அன்புள்ள ஜெ!
கதிர் போலவே எங்கள் உறவில் ஒரு பையன் பிறந்து இருபத்தியொரு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தான்.அவனை ஏதாவது அனாதை விடுதியில் சேர்த்து விடுமாறு பலர் கூறியும்,அந்தத் தாய் மறுத்து அவனைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தாள். அவன் ஓர் அரசனைப் போல் வாழ்ந்து இயற்கையான முடிவை எய்தினான். அவன் இறந்ததை மற்ற உறவினர் எல்லோரும் மனதிற்குள் கொண்டாடினர், அந்தத் தாயைத் தவிர.அவளுக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்து ‘உனக்கு இனிமேல் பெரிய ஆறுதல்’ என்று கூறியவர்களையெல்லாம் அவள் மறுதளித்து அவள் ‘இல்லை இல்லை’ என்று கதறினாள்.
விவேகியான ஒரு பெரியவர் கூறினார்: “அம்மா வருந்தாதே. அவன் இப்பிறவியில் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. பாவம் என்பதைப் பற்றி ஒன்றும் அறியாமல் மறைந்துவிட்டான். பாவம் செய்தால்தானே மறு பிறவி? அவனுக்கு பாவத்தின் வாசனையே இல்லையே. அவன் நற்கதியை அடைந்துவிட்டான். வருந்தாதே” என்றார்.
கதிர் விஷயத்தில் அவன் அறியாமல் வைத்த கை நாட்டு அவனைப் பாவம் செய்தவனாக ஆக்குமா? அல்லது அவனிடம் தாங்கள் தப்பிக்க சாமர்த்தியம் செய்த நீதிபதி குடும்பத்தார் பாவம் செய்தவர்கள் ஆவரா? கதிரின் அழுகை அவனை பாவத்தை உணர்ந்தவனாக ஆக்கிவிடுமா?சமஸ்தாபரஜிதபூஜை யாருடைய பாவத்தைப் போக்கும்? அந்த பூஜை நீதிபதி குடும்பத்தின் பாவத்தை அதிகமாக்கும்?
ஒன்றும் விளங்கவில்லை.
கே. முத்துராமகிருஷ்ணன்
ஆங்கரை, இலாலகுடி.
அன்புள்ள முத்துராமகிருஷ்ணன் அவர்களுக்கு,
பெரும்பாலான தருணங்களில் எனக்கு சரியாகத் தெரியாதவற்றையே கதைகளாக எழுதுகிறேன். அதன் கட்டமைப்புக்குள் எனக்கும் விடைகள் இருக்கலாம் என ஒரு நம்பிக்கை. எழுதுவதே அதற்காகத்தான்
ஜெ
ஜெமோ,
யார் இதில் ஆழமற்ற நதி? விபத்தில் சிக்கிய சங்கரனுக்கு தாம் செய்யப் போகும் கருணைக்கொலையை உணர வாய்ப்பில்லை என்றும், அதற்கு ஒப்புதல் அளிக்கும் சங்கரனின் மனநிலை குன்றிய மகனுக்கும் (கதிர்) அது புலப்படப்போவதில்லை என்றும் எண்ணும் நீதிபதி காசிநாதனின் குடும்பத்தினரா?
இல்லை, ஆடி காரெல்லாம் வேஸ்ட் ஃபோர்டு தான் பெஸ்ட் என்று அங்கலாய்த்துக் கொள்ளும் காசிநாதனின் சேவகர்களா?
இல்லை, கதிருக்கு மந்திரமெல்லாம் புரியுமா என சந்தேகிக்கும் முற்றுமுணர்ந்த நம்பூதிரியா?
இவர்கள் அனைவருமே ஆழமற்ற நதிகள் தான். ஏன் புலன்களின் துணை கொண்டு மட்டுமே இப்பிரபஞ்சத்தை உணரமுடிந்த நாம் அனைவருமே ஆழமற்ற நதிகள் தான்.
சார்வாகத்தின் பஞ்சபேதத்தின்படி பார்த்தால் நம் அறிதல்கள் அனைத்துமே குறைபாடுள்ளவைதான் (உபயம்: சொல்வளர்காடு) ஒவ்வொரு கணமும் மாறக்கூடியவை. இந்த மாற்றத்தை உணராமலிருப்பது தான் நம்மை நாற்றமடித்தவர்களாக மாற்றி விடுகிறது.
கதிரின் அழுகை காசிநாதன் குடும்பத்தின் கீழ்மையை வெளிச்சம் போட்டு காட்டியதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களின் இருளைப் போக்கிய வெளிச்சமாக, அவர்களுடைய அறிதல்களின் குறைபாடுகளைக் களைந்த ஞான ஒளியாகவே எண்ணுகிறேன்.
காசிநாதனின் குடும்பத்திற்கு இவ்வாய்ப்பு கிடைத்ததிற்கு காரணமாக நான் தொகுத்துக் கொண்டது இரு விஷயங்கள்.
