நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 4
அவை கலைந்து அனைவரும் எழுந்தனர். துருபதர் குந்திக்கும் அவைக்கும் வணக்கம் உரைத்தபின் கருணரை நோக்கி தன்னைத் தொடரும்படி கைகாட்டிவிட்டு அணுக்கனுடன் பக்கத்து அறைக்கு சென்றார். குந்தி எழுந்து திரௌபதியை அணுகி தாழ்ந்த குரலில் ஏதோ சொல்லி தன்னுடன் அழைத்துக்கொண்டு பிறிதொரு வாயிலினூடாக வெளியே சென்றாள். “ஆக, என்ன முடிவெடுத்திருக்கிறோம்?” என்றான் சகதேவன். நகுலன் “நம் அவைகள் வழக்கமாக எடுக்கும் முடிவைத்தான். பொறுத்திருப்போம். இளைய யாதவர் தன் செய்தியுடன் வரக்கூடும்” என்றான்.
யுதிஷ்டிரர் அர்ஜுனனிடம் “நான் என் மாளிகைக்கு செல்கிறேன். நாம் இளைய யாதவனையே சொல்பெற அனுப்புவதென்றால்கூட உடன் தௌம்யரும் சௌனகரும் செல்லட்டும். நூல்களில் இதற்கிணையான தருணங்கள் எப்போதாவது நிகழ்ந்துள்ளனவா என்று பார்த்து அவர்கள் சொல்லவேண்டியதென்ன என்பதை வகுத்துக்கொள்கிறேன்” என்றபின் சகதேவனிடம் “இளையோனே, இன்று நீயும் என்னுடன் இரு” என்றார். அவன் தலைவணங்க இருவரும் மூடிய கதவை நோக்கி சென்றபோது கதவு திறந்து உள்ளே வந்த காவலன் “சிற்றமைச்சர் சுமித்ரர்” என்றான்.
திருஷ்டத்யும்னன் “வரச்சொல்” என்றான். சுமித்ரர் உள்ளே வந்து தலைவணங்கி “இளைய யாதவரின் தளபதி சாத்யகி வந்துள்ளார்” என்றார். அபிமன்யூ “சாத்யகியா? அவர் எப்போது கிளம்பினார்? செய்தியே இல்லையே?” என்றான். திருஷ்டத்யும்னன் அவனை நோக்கி திரும்பி விழிகளால் அடக்கியபின் “அவரை நேராக இங்கு இட்டுவரச்சொல்க! இளைப்பாறி பேரவையில் உரைக்கும் செய்தியென்றால் நாளை காலை வரை பொறுத்திருக்கலாம்” என்றான். சுமித்ரர் “ஆணை” என்றபின் வெளியே செல்ல திருஷ்டத்யும்னன் “பேரரசியை அழையுங்கள். நான் தந்தையை கூட்டி வருகிறேன்” என்றபின் துருபதர் சென்ற அறைக்குச் சென்று கதவை தட்டினான். உள்ளிருந்து அணுக்கன் கதவை திறக்க உள்ளே நுழைந்தான்.
நகுலன் குந்தியும் திரௌபதியும் சென்ற வாயிலை தட்டித் திறந்து வெளியே நின்றபடி அவர்களிடம் “இளைய யாதவரின் தூதர் சாத்யகி வந்துள்ளார்” என்றான். தாழொலியுடன் கதவு திறக்க குந்தி விரைந்து வெளியே வந்து “எங்கே?” என்றாள். “வந்துகொண்டிருக்கிறார். தாங்கள் அமருங்கள்” என்றான். குந்தி மீண்டும் தன் பீடத்தில் வந்து அமர்ந்து “சாத்யகியா?” என்றாள். திருஷ்டத்யும்னன் “அவரைச் சந்தித்து பதின்மூன்றாண்டுகள் ஆகின்றன” என்றபின் நகுலனிடம் “எண்ணும்போது வியப்பு. நீங்கள் காடேகியபின் இங்கு ஒவ்வொரு கூழாங்கல்லும் புரண்டு பிறிதொரு நெறிவிசை கொண்டுவிட்டன. பதின்மூன்றாண்டுகளுக்குப்பின் மீண்டும் ஒவ்வொருவரும் சந்தித்துக்கொள்கிறோம்” என்றான். கூந்தல் சீவி ஆடை திருத்தி திரௌபதி வந்து அமர்ந்தாள்.
