நதி -கடிதங்கள்

Bharathapuzha

ஆழமற்ற நதி [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் சார் ,

 

என் வாழ்வில் நான் எழுதும் முதல் கடிதம் .எனது சொந்த ஊர் கோவில்பட்டி . ஆனால் அங்கிருந்த வரையில் தேவதச்சன் ,கோணங்கி,கி .ரா போன்ற யாரையுமே தெரிந்து கொள்ளாமல் 17 வருடங்கள் இருந்து விட்டேன் .பின்பும் சென்னை வந்த பின்  மெதுவாக வாசிக்க ஆரம்பித்து கடந்த இரண்டு வருடங்களாய் உங்களை வாசிக்கிறேன் . அறம் தொகுதியே நான் வாசித்த முதல் தொகுப்பு .பின்பு அனல் காற்று , இரவு மற்றும் வெள்ளையானை .இப்போது வெண்முரசு கிராதம் வரையில். ஒவ்வொரு முறையும் கடிதம் எழுத நினைக்கும் போதும் தாழ்வு மனப்பான்மை தடுத்து விடும் . ஆனால் அதை தவிர்த்து இந்த முறை ஆழம் இல்லாத நதி குறித்து எனக்கு தோன்றிய வற்றை எழுதி இருக்கிறேன் .

 

இந்த கதையின் மையமாக திகழ்வது , “அது வாசல் ஜன்னல் ஒண்ணுமே இல்லாம ஆறுபக்கமும் மூடின வீடு மாதிரி சார். வெளியே இருந்து ஒண்ணுமே உள்ள போகாது” . “எப்டியோ உள்ள ஏதாவது போச்சுன்னாக்க வெளியே எடுக்கவும் முடியாதே” .என்கிற வரிகள் தான். ஆழமில்லாத நதியாய் இருப்பினும் மற்றவர்கள் பாவங்களை ஏற்று கொள்ளும் நதி .

 

தன்னிடம் உள்ள ஒளியை கொடுத்து மற்றவர்கள் இருட்டை போக்கும் கதிரவனை காணும் போது தங்களது எழுத்தால் எனக்கு மிக அண்மையான இருவர் ஞாபகம் வருகின்றனர் .

 

ஒருவர் ஏசு பிரான் . இந்த கதையே ரட்சணிய யாத்ரீகத்தில் வந்த சிலுவை அறையும் படலம் போல இருந்தது. பிறர் பாவங்களை போக்க சிலுவை தூக்கும் ஏசு .அதிலும் அந்த கடைசி அழுகை ‘ஏலி ஏலி லாமா சபக்தானி ‘ என்பது போல எனக்கு பட்டது .

 

மற்றொருவரை இந்தியர்களாகிய நாம் இன்றும் சிலுவையில் அடித்து கொண்டிருக்கிறோம்.

 

மென்பொருள் துறையில் பணி புரியும் நான், இந்த இரண்டு வருடங்களில் செய்த ஒரே நல்ல விஷயமாக நினைப்பது தங்களது புத்தகங்களை படித்ததே .அறம் கதையில் வருவது போல் நான் வணங்குகிறேன் ,”உங்களுக்கு எல்லா கதவுகளும் திறக்கும் சார் .இல்லையென்றால் உடைத்து விடுவீர்கள் “.

 

என்றும் அன்புடன் உங்கள் வாசகன்

மிதுன் குமார்.

 

அன்புள்ள மிதுன்குமார்

உங்கள் வாசிப்பு ஆரம்பநிலையில் என்கிறீர்கள். ஆனாலும் கதையின் உள்ளடுக்குகளுக்குள் செல்லமுயன்றிருப்பதும் அதைச்சார்ந்த எண்ணங்களில் ஒழுகிச்செல்வதும் உங்கள் வாசிப்பை முக்கியமானதாக ஆக்குகின்றன. ஒரு நல்லகதையை வாசிப்பதற்கான வழிகள் மூன்று. அதிலுள்ள படிமக்குறிப்புகளை தொகுத்துக்கொள்ளுதல். அதன் அடிப்படைச் சொற்றொடர்களை எடுத்துக்கொள்ளுதல். அதையொட்டி அந்தரங்கமான எண்ணங்களில் சென்று அவற்றை தொகுத்தல். அந்த அந்தரங்க எண்ணங்கள் படைப்பின் உணர்வு, தரிசனம் சம்பந்தமானவையாக இருக்கவேண்டும். அன்றாட வாழ்க்கையின் அரசியலின் தளத்தைச் சேர்ந்த எளிமையான கருத்துக்கள் அல்லது மனப்பதிவுகளாக இருக்கக்கூடாது. அவ்வகையில் உங்கள் வாசிப்பு மகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்

