ஆழமற்ற நதி -கடிதங்கள்

Bharathapuzha

ஜெ,

 

நதியின் ஆழத்தை மனிதர்கள் எண்ணுவது தங்கள் உடலை வைத்து. தங்களால் அறியக் கூடிவற்றை வைத்து. அவற்றுக்கப்பால் இருக்கக் கூடிய ஆழத்தை எதைக் கொண்டு அறிய முடியும்? மூளை இயங்காததால் சங்கரனால் அறிய இயலாதென்றும், கேட்க இயலாததால் கதிரால் புரிந்து கொள்ள இயலாதென்றும் எண்ணிக்கொள்ள செய்வது நம் அறிவின் ஆழமின்மையே. அதைத் தாண்டிய ஆழத்திற்கு ஒன்று சென்று சேருமென்றால், அதை மீட்டெடுக்க இங்கிருக்கும் வேறு எதையும் அனுப்பி அதைத் தீண்டவும் இயலாது. அதைத்தான் சுந்தரேசனும் சொல்கிறார்.

 

அந்த நதியின் ஆழத்தை அறிய நாமறிந்த, நம்முடைய உடலும் கண்ணும் மூளையும் அல்ல

அளவுகோல்

. கண்களின் கண், மனசின் மனம், வாக்கின் வாக்கு என கேனோபனிஷத் அழைக்கும் அறிவைக் கடந்த

​ஒன்றால்

மட்டுமே செல்லக் கூடிய ஆழம். ‘ஸ்தோத்ரஸ்ய ஸ்தோத்ரம் மனஸோ மனோ யத் வாச்சோக வாச்சம் சௌப்ரானஸ்ய ப்ரானாஹ’.

 

தன்னலம் என்பது அறத்திற்கு எதிரானதென்றால் அறம் பேணுவதனால் அடையப்படுவதுதான் என்ன? என ஒரு வரி வருகிறது காண்டீபத்தில். அர்ஜூனன் வைதரணியைக் கடக்கும்பொழுது எண்ணிக் கொள்ளும் வரி. ஆழமேயற்ற நதியானாலும் கூட கடக்க இயலாத நதியொன்று உண்டு, அதைக் கடக்க செய்யும். அதுவே அறத்தால் அடையப் பெறுவது. மனிதர்கள் அதன் ஆழமற்ற தன்மையால் எளிதில் கடந்து விடலாம் என எண்ணுகிறார்கள் போல.

 

ஏ.வி.மணிகண்டன்

 

அன்புநிறை ஜெ,

 

‘ஆழமற்ற நதி’  வாசித்ததும் வசந்த கீதங்களின் முதற்பாடல் ‘மாமாங்கம் பலகுறி கொண்டாடி’  நினைவு வந்தது. அப்பாடல் போரின் ஓசைகளோடு தொடங்கி பாரதப்புழையின்  கண்ணாடிச் சில்லொத்த தீரங்களில் நிகழ்ந்த போரின் காட்சியை, மொழி தாண்டி விரியச் செய்யும். நிளையும் பாரதப்புழையும் அவ்வண்ணமே அறிமுகம்.

 

கதையின் ஆரம்பத்திலேயே

“பாக்கத்தான் பெரிசு ஆழமே கிடையாது” என்று ஆற்றைப் பற்றி சொல்வது, அங்கு பகட்டு வாகனங்களில் வந்து இறங்கும் நீதிபதி குடும்பத்தினர் அனைவருக்கும்

பொருந்தும்.

பழகிப் போனதாலேயே

பணிவான உடல்மொழி கொண்ட கதைசொல்லிக்கும்தான். அந்தப் ‘பெரிய மனிதரின்’ குடும்பத்தில் ஏதாவதொரு நன்மதிப்பு பெற்று விடும் முனைப்பில் இருக்கிறார்.

 

யாவரும் அவ்விடம் குறித்த அறிதலோ அக்கறையோ ஏதுமின்றித்தான் வருகிறார்கள். அதர்வவேதமோ பித்ரு காரியமோ சமஸ்தாபராதபூஜையோ எல்லாம் துலாத்தட்டில் ஒரு ‘ஓ’வால் நிகர் வைக்கப்படுகிறது.

 

மனசறிந்து செய்வதுதான் பாபமும் புண்ணியமும் பிராயசித்தமும் என்கிறார் நம்பூதிரி. மனதுக்கு ஆயிரம் வாசல்; புலன்களால் ஆயிரம்  திரையிட்டுக் கொள்ளலாம்.

அல்லது அந்த டிரைவர்கள் போல அந்தப் பாவத்தைப் பிறரிடம் இழித்தேனும் மனம் இலகுவாகலாம்.

 

புலன்களில் குறைபாடுள்ள, பிறர் கருணையை நம்பி வாழும் ஒரு உயிர் என்ன செய்ய முடியும். உள்ளே ஏதேனும் நுழைந்தால் வெளியேற்றவும் வாசலில்லை. தன் தகப்பனது மரணசாசனத்திற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறது; பாவம் களைய அவனைக் கொண்டுவருகிறார்கள். சித்தமென ஒன்றில்லாத போது என்ன பிராயசித்தம்.