முகம் கழுவி, ஆடை திருத்தி துருபதர் வெளியே வந்தார். அறைக்குள் அவர் சற்று மதுவருந்தியிருப்பது வாயை சப்புக்கொட்டியதிலிருந்து தெரிந்தது. காவலன் வந்து சாத்யகியின் வரவையறிவிக்க “வருக!” என்றார் துருபதர். சாத்யகி உள்ளே வந்து துருபதரை தலைவணங்கி “பாஞ்சாலத்தின் பேரரசரை தனியறையில் சந்திப்பது யாதவ குலத்திற்கும் எனக்கும் அளிக்கப்பட்ட பெருமை. இத்தருணத்தை மகிழ்வுடன் ஏற்கிறேன்” என்றான். “இளைய யாதவரே நேரில் வந்ததுபோல் தங்கள் வருகை” என்றார் துருபதர். குந்தியை நோக்கி தலைவணங்கி “பேரரசியின் அருள் என்றும் எனக்கும் யாதவ குலத்திற்கும் அமையவேண்டும்” என்றான். குந்தி அவனை கைதூக்கி வாழ்த்தினாள். யுதிஷ்டிரரிடம் “வணங்குகிறேன், அரசே” என்றான். அறையிலிருந்த அனைவரையும் வணங்கி துருபதர் காட்டிய பீடத்தில் அமர்ந்தான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வுடன் தனித்த உச்சங்களில் இருந்தனர். திருஷ்டத்யும்னன் கண்களில் நீர் ஒளிகொண்டிருக்க சாத்யகியையே நோக்கிக்கொண்டிருந்தான். அவனை நோக்கி புன்னகைத்தபோது சாத்யகி நூறாண்டு முதிர்ந்தவன்போல் இருப்பதாக அபிமன்யூ எண்ணினான். சாத்யகி “இளைய யாதவரின் செய்தியை உடனடியாக அனைவருக்கும் அறிவிக்க வேண்டுமென்பதற்காகவே உடை மாற்றாது வந்தேன். பொறுத்தருள்க!” என்றான். “என்ன செய்தி?” என்றார் துருபதர். இயல்பாக திரும்பி திரௌபதியை நோக்கிய அபிமன்யூ அவளுக்கு அவன் சொல்லப்போகும் செய்தி முன்னரே தெரியுமா என ஐயுற்றான். அவள் ஆழ்ந்த அமைதிகொண்டவளாக தெரிந்தாள்.
“இளைய பாண்டவரின் மைந்தர் அபிமன்யூ திருமணம் இன்னும் நடக்கவில்லை. அதை விராடபுரியில் சிறப்புற கொண்டாடவேண்டும் என்று துவாரகையின் அரசர் விரும்புகிறார். அவருடைய முதன்மைச் செய்தி அதுவே” என்றான் சாத்யகி. “அதுவா செய்தி?” என்றார் துருபதர். “விளையாடுகிறாரா?” என்று உரத்த குரலில் பீமன் கேட்டான். திருஷ்டத்யும்னன் “ஏளனம் செய்கிறார்” என்றான். “இளமை மீண்டுவிட்டதனால் சற்று நகையாடலாம் என எண்ணுகிறார் போலும்” என்றான் பீமன். தருமன் அவர்கள் இருவரையும் கையமர்த்தி “சொல்க!” என்றார். “அந்த மணவிழாவுக்கு துவாரகையின் தலைவராக அவர் வருவார். இவ்வளவுதான் செய்தி. இதை எவ்வளவு விரைவாக அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அறிவிக்க வேண்டுமென்று எனக்கு சொல்லப்பட்டதனால் சப்தஃபலத்திலிருந்து எங்கும் நில்லாமல் புரவியில் வந்தேன்” என்றான் சாத்யகி.