ஒன்று, அவர்களே விரும்பினாலும் யாரும் துணிந்து முன்வந்து சஙகரனின் கருணைக்கொலைக்கு கையொப்பமிடவில்லை. இதற்கு நமக்கு ஏதாவது பின்னால் நேர்ந்து விடுமோ என்ற சுயநலம் சார்ந்த அச்சம் தான் காரணமென்றாலும், இதை நான் அறம் சார்ந்த குழப்பமாகத் தான் எடுத்துக் கொள்கிறேன். அறம் நிறுவப்படுவதே பின்விழைவுகளைப் பற்றிய அச்சத்தினால் தானே. மேலும் இதே அறம் சார்ந்த குழப்பம் தான் அவர்களை இதுவரை கதிரை ஒன்றும் செய்து விடாமல் காத்தது.
இரண்டு, அவர்களுடைய அறக்குழப்பத்திற்கு நவீனத்தில் தீர்வில்லை எனபதையறிந்து மரபுகளை நாடியது.
ஒட்டு மொத்த காசிநாதனின் குடும்பமும் தஙகள் அறிதலின் குறைபாட்டை உணர்ந்திருக்கும். உணர்த்திய கதிர் அவர்களால் தெய்வக் குழந்தையாகத்தான் கொண்டாடப்படுவான்.
அன்புடன்
முத்து
அன்புள்ள முத்து
இத்தகைய கதைகளில் தலைப்பும் ஒரு படிமமே. அதன் ‘பொருள்’ என்பது வாசகனுக்கு அது அளிக்கும் அனுபவத்தால் உருவாவதே
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்
ஆழமற்ற நதி கதையிலே நீங்கள் நம்பூதிரிகளை மிகுந்த மதிப்புக்குரியவர்களாகவும் அனைவரையும் தங்களுக்குக்கீழே என்று பார்ப்பவர்களாகவும் காட்டுகிறீர்கள். பார்ப்பனர் என்பதனால் அவர்களுக்கு அந்த மரியாதையை அளிக்கவேண்டுமா என்ன?
சரவணக்குமார்
அன்புள்ள சரவணக்குமார்
உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை என்றால் அவர்களிடம் செல்லக்கூடாது. அவர்களிடம் சென்றால் அந்த நம்பிக்கையின் ஒருபகுதியாக அந்த மதிப்பையும் அளித்தேயாகவேண்டும்
தமிழகத்தின் மகத்தான போலிப்பாவனைகளில் ஒன்று இது. அந்தணர் பூசகர்களாக வேண்டும். ஆனால் அவ்வப்போது பார்ப்பான் என வசைபாடவும் செய்வோம். முன்னது மதம், அதன் பயன்கள் வேண்டும். பின்னது முற்போக்கு. அந்த பாவனையும் வேண்டும்
ஜெ
அன்பிற்கினிய ஆசான் அவர்களுக்கு,
தங்கள் நலமறிய விழைகிறேன்.
ஆழமற்ற நதி சிறுகதை வாசித்தேன். அந்த நதியைப் போலவே கதிரேசனும் ஆழமற்றவனாகவே பார்க்கப்படுகிறான். எதுவும் அவனுக்குள் நுழையாது என்ற எண்ணத்தாலேயே அனைத்து அநீதிகளையும் சங்கரன் உட்பட அனைவராலும் செய்ய முடிகிறது. அனைவருக்கும் சங்கரனின் மரணத்தை விட அது உருவாக்கும் குற்ற உணர்வே அதிக துக்கத்தை அளிப்பதாக இருக்கிறது.
அத்தனைக் கல்வியும், செல்வமும், அதிகாரமும் சென்று தொட முடியாத தூரத்தில் உள்ள கதிரேசனின் அப்பாவிஅகத்தை அதர்வ வேதச்சடங்கு சீண்ட முடிகிறது. மனதறிந்து செய்யாததால் மற்றவர்களுக்கு அது வெறும் சடங்காகவே உள்ளது.
கதிரேசனின் கண்ணீர் சட்டென நதியை ஆழம் கொள்ளச் செய்கிறது, எவரும் கரையேற முடியாத அளவுக்கு… அவர்கள் செய்த பாவம் சங்கரனுக்கல்ல, கதிரேசனுக்கு..தாங்கள் ஏதோ ஒரேயொரு பாவத்தை மட்டுமே செய்ததாக நம்பி பரிகாரம் செய்ய வந்தவர்களை, வாழ்நாளெல்லாம் செய்த பாவத்தோடு, வேறு எங்கு சென்றும் தீர்க்க முடியாத படிக்கு வாழ்நாள் முழுக்க சுமந்து அலையும் படிச்செய்து விட்டது இந்த ” ஆழமற்ற நதி”. மிகச்சிறந்த சிறுகதைக்காக மிக்க நன்றி.
தங்களின் அன்பு மாணவன்
இ.மாரிராஜ்