ஜெ
கோயில்களில் தலித் பூசகர்கள் என்பதை இங்குள்ள பிராமணர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் இப்படி நடப்பது சாத்தியமா என்ன?
எஸ்.ராகவன்
***
அன்புள்ள ராகவன்,
கோயில்களில் பூசைசெய்துவருபவர்களுக்கு இது தொழில்சார்ந்த போட்டி. ஆகவே அவர்களில் ஒருசாரார் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். ஆனால் இன்று பிராமணர்களிலேயே பெரும்பாலானவர்களுக்கு ஆலயப்பூசையில் ஒரு தொழில் என்றவகையில் ஈடுபாடில்லை. சென்னைக்கும் திருச்சிக்கும் வெளியே பிராமணர்கள் மிகமிகக்குறைவு. பல ஊர்களில் பிராமணப்பூசகர்கள் இல்லாமல் பூசைநிகழாத நிலையே உள்ளது. ஆகவே வேறுவழியில்லை, மெல்லமெல்ல பிராமணரல்லா பூசகர்கள் என்னும் நிலை வந்தே தீரும்.
அதை பிராமணர்களில் பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்வார்கள் என்பதே என் எண்ணம். ஏனென்றால் இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த அத்தனை சமூகமாற்றங்களையும் மதச்சீர்திருத்தங்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டு தங்களை மாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பழைமையின் எதிர்ப்பை தர்க்கபூர்வமாக விளக்கமுடிகிறதா இல்லையா என்பது மட்டுமே கேள்வியாக இருக்கிறது
ஆனால் பிராமணரல்லா உயர்சாதியினர் ஏற்பதுதான் மிகக்கடினம். இன்றும்கூட கண்டதேவியின் தேரை ஓட்டுவதே கடினம். மதுரை ஆலயநுழைவு நடந்து நூறாண்டு நெருங்கும் வேளையில். தலித் அர்ச்சகர்கள் அமையும் ஆலயத்திற்கு தமிழகத்தின் இடைநிலைச்சாதியினர் ஆதரவளிக்க மாட்டார்கள். அவர்கள் நடுவே எந்தவகையான முற்போக்கு அறிவியக்க ஊடுருவலும் இதுவரை இல்லை. சாதிவெறி அவர்களின் பண்பாடாகவே உள்ளது
அதை மறைக்கவே இங்கே இத்தனை பிராமணவெறுப்பு பேசப்படுகிறது. அது சாதிக்காழ்ப்பின் வெளிப்பூச்சு. இங்கே தலித் பூசகர் வந்தால் பிராமணர் எதிர்ப்பார்கள் என்று என்னிடம் சொன்ன ஒருவரிடம் நீங்கள் ஏற்பீர்களா என்று கேட்டேன். “அவங்களுக்கு தகுதி கெடையாது சார்” என்றார்.
இங்கே தலித் பூசகர் அமைந்ததைப்பற்றி எம்பிக்குதிப்பவர்கள் பெரும்பாலும் கோயிலை இடிக்கவேண்டும் என்று சொல்லும் நாத்திகர்கள். அவர்களைப் புரிந்துகொள்வது மிக எளிது, ஒரே ஒரு சர்க்யூட் மட்டுமே.
அனைத்துசாதிகளும் அர்ச்சகர் என்னும் கோஷம் இங்கே நாற்பதாண்டுகளாக உள்ளது. பலமுயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் ஆலயங்கள் மேல் மதிப்பில்லாதவர்கள் பிராமணர்கள் மேல் காழ்ப்பு கொண்டவர்கள் அதைச்செய்யும்போது அது சாதிக்காழ்ப்பின் விளைவாகவே பொருள்படுகிறது
நடைமுறையில் கேரளத்தைப்போல இடைநிலைச் சாதிகள் ஆகமங்களைக் கற்று வைதிகமரபு கொண்ட பெருங்கோயில்களில் பூசகர்களாகி அவர்களுக்கு பரவலான ஏற்பு உருவானபின்னர் அடுத்தபடியாகவே தலித் பூசகர்கள் என்னும் நடவடிக்கைக்கு ஆதரவிருக்கும்.
ஜெ
***
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
என்னுடைய மற்றும் நண்பர்களின் கேரள தலித் அர்ச்சகர் நியமனம் பற்றிய சந்தேகங்களுக்கு மிகத்தெளிவான தங்களின் விரிவான கட்டுரைக்கு நன்றி.அதில் என்னளவில் புரிந்துகொண்ட முக்கியமான கருத்துக்களை கீழே கொடுத்திருக்கிறேன்.