“என்ன இது? இத்தருணத்தில் மணவிழவை எந்த நிலத்தில் வைத்துக் கொண்டாடுவது? நமக்கு என்று இருப்பது உபப்பிலாவ்யம் மட்டும்தான். அது நகரே அல்ல. கல்லெறிந்தால் கடந்துசெல்லும் எல்லைகொண்டது” என்று பீமன் சொன்னான். குந்தி “மதிசூழ்ந்தே அவன் சொல்லியிருக்கிறான். அவன் ஆணைப்படியே செய்வோம்” என்றாள். “என்ன செய்யவிருக்கிறோம்? மணவிழா கொண்டாடப்போகிறோமா? அரசர்கள் வந்தால் அங்கு தங்குவதற்கு வீடுகள்கூட இல்லை. நம் அழைப்பை ஏற்று அரசர்கள் எவரும் வரப்போவதில்லை என்பதனால் அவ்வாறு நிகழ்த்தலாம் என்கிறாரா?” என்றான் பீமன். “ஒரு குடித்தலைவரின் திருமணத்தைவிட எளிதாகவே இன்று நம்மால் அதை ஒருக்க முடியும் என்று அவர் அறியமாட்டாரா?”
துருபதர் “அதைப்பற்றி நீங்கள் எண்ண வேண்டியதில்லை. பாஞ்சாலத்து அரசு ஆவன செய்யும்” என்றார். பீமன் “கொடை பெற்று திருமணம் செய்ய நாங்கள் அந்தணர்கள் அல்ல” என்றான். துருபதரின் முகம் குன்றியது. திருஷ்டத்யும்னன் அதை உணர்ந்து “தந்தை அவ்வாறு கூறவில்லை. எச்சூழலிலும் எங்கள் முடியும் கருவூலமும் உங்களுடன் இருக்குமென்று மட்டுமே அவர் எண்ணினார்” என்றான். குந்தி “மந்தா, நீ சற்று அமர். இளைய யாதவன் ஆணையின் பொருளென்ன என்று நான் சொல்கிறேன்” என்றாள். பீமன் பொறுமையின்மையுடன் தலையசைத்தபடி அமர்ந்தான்.
“எண்ணிப்பார், விரைந்து இச்செய்தியை நம்மிடம் அறிவிக்க வேண்டுமென்று இளைய யாதவன் சொன்னது எதனால்?” என்றாள் குந்தி. “நாம் முந்திக்கொண்டு அஸ்தினபுரிக்கு தூது எதையும் அனுப்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான். நல்லவேளை நாம் அதை செய்யவில்லை.” யுதிஷ்டிரர் புரிந்துகொண்டு “ஆம். அஸ்தினபுரியிலிருந்து நமக்கு வந்த ஓலைக்கு நாம் மறுமொழி எதையும் அனுப்ப வேண்டியதில்லை. அபிமன்யூவின் திருமண ஏற்பாடுகளை செய்வோம்” என்றார். குந்தி “அஸ்தினபுரிக்கு அந்த மணநிகழ்விற்காக மங்கல அழைப்பு மட்டும் செல்லட்டும். பீஷ்மருக்கும் துரோணருக்கும் திருதராஷ்டிரருக்கும் துரியோதனனுக்கும் சகுனிக்கும் தனித்தனியாக” என்றாள்.
