புதியவாசகரின் கடிதம்

naveen

 

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு,

 

 

என் பெயர் நவீன். தங்களுக்கு மிகவும் பரிச்சயமான திருவண்ணமலையில் எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன்.

நலம் நலம் அறிய ஆவல். எழுத்துலகிற்கு என்னை அறிமுகம் செய்து வைத்தவர் என் அம்மா தான். என்னுடைய எட்டாம் வகுப்பில்

கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் இனிதே தொடங்கியது அப்பயணம். நினைததைஎல்லாம் படிக்காமல் என்னை கவர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் முழுதையும் படித்தறிய முற்பட்டேன். கல்கி, சாண்டில்யன், அப்துல் ரஹ்மான், சுஜாதா, வைரமுத்து, புதுமைபித்தன் என்று என்னால் இயன்ற வரை அவர்களுடைய முழு படைப்புகளையும் கற்க முயற்சித்தேன், கற்ற அளவு அவர்களை வியந்தேன்.

 

 

எங்கள் வகுப்பில் நான் ஒருவன் மட்டுமே கமலஹாசன் ரசிகன். நண்பர்கள் கேலி செய்த போதிலும் கமலின் அறிவு என்னை கவர்ந்தது. கமல் அவர்கள் ஒருமுறை தன் சகநடிகர் பிரகாஷ் ராஜ்க்கு “அறம்” தொகுப்பை பரிசளித்துவிட்டு ” தமிழ் அறிந்த யாவரும் படித்து பத்திரப்படுத்த வேண்டிய படைப்புகளில் ஒன்று” என்று குறிப்பிட்டார். அக்கணமே அதை படிக்க வேண்டும் என முடிவு செய்தேன். ஒரே மூச்சில் புத்தகம் படிக்கும்

எனக்கு “அறம்” ஒரு புது தாகத்தை ஏற்படுத்தியது. ஒரு கதை முடித்து அதன் அதிர்வுகளில் இருந்து வெளிவந்து அடுத்த கதைக்கு செல்ல

சில மணி நேரங்கள் பிடித்தது. ‘வணங்கான்’,’யானை டாக்டர்’,’நூறு நாற்காலிகள்’,’சோற்று கணக்கு’ போன்றவை இன்னமும் நினைக்கையில்

இதழோரத்தில் சிறு புன்னகையையும், மனதில் தன்னம்பிக்கையையும் தருவதை தவறுவதில்லை.நல்ல என்பதை விட சிறந்த அபிப்பிராயத்தை

“அறம்” உங்கள் மீது ஏற்படுத்தியது.

 

 

உங்களை பற்றி இணையம் முழுவதும் தேடிக்கற்றேன். உங்கள் படைப்புகள் முழுவதும் வாசிக்க தீர்மானித்தேன். புத்தகத்தை பரிசளிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன். நண்பர்களின் பிறந்தநாளிற்கு “அறம்” வாழ்த்து கூறியது. நண்பர்களும் என் ஆர்வத்தை கண்டு என் பிறந்தநாளிற்கு “விஷ்ணுபுரம்” மற்றும் “ரப்பர்” பரிசளித்தனர்.என் அம்மா எனக்கு புத்தகம் சிபாரிசு பண்ணும் காலம் போய், என் அம்மாவிற்கு நான் உங்கள் உலகத்தை அறிமுகம் செய்தேன். தங்களது நாவல் உலகிற்கு செல்லும் முன் “ஊமைச்செந்நாய்”, “வெண்கடல்”, “வாழ்விலே ஒரு முறை” போன்ற தொகுப்புகளை ரசித்தேன். தங்களது பிம்பம் என் மனதில் இன்னும் உயரே சென்றது.

 

 

இந்த நான்கு நாள் விடுமுறையில் ‘ரப்பர்’,’விஷ்ணுபுரம்’ என் கடமைகளில் தலையாயதாயின. ஓர் இரவில் ‘ரப்பர்’ முடித்து

‘விஷ்ணுபுரம்’ தொடங்கினேன். கடைசி நூறு பக்கங்களை முடிக்க தயக்கம். முடித்தால், விஷ்ணுபுரத்தில் இருந்து வெளியே துரத்தி

அடிகப்படுவேனோ என்ற கவலை.”விஷ்ணுபுரம்” தொடங்கிய சில பக்கங்களிலே தீர்மானித்துவிட்டேன், தங்களுக்கு எழுதுவது என்று. தங்களது உவமைகள் என்றுமே எனக்கு வியப்பளிப்பவை. “மனுஷன் எப்புடியா இப்படியெல்லாம் யோசிகறார்” என்று வியந்த நாட்கள் அதிகம்.

