நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 2
கதவு ஓசையின்றி திறக்க யுதிஷ்டிரர் உள்ளே வந்து கால்தொட்டு வணங்கி “வணங்குகிறேன், அன்னையே” என்றார். குந்தி வலக்கையைத் தூக்கி அவர் தலையைத் தொட்டு “நீள்வாழ்வு கொள்க! நிறைவடைக!” என வாழ்த்தினாள். தொடர்ந்து பீமனும் நகுலனும் சகதேவனும் உள்ளே வந்தனர். அவர்கள் வணங்க தலை தொட்டு வாழ்த்தினாள். அபிமன்யூ முதற்கணம் யுதிஷ்டிரரை யாரோ முதுமுனிவர் என்றே எண்ணினான். அவர் தலைவணங்கிய அசைவே அவரை அடையாளம் காட்டியது. பீமன் மட்டுமே அவன் நினைவிலிருந்த அதே உடல் கொண்டிருந்தான். பீமனின் பெருந்தோள்களையே நோக்கியபடி அவன் எண்ணமிறந்து நின்றிருந்தான்.
பீமன் அவனை நோக்கி ஒரு விழிமின்னலால் அடையாளம் கண்டு “மைந்தன்!” என்றான். இரு கைகளையும் விரித்து “வருக…” என்றான். அவன் விழிகள் அதற்குள் நீர்மைகொள்வதை அபிமன்யூ கண்டான். யுதிஷ்டிரர் திரும்பி அவனை நோக்கி “இளையவனின் மைந்தன் அல்லவா? ஆம், முதற்கணம் இளையவன் நம்முடன் வந்து இங்கே நிற்பதாகவே என் உள்ளம் எண்ணிக்கொண்டது. விந்தை…! காலத்தைக் கடக்கும் எந்த வாய்ப்பையும் உள்ளம் விட்டுவிடுவதில்லை” என்றார். அபிமன்யூ அருகணைந்து யுதிஷ்டிரரை வணங்க அவன் தோள்களைப் பற்றி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். “மைந்தர்களைப் பார்த்தே நெடுநாட்களாகின்றன… இங்கே அவர்களை வரச்சொல்லியிருக்கலாம்” என்றார்.
அபிமன்யூ பீமனை வணங்க அவன் அபிமன்யூவின் தோளை படீரென அறைந்து “சிறுவன் போலிருக்கிறாய்… உண்பதே இல்லையா நீ?” என்றான். அணைத்துக்கொண்டு நகுலனிடம் “அப்படியே இளையவன்… அவன் மட்டும் இளமைக்குத் தாவிவிட்டதைப்போல…” என்றான். சகதேவன் “அவனிடம் இளைய யாதவர் இருப்பதை புன்னகையில் கண்டேன்” என்றான். அபிமன்யூ அவர்களை வணங்க நகுலன் அவன் கைகளைப் பற்றியபடி “முதலில் பார்க்கும் மைந்தன் நீ என்பதே இனிது… இன்று பிறந்தவன் போலிருக்கிறாய். அனைத்தும் முதற்கணம் முதல் தொடங்கவிருக்கின்றன என்பதுபோல” என்றான்.
குந்தி எட்டி வாயிலை பார்த்தாள். பீமன் “திரௌபதி வந்தாள். கீழே ஏவலருக்கும் காவலருக்கும் சில ஆணைகளை அளித்துக்கொண்டிருக்கிறாள்” என்றான். குந்தி உதடுகள் சுழிக்க “ஆணைகளுக்கு எந்தக் குறையுமில்லை” என்றாள். யுதிஷ்டிரர் முகம் சுருங்கி “பிறிதென்ன குறை இங்கு?” என்றார். “முறைமைகளென சில உண்டு” என குந்தி அவரை நோக்காமல் முனகிவிட்டு “சரி அதற்கென்ன, நாம் நம் பணிகளை தொடங்குவோம்” என்றாள். “முறைமைகள் எதாவது மீறப்பட்டனவா?” என்றார் யுதிஷ்டிரர். “மீறப்படவில்லை. ஆனால் முழுஉள்ளத்தோடு செய்வதற்கும் செய்யவேண்டுமே என்று செய்வதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.”
