நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 1
அபிமன்யூ காம்பில்யத்தின் கோட்டை முகப்பை நெருங்கும்போதே அவனுடைய துள்ளும் மீன் பொறிக்கப்பட்ட கொடி கோட்டை மேல் ஏறியது. கொம்புகள் முழங்க வீரர்கள் முகப்புக்கு வந்து புன்னகையுடன் வாழ்த்தி தலைவணங்கி வரவேற்றனர். புரவியிலிருந்து இறங்கி “முத்ரரே, எப்படி இருக்கிறீர்? நகர் நன்கு பொலிகிறதா? ஐம்புரிக்குழல் மங்கையர் நாள்தோறும் அழகு முதிர்ந்துகொண்டிருக்கிறார்களா?” என்றான். “அகவை முதிர்கிறார்கள். பிறிதொன்றும் நான் அறியேன்” என்றான் முத்ரன். அருகே நின்ற சம்பு “இது காடு, இளையவரே. இங்கே மலர்களுக்கு குறைவேயில்லை” என்றான். “ஆம், அவை பெரும்பாலும் உதிர்ந்துவிடுகின்றன. உதிராதவை கனியாகிவிடுகின்றன” என்று அபிமன்யூ நகைத்தான்.
பிரலம்பனை சுட்டி “இவர் என் அணுக்கர் பிரலம்பர். ஐம்புரிக்குழல் மங்கையரைப்பற்றித்தான் இவரிடம் பேசிக்கொண்டு வந்தேன். கிளர்ச்சியடைந்திருக்கிறார்…” என்றான். முத்ரர் பிரலம்பனைப் பார்த்து நகைக்க அவன் தலைவணங்கி முகமன் உரைத்தான். “முறைமைகளையெல்லாம் எப்போதும் சீராக செய்துவிடுவார். போரில் எப்போதும் எனக்குப் பின்னாலிருந்தார்” என்று சொன்ன அபிமன்யூ இன்னொரு வீரரிடம் “தங்கள் புதல்வி எப்படி இருக்கிறாள்? கேசினி அல்லவா அவள் பெயர்?” என்றான். “சுகந்தகேசினி என்றழைப்போம்” என்றார் அவர். “கேசினி என்றுதான் என்னிடம் சொன்னாள்? அழகி!” என்றபின் கோட்டைக்குள் நுழைந்து காவலர்கூடங்களின் நடுவே சென்று நின்றான்.
அனைத்து திசைகளிலிருந்தும் காவலர்கள் சிரித்தபடி அவனை நோக்கி வந்தனர். “எந்தையர் வந்திருக்கிறார்கள் அல்லவா? கொடிகளைக் கண்டேன்” என்றான். காவலர்தலைவன் “ஆம், அவர்கள் நேற்று முன்நாள் வந்து அவைஅமர்ந்துவிட்டனர். தங்களுக்காகவே அனைவரும் காத்திருக்கிறார்களென்று இங்கு பேச்சிருக்கிறது” என்றான். மேலிருந்து வணங்கியபடி அணுகிய முதிய காவலரிடம் “சூரியரே, என் அன்னை எப்படி இருக்கிறாள்?” என்றான். அவர் முகத்தை திருப்பிக்கொள்ள சூழ்ந்திருந்த காவலர்கள் நகைத்தனர் “அன்னையிடம் எந்தையின் உசாவலை தெரிவியுங்கள். மகிழ்வார்கள்” என்றபின் “நான் இப்போது கடிது அரண்மனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. செய்தி அறிவித்துவிட்டு அவைச் சடங்குகளை முடித்துவிட்டு வருகிறேன்” என்றான்.