அவர்கள் அவள் சொல்ல வருவதை கூர்ந்து நோக்கினர். “பாரதவர்ஷத்தில் அத்தனை ஷத்ரியர்களுக்கும் அரசமுறைப்படி அழைப்பு அனுப்புவோம். எவரெல்லாம் அங்கு வருகிறார்கள் என்று பார்ப்போம். விராடமும் பாஞ்சாலமும் அன்றி நமக்கு துணையென்றிருக்கும் அரசுகள் எவையென்று அந்த மணவிழா தெளிவுபடுத்தும். நாம் இன்னமும் அரசர்களே என்றும் நம்முடன் ஷத்ரியத் திரளொன்று அமையுமென்றும் காட்டிவிட்டு அஸ்தினபுரிக்கு தூதனுப்புவோம். இளைய யாதவன் எண்ணியது அதையே” என்றாள் குந்தி. யுதிஷ்டிரர் “ஆம். அவ்விரு ஆணைகளையும் கேட்டபோதே நானும் எண்ணினேன்” என்றார். பீமன் “ஆனால் நம்முடன் எவர் வருவார்கள் என்று உறுதி இல்லாமல் அழைப்பது உகந்தது அல்ல. எவரும் வரவில்லை என்றால் தனிமைப்பட்டவர்களாக ஆவோம்” என்றான்.
யுதிஷ்டிரர் “நமக்கு மகற்கொடை அளித்த மன்னர்கள் உடனிருப்பார்கள். சிறிய நாடுகள் என்றாலும் சிபிநாடும் சௌவீரமும் சிறுநாடுகள் என்றாலும் நமக்கு பெயர் சொல்ல ஒரு முடிநிரை இருப்பதாக காட்டுவர். இரு தரப்புக்கும் பெண்கொடை அளித்த காசி நடுநிலை கொள்ளும் என்றால் அதுவே வெற்றிதான். சல்யர் இரு வகையில் நம் குடிக்கு மகட்கொடை அளித்தவர். அவருடைய தலைமையும் படையும் அமையும் என்றால் அது பேராற்றல்” என்றார். “விராடரின் உறவென்பதால் நிஷத மன்னர்களை நாம் திரட்ட முடியும். யாதவர்களில் எவர் நம்முடன் இருப்பார்களென்பதையும் பார்ப்போம்.”
பீமன் புன்னகை செய்ய யுதிஷ்டிரர் “நான் போருக்குப் படைதிரட்டவில்லை மந்தா, நம் ஆற்றல் திரள்வதே போரை கடக்கும் வழி” என்றார். “மதுராவின் பலராமனுக்கு அழைப்பு சென்றாக வேண்டும்” என்று குந்தி சொன்னாள். “அவர் வருவார் என நான் எண்ணவில்லை” என்றான் பீமன். “வந்தால் இங்கேயே இளையவனும் மூத்தவனும் என் முன் உளச்சேர்க்கை கொள்ளச்செய்வேன். அது மட்டும் நிகழ்ந்தால் யாதவப் பெரும்படையே நமக்கு நிலைத்தளமாக ஆகும்” என்றாள் குந்தி. “வராமலிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இது அவனுடைய குடிச்சடங்கு. இளையவன் யாதவ குடியினனும்கூட.”
துருபதர் “ஆம், இப்போது புரிகிறது இளைய யாதவரின் எண்ணம். இது மணச்சடங்கு என்பதனால் தவிர்க்கமுடியாமல் பலர் வருவார்கள். அவர்களை நாம் நம் தரப்பினராக காட்டமுடியும். அவர்கள் போருக்கு நம்முடன் எழுவார்களா என்பது வேறு. இப்போது நாம் தனித்துவிடப்படவில்லை என்பதை அது நிறுவும்” என்றார். திருஷ்டத்யும்னன் “அத்தனைபேர் உள்ளங்களிலும் நம்முடன் இருக்கப்போவது யார் என்ற கணிப்பு ஓடத்தொடங்கிவிட்டது, அன்னையே” என்றான். “ஆற்றலை கணிக்கத்தொடங்கிய கணமே போரை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டோம்.”