சற்று எரிச்சல் தெரிய “தங்கள் உளக்குறை என்ன, அன்னையே?” என்றார் யுதிஷ்டிரர். “உளக்குறையா? உளக்குறை கொள்ளுமிடத்திலா நான் இருக்கிறேன்? நான் பேரரசரின் இளவரசியாக பிறக்கவில்லை. முடிசூடிய மன்னனின் அரசியாக அமரவும் இல்லை. என் மைந்தன் முடிசூடி ஆளவும் இல்லை. எய்தியும் எய்தாதவளாக எஞ்சுகிறேன். ஆகவே அளித்தும் அளிக்கப்படாதவையாகவே அனைத்தும் எனக்கு அமைகின்றன.” யுதிஷ்டிரர் சலிப்புடன் “உங்கள் உளக்குறை தீர்வதே இல்லை, அன்னையே” என்றார். குந்தி சினத்துடன் “உன்னிடம் எனக்கு உளக்குறை இருப்பதாக சொன்னேனா? நீ வென்றெடுக்கும் அரசு உனக்கும் உன் கொடிவழிகளுக்கும் உரியது. அதனால் எனக்கென்ன? உன் இந்திரப்பிரஸ்த அரண்மனையில் நான் எனக்குரிய தவக்குடில் வாழ்க்கையே வாழ்ந்தேன். இன்றும் இருவேளை உணவும் எளிய மரவுரி ஆடையும் எனக்குப் போதும். குடிகள் எவரும் என் பேர் சொல்லி வாழ்த்தவேண்டியதில்லை. எந்தப் புலவனும் என்னை பாடவேண்டியதுமில்லை” என்றாள்.
மூச்சு சீற, முகம் சிவந்து வியர்வை கொள்ள “அறிக, நான் நிலம் கோருகிறேன் என்றால் மண்ணாசையினால் அல்ல. உன்மேலோ உன் தம்பியர்மேலோ கொண்ட பற்றினாலும் அல்ல. எனக்கு இங்குள்ள எதன்மேலும் பற்றில்லை. முறையென்றும் நெறியென்றும் அமைவது அறமென்றும் முழுமுதன்மையென்றும் ஆகி எங்கும் இலங்குவது. அதை சார்ந்தே இங்குள்ள அனைத்தும் இயல்கின்றன. அந்நெறியும் முறையும் வாழவேண்டுமென்பதற்காக மட்டுமே இங்கு சொல்லாடிக் கொண்டிருக்கிறேன். உன் நகரும் முடியும் பாண்டுவின் கொடிவழியும் இல்லாமலானாலும் எனக்கொன்றுமில்லை. என்றோ இவ்வனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக்கொண்டவள் நான். இக்கடன் முடிந்த அன்றே என் மூதன்னை சத்யவதியைப்போல மரவுரியுடன் காடு தேடிச் செல்வேன். இங்குள அனைத்தும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல” என்றாள் குந்தி.
பீமன் “ஆம் அன்னையே, அதை நாங்கள் நன்கு அறிவோம்” என்றான். அவனை ஒருகணம் கூர்ந்து பார்த்தபோது குந்தி அவன்மேல் ஐயம் கொள்கிறாளோ என்று அபிமன்யூவுக்குத் தோன்றியது. அவனே பீமன் ஏளனம் செய்கிறான் என்றுதான் எண்ணினான். ஆனால் பீமனின் முகம் தெளிந்திருந்தது. குந்தி எரிச்சலுடன் “என்ன செய்கிறாள்?” என்றாள். அபிமன்யூ “நான் சென்று பார்த்து வருகிறேன்” என்றான். குந்தி வேண்டாம் என கைகாட்டினாள். பீமன் அபிமன்யூவை நோக்கி புன்னகை புரிந்தபோது அவன் ஏளனம்தான் செய்திருக்கிறான் என அபிமன்யூ அறிந்துகொண்டான். அவன் மிக மெலிதாக மறுநகை புரிந்தான்.
பிரலம்பன் தான் அந்த அறைக்குள் இருக்கத்தான் வேண்டுமா என்று பதற்றம் அடைந்துகொண்டிருந்தான். அவன் அங்கிருப்பதை அவர்கள் முற்றிலும் மறந்துவிட்டிருந்தனர். அவன் பாண்டவர் ஐவரையும் முன்னரே அணிவகுப்புகளில் மட்டுமே பார்த்திருந்தான். அணுக்கத்தில் நகுலனும் சகதேவனும் மிக இளையவர்களாகவும், யுதிஷ்டிரர் மிக முதியவராகவும் தோன்றினார்கள். பீமன் அவன் எண்ணியிருந்ததைவிட இருமடங்கு பெரிய உடல் கொண்டவனாக இருந்தான். அகன்ற மஞ்சள் முகத்தில் சிறிய கண்களில் எப்போதும் ஒரு புன்னகை இருந்துகொண்டிருப்பதுபோல. புற உலகை சரியாக புரிந்துகொள்ளாத சிறுவனின் ஆர்வம் போலவோ ஏற்கெனவே அனைத்தையும் அறிந்துவிட்டவனின் சலிப்பு போலவோ.
சில கணங்களுக்குள் அவன் நோக்கை உணர்ந்த பீமன் திரும்பி அவனைப் பார்த்து புன்னகை புரிந்தான். அவன் கண்களை சந்தித்ததுமே பிரலம்பன் சிறு உளத்திடுக்கிடலுடன் விழி விலக்கிக்கொண்டபின் அப்புன்னகையை நினைவில் மீட்டு அதிலிருந்த நட்பை உணர்ந்து உளம் மலர்ந்தான். பின்னர் நால்வரையும் கூர்ந்து நோக்கி மதிப்பிட முயன்றான். உண்மையில் முற்றிலும் அனைத்திலிருந்தும் விலக்கம் கொண்டிருப்பவன் சகதேவனே என்று அறிந்தான். நகுலன் சிறுவனுக்குரிய ஆர்வத்துடன் ஒவ்வொன்றிலும் ஈடுபட்டு பின்னர் ஓரிரு சொற்றொடர்களிலேயே முற்றிலும் விலகி பிறிதொன்றுக்கு தாவிக்கொண்டிருந்தான்.