சூரியர் பற்களைக் கடித்தார். அபிமன்யூ “வருகிறேன்” என்று கையை காட்டினான். முதுகாவலர் அவனை சினத்துடன் பார்த்து இதழ்களுக்குள் ஏதோ முணுமுணுத்தார். “சூரியர் என்னை வாழ்த்துகிறார்” என்ற அபிமன்யூ தலைவணங்கி “தங்களுக்கு நான் ஒருவகையில் மைந்தன் முறையல்லவா? குரலெடுத்தே வாழ்த்தலாமே?” என்றான். அவர் அங்கிருந்த கற்தூணுக்குப் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டார். பிறிதொரு காவலன் “தாங்கள் போர் முகப்பிலிருந்து வருவதாக இங்கு சொல்லப்பட்டது” என்றான். “ஆம், மூன்று இடங்களில் எனக்கு ஆழமான புண்” என்றபின் தன் காலைத் தூக்கிக்காட்டி “இங்கே அம்பு எலும்பில் பாய்ந்துவிட்டது. ஆறிவருகிறது” என்றான். அன்னையரிடம் புண்களைக்காட்டும் குழந்தை போலிருந்தான் அவன். “விழுப்புண் அல்லவா, இளவரசே” என்றான் ஒருவன். “ஆம், இன்னும் அதிக புண்கள் படும் பெரிய போருக்கு இது ஒரு பயிற்சி” என்றபின் “வருகிறேன், சூரரே” என்றான்.
பிரலம்பன் அபிமன்யூவை தொடர்ந்தபடி “இங்கு எப்போது வந்தீர்கள்?” என்றான். “இரண்டாண்டுகள் இருக்கும். எந்தையர் கானேகல் முடிக்கப்போகிறார்கள் என்னும் செய்தி வந்தது. அதை உரைக்க வந்தேன்” என்றான். “இவர்கள் தங்களை மறக்கவே இல்லை” என்றான் பிரலம்பன். “ஏன் மறக்கவேண்டும்? நான் இவர்களை மறக்கவேயில்லையே” என்று அபிமன்யூ மறுமொழி சொன்னான். “மேலும் இந்நகர் மறக்கக்கூடியதே அல்ல. புலியை வேட்டையாடும் மான்களால் ஆனது இது. சிலநாட்களிலேயே புரிந்துகொள்வீர்.” பிரலம்பன் “என்ன?” என்றான். “அதோ…” என அபிமன்யூ அங்கிருந்த சிறுகோயிலை சுட்டிக்காட்டினான். கோட்டைச்சுவரில் புடைப்பாக எழுந்த கற்சிலையைச் சுற்றி மரத்தால் கட்டப்பட்ட கோயிலுக்குள் மல்லாந்து கிடந்த துர்க்கையின் காலால் மிதிக்கப்பட்ட சிவன் மல்லாந்து கிடந்தார். “அவர் பேருவகை கொண்டிருக்கிறார்” என்றான் அபிமன்யூ.
காம்பில்யத்தின் தெருக்களில் வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் எழுந்தன. எல்லா வாயில்களும் திறந்து மக்கள் அபிமன்யூவை பார்க்க சாலையின் இருபுறமும் கூடினர். வாழ்த்தொலிகளிலும் கூச்சல்களிலும் தயக்கமும் ஐயமும் கலந்திருப்பதுபோல பிரலம்பனுக்குத் தோன்றியது. “எண்ணி எண்ணி வாழ்த்துரைப்பதுபோல் தோன்றுகிறதே?” என்றான். “ஆம், அஸ்தினபுரியின் சூதுக்களத்தில் பாரதவர்ஷத்தின் அத்தனைபேரும் வந்து நின்றார்கள் என்று கவிஞர்கள் பாடுகிறார்கள். பாரதவர்ஷத்தின் அனைவருமே இன்று நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த மண்பூசலில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். என்ன நிகழ்கிறதென்று ஒவ்வொரு கணமும் எதிர்பார்க்கிறார்கள்” என்றான் அபிமன்யூ.