1) இது தற்போது ஊடகங்களிலும்,பொதுவெளிகளிலும் கூறப்படுவதுபோல் முழுக்கமுழுக்க “பினராயி விஜயன்” தலைமையில் இயங்கும் இடதுசாரி
அரசின் அதிரடி முடிவு மட்டுமல்ல பலரும் இதற்காக காலகாலமாக முயற்சி செய்துவந்திருக்கிறார்கள் என்பது.
2) குடும்ப பரம்பரை,பிராமண வகுப்பில் பிறப்பது மட்டுமே ஆலயத்தில் இறைவனுக்கு பூஜை செய்யும் தகுதியை ஒருவருக்கு கொண்டு வந்து விடாது என்பது.
3) தகுதியும்,ஆர்வமும்,பக்தியும் உடைய எவரும் அர்ச்சகராக வரலாம் என்பது.
4) முக்கியமாக இறை நம்பிக்கையில்லாததோடு மட்டுமல்லாமல் ஹிந்து கடவுளர்களை இழிவுபடுத்தி (சொல்லிலும்,செயலிலும்) செயல்பட்டு
வரும் தமிழகத்தை சேர்ந்த திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த முன்னெடுப்புக்கு எந்த வகையிலும் அருகதை இல்லாதவர்கள் என்பது.
இறுதியாக ஒரு ஆதங்கம் கேரள கோயில்களில் ‘ஆடை குறியீடு’ (Dress Code) பக்தர்களுக்கும் கண்டிப்பாக பேணப்பட்டு வரும் நிலையில் ‘யது கிருஷ்ணா’ அவர்களுக்கு வழங்கப்படும் கோயிலின் “பூர்ண கும்ப மரியாதையை” சட்டை அணிந்து கொண்டு வழங்கியது மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்தியது. (இங்கு தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம் அதிகாரம்,அந்தஸ்து உள்ளவர்கள் சில கோயில்களில் கருவறைக்குள்ளேயே சட்டை அணிந்து செல்லலாம்,யாரும் கேட்க முடியாத அவல நிலை)
அன்புடன்,
அ .சேஷகிரி.
அன்புள்ள சேஷகிரி
கேரளத்தின் ஆலயச்சடங்குகள் முறைப்படித்தான் பேணப்படும். ஆதங்கங்கள் தேவையில்லை. அந்தந்த ஊரின் முறைமைகளுக்கு சிறிய மாற்றங்கள் இருக்கும்
யதுகிருஷ்ணாவை ஆலயத்தின் பூசகரோ வைதிகரோ பூர்ணகும்பம் அளித்து வரவேற்கவில்லை. அது ஊர்க்காரர்களால் செய்யப்பட்டது. அவருடைய வரலாற்றுச்சிறப்புமிக்க நுழைவை கௌரவிக்கும்பொருட்டு. அது எதிர்பாராததும் கூட.பூரணகும்ப வரவேற்பு கேரளத்தில் இல்லங்களிலேயேகூட அனைவராலும் செய்யப்படுவதுண்டு. செய்பவரும் சட்டையுடன்தான் இருக்கிறார்
மேலும் யதுகிருஷ்ணா அந்தப்புகைப்படத்தில் சட்டையுடன் இல்லை. அவருக்குப் போர்த்தப்பட்ட சால்வையை அணிந்திருக்கிறார்.
யது கிருஷ்ணா சந்தனப்பிரசாதம் வழங்கும் முறையைக் கவனியுங்கள். பெறுபவரைத் தொடாமல் கையில் போடுகிறார். இது கேரள மரபு. தாந்திரிக விதிப்படி நீராடி சங்கல்பம் எடுத்துக்கொண்ட பூசாரி மட்டுமே கருவறைக்குள் நுழைய முடியும். எவரையும் அவர் தொடக்கூடாது.தொட்டால் மீண்டும் நீராடவேண்டும். சென்றகாலங்களில் இது பிராமணச் சாதிவெறி என்றும் தீண்டாமை என்றும் சிலரால் தமிழகத்தில் எழுதப்பட்டுள்ளது. இன்று தலித் பூசகர் வந்தாலும் அதில் மாற்றமில்லை
ஜெ
***