ஒவ்வொரு சொல்லுக்கும் விழி எதிர்வினையும் உணர்வுகளும் காட்டி அமர்ந்திருந்தாலும் அங்கிருக்கும் எதனுடனும் எவ்வகையிலும் தொடர்பற்றவன் அவன். வெண்தாடியும் கூன்கொண்ட தோளும் எப்போதும் பெருமூச்சு விடும் முகத்தோற்றமும் கொண்டிருந்தாலும்கூட அனைத்திலும் முற்றாக பின்னி பிணைந்திருப்பவர் யுதிஷ்டிரர்தான். ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் உணர்வுக்கும் ஆர்வமற்றவர்போல் இளநகை பூணவும் கசப்பை காட்டவும் பயின்றிருந்தார். தாடியை நீவியபடியோ, இதழ்கோட புன்னகைத்தோ, விழிவிலக்கி வேறெங்கோ நோக்கியோ, மெல்ல சாய்ந்துகொண்டு ஆர்வமற்றவரைப்போல் கைதளர்ந்தோ அவர் உடல் வெளிப்பட்டுக்கொண்டே இருக்க உடலுக்கு அப்பாலிருந்து பிறிதொன்று ஒவ்வொன்றிலும் நெருப்பென தேடித் தேடிச் சென்று தொற்றிக்கொள்ளும் விழைவொன்றைக் காட்டியது.
சேடி உள்ளே வந்து “பாஞ்சால இளவரசி” என்றாள். முகத்தில் சலிப்பு நின்றிருக்க வரச்சொல்லும்படி குந்தி கைகாட்டினாள். அவள் உடல் மாயத்தெய்வமொன்றால் தொடப்பட்டு கல்லென்று ஆவதுபோல நுனிக் காலிலிருந்து இமைப் பீலிவரை ஓர் இறுக்கம் பரவுவதை பிரலம்பன் கண்டான். திரௌபதி உள்ளே வந்து குந்தியின் கால்களைத் தொட்டு வகிடில் வைத்து வணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசியை வணங்குகிறேன். இங்கு அனைத்தும் முறைமையுடன் அமைந்துள்ளன என்று எண்ணுகிறேன். அவற்றை உசாவிவிட்டு உள்ளே வந்ததனால் சற்று பிந்தியது” என்றாள். குந்தி இதழ்களில் சிறு கசப்புப் புன்னகையுடன் “நான் கைம்மை நோன்பு கொண்டவள். எனக்கு அரச முறைமைகளும் அரண்மனை இன்பங்களும் விலக்கப்பட்டுள்ளன. அவற்றில் என் உள்ளம் பதிவதுமில்லை” என்றாள்.
திரௌபதி அவள் உள்ளத்தை உணர்ந்துகொண்டாள் என எந்த முக விழி மாறுதல்களும் இல்லாதபோதே தெரிந்தது. “ஆம், அதை நான் அறிவேன். ஆனால் முறைமை செய்வது எங்கள் கடமை” என்றாள். அபிமன்யூ திரௌபதியை கால்தொட்டு வணங்கி “வணங்குகிறேன், அன்னையே” என்றான். திரௌபதி முகம் மலர்ந்து “ஆம், உன்னைத்தான் உள்ளே வரும்போதே பார்த்தேன். இந்த நாளின் உவகை எனக்கு தெய்வங்களின் கொடை” என்றாள். அவன் தோள்களை அணைத்துக்கொண்டு “என்ன புண்கள்?” என்று கேட்டாள். “போர்… நான் பாணாசுரருடன் நிகர் நின்றேன்… ஒரு நாழிகைநேரம்… மெய்யாகவே…” என்றான் அபிமன்யூ. “ஆம், அறிந்தேன்… சூதர்கள் பாடத் தொடங்கிவிட்டனர்” என்றாள். அவன் தோள்முதல் மணிக்கட்டு வரை நீவி “பெரியவனாகிவிட்டாய்…” என்றாள்.
செயற்கையான சினத்துடன் “நாம் அரசுச்செய்திகளை உசாவ கூடியுள்ளோம்” என்றாள் குந்தி. திரௌபதி “நீ இன்றிரவு என் அகத்தளத்திற்கு வா… புலரி வரை நான் உன்னிடம் பேசவேண்டும்” என்றாள். பீமனிடம் “எத்தனையோ முறை இவன் என் கனவில் வந்திருக்கிறான். என் ஐந்து மைந்தர்கூட அவ்வப்போதுதான் அகத்தில் தோன்றுவார்கள். இவனைவிட்டு என் உள்ளம் பிரிந்ததே இல்லை” என்றாள். பீமன் நகைத்து “மற்றவர்கள் எல்லாம் இன்னும் கொஞ்சம் அகவை முதிர்வை காட்டுவார்கள் என எண்ணுகிறேன்” என்றான். அபிமன்யூ “ஆம், உபபாண்டவரில் நான் மட்டும் சிறுவனாகவே எஞ்சிவிட்டேன் என்கிறார்கள். உண்மையில் மூத்தவர் பிரதிவிந்தியரிடம் பேசினால் யாரோ தொல்மூதாதையைப்போல் தோன்றுகிறார்” என்றான்.