“இல்லங்களுக்குள் ஒளிந்திருந்து கோட்டைக்கு வெளியே கேட்கும் ஒலிகளிலிருந்து அங்கே நிகழும் போரை கற்பனை செய்யும் கோழையைப்போன்று இருக்கிறார்கள் இவர்கள்” என்றான் பிரலம்பன். “ஆனால் வெளியே நிகழும் போர்களைவிட மிகப்பெரிய போர்களை இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கலாம்” என்று நகைத்த அபிமன்யூ “என் விழைவு என்னவென்றால், இந்தக் கவச குண்டலங்களை கழற்றிவிட்டு இவர்களுடன் எளிய குடிமகனாக கலந்துவிடவேண்டும். ஐயங்களை பெருக்க வேண்டும். அச்சங்களை பரப்ப வேண்டும். புரளிகளை எழுப்பி புதிய வழிகளை திறந்துவிட வேண்டும். வரலாற்றில் நடித்து சலித்துவிட்டேன். வரலாற்றை வைத்து விளையாடும் வாய்ப்புக்காக ஏங்குகிறேன்” என்றபின் அங்கு நின்ற ஐம்புரிக் குழலணிந்த பெண்ணிடம் “துர்க்கை, எப்படி இருக்கிறாய்? நான் போரிலிருந்து வருகிறேன். போரை பிறகு உன்னிடம் விரிவாகச் சொல்கிறேன்” என்றான்.
அவள் இருபுறமும் நின்றவர்களை நோக்க “என்னை தெரியவில்லையா? நீ என்னை கனவு கண்டாய் அல்லவா?” என்றான். அவள் “நான் யாரையும் கனவு காணவில்லை” என்றாள். “அப்படியென்றால் நான் கனவு கண்டிருப்பேனோ?” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “ஒருவேளை இருவரும் சேர்ந்துகூட கனவு கண்டிருக்கலாம்” என்றான். “இளையோனே, இத்தகைய ஆடல்களை நான் நிறையவே கண்டிருக்கிறேன். எங்களுக்கெல்லாம் பாண்டவர் ஐவருமே வேண்டும்” என்று அவள் சொல்ல அவள் தோழிகள் நகைத்தனர். “நான் ஒருபுரி கொண்ட குழல்களை இதற்கு முன் பார்க்கிருக்கிறேன். பிற நான்கை அறிய ஆவல்” என்றான் அபிமன்யூ. “தருணம் சொல்கிறேன், வருக!” என்றாள் அவள். அவள் தோழிகள் மீண்டும் நகைக்க அபிமன்யூ புரவியைத்திருப்பி பிரலம்பனிடம் “கத்தியை தீட்டவே முடியாத கடினப்பாறைகள். நமக்கெல்லாம் மென்மரம்தான் உகந்தது” என்றான்.
அபிமன்யூ புரவியிலிருந்து இறங்கி “உக்ரரே, இருபுரவிகளும் நெடுந்தொலைவு நில்லாது வந்துள்ளன. அவற்றின் கால் களைப்பு தீரவேண்டுமென்றால் மூன்று நாட்களாவது ஓய்வு தேவை. அதன் பின் ஐந்து நாட்கள் நீச்சல் மட்டுமே பயிற்சியாக இருந்தால் போதும். நாளுக்கு மும்முறை கால் உருவிவிடச்சொல்லுங்கள்” என்றான். உக்ரர் “ஆம், அவற்றை பார்த்தாலே தெரிகிறது, கால்களில் நரம்புகள் புடைத்துள்ளன” என்றார். பிறிதொரு காவலனிடம் “ருத்ரரே, என்று இங்கு வந்தீர்?” என்றான். “புரவிகளுடன் இங்கு வரும்படி உபப்பிலாவ்யத்திலிருந்து ஆணை வந்தது. நாங்கள் இங்கு வந்து எட்டுநாட்கள் ஆகின்றன” என்றார் ருத்ரர். “வருகிறேன், நல்ல களைப்பு” என்று அவர்கள் தோளைப்பற்றியபின் அரண்மனைக்குள் நுழைந்தான்.