“நாம் இப்போது மிகையாக எண்ணிச்செல்ல வேண்டியதில்லை” என்று சற்று எரிச்சலுடன் யுதிஷ்டிரர் சொன்னார். “இளைய யாதவன் சொல்வதை செய்வோம். நம் ஆற்றலென்ன என்பதை காட்டிய பின்னர் உரிமைக்காக பேச அமர்வோம்.” பீமன் “ஆம், அதற்கு முன் நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இரக்கம் கோரும் மன்றாட்டே” என்றான். அவனை நோக்காமல் யுதிஷ்டிரர் “இன்று நமக்கென்றிருக்கும் மண் உபப்பிலாவ்யம் மட்டுமே” என்றார். குந்தி “அந்நிலத்தை நாம் உரிமையென்று முற்றுரைக்க இயலுமா, அமைச்சரே?” என்றாள்.
கருணர் “ஆம், அரசி. வேள்வியின்பொருட்டு அரசன் அளிக்கவேண்டிய நிலத்தையும் செல்வத்தையும் மகாத்வனி சூத்ரம் வகுத்துரைக்கிறது. குருதிமுறைப்படி பெற்றவை முதன்மையானவை. போரில் வென்றவை பிறகு. மகள்கொடையென பெற்றவையும் விலைகொடுத்து வாங்கியவையும் நிகர்நிலையில் மூன்றாவதாக” என்றார். “நன்று, அங்கு நிகழட்டும் மணமங்கலம்” என்றாள் குந்தி. துருபதர் “ஆம், அங்கே நடத்துவோம்” என்றார்.
“அழைப்போலை எண்ணிச்சூழ்ந்து அனுப்பப்படவேண்டும். தொல்புகழ் யயாதியின் கொடிவழியில் குருகுலத்துப் பாண்டுவின் மைந்தராக அமைந்து யுதிஷ்டிரன் அழைக்கட்டும். அதில் உபப்பிலாவ்யத்தின் அரசனாக மட்டுமே தன்னை அறிவித்துக்கொள்ளவேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் அரசனென சொல்லமைந்தால் அதையே சுட்டிக்காட்டி பூசலுக்கு அஞ்சி சிலர் வரத் தயங்கக்கூடும். உபப்பிலாவ்யத்துடன் நாம் அடங்கிவிட்டோம் என்றும் கௌரவருடன் நாம் சொல்லொப்பு கொண்டுவிட்டோம் என்றும் அவர்கள் எண்ணினால் அதுவும் நன்றே. எத்தனை பேர் வருகிறார்கள் என்பதே நமக்கு இன்று முதன்மையிலக்கு” என்றாள். திரௌபதி காற்றில் சுடர் என மெல்ல உயிரசைவுகொண்டு “ஓலையில் உங்களை கௌரவாக்ரஜர் என்று சொல்லிக்கொள்க, அரசே” என்றாள்.
குந்தி புருவம் சுருங்க நோக்கினாள். “ஏன்?” என்றார் யுதிஷ்டிரர். “அவர்கள் தார்த்தராஷ்டிரர் என்றால்தான் நீங்கள் பாண்டவர். குருவின் கொடிவழி இருவருக்கும் பொதுவானதே. பதின்மூன்றாண்டுகளில் தங்களை கௌரவர் என்று சொல்லி பல்லாயிரம் ஓலைகள் வழியாக நிறுவியிருக்கிறார்கள். முறைமரபினர் அவர்களே என்றும் நீங்கள் உரிமைகோரும் புறனடையர் மட்டுமே என்றும் அச்சொல் அறியாமல் பதிவு செய்துகொண்டிருக்கிறது.” குந்தி “ஆம், அப்படியே அமைக அச்சொல். அது இத்திருமணநிகழ்வுக்கு அவர்கள் வந்தாகவேண்டும் என்னும் நெறிசுட்டலாகவும் அமையும்” என்றாள்.