குந்தி “நாம் அவர்களைச் சந்திக்க ஒருங்கு செய்வோம்… இப்போது பேசவேண்டியவை நிறைய உள்ளன” என்றாள். அபிமன்யூ “நான் வரும்போதே பார்த்தேன், பேரரசிக்காக செய்யப்பட்டுள்ள வரவேற்புகளை. பொன்னூல் பின்னிய தோரணங்கள். கொன்றைப்பூப் பாவட்டாக்கள். அனலெழும் திரைச்சீலைகள்… என்ன இது, அஸ்வமேதமும் ராஜசூயமும் செய்து மும்முடி சூடிய தமயந்திக்கும் தேவயானிக்கும் அளிக்கப்படும் வரவேற்பல்லவா என் மூதன்னைக்கு வழங்கப்படுகிறது என்று இவரிடம் சொன்னேன். இவர் என் தோழர். மிகச் சிறந்த ஒற்றர்” என்றான். பீமன் திரும்பி பிரலம்பனிடம் “எதை உளவறிகிறீர்?” என்றான். “இளவரசரைத்தான்.” யுதிஷ்டிரர் “எவர்பொருட்டு?” என்றார். பிரலம்பன் “அவருக்காகவேதான்…” என்றான். பீமன் நகைத்து “நன்று… நல்ல இணை” என்றான்.
அபிமன்யூ “நான் சொல்ல வருவதென்ன என்றால் இந்திரப்பிரஸ்தத்தில்கூட அன்னை இவ்வண்ணம் ஒரு பெருமையுடன் அமர்ந்ததில்லை. இன்று அஸ்தினபுரியில் அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை அறிவோம். சூதர்தெருவில் ஒரு மாளிகை அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அரண்மனைக்கணையாழி கொண்ட ஏவலர்கள் எவரும் அளிக்கப்படவில்லை. நுழைவில் வாழ்த்தோ கோட்டைமேல் கொடியோ தெருக்களில் அகம்படியோ எதுவுமில்லை. அரண்மனையில்கூட சிற்றமைச்சர்கள் அவர்களை எதிர்கொள்வதில்லை” என்றான். குந்தி முகம் சிவக்க வாய் சுருங்கி இறுக ஏதோ சொல்லெழுபவள்போல தோன்றினாள். பிரலம்பன் அவன் பயின்றிருந்த உறைமுகத்தை சூடிக்கொண்டான்.
அபிமன்யூ மேலும் ஊக்கத்துடன் “ஏன், அரச உணவுக்கே அவர்கள் கேட்டுப் பெறவேண்டியிருக்கிறது. அதையெல்லாம் எண்ணுகையில் காம்பில்யத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் இந்த வரவேற்பு சிலருக்கு சற்று மிகையென்று தோன்றக்கூடும். எனக்கு அது காம்பில்யத்தின் இளவரசியே அளிக்கும் அன்னைக்கொடை என்று தோன்றுகிறது” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன்” என்றார். குந்தி பற்களைக் கடித்தபடி ஓரவிழியால் தருமனைப் பார்ப்பது தெரிந்தது. குந்தி உச்ச சினம் விழிகளில் மட்டும் தெரிய அபிமன்யூவிடம் “மைந்தா, இது பெரியவர்கள் அவை. உன்னிடம் கேட்கப்பட்டவற்றுக்கு மட்டும் நீ மறுமொழி சொன்னால் போதும்” என்றாள். “ஆம், அதுதான் என் இயல்பு. ஆனால் என்னை மீறி இதை இங்கு சொல்ல விரும்பினேன்” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் பீமனுடைய கண்களை பார்த்தான். பீமன் அவனைப் பார்த்து புன்னகை புரிந்தபோது ஒருகணத்தில் எழுந்த சிரிப்பை அடக்கமுடியாமல் பிரலம்பன் முகம் திருப்பி அருகிருந்த தூணில் சுற்றப்பட்டிருந்த பட்டுப் பாவட்டாவை தொட்டு அதன் பொன்னூல் பின்னலொன்றை கைகளால் இழுத்தபடி தன்னை அடக்கிக்கொண்டான்.
