்டுரைமாபெரும் குப்பைக்கூடை