அன்புள்ள ஜெயமோகன்,
புதிதாக எழுத வருபவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினையே அனுபவம் சார்ந்ததுதான். சொந்த வாழ்கையில் நிகழ்ந்த அலைக்கழிப்புகள் தான் அவனின் படைப்பாக்கத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றது. அசலான கதைகள் எழுத அலைக்கழிப்பு நிறைந்த வாழ்க்கை புனைவு எழுத்தாளனுக்கு கட்டாயம் தேவை என்றே தோன்றுகின்றது. இயல்பாகவே அலைக்கழிப்பை வாழ்கையில் அதிகம் சந்திக்காத ஒருவனால் வேறு புத்தகங்களில் உள்ள கதைகளை வாசித்து புரிந்துகொண்ட சில உத்திகளாலே கதையை எழுதுகிறார்கள். இவை அசலான கதைகளாக இருபதில்லை. பசாங்கே செய்கின்றன.
அலைக்கழிப்பை வாழ்கையில் சந்திக்கத ஒருவன் நல்ல கதைகள் எழுத செயற்கையாக அலைக்கழிப்பை உருவாக்கி அதற்குள் விழவேண்டுமா? இது சாத்தியமா?
அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்
***
அன்புள்ள அனோஜன்
சுந்தர ராமசாமி இக்கேள்விக்கு ஒரு பதிலை இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு சொன்னார். நான் அவரிடம் நீங்கள் கேட்ட இக்கேள்வியைக் கேட்டேன். எனக்கிருந்த இழப்புகள், குழப்பங்கள், உள்ளும் புறமும் அலைச்சல்கள் , இடர்கள் ஏதும் அவருக்கில்லை. அவர் எப்படி ஆழமான உளப்பயணங்களை நிகழ்த்தமுடியும் என்பது என் கேள்வி
சுரா து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி தம்பதிகளைச் சுட்டிக்காட்டினார். து.ராமமூர்த்தி எழுதிய நாவல் குடிசை. அது அவர்களின் மைந்தரான ஜெயபாரதியால் சினிமாவாக எடுக்கப்பட்டது. “ராமமூத்திக்கும் சரோஜாவுக்கும் இருந்த வாழ்க்கையனுபவம் தமிழில் வேறெந்த இலக்கியவாதிக்கும் இல்லாதது. அவர்கள் இந்தியச் சுதந்திரப்போராட்டத்தின் மகத்தான காலகட்டங்கள் வழியாக வாழ்ந்தவர்கள். இந்தியவரலாற்றின் மாமனிதர்களை நேரில் அறிந்தவர்கள். பிரமிப்பூட்டும் தியாக வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அடித்தள மக்களின் வாழ்வுரிமைக்காக வாழ்நாளெல்லாம் போராடியவர்கள். ஆனால் நாவல்? எட்டாம் வகுப்புக்கு மிகாத குழந்தைகளுக்கு துணைப்பாடநூலாக வைக்கலாம்.
அப்படியென்றால் அனுபவம் கலையாகுமா? நேரடியாக அனுபவங்கள் கலையாக ஆகாது. பலசமயம் தீவிரமான அனுபவங்கள் கலைக்குச் சுமையாகக்கூட ஆகும். நேரடியனுபவங்கள் தீவிரமான ஒற்றைப்படை நோக்கை, மிகையான உணர்ச்சிகர ஈடுபாட்டை உருவாக்கி கலைக்குத்தேவையான சமநிலையை, நுட்பத்தை, முழுமைநோக்கை இல்லாமலும் ஆக்கிவிடும். பெரும்பாலான ‘போராட்ட இலக்கியங்கள்’ நேர்மையானவை, உணர்ச்சிகரமானவை, ஆனால் தட்டையானவை, ஒற்றைப்படையானவை, உரக்க ஒலிப்பவை
ஏனென்றால் கலைஞனின் பார்வை ஒருவன் பார்வை அல்ல. அவன் எல்லாகோணங்களையும் பார்ப்பவன். எல்லா தரப்பையும் உணர்ந்தவன். எல்லாவற்றையும் தொகுத்துப்பேசுபவன். வலுவான அனுபவங்கள் கொண்டவர்கள் அவ்வனுபவங்களை அவர் அடைந்தபோது உருவான எண்ணங்களையும் உணர்வுகளையும் கொண்டு தன்னை நிறைத்துக்கொண்டவராக இருக்கக்கூடும். தன்னை மட்டுமே முன்வைப்பவராக ஆகவும்கூடும்.
