ஆழமற்ற நதி [சிறுகதை]
வணக்கம்
’ஆழமற்ற நதி’ ஒரு வியாழன் அன்று விகடனில் வெளிவந்த உடன் உங்களின் பெயரைப்பார்த்துவிட்டு வாசித்துவிட்டேதான் (இணையத்தில்) கல்லூரி சென்றேன்.
இன்று வரையிலும் அதைக்குறித்து பலரிடம் பேசிக்கொண்டும் கதை குறித்து வ்ரும் பலவித விமர்சனங்களையும் வாசித்துக்கொண்டுமிருக்கிறேன். நானும் என் சொந்த அனுபவங்களுடனேதான் இக்கதையை பொருத்தியும் முடிச்சிட்டும் பார்த்துக்கொள்கிறேன்
சடங்குகளில் மிகுந்த நம்பிக்கைகொண்டவரும் மனிதர்களின் மேல் காரணமற்ற் வெறுப்பும் வன்மமும் கொண்டவராகவே இந்த 78 வயதிலும் இருக்கும், என்றைக்கும் ஒரு தலைமை ஆசிரியராகவே காட்சியளித்து தந்தையென உணரவே முடியாத அச்சமூட்டும் ஒரு ஆளுமையாகவே இருக்கும் என் அப்பாவை அதிகம் இக்கதையின் பிறகு கதையுடன் தொடர்புபடுத்தி நினைத்துக்கொள்கிறேன்
அவரின் தாயாரை எந்த விதத்திலும் இறுதிக்காலத்தில் சரியாக கவனித்துக்கொள்ளாத அவர் 1995 ல் ஆத்தா இறந்த பின் தவறாமல் எல்லாச்சடங்குகளும் செய்கிறார். சமீபத்தில் ஒரு மளையாளக் குடும்பத்துடன் சென்று கேரளாவிலும் சில சடங்குகள் செய்து வந்தார்.
அப்படிப்பட்ட நாட்களில் கல்லூரியிலிருந்து நான் வந்தபின்னர் மாலை ஆத்தாவின் புகைப்படத்துக்கு முன்பாக என்னை வழிபடச்சொல்கையில் புகைப்படத்திலிருக்கும் ஆத்தாவின் முகத்தைப்பார்த்ததும் எனக்கு இத்தனை வருடங்களுக்குப்பின்னரும் கண்ணைக்கரித்துக்கொண்டுதான் வருகிறது. ஒருவேளை இறந்தவரகளுக்கு இவற்றையெல்லாம் உணரும் சக்தியிருக்குமேயானால் ஆத்தா ஒருபோதும் என் அப்பாவை மன்னிக்கவே மாட்டாரென்றுதான் நினைக்கிறேன்.கடைசிக்காலத்தில் சரியான உணவு கூட இன்றி மிக கஷ்டப்பட்டு இறந்தவர அவர்
உயிருடன் இருப்பவரகளின் மேல் எல்லாசெயல்களிலும் வன்முறையையே வெளிப்படுத்தும் என் அப்பா சடங்குகளில் தன்க்கு நம்பிக்கை இருப்பதாகவும் அதில் தன் தவறுகள் மன்னிக்கப்படுமென்றும் நம்புகிறாரா? அல்லது தான் தவறு செய்ததும், செய்துகொண்டிருப்பதும் அவருக்கு இன்னும் தெரியவில்லையா? இந்த கதையை படித்தபின்பு பலமுறை எனக்குள்ளேயே இக்கேள்வியைக் கேட்டுக்கொள்கிறேன்
மேலும் கதிரைப்போன்ற சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களில் சிலர் வித்தியாசமாகவும் இருக்கிறார்கள்
சரண் அப்பாவின் நண்பரொருவரின் மகன் 3 மாதக்கருக்குழந்தையாக இருக்கையிலேயே மூளை வளர்ச்சியில்லை என்றும் அதை அழிப்பதெ உகந்ததென்றும் மருத்துவர்களால் சொல்லப்பட்டும் அழிக்கமால் அவனைப்பெற்றுக்கொண்டார்கள்