பிரலம்பன் “அத்தனை வீரர்களையும் அறிந்து வைத்திருக்கிறீர்களே?” என்றான். “நான் ஒருமுறையேனும் பழகிய அனைவரையும் நினைவில் கொண்டிருக்கிறேன்” என்று அபிமன்யூ சொன்னான். “அவர்கள் முகத்தை கூர்ந்து நோக்கியபடி அவர்களின் பெயர்களை என் நாவுக்குள் இருபதுமுறை சொல்வேன். அந்த முகத்தில் ஏதேனும் ஒரு சிறு தனித்தன்மையை அல்லது அடையாளத்தை அப்பெயரென உருவகித்துக்கொள்வேன். காதுக்கருகே இருக்கும் அந்தச் சிறுமச்சம் ருத்ரர். தாடையில் இருக்கும் அந்த வெட்டுக்காயமே உக்ரர்” என்று அபிமன்யூ சொன்னான். பிரலம்பன் “புதியவர்கள் தாங்கள் அவர்கள் பெயரைச் சொல்லும்போது வியப்பும் உவகையும் கொள்கிறார்கள். இவர்கள் இந்திரப்பிரஸ்தத்தினர். தாங்கள் பெயர் சொல்லி அழைப்பதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. ஏனெனில் அவர்கள் உங்கள் தோழர்களென்றும் அணுக்கர்களென்றும் எண்ணுகிறார்கள்” என்றான். அபிமன்யூ “உண்மையிலேயே அவ்வாறுதான்” என்றான்.
அவர்களை எதிர்கொண்டழைத்த குந்தியின் முதன்மைச்சேடியான பார்க்கவி “இளவரசரை வணங்குகிறேன். பேரரசி தங்கள் வருகை நிகழ்ந்ததும் அறிவிக்கச் சொல்லியிருந்தார்” என்றாள். “நாங்கள் நகர் நுழைந்துவிட்டது முன்னரே தெரியும்போலிருக்கிறது” என்றான். “ஆம், முதல்காவல்மாடத்திலேயே அரசியின் ஒற்றன் இருந்தான். நீங்கள் நுழைந்ததுமே புறா இங்கு வந்துவிட்டது” என்றாள். “அதற்கு முன்னரே நாங்கள் பாஞ்சாலத்துக்குள் நுழைந்ததை புறா சொல்லியிருக்கும். ஏழு நாட்களுக்கு முன் நாங்கள் சோணிதபுரியிலிருந்து கிளம்பியதை பிறிதொரு புறா சொல்லியிருக்கும். நாங்கள் கொண்டு வரும் தூதென்னவென்று ஒரு புறா சொல்ல அதன் மேல் எங்களுக்கு உண்மையில் எவ்வளவு ஐயம் இருக்கிறது என்பதை இன்னொரு புறா சொல்லியிருக்கும்” என்றான் அபிமன்யூ. “பேரரசி கனிபழுத்த ஆலமரம்போல் பல்லாயிரம் புறாக்களை உடலெங்கும் தாங்கி நின்றிருக்கிறார். அவர்களின் உள்ளமே ஒரு மாபெரும் புறா முற்றமாக இருக்குமென்று தோன்றுகிறது” என்ற அபிமன்யூ திரும்பி பிரலம்பனிடம் “அஸ்தினபுரியின் புறாமுற்றத்திற்கு சென்று பார்க்கவேண்டும் நீர். எங்கு பார்த்தாலும் வெண்ணிறமாக புறா எச்சம். மூக்கை பிடிக்காமல் கடக்க முடியாது” என்றான்.
