பினராயி விஜயனின் எழுத்தறிவித்தல்

pinaray

அன்புள்ள ஜெமோ

இந்தப்புகைப்படத்தைக் கவனியுங்கள். இதில் பினரயி விஜயன் ஒரு குழந்தைக்கு எழுத்தறிவிக்கிறார். இந்தச்சடங்கு இந்து மதம் சம்பந்தமானது என்றும் இதை செய்ததனால் அவர் இந்துத்துவச் சக்திகளுக்கு விலைபோய்விட்டார் என்றும் சொல்லி மிகப்பெரிய பிரச்சாரம் ஒன்றை இணையத்தில் ஒரு கூட்டம் செய்துகொண்டிருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

சிவராம் கதிர்வேல்

ems

அன்புள்ள சிவராம்,

நான் அறிந்தவரை தமிழகத்தின் அரசியல் தலைவர்களில், புகழ்மிக்க ஆளுமைகளில் தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கையோ சடங்குகள் மேல் ஈடுபாடோ முற்றிலும் இல்லாத எவரும் இல்லை.  நாமறிந்த அரசியல்தலைவர்கள் முன்பு ரகசியமாக குடும்பத்தினரைக்கொண்டு சோதிடம்பார்ப்பதையும், பரிகாரங்களையும் செய்துகொண்டிருந்தவர்கள்.   இன்று சத்ருசம்ஹார ஹோமம் போன்றவற்றைக்கூட தயக்கமில்லாமல் வெளிப்படையாகவே செய்கிறார்கள்.

அதிலும் தமிழகத்தின் சமகாலம் என்பது மதத்தில் உள்ள அத்தனை எதிர்மறைச் சடங்குகளும் முழுவடிவுடன் எழுந்துவந்திருக்கும் காலகட்டம். சோதிடமும் சடங்குகளும் இப்படி முழுவீச்சுடன் நிகழும் ஒரு சூழல் தமிழக வரலாற்றில் முன்பு எப்போதுமே இருந்ததில்லை. உண்மையில் கேள்விப்படும் ஒவ்வொன்றும் அருவருப்பும் அச்சமும் ஊட்டுபவை.

ஆகவே இங்கே பொதுவெளியில் உள்ள நாத்திகப்பிரச்சாரம் எல்லாமே ஒருவகை மிகைபாவனைகள்தான். சாதியொழிப்பு, ஊழல் இன்னபிற அலங்காரக் கூச்சல்களைப்போல. அவை பொய் என்பதனால்தான் இத்தகைய தகரப்பேரோசை.

1920களில் கேரளப்பண்பாட்டு அடையாளம் குறித்த தேடல் ஆரம்பித்தது. அதை கேரளத்தின் தேசியகவிஞர் வள்ளத்தோள் நாராயணமேனனில் இருந்து தொடங்கலாம். இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு அவர்களில் அது முழுமைகொண்டது. 1952 வாக்கில் இ.எம்.எஸ் கேரளம் – மலையாளிகளுடே மாத்ருபூமி என்று ஒரு நூல் எழுதினார். அதில் கேரளப்பண்பாடு என எவையெல்லாம் இருக்கமுடியும் என வரையறுத்தார்.

கேரளத்தின் மரபுச்செல்வங்கள் அனைத்தையும் கேரளப் பண்பாட்டு அடையாளங்களாக அவர் விளக்கினார். அவை சென்றகால நிலப்பிரபுத்துவத்தில் உருவானவைதான். அதுதான் நம் இறந்தகாலம். அதை நிராகரிக்கவோ, அறுத்துக்கொண்டு செல்லவோ இயலாது. அதை மறு அமைப்பு செய்துகொள்வது மட்டுமே இயல்வது. அந்த மாபெரும் பின்புலவிரிவில் எவை மானுடசமத்துவத்துக்கும் இன்றைய அறத்திற்கும் புறம்பானவையோ அவற்றை மறுப்பதும், நிலத்துடனும் இயற்கையுடனும் தொல்மூதாதையருடனும் நம்மைப்பிணைக்கும் கூறுகளை மறுவரையறைசெய்து ஏற்றுக்கொள்வதும் மட்டுமே உகந்த வழி.

மொத்தமாக மரபை நிராகரிப்பது அடைய முடியாத இலக்கு. ஏனென்றால் மானுட மனமே அவ்வாறு மரபினூடாக உருவாகி வந்ததுதான். மூர்க்கமாக நிராகரிக்க முயல்ன்றால் அது ஒருவகை வாய்ச்சொல்விளையாட்டாக, முச்சந்தி நடிப்பாக மட்டுமே எஞ்சும். அந்தரங்கத்தில் மரபுநம்பிக்கையும் மரபுவழிபாடும் வாழும். அவை ரகசியமானவை என்பதனால் ஆற்றல்மிக்கவையாக இருக்கும். பொதுவெளியில் மரபை முற்றாக மறுக்க, இளைய தலைமுறையினரை விலக்க முயன்றால் அதன்  எதிர்வினையாக மொத்த மரபையே அதன் அத்தனை குப்பைக்கூளங்களுடனும் அப்படியே ஏற்றுக்கொண்டு தலையில் வைத்துக்கொள்வதே நடக்கும் என இ.எம்.எஸ் விளக்கினார். அதாவது தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பதைப்போல.