அனைவரின் உள்ளத்தில் எழுந்த வினாவை திருஷ்டத்யும்னன் கேட்டான். “இளைய யாதவர் அந்த மணநிகழ்வை முன்னின்று நிகழ்த்துவார் என்று அவ்வோலை குறிப்பிட வேண்டுமா?” அனைவரும் அவனையே பொருள் பெறாதவர்கள் என நோக்கினர். சாத்யகி “அவர் இளவரசரின் மாதுலர். கைபற்றி கையளிக்க கடமையும் உரிமையும் கொண்டவர்” என்றான். பீமன் “யாதவ முறைப்படி மைந்தனின் தந்தையை விட அவைமுதன்மை அவருக்கே” என்றான். “ஆம், அதை நம்மால் தவிர்க்கமுடியாது. ஆனால் அவர் பெயர் ஓலையில் இல்லாமலிருக்கலாம்” என்றார் யுதிஷ்டிரர். “அது எப்படி? அவர் எவரென்று அறியாத அரசர் யார்?” என்றார் துருபதர்.
“அன்னையே, இன்று ஷத்ரியச்சுற்றமே இளைய யாதவர்மேல் கடுஞ்சினம் கொண்டிருக்கிறது. ஜராசந்தனும் சிசுபாலனும் ஆயிரம் தலைகளும் ஈராயிரம் கைகளும் முடிவிலா நாவுகளும் விழிகளும் கொண்டு ஆரியநிலத்தை மூடியிருக்கின்றனர். ருக்மியும் பகதத்தரின் மைந்தர் பகதத்தனும் ஒவ்வொரு நாளும் படைக்கலத்திற்கு வஞ்சினவணக்கம் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். குந்தி சில கணங்கள் எண்ணிவிட்டு “ஓலையில் இளையவன் பெயர் இருக்க வேண்டியதில்லை. இருக்குமென்றால் அதையே காட்டி சிலர் வராமல் இருக்கக்கூடும்” என்றாள். பின்னர் முகம் மலர “தந்தை சூரசேனர் பெயரும் மூத்தவர் வசுதேவர் பெயரும் இருக்கட்டும். அதுவே குடிமரபு. பாண்டுவின் பெயர்மைந்தன் என அழைப்பு அமையட்டும்” என்றாள். “மூத்தவன் பலராமன் அதற்குப்பின் வருகையொழிய இயலாது.”
துருபதர் “இன்றிருக்கும் சூழல் இன்னும் கூர்கொள்ளாதது. எனவே சிலர் இயல்பாக வரக்கூடும். வருபவர்கள் துரியோதனனால் எதிரி என கணிக்கப்படுவார்கள். அவ்வாறு கணிக்கப்படுவதனாலேயே அவர்கள் நம்முடன் இருந்தாக வேண்டுமென்றாகும். இப்போதைக்கு ஷத்ரிய மன்னர்களுக்கு நாம் ஒருக்கும் மிகப் பெரிய கேணி இது” என்றார். குந்தி “ஓலைகள் எழுதப்படட்டும்” என்றாள். கருணர் “அவ்வாறே” என தலைவணங்கினார். துருபதர் கைநீட்ட திருஷ்டத்யும்னன் அவரைப் பற்றி எழுப்பினான். சிற்றறைக் கதவு திறக்க ஏவலன் வந்து அவரை அணைத்து அழைத்துச்சென்றான்.
குந்தி எழுந்து திரௌபதியுடன் மறுபக்க அறைக்குள் சென்றாள். யுதிஷ்டிரர் “ஓலைகளை எழுதி என்னிடம் ஒருமுறை காட்டுக! உரிய நெறிநூல்கள் சுட்டப்பட்டிருக்கவேண்டும்” என்றார். கருணர் “ஆம், அதை முறைப்படி செய்துவிடுவோம்” என்றார். அவர்கள் இருவரும் வெளியே செல்ல அர்ஜுனனை அணுகி கால்தொட்டு சென்னி சூடினான் சாத்யகி. “கைகளைக் காட்டு” என்றான் அர்ஜுனன். அவன் நீட்ட “வில்லெடுத்து எத்தனை நாளாகிறது?” என்றான். “இளைய யாதவர் தவம்கொண்டு ஆட்சியொழிந்தமையால் நான்…” என அவன் சொல்லத்தொடங்க “இசைக்கலனும் படைக்கலனும் ஒருநாளும் ஒழியாது பயிலப்பட வேண்டியவை. கைகளும் கலங்களும் ஒன்றென்றே ஆகவேண்டும். பருவடிவ உள்ளம் என்று அவற்றை சொல்கின்றனர் முன்னோர்” என்றான்.