சேடி நகைத்தபடி “வருக!” என்று அழைத்துச் சென்று கூடத்தில் அமர வைத்தாள். “நான் தங்கள் வருகையை அறிவித்து வருகிறேன்” என்று மேலே சென்றாள். அபிமன்யூ பீடத்தில் அமராமல் நின்று அந்தக்கூடத்தின் சுவர்களில் தொங்கிய பட்டுத்திரைச்சீலைகளை தொட்டுப்பார்த்தான். அவற்றிலிருந்த பொன்னூல்களை கைகளால் பிரித்து இழுத்து நகத்தால் சுரண்டி எடுத்தான். “இங்கு பொன்னூல்களாக பின்னப்பட்டிருக்கும் பொன்னே ஒரு சிறு அரசை உருவாக்குவதற்கு போதுமானதாக இருக்குமென்று எண்ணுகிறேன்” என்றான். பிரலம்பன் “பாஞ்சாலம் தொன்மையான நாடு. அதன் கருவூலம் ஈராயிரம் ஆண்டு தொன்மையானது என்கிறார்கள்” என்றான். அபிமன்யூ “ஆம், அவர்கள் அஸ்வமேதமோ ராஜசூயமோ செய்ததில்லை போர்கள் எதிலும் ஈடுபட்டதில்லை. இறைக்காத கிணறாக தேங்கியிருக்கிறது” என்றபின் ஒரு தோரணத்தை எட்டித் தாவி பற்றியிழுத்து கசக்கி நோக்கி “விரைவில் இறைத்துவிடுவோம்” என்றான்.
கதவு திறந்து உள்ளே வந்த சேடி தோரணத்தை இழுத்துக்கொண்டு நின்ற அபிமன்யூவைப் பார்த்து “என்ன செய்கிறீர்கள், இளவரசே?” என்றாள். “அரண்மனைக்கூடத்திற்குள் தோரணம் கட்டியிருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். தோரணமா என்று நோக்கினேன்” என்றான். “இது காம்பில்யத்தின் அரசியின் கோடைகால மாளிகை. அஸ்தினபுரியின் யாதவப்பேரரசிக்காக தூய்மைப்படுத்தி அணி செய்து அளித்திருக்கிறார்கள். இது அவர்களுக்கான வரவேற்புக்காக கட்டப்பட்டது” என்றாள். அபிமன்யூ “பொன்னூல் பின்னல் செய்த பட்டினால் தோரணம் அமைக்கும் அளவுக்கு யாதவப் பேரரசி இன்னும் நிலம் கொண்டவளாகவும் நகர்ஆள்பவளாகவும் ஆகவில்லை. குறைந்தது ஒரு ராஜசூயமோ அஸ்வமேதமோ கூட செய்யவில்லை” என்றான்.
அவள் “இதை நீங்களே பேரரசியிடம் சொல்லலாம்” என்றாள். “இதை ஏன் பாஞ்சாலர் செய்திருக்கிறார் என்பதை நான் சொல்ல வந்தேன்” என்று அபிமன்யூ சொன்னான். “எத்தனை வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்தாலும் மகள்கொடை குடியினர் என்பதனால் அதில் ஓரிரு குறைகளை பேரரசி காணாமல் இருக்க மாட்டாள். ஆகவே சத்ராஜித்தென மும்முடி சூடி அமர்ந்த தேவயானிக்கும் தமயந்திக்கும் நிகரான வரவேற்பை இங்கு அளித்திருக்கிறார்.” சேடி புன்னகையுடன் “இவ்வழி” என்றாள். பிரலம்பன் அபிமன்யூவின் காதில் “இதை ஏன் இவர்களிடம் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான். “இதையெல்லாம் நேரடியாக முதுமகளிடம் சொல்ல முடியுமா என்ன? இவளிடம் சொன்னால் அங்கு போய்ச்சேரும்” என்றான். “மிகையாக்கி சொல்லிவிடப்போகிறார்கள்” என்றான் பிரலம்பன். “எப்படியிருந்தாலும் ஒரு செவி கடந்து பிறிதொரு வாய் வழியாக எழுந்தால் பொருள் திரிந்துவிட்டிருக்கும். ஆகவே எதைச் சொன்னாலும் அதில் பெரிய பொருளேதுமில்லை” என்றான் அபிமன்யூ.
