குழந்தையிலக்கிய அட்டவணை
அன்புள்ள ஜெ.,
கதைவாசிப்பு (story reading) – பெரியவர்கள் புத்தகத்தை வைத்துக்கொண்டு கதையை வாசித்துக்காட்டுவது கதை சொல்லல் (story telling) – நேரடியாகவே மனதில் இருந்து கதை சொல்வது இவ்விரண்டில் அமெரிக்காவில் முதலாவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.. இந்த முறை வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள உதவலாம்..ஆனால் குழந்தைக்கதையின் மைய அம்சமான ஒரு மாயத்தன்மை உள்ளது, அது இல்லாமலாகும்
மிகசமீப தலைமுறை வரை பாட்டியிடம் கதைகேட்டு வளர்ந்தவர்கள் நாம்.. ‘story reading’ என்று இந்தியர்கள் சொல்லும்போது எனக்கு எரிச்சலே வருகிறது -இதிலும் காப்பியா என்று..
பிடிவாதமாகவே story reading-ஐ என் 5 வயதுக் குழந்தைக்குத் தவிர்த்துவருகிறேன்.. சரியா என்று தெரியவில்லை..
சொல்வதற்கா இல்லை கதைகள்..
நன்றி
ரத்தன்
***
அன்புள்ள ரத்தன்,
கதைசொல்லல் கதை வாசிப்பு இரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. தமிழகத்தில் மேடைப்பேச்சு கேட்க வரும் கூட்டம் ஏன் வாசிப்புக்கு இல்லை, மேடைப்பேச்சாளர்கள் அளவுக்கு வருமானமும் புகழும் ஏன் எழுத்தாளர்களுக்கு இல்லை, ஏன் எழுத்தாளர்களை மேடைப்பேச்சாளர்களாக ஆக்க இடைவிடாது முயல்கிறார்கள் என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டால் நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும். ஏறத்தாழ அனைவருமே குழந்தைப்பருவத்தில் பாட்டியிடம் கதைகேட்டு வளர்ந்தவர்கள். கோயில்களிலும் கூத்தரங்குகளிலும் கதைகளை கண்டுகேட்டு ரசித்தவர்கள். அவர்களிலிருந்து ஏன் வாசகர்கள் மிகமிகக்குறைவாக உருவாகி வருகிறார்கள்?
கதைகேட்பதென்பது ஒரு செவியனுபவம். கதை வாசிப்பது விழியனுபவம், மொழியனுபவம். இரண்டும் முற்றிலும் வேறு. மாறுபட்ட மூளைத்திறன்களால் எய்தப்படுபவை. மாறுபட்ட பயிற்சிகளைக்கோருபவை. கதை வாசிப்பு என்பது குழந்தைக்கு வாசிப்பை நேரடியாக அறிமுகம் செய்வது. நாம் வாசித்துக்காட்டி மிக மெல்ல குழந்தையை வாசிப்புக்கு இட்டுச்செல்வது. கதைச் சொல்வது கேள்வியாளனாகவே குழந்தையை வடிவமைப்பது
கதை வாசிப்பு, கதை சொல்லல் இரண்டுமே ஆரம்பகட்டத்தில் கதை என்ற வடிவை, கதையை கற்பனையில் விரித்தெடுக்கும் அனுபவத்தை குழந்தைக்கு அறிமுகம் செய்வதற்கு அவசியமானவை. ஆனால் எப்போது குழந்தை கதைச்சுவையை அறிந்துவிட்டதோ அதன்பின் அதை வாசிப்பை நோக்கிக் கொண்டுசெல்லவேண்டும். அதுவே அமர்ந்து அந்தரங்கமாக வாசிக்க பயிற்சி அளிக்கவேண்டும். அக்குழந்தையே வாசகனாக ஆகும். கதைமட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் குழந்தை வாசிப்பில் சுவையிலாது போகக்கூடும்
ஏனென்றால் கதைசொல்லும்போது நாம் உணர்வுகளையும் நாமே அளிக்கிறோம். அது ஒரு நிகழ்த்துகலையென்று ஆகிவிடுகிறது. கதைவாசிப்பின்போது அது உணர்வற்ற மொழிவெளிப்பாடாக மட்டுமே உள்ளது. அதை உணர்வாகவும் காட்சியாகவும் மாற்றிக்கொள்ளும் பொறுப்பு குழந்தைக்கு வருகிறது. கதைசொல்லும்போது ஓர் உரையாடல் நிகழ்கிறது. குழந்தையின் ஆர்வத்திற்கேற்ப கதை வளர்கிறது. அது நிகழ்த்துகலையின் இயல்பு. கதை வாசிப்பில் அம்சம் இல்லை. அது புத்தகம்போலவே முடிந்துவிட்ட வடிவம். வாசகனுக்கேற்ப அது மாறாது. அதை வாசகன்தான் மீட்டி வளர்த்துக்கொள்ளவேண்டும்.
ஆகவே ஆரம்பநிலையில் கதை சொல்லல், பின்னர் கதை வாசிப்பு, அதன்பின் நேரடி வாசிப்பு என்பதே குழந்தையை வாசிப்புக்குப் பயிற்றுவிக்கும் வழியாக இருக்கமுடியும்
ஜெ