உண்மையில் தீவிர அனுபவங்களை உடனுக்குடன் எழுதிவிடமுடியாது, கூடாது என்றும் சொல்லலாம். அனுபவம் வெந்து விபூதியாக ஆகவேண்டும். அதற்கு அவ்வனுபவங்களுடன் நமக்கு ஒரு தூரம் உருவாகவேண்டும். காலத்தின் தூரம். பார்வையின் தூரம். உணர்வுவிலக்கத்தின் தூரம். அதன்பின்னரே அவ்வனுபவத்தை மொத்தமாகவும் நுட்பமாகவும் நோக்கி நம்மால் கலைப்படைப்புக்களை உருவாக்கமுடியும்
அப்படியென்றால் அனுபவங்களின் பெறுமதி என்ன? அனுபவங்களின் தீவிரமோ, விரிவோ முக்கியமே அல்ல. அனுபவங்களில் இருந்து எழுத்தாளன் பெறுவதென்ன, வளர்த்துக்கொள்வதென்ன என்பதே முக்கியமானது. அதாவது எழுத்தாளனின் நுண்ணுணர்வே முக்கியமானது. அவனுடைய அக ஆழத்தை நோக்கி அவன் எந்த அளவுக்குத்திரும்புகிறான் என்பதே முக்கியமானது
ஆகவே அலைக்கழிப்பு என நீங்கள் சொல்வதை நான் எழுத்தாளனுக்குள் அனுபவங்கள் உருவாக்கும் விளைவு என்று மட்டுமே பொருள்கொள்கிறேன். அந்த அனுபவம் தன்னளவில் முக்கியமானதோ பெரிதானதோ ஆக இருக்கவேண்டியதில்லை. ஒரு அண்டா பாலை ஒரு துளி தயிர் உறைகுத்திவிடமுடியும். அனுபவங்கள் அவ்வெழுத்தாளனை என்ன செய்கின்றன என்று மட்டுமே நாம் பார்க்கவேண்டும்.
அதற்கு அவ்வெழுத்தாளனின் அகம் எப்படி இயற்கையிலேயே எழுந்தது, எப்படி உருவாகிவந்தது என்பதே கேள்வி. உதாரணமாக, என் நோக்கில் ஒழுக்கப்பிரச்சினைகளை பேசுபவர்கள் மூன்றாம்தரக் கலைஞர்கள். அறப்பிரச்சினைகளை நோக்கி எழுபவர்கள் இரண்டாந்தரக் கலைஞர்கள். தத்துவ, ஆன்மிக தளம் நோக்கி விரிபவர்களே முதல்தரக் கலைஞர்கள். எந்தத்தீவிரமான பிரச்சினையையும் கலைஞன் அவன் இயல்புக்கு ஏற்ப இம்மூன்றில் ஒன்றாக ஆக்கிக்கொள்ள முடியும்.
அனுபவம் என்பது ஒரு மெல்லிய தொடக்கம். அது நமக்குள் ஒரு சமன்குலைவை உருவாக்குகிறது. அதன் பணி முடிந்துவிட்டது. பின்னர் நம்முள் நிகழ்வதே அலைக்கழிப்பு. அது வினாக்களும் நிறையாவிடைகளும் கொண்டது. அது எவ்வகையான வாழ்க்கைச்சூழலில் இருந்து எழும் என்று சொல்லவே முடியாது. மிக அன்றாடத்தன்மைகொண்ட எளியவாழ்க்கையில் இருந்தும் பெரிய அலைக்கழிப்புகளும் கொந்தளிப்புகளும் எழக்கூடும்
அலைக்கழிப்பு என்பதை முழுக்கமுழுக்க அகம் சார்ந்ததாகவே சொல்ல விழைகிறேன். அதற்கு புறத்தூண்டுதல் நேரடி அனுபவங்களில் இருந்து எழலாம். கண்டிப்பாக வாசிப்பிலிருந்தும் எழலாம். அகத்திறப்பு நிகழாமல் அனுபவங்களை எதிர்கொண்டாலும் பெரிதாக ஒன்றும் எழுதமுடியாது. வாசித்தாலும் ஆழமாக ஒன்றும் உருவாகாது.