“என்ன நிகழ்ந்ததென்று இவர்களிடம் சொல்” என்றாள் குந்தி. “தெளிவாகவே என்னால் சொல்லமுடியும். ஏனென்றால் நான் சொல்லவேண்டியதை நான் வரும் வழியில் பலவாறாக புனைந்து கொண்டேன்” என்றான் அபிமன்யூ. “புனைந்து கொண்டாயா?” என்றாள் குந்தி. “ஆம் அன்னையே, இவை அனைத்துமே புனைவுதானே?” என்றான் அபிமன்யூ. “நான் புனைந்ததைவிட சிறப்பாக வழியில் ஒரு சூதன் பாடினான். ஆகவே அதில் சில பகுதிகளையும் இணைத்துக்கொண்டேன்.” குந்தி “விளையாடுகிறாயா? அறிவிலி, இது அரசவை” என்றாள். “அந்தச் சூதனையே அழைத்து வந்திருக்கலாமோ?” என்று அபிமன்யூ பிரலம்பனிடம் கேட்டான். பிரலம்பன் தலையசைத்தான். திரௌபதியின் விழிகளிலும் நகைப்பின் ஒளியை அவன் கண்டான்.
“மெய்யாகவே இவனை எப்படி எடுத்துக்கொள்வது என்று எனக்குப் புரியவில்லை” என்றாள் குந்தி. “அவன் சொல்வதை சொல்லட்டும், நாம் புரிந்துகொள்வோம்” என்று திரௌபதி சொன்னாள். அபிமன்யூ “ஒன்று மட்டும் நான் கேட்க விரும்புகிறேன். நான் கதை சொல்லும்போது நடுவில் எந்தை உள்ளே வந்துவிடமாட்டாரல்லவா?” என்றான். “ஏன், வந்தாலென்ன?” என்றாள் குந்தி. அபிமன்யூ “கதை அப்படியே அறுந்து நின்றுவிடும். நான் இந்தச் சாளரம் வழியாக வெளியே செல்ல வேண்டியிருக்கும்” என்றான். யுதிஷ்டிரர் “அவன் வரவில்லை. இங்கு வந்ததுமே திருஷ்டத்யும்னனுடன் இணைந்து காட்டுக்கு வேட்டைக்கு சென்றிருக்கிறான்” என்றார்.
“அது நன்று” என்று அபிமன்யூ சொன்னான். “வேட்டையே அவருக்கு இயல்பானது. நகருக்குள் வேட்டையாடிய காலம் முடிந்துவிட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.” திரௌபதி நகைத்தபடி “அதை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை, மைந்தா” என்றாள். “நாம் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம்? நான் உன்னிடம் என்ன சொன்னேன், அதை சொல்” என்றாள் குந்தி. “அதை சொல்வதற்குள்தான் வேறு திசைதிரும்பல்கள்” என்று சொன்ன அபிமன்யூ “நான் நம் குலமூதாதை பாணாசுரரைச் சென்று வணங்கினேன்” என்று தொடங்கினான். “நம் குலமூதாதையா?” என்று குந்தி கேட்க “அவன் சொல்வது சரிதான்… சொல்க!” என்றார் யுதிஷ்டிரர்.
“போர்முகப்பில் கருமுகில்களை கிழித்து எழும் காலைக் கதிரவனென இளைய யாதவர் தோன்றினார்” என அபிமன்யூ சொல்லி முடித்தான். “அக்கணமே போர் முடிவுக்கு வந்துவிட்டது. அதன்பின் அதை உரிய முறையில் நிறைவுறச் செய்வது மட்டுமே அங்கு நிகழ்ந்தது. பாணாசுரரின் வலக்கை வெட்டுண்டு விழுந்தது. அவர் வீழ்ந்ததை முரசுகள் அறிவிக்கத் தொடங்கியதுமே அசுரர்கள் சிதறி ஓடத்தொடங்கினர். நமது படைகள் அவர்களைத் துரத்திச் சென்றன. பாணாசுரரை களத்திலிருந்து அகற்றி அருகிருந்த சிருங்கபிந்துவுக்கு கொண்டுசென்று அவரது கையைக் கட்டி காயங்களை குதிரைவால் முடியால் தைத்து சீரமைத்தனர். வெட்டுண்ட கையில் அத்தனை குருதிக்குழாய்களும் சீராக வெட்டப்பட்டிருப்பதை கண்டேன் தளிர்வாழைக்கன்றை சரித்து வெட்டுவதுபோல அத்தனை நுட்பமாக உண்மையில்…”
குந்தி இடைமறித்து “அதை விடு. என்ன நிகழ்ந்ததென்று சொல்” என்றாள். “அதன் பிறகு சோணிதபுரிக்குள் யாதவப்படைகள் பெருகி நிறைந்தன. பாணாசுரரை சோணிதபுரியின் மருத்துவநிலைக்கு கொண்டுசென்றார்கள். அசுரப் படைத்தலைவர்கள் அடிபணிந்தனர். வேளக்காரரும் ஏவல்நிரையினரும் படைக்கலம் வைத்தனர். சோணிதபுரியின் அரண்மனைக்குள் நுழைந்த இளைய யாதவர் அமைச்சரும் ஆயமும் கூடிய அரசவைக்குள் புகுந்தார். அவர்கள் எழுந்து கோல் தாழ்த்தி அமைதியாக நின்றனர். ஆனால் பாணாசுரரின் அரியணையில் அமர்வதை தவிர்த்துவிட்டார். வருகையரசர்களுக்குரிய பீடத்தில் அமர்ந்தார். பாணாசுரரின் அரியணைமேல் அவருடைய வாள் வைக்கப்பட்டது. அந்நகரை வென்றிருப்பதாக அறிவித்த மாதுலர் அத்தனை அசுரப்படைகளுக்கும் முழு விடுதலையை அறிவித்தார். நகரில் கைப்பற்றப்பட்ட செல்வங்கள் அனைத்தும் அசுரர்களுக்கு திருப்பியளிக்கப்படும் என்றும் அசுரரின் அரியணையும் கருவூலமும் அவர்களுக்கு மட்டுமே உரியவை என்றும் அறிவித்தார்” என்றான்.