குந்தியின் அறைக்குள் நுழைந்ததுமே அபிமன்யூ இருகைகளையும் விரித்து உரத்த குரலில் “வென்றுவிட்டேன் மூதன்னையே! தங்களுக்களித்த சொல்லுறுதியை நிறைவேற்றி மீண்டிருக்கிறேன். வஞ்சினங்களை வெற்றிகளாக ஆக்குவதே என் வாழ்க்கை! நான் பாண்டவ குலத்துக்குருதி. இளைய பாண்டவனின் மைந்தன். மார்த்திகாவதியின் பேரரசியின் வெற்றிக்கொடி என என்னை உணர்கிறேன்” என்றான். கூத்து நடிகனைப்போல காலெடுத்து வைத்து நடந்து அவள் முன் மண்டியிட்டு கால்களைத் தொட்டு சென்னி சூடி “தங்கள் வாழ்த்துக்கள் என்னை பாரதவர்ஷத்தின் மேல் வலக்காலைத் தூக்கி வைக்க ஆற்றல் அளிக்கும். இடக்காலைத்தூக்கி மேருமலை மேல் வைப்பேன்” என்றான்.
முதலில் சற்று திகைத்து விழிகளில் அலைவுடன் பிரலம்பனை நோக்கிய குந்தி பின்பு வாய்விட்டு நகைத்து “நன்று! நீ வென்றதை நானும் அறிந்தேன். அமர்க!” என்றாள். “என் வெற்றியில் பாதி இவருக்குரியது. இவர் பெயர் பிரலம்பன். இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்படைத்தலைவனாக இவரை ஒரு நாள் நாம் பட்டம் அணிவிப்போம்” என்றான். குந்தி பிரலம்பனிடம் சிரித்தபடி “என்ன செய்தாய்? இவனுக்குப்பின்னால் ஓடிக்கொண்டிருந்தாயா?” என்றாள். “ஆம், பேரரசி. பாரதவர்ஷத்தின் மாபெரும் வீரச்செயல் இன்று அதுவே” என்றான். அபிமன்யூவின் தலையில் கைவைத்து உரக்க நகைத்த குந்தி “நன்று! இவனுடன் சேர்ந்து இவனேயாக ஆகிவிட்டாய் போல” என்றாள்.
அபிமன்யூ திரும்பி அவனைப்பார்த்து “நீர் என்னை ஏளனம் செய்ததுபோல் உள்ளதே” என்றான். “இல்லை இளவரசே, மெய்யைத்தான் சொன்னேன் தங்களை பின்தொடர்வதென்பது…” என்று தயங்கியபின்னர் “மதுவருந்திய குரங்கை பிறிதொரு மதுவருந்திய குரங்குதான் பின்தொடர முடியுமென்று என்னிடம் எவரோ சொன்னார்கள்” என்றான். “சரியாகச் சொல்கிறீர். நான் ஏளனம் செய்கிறீரோ என்று ஐயப்பட்டேன்” என்ற அபிமன்யூ பீடத்தில் அமர்ந்துகொண்டான். குந்தி பிரலம்பனிடம் அறைவிளிம்பில் இருந்த சிறிய பீடத்தைக்காட்டி அங்கு அமரும்படி கையசைவால் சொன்னாள் .அவன் அமர்ந்துகொண்டதும் அபிமன்யூவிடம் “சொல்க, என்ன நிகழ்ந்தது?” என்றாள்.