உதாரணம் ஒன்று:

 

 

லலிதாங்கியின் கழுத்தை ” குத்துவிளக்கில் விபூதி போட்டு துலக்கும் போது, கண்மணி உரசி விழும் கோடுகள் போல சில வரிகள்!” – ஒரு கணம் கண்மூடி யோசித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.

 

மேலும் இந்த ஆரம்பவாசகனின் சில சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

 

  1. சுயவர்க போகிகள் – homosexuals குறித்து விஷ்ணுபுரத்தில் சில இடங்களில் குறிப்பிட்டீர்.

(தமிழ் தேசத்தில் சுயவர்கபோகிகள் குறித்த வரலாற்று சான்று ஏதேனும் உள்ளதா? ஆவலினால் கேட்கிறேன்

.

 

  1. விஷ்ணுபுரத்து சயன மூர்த்தியும், தங்களது பிற கதைகளில் வரும் ( கிரிக்கெட் வீரருக்கு தரிசனம் தந்த கதை) ஆதிசேஷ பெருமாளை

ஒத்து இருக்கிறதே!! ( பிரம்மாண்டம், மூன்று பிரகாரங்களை ஆக்கிரமித்து எழுந்தருளுதல்). இதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் உள்ளதா?

 

 

  1. சங்கர்ஷணன் பாடிய காப்பியமும் விஷ்ணுபுரமும் (அதாவது நான் படித்த விஷ்ணுபுரமும்) ஒன்று தானா? (இரண்டிலும் ஸ்ரீ பாதம், கௌஸ்துபம்,

மணிமுடி என்று மூன்று பகுதிகள், இரண்டுமே வசந்தன் என்னும் பாணன் கூறிய முறையில் அமைந்திருகிறது)

 

 

 

ஸ்டீபன் ஹவ்கிங்க்ஸ் என்னும் இயற்பியலாளர் இந்த பிரபஞ்சமே ஒரு வேற்று கிரக வாசி குழந்தையின் விளையாட்டு

அறையில் உள்ள சிறு விளையாட்டு பொருளாக இருக்கலாம் என்ற கோட்பாட்டை முன் வைக்கிறார். விஷ்ணுபுரம் என்னும் நகரமே

ஒரு கதைசொல்லியின் கதைதான் என்று படித்ததுமே இயற்பியலாளரின் அறிவியல் கோட்பாடுதான் நினைவிற்கு வந்தது. என்ன ஒரு

ஒற்றுமை!!

 

அடுத்ததாக “கொற்றவை” படிக்க திட்டம். “பத்து வரிகளில் அதிர்ந்தேன்” என்று கமல் அவர்கள் “வெண்முரசு” வெளியீட்டு விழாவில்

கூறியது நினைவிற்கு வருகிறது. சக வாசிபாளர்களுக்கு என் முதல் சிபாரிசாக மாறிவிட்டீர்கள்!! ஒற்றுப்பிழைகளை மன்னிக்கவும்!

இப்புது வாசகருக்கு தங்கள் ஆசிகள் என்றும் தேவை! உலகின் மிக நீண்ட நாவல் தொகுப்பான “வெண்முரசு”க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

 

 

இப்படிக்கு

 

 

நவீன்.

 

 

அன்புள்ள நவீன்,

 

ஓர் ஆரம்பவாசகராக இத்தனை தூரம் வாசித்து முன்னகர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாசிப்பதும் அதை நமக்கு நாமேயும் பிறரிடமும் விவாதிப்பதும்தான் ரசனையை உருவாக்குகிறது

 

தமிழ்நாட்டில் தன்பாலுறவினர் குறித்து இலக்கியச் செய்திகள் இல்லை. ஆனால் கோயில் சிற்பங்களில் அனைத்துவகை உறவுகளையும் செதுக்கியிருக்கிறார்கள். தூண்களில் உள்ள சிறிய புடைப்புச்சிற்பங்களை மறுமுறை கவனிக்கவும்

 

விஷ்ணுபுரம் என் சொந்த ஊரான திருவரம்புக்கு அருகே உள்ள திருவட்டார் பேராலயத்தை முன் மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்டது. அந்தக்கரு அங்கிருந்தே எனக்குக் கிடைத்தது. அதை முதல்பதிப்பின் முன்னுரையிலேயே சொல்லியிருந்தேன்

விஷ்ணுபுரம் மெட்டாஃபிக்‌ஷன் வகையைச் சேர்ந்த புனைவு. அது அதற்குள் வரும் பத்மபுராணம் என்னும் காவியமேதான். அதை எழுதியவர்கள் அதற்குள்ளே வருகிறார்கள். இந்தியாவின் தொன்மையான புனைவுமுறைமை இது. மகாபாரதமே இந்த வடிவில்தான் உள்ளது

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24
அடுத்த கட்டுரைகாட்டைப்படைக்கும் இசை