“ஏன்? வென்றவர் அரியணைகொள்வதும் கருவூலம் கவர்வதும்தானே அரசமுறை?” என்று குந்தி கேட்டாள். “நான் அதை அவரிடம் கேட்டேன். பாணாசுரர் இன்னும் தோற்கவில்லை, நான் முழுமையாக வெல்லவும் இல்லை என மாதுலர் மறுமொழி சொன்னார். அவர் நானே. வேறென்று எழுந்த அவரது கையை மட்டுமே துணித்திருக்கிறேன். இப்போது நாங்கள் நெஞ்சுபட தழுவிக்கொள்ள முடியும். இவ்வரியணை இன்னும் அவருக்குரியதே என்றார்” என்றான். குந்தி “அவனுடைய கணக்குகள் என்ன என்பதை நம்மால் சொல்லிவிட முடியாது” என்றாள். திரௌபதி “எளிய கணக்குதான். நாளை அவர் பெயர்மைந்தனின் அரியணை அது” என்றாள்.
“அல்ல” என்று அபிமன்யூ சொன்னான். “நாம் நகர்வென்று அமைந்த ஏழாம் நாள் சோணிதபுரியில் கூடிய சகஸ்ரஹஸ்தம் என்னும் குடிப்பேரவைக்கு அங்குள்ள ஆயிரம் குடித்தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. குலமுறைப்படி வெல்லப்பட்டவர்கள் தலையணி சூடலாகாது. ஆனால் அவைக்கு வருபவர்கள் அனைவரும் தலையணி சூடியிருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டது அவர்களை குழப்பியது. ஒருவருக்கொருவர் நோக்கியபடி, அணுக்கர் தலையணியை கையில் கொண்டு பின்னால் வர தயங்கியபடி வந்து அவை முன் நின்ற குடித்தலைவர்கள் அவர்களில் ஒருவர் தலையணி சூடியதைக் கண்ட பின்னரே தாங்களும் அணிந்தனர். அவர்கள் முன் இளைய யாதவர் மணிமுடி சூடி தோன்றியதும் தயக்கத்துடன் ஏற்பொலி எழுப்பினர்.”
அநிருத்தரோ அவர் மணந்த உஷையின் வயிற்றிலெழுந்த மைந்தரோ அசுரரை ஆள்வார்கள் என்றால் அசுரகுடிகளில் பாதிப்பங்கினர் நகர்நீங்கி காடேகுவர் என்று நகரில் பேசப்பட்டதை நான் அறிந்திருந்தேன். அவையில் அதைப்பற்றி மாதுலர் அறிவிப்பார் என எண்ணியிருந்தேன். அவர் அவர்களிடம் அசுர குலத்து இளவரசி உஷையை தன் பெயர்மைந்தன் அநிருத்தன் அங்கிருந்து அழைத்துச்செல்லவிருப்பதாக சொன்னார். அவள் துவாரகையின் வருங்காலத்துப் பேரரசியாவாள் என்றும் அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தன் யாதவப் பெருநிலத்தை முடிசூடி ஆள்வான் என்றும் அறிவித்தார்.
அசுர குடித்தலைவர்கள் திகைத்து அமர்ந்திருந்தனர். பாணாசுரர் முடியொழியவில்லை என்றும் முடிவழியை அவரே அமைக்கட்டும் என்றும் மாதுலர் சொன்னார். எவரோ வாழ்த்தொலி எழுப்பினர். அது பற்றிப்பரவவில்லை. “சோணிதபுரி துவாரகையின் நட்பு நாடென இலங்க வேண்டுமென்ற கோரிக்கை மட்டுமே என்னிடம் உள்ளது. அதை பாணாசுரரிடமும் அவரது ஆயிரம் குடிகளிடமும் மன்றாட்டாக முன்வைக்கிறேன்” என அவர் சொன்னபோது குலத்தலைவர் ஒருவர் எழுந்து “இளைய யாதவரே, அப்படியென்றால் உங்கள் வேதம் எங்கள் வேதத்தை ஏற்கிறதா?” என்றார். இளைய யாதவர் “உங்கள் அசுர வேதம் கானகத்து மரங்களை கடை புழக்கி வரும் மதவேழம். நான் கொண்டுள்ள நாராயண வேதம் அதன்மேல் வைக்கப்படும் அம்பாரி மட்டுமே” என்றார்.