மரபுக்கலைகள், மரபிலக்கியங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், தொன்மையான வளச்சடங்குகள், கல்விச்சடங்குகள் ஆகியவை குறியீட்டுரீதியாக பெரும் முக்கியத்துவம் கொண்டவை. அவையே நம் ஆழ்மனதைக் கட்டமைத்துள்ளவை. நம் கனவுகளின் கட்டுமானப்பொருட்கள். அவை இல்லாமல் பண்பாடே இல்லை. அவையே கலையிலக்கியத்தின் வேர்நிலம்.

உதாரணமாக ஓணம் கேரளத்தின் அறுவடைப்பண்டிகை. அது வைணவத்திற்குள் சென்றது. அதை கேரளத்தின் தேசியப்பண்டிகையாக, பொதுவான பண்பாட்டுக் கொண்டாட்டமாக ஆக்கியவர் இ.எம்.எஸ்தான். கேரளத்தின் கதகளியும் தெய்யமும் கலையடையாளங்கள் என அவரே முன்னிறுத்தினார். துஞ்சத்து எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணமும் மகாபாரதம் கிளிப்பாட்டும் மலையாளச் செவ்வியலின் தொடக்கம் என அவரே நிறுவினார்.

இன்றைய கேரளம் அதன் பண்பாட்டு அடையாளங்களை மதச்சார்பில்லாமல் தொகுத்துக்கொண்டது வள்ளத்தோள் நாராயணமேனன் முதல் இ.எம்.எஸ் வரையிலான முன்னோடிகளின் சிந்தனைகள் வழியாகவே. கேரளத்தின் கதகளியோ தெய்யமோ வள்ளம்களியோ இன்று அவர்களின் முகமாக உலகப்புகழ்பெற்றிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அவர்களைப்போன்ற முன்னோடி அறிஞர்கள்தான். இ.எம்.எஸின் முற்போக்கு நோக்கில் அவரைப்பற்றி அறிந்த எவருக்கும் ஐயம் எழாது.

எழுத்தறிவித்தல் என்பது மதச்சடங்கு அல்ல. அது மிகத்தொன்மையான கல்விச்சடங்கு. அரிசியில் முதல் எழுத்தை குழந்தைக்கு ஆசான் எழுதுவித்து நாவில் முதல் இனிமையை அளிப்பதுதான் அது. பலவகைகளில் பழங்குடிகளிடம், அடித்தள மக்களிடம் அச்சடங்கு உள்ளது. அந்தத் தொல்தமிழ்ச்சடங்கு எல்லா தொல்சடங்குகளையும்போல மதத்திற்குள் சென்று மதத்தால் பேணப்பட்டு இன்றுவரை வந்து சேர்ந்துள்ளது. மதத்துடன் சம்பந்தமுள்ள அத்தனை சடங்குகளையும் நிராகரிக்கவேண்டும் என்றால் அதன்பின் நேற்றிலிருந்து பெற்றுக்கொள்ள எதுவுமே எஞ்சாது. அது இன்று கிறித்தவர் உட்பட பலராலும் கொண்டாடப்படுவதே [கிறித்தவ விஜயதசமி]

துஞ்சத்து எழுத்தச்சன் நினைவகமான துஞ்சன் பறம்பில் பல ஆண்டுகளாக எம்.டி.வாசுதேவன் நாயர் பலநூறு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து வருகிறார். கலாமண்டலத்தில் வள்ளத்தோள் நாராயணமேனன் பல ஆண்டுக்காலம் எழுத்தறிவித்தலை செய்துவந்தார். அவர்களே கேரளத்தின் முற்போக்குப் பண்பாட்டின் முகங்கள்.

மொத்தப்பண்பாட்டையும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதென்பது அடிப்படைவாதிகளுக்கே உதவியானது. அவர்களுக்கு அப்பெரும் செல்வத்தை அள்ளிக்கொடுப்பதுதான் அது. கேரளத்தில் ஓணமோ எழுத்தறிவித்தலோ பொதுவான பண்பாட்டு அடையாளமாக ஆவதை எதிர்ப்பவர்கள் எவர் என்று பார்த்தால் இந்த உண்மை தெரியும், இந்து, இஸ்லாமிய மத அடிப்படைவாத அரசியல் கொண்டவர்கள்தான்

ஜெ

கிறித்தவ விஜயதசமி

இ. எம். எஸ்ஸ¤ம் கேரள தேசியமும்

இ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் 2
முந்தைய கட்டுரைஅஞ்சலி எம்.ஜி.சுரேஷ்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 21