பெலவாடி ஒரு கடிதம்

0c844195-b87d-4edf-8b14-b6c738eb2904

தசராவை ஒட்டி ஒருவாரம் மகனுக்கு பள்ளி விடுமுறை என்பதால் ஹம்பி, சிக்மகளூர் சென்றிருந்தோம். சிக்மகளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் என தேடியபோது ஆயிரம் ஆண்டு பழமையான கோதண்டராமசுவாமி கோவில் இருப்பது தெரிந்தது. காலையில் சென்றிருந்தோம். வாரநாள் ஆகையில் கோவிலில் ஒருவரும் இல்லை. மூலவர் ராமர், சீதை, லட்சுமணன் உடன் நின்ற கோலத்தில் அருமையாக இருக்க எதோ வித்தியாசம் தெரிந்தது. அங்கிருந்த பூசாரி ஆரத்தி காட்டி முடித்தவுடன் அவரிடம் ஏன் ஹனுமான் இல்லை என்று கேட்டேன்.

உற்சாகமாக தலவரலாறை கூற ஆரம்பித்தார். இந்த கோவில் சீதையை மணமுடித்து வரும் வழியில் பரசுராமர் ராமரை சந்தித்த இடம் என்றும், அந்த காலகட்டத்தில் அவர் ஹனுமனை சந்தித்ததே இல்லை என்பதால் எப்போதும் இருக்கும் ஹனுமன் சிலை இல்லை என்றும், இருந்தாலும் ராமர் கோவிலில் ஹனுமன் இருக்கவேண்டும் என்பதால் பீடத்தில் மட்டும் ஹனுமன் சிலை செதுக்கப்பட்டிருப்பதாகவும் அரைமணிநேரம் விளக்கமாக சொன்னார்.

Hoysala_Belavadi_Veera_Narayana_temple00003
பேசி முடித்தவுடன், எங்கள் பயண திட்டத்தைக் கேட்டுவிட்டு, “நீங்கள் நிச்சயம் பெலவாடி கோவிலுக்கு செல்லவேண்டும், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று கூறி வழியும் கூறினார். பெயரை எங்கோ கேட்டதைப்போல தோன்றியது.

வரும் வழியில் தேடிப்பிடித்து பெலவாடி கோவிலுக்கு சென்றோம். உள்ளே நுழைந்ததுமே என் மனைவியிடம் சொன்னேன் “இந்த கோவிலைப் பத்தி ஜெமோ எழுதியிருக்காரு, இந்த தூண்களை அவர் விளக்கி எழுதினது நினைவிருக்கு, படம் போட்டிருந்திருக்காரு” என்றேன்.

http://www.jeyamohan.in/86346#.Wc8S2sZx3IU

கோவிலில் அந்த நேரத்தில் இருந்தது நாங்கள் மட்டுமே. இருந்த இன்னொரு குடும்பமும் கோவில் சிற்பங்களை படம் எடுத்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். நீங்கள் சந்தித்த பிரசாந்த் அவர்களே இருந்தார். முதல்முறை வருகிறீர்களா என்று கேட்டுவிட்டு வரலாறை கூறினார். மூலவர் சிலைகள் சாலக்கிராமக் கற்களால் செய்யப்பட்டவை என்றார்.. அவ்வளவு அழகு.

எங்கிருந்து சாலக்கிராமக்கற்களை கொண்டுவந்தார்கள் என்பது தெரியவில்லை என்றார். அதேபோல கோவில் கட்டப்பட்டுள்ள கற்களும் அந்த பகுதியில் சுமார் 50 கிமீ சுற்றளவில் கிடைக்கக்கூடியவை அல்ல என்றார்.

கோவிலின் அமைதியும், சிற்பக்கலையின் ஆச்சர்யமுமாக கிளம்பினோம்.

அடுத்து சென்ற ஹளபேடு மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக நூற்றுக்கணக்கான பயணிகளால் மொய்க்கப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்து 15 கிமீ தொலைவில் இவர்கள் யாரும் அறியாமல் பெலவாடி முற்றிலும் கைவிடப்பட்டு இருப்பதாய் தோன்றியது

வெண்பூ வெங்கட்

***

அன்புள்ள வெங்கட்

உண்மையில் நம்மூர் சுற்றுலாப்பயணிகள் , பக்தர்கள் வந்து பார்க்காதவரைத்தான் பெலவாடி கோயிலாக இருக்கும். கைவிடப்பட்டவையே பாதுகாப்பானவை. இவர்களின் கண்பட்டால் அதன்பின் அது சினிமா செட் போல ஆகும். சந்தை முளைக்கும். பின்னர் அங்கே அமைதியோ அழகோ இருக்காது. வீரநாராயணப்பெருமாளும் இருக்கமாட்டார்

ஜெ

ஒருங்கிணைவின் வளையம்
முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 19
அடுத்த கட்டுரைஇலக்கியத்திற்கு அனுபவங்கள் தேவையா?