ஆனால் கண்டிப்பாக நேரடியனுபவம் வாசிப்பனுபவத்தை விட பலநூறுமடங்கு ஆழமானது. ஒரு நிலக்காட்சியையே நீங்கள் எத்தனை தூரம் வாசித்தாலும், ஒளிக்காட்சியாக பார்த்தாலும் நேரில் சென்று அங்கே நிற்கும் அனுபவம் முற்றிலும் வேறானது. மிகமிக ஆழமானது. அந்த அனுபவம் எந்த அளவுக்கு நம் கனவை ஆக்ரமிக்கும் என நாம் சொல்லவே முடியாது.
அத்துடன் வாசிப்பு என்பது எவ்வளவு தீவிரமாக நிகழ்ந்தாலும் அது எல்லைகள் கொண்டது. இரு எல்லைகள். ஒன்று அது நாம் எந்த அளவுக்கு அகவயப்படுத்திக்கொண்டாலும்கூட ஓரளவுவரை ஒரு பொது அனுபவம். நமக்கே நமக்கென்றானது அல்ல. இரண்டு வாசிப்பு அகங்காரத்தை உருவாக்குகிறது. நமக்குத்தெரியும் என நினைக்கவைக்கிறது. நேர்மாறாக நேரடியனுபவங்கள் நம்மை பணிவும் தன்னடக்கமும் கொள்ளச்செய்கின்றன
ஆகவே விரிவாக எழுதவிரும்புபவன் நேரடி அனுபவங்களை தேடிச்சென்றேயாகவேண்டும். கணிசமான எழுத்தாளர்கள் திரும்பத்திரும்ப ஒன்றையே எழுதுபவர்கள். சுய அனுபவங்களின் ஒரு மிடறையே கடலாக்குபவர்கள். விரிவான புனைவுலகை, தத்துவத்தை உருவாக்க விரும்பும் படைப்பாளி அனுபவங்களை நோக்கி தன்னை திறந்து வைக்கவேண்டும். விதவிதமாக தன்னை கொண்டுசென்று அனுபவங்களின் நடுவே பொருத்திக்கொள்ளவேண்டும். அது அவன் உள்ளம் தேடும் தளம் சார்ந்ததாக இருக்கலாம்.
அலைக்கழிப்புகளே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் சுவாரசியமான வாழ்க்கைவரலாறுகளாக எஞ்சுகிறார்கள். அவ்வாழ்க்கைவரலாற்றால் அடிக்கோடிடப்பட்டு அவர்களின் படைப்புகள் மேலதிக ஒளி கொள்கின்றன. ஆனால் மிகப்பெரிய படைப்புகளை எழுதியவர்கள் ஒரேசமயம் அகக்கொந்தளிப்புள்ள வாழ்க்கை கொண்டவர்களாகவும் மிக எளிய அன்றாட வாழ்க்கைகொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தை பின்னர் முழுமையாக மீட்டிக்கொள்ளும் அளவுக்கு ஓய்வான வாழ்க்கை பின்னாளில் அமைந்தவர்கள் அவர்களில் பலர்.
டி.எஸ்.எலியட் பெரிதாக ஒன்றுமே நிகழாத, ஓய்வான, குமாஸ்தா வாழ்க்கைதான் இலக்கியவாதிக்கு உகந்தது என்கிறார். ஏனென்றால் அவனுடைய அகத்தேடல் மேலும் மேலும் கூர்மைகொள்ளவும், மேலும் ஆழம் நோக்கிச் செல்லவும் அது உதவும். அன்றாடச்சிக்கல்களால் அவன் அலைக்கழிக்கப்பட்டால் அந்த அலைகளையே அவன் பதிவுசெய்வான். ஷோப்பனோவர் சமகாலச்சிக்கல்களில் இருந்து முற்றாக விலகினாலொழிய அடிப்படைக்கேள்விகள் கொண்ட படைப்புக்களை உருவாக்கவியலாது என்கிறார். ஆழத்தை அலைகள் போல வேறேதும் மறைப்பதில்லை.
ஜெ