மூளை வளர்ச்சியின்றி பிளவு உதடுகளுடன் பிறந்த அவன் சரணை விட 2 வயது மூத்தவன். ஒற்றைச்சமபளத்தில் அவனை கணவனும் மனைவியுமாக அரும்பாடு பட்டு வளர்த்தார்கள். கற்றல் குறைபாடுமுள்ளவன் அவன்
சிறப்பு பள்ளி பேச்சுப்பயிற்சி என மொத்த வாழ்க்கையுமே அவனுக்கானதென்றாக்கினார்கள்
அப்படிபட்டவர்களை நான் அபூர்வமாகவே கண்டிருக்கிறேன். 10 நாட்களுக்கு முன்பு சென்னை சென்றிருந்தபோது மயிலாப்பூரில் இருக்கும் அவர்களையும் போய்ப்ப்பார்த்தேன் அவன், ஹரீஷ். தற்போது 90 சதவீதம் நன்றாகவே இருக்கிறான் சில அறுவை சிகிச்சைகளின் பிறகு அவன் முகமும் கொஞ்சம அவன் பேசுவதற்கு பெரிய தடையாக இல்லாத வகையில் மாற்றியமைக்கப்பட்டிருகிறது BFA இரண்டம் வருடம் படிக்கிறான் என்னை அடையாளம கண்டுகொண்டான்
சந்தோஷமான குடுமபம் அது அவனுடன் நிறைய புகைப்படம் எடுத்துக்கொண்டேன் அவன் வரைந்த உயிரொட்டமுள்ள பல சித்திரங்களை வியந்து பார்த்தேன். அன்று நல்ல மழை, நினைத்துக்கொண்டாற்போல மழையில் சட்டேன வெளியேறி தெருமுனை பூக்கடையில் எனக்கு மல்லிகைச்சரம் வாங்கிவந்தான் அந்த அன்பை இந்த கதையை வாசித்தபின்னர் என்னால் இதயத்திற்கு மிக மிக அருகிலிருக்கும் ஒன்றாகவேதான் காணமுடிகின்றது மறக்க முடியாத மல்லிகைச்சரம் அது
நாங்கள் புறப்படுகையில் என்னிடமிருந்த இரண்டு பைகளில் ஒன்றை அவன் இயல்பாக வாங்கிக்கொண்டு சாலையில் தேங்கியிருந்தமழைநீரில் நான் கால்வைத்துவிடாமல் வரும்படி சைகை செய்தான் என்னை காரில் ஏற்றிவிட்டு கண்ணாடிக்கதவிற்கு வெளியே கையசைத்தான்.அவனின் மிகப்பெரியதடித்த கண்ணாடிச்சட்டங்களின் உள்ளிருந்து தெரிந்த அகன்ற கண்களின் அன்பை இப்போதும் மிக நெருக்கத்திலெனெ என்னால் உணரமுடிகின்றது. ஆழமற்ற நதி அப்போதும் நினைவிலிருந்தது.
மனமார்ந்த ஆசிகளுடன் கண்கள் பனிக்க அவனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டேன்
ஒரு கதையை பல்லாயிர கணக்கானவர்களின் வாழ்வில் புகுந்துகொள்ளும்படி செய்கிறீர்கள் எப்பொழுதும்
நன்றி மற்றும் அன்புடன்
லோகமாதேவி
***
அன்புள்ள ஐயா
ஆழமற்ற நதி வாசித்தேன். தொடர்ந்து வரும் கடிதங்களைப் படிக்கும் போது, எவ்வளவு ஆழமற்று வாசித்திருக்கிறோம் என்று தோன்றியது. வாழ்வு முழுவதும், காணும் காட்சிகள் எல்லாவற்றையும் படிமங்களாகவே பார்க்கும் பார்வையை, உங்களைப் படிப்பவ்ர்களும் பெற்று வருகிறார்கள்.