அவையிலிருந்து அங்கிங்கென பேச்சொலிகள் எழுந்தன. “அம்பாரி சூடும் யானை கட்டுப்படுத்தப்பட்டது. தன் ஆற்றலுடன் எல்லைகளையும் அறிந்தது” என்றார் இளைய யாதவர். அவர்களில் மூத்தவர்கள் அவர் சொல்வதென்ன என்பதை புரிந்துகொண்டனர். எவரோ ஒருவர் மெல்லிய குரலில் “ஆம், இம்முறை விழைவும் ஆணவமும்போல மண்ணில் எந்த எல்லையும் முடிவிலாது விரிய இயலாது என்று கண்டுகொண்டோம்” என்றார். பிறிதொருவர் “அம்பாரி சூடிய யானையே அணிகொள்ளும்” என்றார். அவையில் இருந்து அங்கிங்காக வாழ்த்தொலிகள் எழுந்தன.
“இளைய யாதவர் கைகூப்பி விடைகொள்வதாக அறிவித்து பீடம் விட்டு எழுந்தார். அவரது அகல்கையை நிமித்திகன் கூவ மங்கல இசை எழ அவர் நடந்து அவை நீங்கினார். அவர் அவையிலிருந்து வெளியேறிய அக்கணம் வெடித்தெழுந்ததுபோல அவை முழங்கத் தொடங்கியது. சோணிதபுரியின் அவை நிறைந்திருந்த மாபெரும் அடிமரத்தூண்கள் யாழ்நரம்புகள்போல் அதிரத் தொடங்கின அத்தகைய வாழ்த்தை நான் யாதவபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் கேட்டதில்லை” என்று அபிமன்யூ சொன்னான்.
பீமன் “வென்றெழுந்துவிட்டார். முழுமையாகவே கடந்து வந்துவிட்டார்” என்றான். அபிமன்யூ தொடர்ந்தான். அன்று மாலை மருத்துவநிலையில் படுத்திருந்த பாணாசுரரை அவர் சென்று பார்த்தபோது நான் உடனிருந்தேன். அரசரை வணங்கும் வருகைவேந்தருக்கு உரிய முறையில் முகமனுரைத்து தலைவணங்கினார். மாதுலர் நுழைந்த கணம் முதல் விழிகளை அவர்மேல் பதித்திருந்த பாணாசுரர் மெல்லிய குரலில் மறுமுகமன் சொன்னார். அவர் முகம் திகைத்ததுபோல இருந்தது. அதை கலைக்கும்பொருட்டு நான் விளையாட்டாக “இத்தோல்விக்காக வருந்துகிறீர்களா?” என்று கேட்டேன். “என்ன?” என்று கேட்ட பாணாசுரர் முகம் மலர மீசையை நீவியபடி நகைத்து “பிறிதெவரிடமும் தோற்கவில்லையென்று பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.
மாதுலர் அவர் மஞ்சத்தருகே அமர்ந்து “என்றும் என் தோள்தோழர்களில் ஒருவராக தாங்கள் அமையவேண்டுமென்று விரும்புகிறேன், பாணாசுரரே” என்றார். பாணாசுரர் இடக்கையை ஊன்றி எழுந்து அக்கையால் இளைய யாதவரின் தோள்களைத் தொட்டு அணைத்துக்கொண்டு “பேறு பெற்றேன்” என்றார். “நாளைமறுநாள் யாதவப்படைகள் முழுமையாகவே ஆசுரத்தில் இருந்து விலகிச்செல்லும் என்றும் அந்நிலத்தில் இருந்து எடுத்துக்கொண்ட கூழாங்கல்லைக்கூட விட்டுவிட்டே அவை எல்லை கடக்கும் என்றும் இளைய யாதவர் சொன்னார்” என்றான் அபிமன்யூ. குந்தி புன்னகையுடன் “பாணாசுரன் நெகிழ்ந்து கண்ணீர்விட்டிருப்பானே?” என்றாள். அபிமன்யூ “அல்ல, அவர் முகம் சிறுமைகொண்டது போலிருந்தது. தாளா வலியில் என உடல் மெல்ல மெய்ப்புகொண்டது” என்றான். பீமன் “அதுவே நிகழும்” என்றான்.