“உண்மையில் அங்கு என்னென்ன நிகழ்ந்தது என்பதை நான் முற்றாகவே மறந்துவிட்டேன். ஒவ்வொரு நாளும் இங்கு ஓரிரு ஓலைகள் பறவைகள் வழியாக வந்து சேர்ந்திருக்கும். அவற்றை முறையாக அடுக்கி படித்து என்ன நிகழ்ந்தது என்று தெரிந்துகொள்ளலாம் என்றுதான் இங்கு வந்தேன்” என்றான் அபிமன்யூ. சற்று எரிச்சலுடன் “விளையாடாதே” என்றாள் குந்தி. “அதற்கு முன் நான் ஒன்றை சொல்ல வேண்டியிருக்கிறது. தாங்கள் மார்த்திகாவதியின் இளவரசி. இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி. ஆனால் இங்கு வெறுமனே பாஞ்சாலஇளவரசியை பெண்கொண்ட சிற்றரசியை நடத்துவதுபோல் உங்களை நடத்தியிருக்கிறார்கள்” என்றான் அபிமன்யூ. “யார்?” என்று குந்தி கண்கள் சுருங்க கேட்டாள். “வரும்போது பார்த்தேன். அத்தனை கொடித்தோரணங்களும் அரண்மனைக்குள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. வெளியே ஒன்றுமில்லை. அதாவது தங்கள் பெருமையை தாங்களே பார்த்துக்கொண்டால் போதும் என எண்ணுகிறார்கள். உங்களை மகிழ்வித்ததாகவும் ஆகும், அச்செய்தியை எவரும் அறியவும் மாட்டார்கள்.”
குந்தி புருவங்கள் அசைய விழிநிலைக்க அதை கேட்டாள். “மக்கள் அறிய கொடித்தோரணங்கள் கட்டினால் உங்களுக்கு அதற்கான தகுதி உள்ளதா என்று இங்கே எவரேனும் கேட்பார்கள் என நினைக்கிறேன். உங்களுக்கு நிலமில்லை, அரியணையுமில்லை…” குந்தி “நான் யார் என்பதை துருபதன் அறிவான்…” என்றாள். “அறிந்தால் அதை உலகுக்கு அறிவிக்கவேண்டியதுதானே? இங்கிருந்து மையப்பெருஞ்சாலை வரை தோரணங்களைக் கட்டினால் என்ன?” குந்தி “அவை பொன்னூல் பின்னலிட்ட பட்டுத்தோரணங்கள். அவற்றை வெளியில் கட்டுவதில்லையே?” என்றாள். அபிமன்யூ சீற்றத்துடன் “யார் சொன்னது வெளியே கட்டுவதில்லையென்று? இந்நகருக்கு அஸ்தினபுரியின் காந்தாரி வந்தால் கட்டுவார்களா? கேட்டுப்பாருங்கள். கோட்டையிலிருந்து அரண்மனை வரை கட்டுவார்கள்” என்றான்.
குந்தி ஏதோ சொல்லமுயல்வதுபோல வாயெடுக்க அபிமன்யூ கையசைத்து தடுத்து “நானும் அதை தங்களுக்காக எதிர்பார்க்கவில்லை. என்னதான் இருந்தாலும் அவர்கள் தங்களைவிட மூத்தவர், பேரரசொன்றின் பேரரசி. தங்களுக்கு குறைந்தது அணுக்கச்சாலையிலிருந்து இதுவரையிலாவது கட்டியிருக்கலாம். பார்த்ததும் என் குருதி கொதித்தது. ஆனால் இது நமது நாடல்ல, நாம் பெண் கொண்ட நாடுதான். இங்கு நாம் கொண்ட மதிப்பென்பது நாம் கொண்ட பெண்ணின் உள்ளத்தில் நமக்கு எவ்வளவு மதிப்பிருக்கிறதோ அதை ஒட்டித்தான் அமையும். இங்கு நம் மதிப்பு குறைவதென்பது அப்பெண்ணின் உள்ளத்தில் நம் மதிப்பு போதுமான அளவு இல்லையென்பதை காட்டுகிறது. அது பிறிது எவருடைய தோல்வியும் அல்ல, நமது வீழ்ச்சியே. ஆகவே நான் அதை மேற்கொண்டு எண்ணவில்லை” என்றான்.