சாத்யகி தலைகுனிந்து நின்றான். “உன் முழங்கையில் புண்கள். போரில் கையில் புண்படுபவன் வில்லவனே அல்ல.” சாத்யகி ஏதோ முணுமுணுத்தான். “என்ன?” என்றான் அர்ஜுனன். “நான் பயிற்சி செய்து…” என அவன் தொடங்க “இன்னும் ஆறுமாத காலம். அடுத்த இளவேனில் முதல்நிலவு நாளில் நீ என்னை வில்லுடன் எதிர்கொள்கிறாய். முதலிரு சுற்றுக்கு நிகர்நிலை கொள்ளவில்லை என்றால் களத்தில் உன் தலைவிழும்” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆணை” என்றான் சாத்யகி. அர்ஜுனன் சினத்துடன் மீண்டும் ஒருமுறை நோக்கிவிட்டு “இளைய யாதவர் இருள்கொண்டார் என நீ உணவையும் நீரையும் ஒழித்தாயா என்ன? மூடன்!” என்றபின் வெளியே சென்றான்.
கதவு மூடியதுமே சாத்யகி முகம் மாறினான். சிரித்தபடி பீமனிடம் “குன்றாமலை என்று இருக்கிறீர்கள், மூத்தவரே” என்றான். “உயிருள்ள அனைத்தும் உணவே என்னும் கொள்கையால்” என பீமன் நகைத்தான். கதவை மூடிவிட்டு பாய்ந்து வந்த திருஷ்டத்யும்னன் சாத்யகியை ஆரத்தழுவி கூச்சலிட்டபடி சுழன்றான். இருவரும் மாறிமாறி தோள்களை அறைந்துகொண்டனர். சாத்யகி அபிமன்யூவை விழிசந்தித்ததும் முகம் மாறி “இங்கே என்ன செய்கிறாய்?” என்றான். “நான் ஆணைகளுக்காக…” என்றான் அபிமன்யூ. “செல்க, அரசோலைகள் முறைப்படி செல்கின்றனவா என்று பார்” என்றான் சாத்யகி. அபிமன்யூ தலைவணங்கி “ஆணை” என முணுமுணுத்து வெளியே சென்றான்.
திருஷ்டத்யும்னன் அபிமன்யூ செல்வதை நோக்கியபின் “இனியவன்” என்றான். “ஆம், ஆனால் தான் ஒரு தேன்கட்டி என்னும் எண்ணம் அவனுக்கிருக்கிறது. அதுவே அவனுடைய வளர்ச்சிக்குத் தடை” என்றான் சாத்யகி. நகுலன் சிரித்து “இளவயதில் ஆடையை களைந்திட்டு ஓடுவான். சற்று வளர்ந்த பின்னரும் தருணம் அமைந்தால் ஆடையை வீசிவிடுவான்” என்றான். திருஷ்டத்யும்னன் “மெய்யாகவே இளைய யாதவர் எழுந்துவிட்டாரா?” என்றான். “சித்திரைச் சூரியனைப்போல… ஒரே நாளில் யாதவ நிலமே வசந்தமணிந்துவிட்டது. இங்கு வரும்போது பார்த்துக்கொண்டே வந்தேன். அத்தனை முகங்களிலும் உயிரனல் பற்றிக்கொண்டு சுடர்கிறது” என்றான் சாத்யகி.