“என் வேதம் என்னையும் நான் அதையும் விடப்போவதில்லை யாதவரே என்றார் பாணாசுரர்” என அபிமன்யூ சொன்னான். “நம் ஊழ்நெறிகள் இணையப்போவதில்லை. மீண்டும் நாம் களம் காணக்கூடும் என்று அவர் சொன்னபோது இளைய யாதவர் விந்தையானதோர் நோக்கை அவர்மேல் பதித்து அமர்ந்திருந்தார். பாணாசுரர் திகைப்புடன் என்னை நோக்கினார். தங்கள் முகம் நான் நன்கறிந்தது. எங்கோ, எப்பிறப்பிலோ என பாணாசுரர் மாதுலரிடம் சொன்னார். முதற்கணம் உங்களைக் கண்டபோதே உளம் திகைத்துவிட்டேன். அக்கணத்தில் உங்கள் படையாழியால் வெல்லப்பட்டேன் என்றார். இளைய யாதவர் புன்னகை செய்தார்.” யுதிஷ்டிரர் “அவரைக் கண்ட முதற்கணமே அம்முகத்தை முன்னரே கண்டிருப்பதாக பலர் சொல்லியிருக்கிறார்கள். முனிவர், கவிஞர், சிறுகுழந்தைகள், பித்தர்” என்றார்.
அபிமன்யூ “ஆனால் அதற்கு மறுநாள் யாதவப்படைகள் கிளம்பியபோது பாணாசுரர் முடிசூடி கோல் கைகொண்டு அரியணையில் அமர்ந்து அரசமுறைப்படி விடைகொடுத்தார்” என்றான். “உஷையை தன் கையால் நீரொழுக்கு செய்து அநிருத்தருக்கு கையளித்தார். கோட்டைவாயில் வரை வந்து வழிமொழி சொல்லி விடைகொள்கையில் தன் செங்கோலை மாதுலரின் கால்களை நோக்கித் தழைத்து முடிகொண்ட தலைதாழ்த்தி வணங்கி இப்படைக்கலமும் மணிமுடியும் என் குடிப்பெருக்கும் உங்களுக்குரியவை அரசே. என் வேதம் உங்கள் சொல்லில் நிறைவுகொள்கிறது என்றார்.” குந்தி “வாள்தாழ்த்தி வேதத்தை கையளித்தானா?” என்றாள். “ஆம், அதை இயல்பான புன்னகையுடன் மாதுலர் ஏற்றுக்கொண்டார்.”
அறையில் மெல்லிய மூச்சொலிகள் மட்டும் கேட்டன. திரௌபதி “மைந்தா, அவர் அவ்வாறு பணிந்தது எதனால் என நினைக்கிறாய்?” என்றாள். “அன்று மருத்துவநிலையில் பேசிக்கொண்டபின் இரவில் இளைய யாதவர் தனியாக மீண்டும் பாணாசுரரை பார்க்க வந்தார். என்னுடன் எழுக என்றார். எங்கே என்று அவர் கேட்டார். வருக என யாதவர் கை நீட்டியபோது இடக்கையை பாணாசுரரும் நீட்டினார். கைபற்றி எழுப்பி வெளியே அழைத்துச்சென்றார். புரவியில் ஏறிக்கொண்டு இருவரும் நகர்விட்டுச் சென்றனர். இருளில் காட்டுப்பாதையில் விரைந்து அசுரர்களின் மூதாதையர் வாழும் குகைக்குச் சென்றனர்.”
“அக்குகை வாயிலில் பாணாசுரர் திகைத்து நின்றுவிட்டார். இவ்விடம் எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டார். நான் வந்த இடம்தான் இது என்றபடி இளைய யாதவர் சுளுந்து ஒன்றை பற்றவைத்துக்கொண்டார். வருக என்று கைகாட்டி அழைத்தபடி அவர் குகைக்குள் சென்றார். அச்சமும் ஆவலுமாக பாணாசுரர் பின்னால் சென்றார். குகைக்குள் பந்தத்தின் செவ்வொளி படர்ந்தது. அசுர மூதாதையரின் ஓவியங்கள் குகைச்சுவர்களில் எழுந்தன. அவர்களின் விழிச்சொற்களையும் வெறிநகைகளையும் நோக்கியபடி கனவிலென நடந்த பாணாசுரர் ஒரு முகத்தைக் கண்டு திகைத்து நின்றுவிட்டார். அது கையில் பந்தத்துடன் தன் முன் நின்றிருந்த அதே முகம் என்று கண்டார்” என்றான் அபிமன்யூ.
மீண்டும் அறைக்குள் அமைதி நிலவியது. பிரலம்பன் உள எழுச்சியுடன் பெருமூச்சுவிட்டான். அவ்வொலி கேட்டு இயல்பாக திரும்பி நோக்கிய பீமன் “இதைத்தான் சூதர் சொன்னாரா?” என்றான். “ஆம், எப்படி தெரியும்?” என்றான் அபிமன்யூ. பீமன் புன்னகைத்தான். திரௌபதி “ஆனால் சூதர் நாவில் தெய்வங்களே சொல்வடிவு கொள்கின்றன” என்றாள். பீமன் “கிருதயுகம் முதல் தொடர்ந்து வரும் போர் இது. வருணனில் தொடங்கியது, இந்திரனில் விசைகொண்டது, இரணியனிலும் மாபலியிலும் முனைகொண்டது, இன்று முடித்துவைக்கப்பட்டுள்ளது. இத்தருணம் என்றும் வாழ்க!” என்றான்.