குந்தி அவன் முகத்தை கூர்ந்து பார்த்துவிட்டு பிரலம்பனை பார்த்தாள். இருவர் முகத்திலும் எங்காவது புன்னகை இருக்கிறதா என்பது போல். பிரலம்பன் தன் கண்களை முழுக்க ஒழித்து இரு கூழாங்கற்கள்போல வைத்துக்கொண்டான். குந்தி “சாலைவரை பொற்தோரணங்களை கட்டும் வழக்கமுண்டா என்ன?” என்றாள். “தோரணங்களாவது கட்ட வேண்டும் அல்லவா?. நடைப்பட்டங்களும் பாவட்டாக்களும் வேண்டுமென்று கோரவில்லை. அங்கிருந்து இதுவரை புரவிகள் வருவதற்கு மரவுரிக்கம்பளம் அமைக்க வேண்டுமென்றும் கோரவில்லை. ஏனெனில் நமக்கின்று நிலமில்லை. நாம் அரசியென்றும் அரசரென்றும் இளவரசென்றும் சொல்லிக்கொள்வதெல்லாமே அஸ்தினபுரியின் அரசர் பாண்டுவின் குருதிவழியினர் என்ற எளிய அடையாளங்களைச் சார்ந்தே” என்றான் அபிமன்யூ.
குந்தி சினத்துடன் “நமது நிலம் எங்கும் போகவில்லை. போக விடப்போவதுமில்லை. நாம் அதை வெல்வோம், அடைவோம்” என்றாள். “அவ்வாறு நாம் எண்ணலாம், பிறர் அவ்வாறு எண்ணவேண்டுமென்று நம்மால் சொல்ல முடியுமா? குறிப்பாக அவர்கள் தங்கள் தொல்நிலத்தை பறவைகூட மீறாமல் எல்லை காத்து வரும்போது?” என்றான். “இந்தப்பாஞ்சாலத்தை சொல்கிறாயா? கொக்கு ஒன்று ஒரு நாளுக்குள் கடக்கும் அளவுக்கு சிறிய நிலம் இது. இந்திரப்பிரஸ்தம் தன் இடையில் தூக்கி வைத்துக்கொள்ளும் அளவுள்ளது. இதை குறுநிலம் என்றே நாம் சொல்ல வேண்டும். இதில் பாதியை அஸ்வத்தாமன் பிடுங்கிக்கொண்டுவிட்டான். நமக்கு துணை நாடென்பதாலும் தொல் நிலம் என்பதனாலும் நாம் இதை நாடு என்கிறோம். அதை நாம் இவர்களுக்கு உணர்த்துவோம்” என்றாள் குந்தி. “ஆம், அதற்குரிய தருணங்கள் அமையட்டும்” என்று அபிமன்யூ சொன்னான்.
கதவைத்திறந்து சேடி வந்து தலை வணங்கி “அரசரும் இளையோரும்” என்றாள். “வரச்சொல்க!” என்று குந்தி சொன்னாள். “தந்தையரா?” என்றான் அபிமன்யூ. “ஆம், அவர்களை இங்கே வரச்சொல்லியிருந்தேன்” என்றாள் குந்தி. “அனைவருமா?” என்று அபிமன்யூ கேட்டான். “ஏன்?” என்றாள் குந்தி. “ஒன்றுமில்லை” என்றபின் அவன் எழுந்தான். “நான் என் தூதை முடித்துவிட்டேன் என எண்ணுகிறேன்.” குந்தி முகம் இளக நகைத்து பிரலம்பனிடம் “வேறெங்கும் செல்லுபடியாகும் இவன் சொற்கள் தந்தையிடம் மட்டும் மதிப்பு பெறுவதில்லை. அவன் முன் மட்டும் இவன் தவறிய அம்புகளை செலுத்திய வில்லை ஏந்தி நிற்பவன்போல் இருப்பான்” என்றாள். “அதெல்லாமில்லை” என்றான் அபிமன்யூ. “அமர்க!” என்றாள் குந்தி.