 

 

எல்லோரது பாவங்களையும் கழுவும் தலம் காசி. எல்லாருக்கும் நீதிவழங்கும் ஜஸ்டிஸ்  காசிநாதன் மனதுள் உள்ள கறையோ கயாவிலோ திருநாவாயிலோ பிழைநிகர் செய்தாக வேண்டிய, நீத்தாரிடம் மன்றாட வேண்டிய, மனம் உறுத்தும் பாவம்.

 

மனிதர்கள் தங்களைத் தாங்களே மன்னித்துக் கொள்ள முடியாத பாவங்களுக்கே கழுவாய் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். பிராயசித்தம் செய்ய முற்படும் போதே மனமறியும் அதைக் களைய முடியாதென. ஆழமே இல்லாத ஆற்றில், குளிப்பது போல பாவனைதான் செய்ய முடியும் – பிராயசித்தமும் அதுபோலத்தானே.

 

இருள் விலகுவதற்கு முன் யாரும் காணாது கர்மம் செய்து முடிக்க எண்ணுகிறார்கள்.

அனைத்தையும் வெளிச்சமிட்டுக் காட்ட

கதிர் எழுந்து விடுகிறான்.

இக்கூட்டத்தில் இருந்து விடுதலையளித்த கதிரின் விசும்பல் ஒருவேளை கரையேறியவர்களைக் கரையேற்றலாம்.

 

மிக்க அன்புடன்,

சுபா

 

 

இனிய ஜெயன்,

 

ஆழமற்ற நதி என் பார்வையில் ஆழமறியா நதியாய்தான் பட்டது.

 

இந்நதியில் எனக்குக் கிடைத்த முத்துக்கள் பல.

 

நீர்ப்பரப்பு தீட்டப்பட்ட கத்தியின் பட்டைபோல

 

மூக்குக் கண்ணாடியின் கீழ்ச்சில்லில் அந்த ஒளி மின்மினி போல

 

தண்ணி சும்மா பாலிதீன் காகிதத்த பரப்பி வைச்சதுமாதிரித்தான் இருக்கும்…

 

செல்பேசி வண்டு போல அடிக்கடி அதிர்ந்தபடி

 

முகம் எரிவதுபோல செவ்வொளி கொள்ள

 

சலிப்பு போன்ற முகம் ஒன்றைத்தான் என்னைப்போன்றவர்களுக்கு அவர்கள் அளிப்பார்கள்

 

குடியால் நீர் மீன்னும் கண்கள்.

 

மனுஷனானா ஆண்டவன் நெனைப்பு வேணும். அதில்லாட்டியும் செத்துப்போன பாட்டன்முப்பாட்டன் நெனைப்புவேணும்”

 

உழைக்கிறத திங்கிறோம் திங்கிறத பேளுறோம்

அது வாசல் ஜன்னல் ஒண்ணுமே இல்லாம ஆறுபக்கமும் மூடின வீடு . வெளியே இருந்துஒண்ணுமே உள்ள போகாது

“எப்டியோ உள்ள ஏதாவது போச்சுன்னாக்க வெளியே எடுக்கவும் முடியாதே

கரையோர மரங்களின் இலைகளில் எல்லாம் நீர்போலவே ஒளி.

அள்ள அள்ள வந்து கொண்டேயிருக்கிறது.

பெரிய ஃபோர்ட் எண்டெவர் காரிலிருந்து ஐம்பது வயதான டிரைவர் இறங்கி கதவைத்திறக்கஐவர் இறங்கினர்.

கதைமாந்தர்களை கதையின் போக்கிலேயே நீங்கள் அறிமுகப் படுத்திய விதம் எழுதுபவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம்.

ஒரே ஒரு சின்ன குழப்பம் அந்தக் காரில் இருந்த ஐந்தாம் நபர் யார்?

அந்த டிரைவருக்கு ஏன் ஐம்பது வயது இருக்கவேண்டும் என்று படிக்கும் போது கேட்ட தர்க்கத்திற்கு பதில் பின்னால் கிடைத்தது.

ஃபோர்ட் எண்டெவர் கார் சிறந்தது என்று முத்துசாமி சொன்னார். ஆடி பி.எம்.டபிள்யூஎல்லாம் ஃபேஷன் சார். இதான் பக்கா வண்டி.அவர் காசிநாதனிடம் பேசுவதில் உரிமையும்ஒரு முரண்டும் இருப்பதை கவனித்திருந்தேன். இடுப்பில் கையூன்றி நின்றிருந்தவிதத்திலேயே கசப்பு தெரிந்தது.

அந்த டிரைவர் தான் இந்தக் கதையின் ஆதாரப் புள்ளியை விவரிக்கிறார்.

கடைசியில் அழுதது கதிரா?

அது கதிரின் தந்தையின் கண்ணீரா?

காதும், வாயும் இயங்காத கதிர் கண்களால் சொன்ன பதிலா?

எதிர்காலத்தில் கதிர் என்ன செய்யப் போகிறான்?

ஓரிரவு அவனையும் டம்ளரில் மூழ்கிய தூக்க மாத்திரைகள் விடுதலை செய்யுமோ?

கற்பனை அவர்களைப் போன்றே எனக்கும் அச்சத்தையும்,நடுக்கத்தையும் கொடுத்தது.

நன்றி ஜெயன்.

தஞ்சையிலிருந்து,

சந்தானகிருஷ்ணன்.

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15
அடுத்த கட்டுரைதிரும்பி நோக்கி அறிவது