தருமபுரி அருகே பாப்பாரப்பட்டி சிலருக்கு நினைவிருக்கலாம். சுப்ரமணிய சிவா தன் பாரதமாதா ஆலயத்தை அமைத்த இடம். அங்கே பரம்வீர் பாணாசிங் மேல்நிலைப்பள்ளி என்னும் தரமான கல்விநிறுவனத்தை நிறுவி நடத்தியவர் திரு ஸ்ரீதரன் அவர்கள். வழக்கமாக கல்விநிறுவனங்களுக்குச் சொந்தத்திலுள்ள எவர் பெயரையேனும் இடுவதே வழக்கம். ஸ்ரீதரன் முன்னுதாரணமாக அமையவேண்டியவர்களின் பெயரே கல்விநிறுவனத்திற்கு போடப்படவேண்டும் என்னும் கொள்கை கொண்டவர். முதமுதலாக பரம்வீர் சக்ரா வாங்கிய பாணாசிங் அவர்களின் பெயரால் அமைந்த பள்ளி அவருடையது
இருபதாண்டுகளுக்கு முன்பு அவருடன் நெருக்கம் இருந்தது. அவருடைய ஆதரவில் தர்மபுரியில் பிரபஞ்சனுக்கு ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தேன். அதன்பின் இரு இலக்கியச்சந்திப்புகளும் அவருடைய உதவியுடன் நடந்தன. நண்பர் தங்கமணி இன்று இச்செய்தியை அனுப்பியிருந்தார்
நெஞ்சம் கனக்கிறது. நல்ல பண்பாளர்,இலக்கிய ஆர்வலர்,புரவலர்,பாப்பாரப்பட்டி பரம்வீர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திரு.சிரீதரன் அவர்கள் இயற்கையோடு கலந்தார்.
நல்ல செயல்கள் எங்கு நடந்தாலும் தாமாக முன்வந்து அதிகபட்ச பங்களிப்பவர்.
1995-2005 ஆண்டுகளில் அவரது ஆதரவில் நடத்திய இலக்கிய கூட்டங்கள் மறக்க முடியாதவை.
அவரது பணிகளை முன்னெடுக்க மகன் திரு.கணேஷ் ஐ அவரது நகலாக உருவாக்கியிருப்பது ஆறுதல்.
அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
திரு ஸ்ரீதரன் அவர்களுக்கு அஞ்சலி