ஆழமற்ற நதி -கடிதங்கள்

134569_thumb

ஜெ அவர்களுக்கு

வணக்கம்..

ஆழமற்ற நதி படித்தேன்.. என்னுள் ஏற்பட்ட கலக்கத்தை எப்படி வார்த்தைகளில் வடிப்பது என்று தயங்கினேன்.. தொடர்ந்து பல வாசகர்கள் விரிவாய் அதைப் பற்றி எழுதியதைப் பதிவு செய்தீர்கள்.. அது சற்றே ஆசுவாசமாய் உணரச் செய்தது.. அப்பாடா!! நம்மைப் போல் சிலர் இருக்கிறார்கள் என்று..

நதியின் விவரிப்பு தொடங்கி, அங்கு வந்து சென்றவர்கள் ஒவ்வொருவரைப் பற்றிய குறிப்பும் என் மனதில் குறும்படம் பார்த்த உணர்வையே ஏற்படுத்தியது.. உங்கள் வார்த்தைகள் கூராய் செதுக்கி எடுத்திய பென்சில் முனையைப் போல் செயல்படுகிறது…

வாசகர் கடிதம் பற்றிய உங்கள் பதிவையும் பார்த்தேன்.. ஒவ்வொரு முறை உங்களுக்கு அஞ்சல் செய்யும் பொழுதும் சற்றே யோசிப்பேன்.. எத்தனை எளிதாய் ஒரு படைப்பாளியை தொடர்பு கொள்கிறோம் என்று..

உங்கள் வரிகளில் சொல்வதானால்,

வாசகர் கடிதம் என்பது வாசகரின் ‘கருத்து’ அல்ல. அது பாராட்டோ மதிப் பீடோ கூட அல்ல. அது வாசகர் படைப்பை உள்வாங்கிக்கொள்ள முயலும் ‘செரிமானச் செயல்பாடு’ அது. எப்படியெல்லாம் ஒரு படைப்பு வாசிக்கப்பட இயலும் என அவை காட்டுகின்றன. ஒவ்வொரு மானுட உள்ளமும் ஒவ்வொன்று என்பதனால் வாசிப்புகள் முடிவிலாதவை. மேலும் மேலுமென வாசிப்புகளை உருவாக்குவதே நல்ல படைப்பின் இயல்பு. பன்முகவாசிப்புத்தன்மை என அதை நவீன இலக்கியவிமர்சனத்தில் சொல்வார்கள்.

இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ஏன் அஞ்சல் செய்கிறேன் என்பதை எனக்கு உணர்த்திய வரிகள் இவை.

நீங்கள் என் போன்ற வாசகர்களுக்கு ஒரு மதிப்பை அளிக்கிறீர்கள். எங்கள் குரலுக்கு செவிமடுக்கிறீர்கள் என்பதே பெருமகிழ்ச்சி தரும்.

நன்றி

பவித்ரா

குறிப்பு: மதுரை நகர் உங்களுக்கு கசப்பு அனுபவம் தருவது வருத்தம் தான்..

***

அன்புள்ள ஜெமோகன் சார்,

பல நாட்களுக்க்கு பின் ஒரு கடிதம். எப்பொழுதும் உங்கள் பதிவுகள் கட்டுரைகள் நாவல்கள் (கொஞ்சம் வெண்முரசு) என்று படித்தாலும் கொஞ்சமேனும் வளர்ந்த பின் எழுதுவோமே என்று விட்டுவிட்டேன்.

(வளரவில்லை. சரி முடிவை மாற்றிக்கொண்டேன் )

“ஆழமற்ற நதி” – அருமையாக இருந்தது.

எல்லோரும் இங்கே சாட்சியாக நீதிபதிகளாக இருக்கின்றனர். அறம் பேசுகிறார்கள். அவர்களுக்கான சுய அறம் என்பது Subjective ஆக அவரவர் பார்வையில் உள்ளது.

ஒரு குற்றத்தை செயற்கையாக உருவாக்கி அதை அந்த dilemma வை சொல்ல பயங்கர முயற்சி செய்யும் கதைகளை படித்து அயர்ச்சியுடன் இதற்கு வந்தால் ஒரு மிகப்பெரிய relief கிடைக்கிறது.

இங்கு ஆழமற்ற நதி என்பது எது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” இல் வரும் “நீர்வழிப் படூஉம் புணைபோல்” என்ற அந்த நீரா? (வாழ்க்கையா)

கதிர் எனும் அந்த எல்லா வாசலும் அடைத்த அந்த வீட்டில் (மனத்தில்) இயல்பாக உணர்வது தான் அறமா.?

அதை நாம் தான் பல தோரணைகள் பாவனைகள் மூலம் அடைத்து வைத்துள்ளோமா.
எல்லாவற்றையும் நோக்கி விளித்து நம் அற உணர்ச்சியை பிரகடனப் படுத்தி நம் இக்கட்டுகள் கலைந்தவுடன் அச்சால்டாக கடந்து செல்கிறோமா?

நம்முள் உறைந்திருக்கும் கதிரை பார்க்ககூட பயப்படுகிறோமா? அந்த (மன) சிகிழ்ச்சைக்கு கூட மனமுவக்க மாட்டோமா ?
எவ்வளவு தான் சமூக கட்டில் உயர்ந்து இருந்தாலும் (மீண்டும்) “யாதும் ஊரே” யில் சொல்வது போல “பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” தானா.

“நீதிபதி” “நம்பூதிரி” “குமாஸ்தா” “டிரைவர்” “எம்பீஏ” என்று எல்லா தளத்திலும் (class இலும்) இருக்கும் பொதுமையும் அதே நேரம்,ஒவ்வொருவர் பார்வையின் வித்தியாசமும்

மூழ்கத் தெரியாத, படிகளின் மேல் ஓடிச் செல்லும் நம் அன்றாட வாழ்வும் – இதை படித்து கடந்து செல்லும் “நான்” உம் என்று ஒரு சிறுகதை வாழ்க்கையை அழகாக கத்தி போல் தீர்க்கமாக இயல்பாக ஆழமாக சொல்லி அதிகம் சலனமில்லாமல் நகர்ந்து செல்கிறது

இந்த நதி ஓடிக்கொண்டே இருக்கிறது.

கதிரை நோக்கி

ஸ்ரீதர்

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 38
அடுத்த கட்டுரைசோபியாவின் தரப்பு