அபிமன்யூ வெளியே சென்றதும் பிரலம்பன் அவனை நோக்கி ஓடிவந்தான். “என்ன அலுவல்?” என்றான். “காம்பில்யத்தின் அத்தனை யானைகளிலும் மத்தகங்களில் இருக்கும் மயிரை மழித்துவிடவேண்டுமாம். அதை நாம் மேற்பார்வையிட வேண்டும்” என்றான் அபிமன்யூ. “அது எதற்கு?” என்றான் பிரலம்பன். உடனே புரிந்துகொண்டு “அந்த மயிரை நாம் என்ன செய்யவேண்டும் என ஆணை?” என்றான். அபிமன்யூ “பிரலம்பரே, இந்த குருமரபுகளில் உள்ள கொலைவெறியூட்டும் கூறு எது தெரியுமா?” என்றான். “ஆசிரியருக்கு அணுக்கமான மூத்த மாணவர்கள் நம்மை நடத்தும் முறைதான். ஒருநாள் இந்த யாதவரை ஏதேனும் களத்தில் சந்தித்து நெஞ்சிலேயே அம்பை செருகிவிடப்போகிறேன்.”
பிரலம்பன் “நம்மைவிட இளைய மாணவர்களை நாம் தேடலாமே?” என்றான். அபிமன்யூ சினத்துடன் “நான் பிறந்ததில் இருந்து அத்தனை அவைகளிலும் நானே இளைஞன்” என்றான். “போகிறபோக்கைப் பார்த்தால் எனக்கு மைந்தன் பிறந்தால்கூட என்னைவிட மூத்தவனாக இருப்பான் எனத் தோன்றுகிறது. பிரலம்பரே, நான் உடனே கிளம்புகிறேன்.” பிரலம்பன் “எங்கே?” என்றான். அபிமன்யூ “உபப்பிலாவ்யத்திற்கு. நான் அந்த விராடமகளை இன்னும் பார்க்கவில்லை. அவளாவது என்னை மதிக்கிறாளா என்று பார்க்கவேண்டும்” என்றான்.
பிரலம்பன் “நன்று… உடனே கிளம்புங்கள். நானும் நாளை கிளம்பி அஸ்தினபுரிக்கு செல்கிறேன்” என்றான். “நீரா? நீர் எப்படி செல்லமுடியும்? நீரும் என்னுடன் உபப்பிலாவ்யத்திற்கு வரவேண்டும் என்று அன்னை ஆணையிட்டார்கள் அல்லவா?” பிரலம்பன் “அன்னையா? எப்போது?” என்றான். “அப்போது நீர் இல்லை. அந்த ஷத்ரியன் உனக்கு உதவியானவன். அவனையும் அழைத்துச் செல் என்றார்கள். நாம் நேராக நம் அறைக்குச் சென்று பொதிகளை எடுத்துக்கொண்டு புரவிச்சாலைக்குச் செல்கிறோம்…” பிரலம்பன் “ஆனால்…” என்று சொல்ல வர “அதை சென்றபடியே நாம் பேசுவோம்” என்றான் அபிமன்யூ.
“என் அன்னை அஸ்தினபுரியில்…” என்றான் பிரலம்பன். “நாம் உபப்பிலாவ்யம் செல்லும் வழியில் உமது அன்னையைப்பற்றி பேசிக்கொண்டே செல்வோமே. வழிக் களைப்பும் தெரியாது” என்று அபிமன்யூ சொன்னான். “எனக்கும் அன்னையர் கதைகளை கேட்கப் பிடிக்கும். மேலும் உம்முடைய தனித்திறனாக நான் காண்பதே ஆணையிட்ட அக்கணமே பயணத்திற்கு ஒருங்கும் ஆற்றலைத்தான்.” பிரலம்பன் “எவருடைய ஆற்றல்?” என்றான். “நம் இருவரின் ஆற்றல்” என்றான். “இரண்டு மாதத்திற்குள் பாரதவர்ஷத்தின் நாலில் ஒரு பங்கை சுற்றி வந்துவிட்டோம்” என்றான் பிரலம்பன். “ஆம்! அருமையான பயணங்கள் அல்லவா?” என்று உரக்க நகைத்த அபிமன்யூ அவன் தோளை வளைத்து “வருக!” என்றான்.