மரணம் என்னும் புதிரின் முன், முடிவிலி முன் நிற்கும் அறியாமையால் வரும் துயர், ஞானம் என்ற ஒன்று, Realisation என்ற ஒன்று உள்ளது என்ற நம்பிக்கையும் ஆனால் அடைய முடியாமையால் வரும் சோகமும் – இவை தான் மனித குலத்தை ஓட விட்டு வேடிக்கை பார்க்கிறது
சுய உணர்வு அற்றவர் ஒப்பந்தம் செய்ய தகுதி அற்றவர் என்ற சட்ட அடிப்படையை , தீர்ப்பு சொல்லும் நீதிபதி மீறி, கதிரின் கைநாட்டை வாங்கும் இடம் துயர்தரும் முரண். அப்போது அவர் படித்த நீதி அவரிடம் என்ன சொல்லி இருக்கும்? கைநீட்டும் பழக்கம் உள்ளதால், ஒரு வேளை ஆழமாக, சட்டமும் தர்மமும் உள்ளே செல்லவில்லையோ:?
ஒரு வேளை இது ஏழைக் குடும்பமாக இருந்திருந்தால், குற்ற உணர்வே இல்லாமல், குழாய் பிடுங்கப் பட்டிருக்கும். அல்லது ஒரு சோதிடரிடம் சென்று கேட்டு, குற்ற உணர்வின் ஆழம் நிரப்பப் பட்டிருக்கும்? அல்லது பூ கட்டிப் பார்த்தோ (probability) குறி கேட்டோ முடிவு செய்திருப்பர். எப்படியோ முடிவிலி முன் எடுக்கும் ஆழமறியா முடிவுக்கு ஒரு சுமை தாங்கி தேவை.
எனக்கு தெரிந்த நண்பரின் குழாய் பிடுங்கும் முடிவை (Ventilator வெளியே எடுப்பது) வேறொரு நண்பரே செய்தார்.
நீதிபதியின் பகட்டும், அற வீழ்ச்சியும், பேரனை out house இல் வைக்கும் கீழ்மையும் அவரைக் குத்திக் கிழிப்பதால், பிழைநிகரைத் தேடி ஓடுகிறார்
நேர்மையான நீதிபதிகள் தர்மதேவதையின் இருக்கையில் பெரும் அவதியுடன் அமர்ந்திருந்தார்கள். புதுக்கோட்டை புவனேஸ்வரி கோயில் அம்மன் படத்தில் அமர்ந்திருக்கும் அவதூத ஸ்வாமிகளில் ஒருவரான ஜட்ஜ் ஸ்வாமிகள், திருவனந்தபுரத்தில் ஒரு இக்கட்டான வழக்கில் தீர்ப்பு சொல்ல வேண்டி, நீதிபதி இருக்கையில் இருந்து, திடீரென எழுந்து வெளிவந்து துறவியாகி விட்டதாக அக்கோயில் தொடர்பான நூல் கூறுகிறது. எங்கள் அலுவலகத்தில் இருந்த மேலாளரின் கணவர் (கேரள மாநில நீதிமன்ற ) நீதிபதி, இதே போன்ற வழக்கின் இக்கட்டில் ஒரு நாள் இரவு, திடீரென paralaysis பாதிக்கப்பட்டு செயலிழந்தார். தங்கள் ஆழத்தை, நீதியின் ஆழத்தை தேடி, ஓடி, இவர்கள் இப்படி ஆகிவிட்டனரோ? காசிநாதனின் ஆழ் மனம் அவ்வளவு ஆழமற்றதாகையால், சாதாரண வாழ்வில் வாழ்கிறாரோ?
மொத்தத்தில், ஆழ்மனத்தின் abyss ஐ சுரண்டிய கதை
பணிவுடன்
ஆர் ராகவேந்திரன்
கோவை