 

அன்புடன்

 

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

 

“ஆழமற்ற நதி” சிறுகதையின் ஆழத்தில் சிக்கிக்கொண்டேன். கதையின் துவக்கமும் முடிவும் மிகச்சரியாக ஒத்திசைகிறது. “Paper River” என்ற அந்த ஆழமற்ற நதி உண்மையில் கதிர் என்ற அந்த இளைஞனைத்தான் குறிக்கிறது என எண்ணிக்கொண்டேன். நதியில் ஆழமில்லாது இருக்கலாம். ஆனால், நீர் முழுமையாக வற்றிப்போகவில்லை. அதனால் அது இன்னும் நதிதான். தன் தந்தைக்காக அழும் கதிர், நதிக்கு மிக அருகில் இருக்கிறான். மற்றவர்களோ வேகமாக மேடேறிவிடுகிறார்கள்.

 

கதையின் இன்னொரு முக்கியமான அம்சம், அந்த அதர்வ வேதச் சடங்கு. வெண்முரசு வாசிப்பவர்களுக்குத் தெரியும், அதர்வ வேதம் என்பது இருளுலக தேவதைகளை உபாசிக்கும் வேதம் என்பதால் அது மங்களகரமான வேதமாக கருதப்படுவதில்லை. வெண்முரசின் பல இடங்களில் “மூவேதியர்கள்” என்ற பதத்தைத்தான் அதன் கதாபாத்திரங்கள் உபயோகிக்கிறார்கள். நம்பூதிரியின் அதர்வ வேதம், கதிர் என்ற அந்த இளைஞனின் இருண்ட வீட்டிற்குள் (அவனை கதவு ஜன்னல்களற்ற ஆறு பக்கங்களும் மூடிய வீடு என்கிறார் டிரைவர்) உறையும் நியாய தேவதையை எழுப்பி விடுகிறது. அவன் கண்ணீர் விடுகிறான். “அல்லற்பட்டு ஆற்றாது அழுத அழுகையன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” என்பதை உணர்ந்ததாலோ என்னவோ காசிநாதன் வேகமாக மேலேறி வந்துவிடுகிறார். அவர் நீதிபதியாய் இருந்தவர். அவருக்குத் தெரிந்துவிடுகிறது அது நீதியின் குரல் என்று. “உள்ள ஏதாவது போச்சுன்னாக்க வெளியே எடுக்கவும் முடியாதே” என்ற சுந்தரேசனின் குரல்தான் முடிவுக்கு அழுத்தம் தருவது போலுள்ளது. ஆறு பக்கமும் பூட்டிய வீட்டிற்குள் துளி வெளிச்சம் வந்துவிட்டது. இனி அதை அவ்வீட்டினுள்ளிருந்து யாரும் பிடுங்கிக் கொள்ள முடியாது. குற்றவுணர்ச்சியின் பிடியிலிருந்து அவர்கள் யாருக்கும் விடுதலை கிடையாது. ஆழமற்ற அந்த ஆற்றுக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது. மிகச் சரியாக அவர்கள் அனைவரும் அதில் மூழ்கியெழுந்ததும்தான் அந்தப் பையனுக்கு விசும்பலும் கண்ணீரும் வருகிறது.

 

கதிர் என்ற அந்த இளைஞனின் பெயரும் கதையோடு நுட்பமான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு விடுகிறது. முற்றிலும் இருளுக்கானது என ஒதுக்கப்பட்ட அதர்வ வேதம்தான் கதிரை எழுப்பிவிடுகிறது.

 

மிக்க அன்புடன்,

 

கணேஷ் பாபு

சிங்கப்பூர்

 

அன்புள்ள கணேஷ்பாபு,

கதை ஒரு தருணத்தை முன்வைக்கிறது. ஒரு மானுடஇக்கட்டின் தருணம். நாம் அறியமுடியாமைகளின் பிரம்மாண்டத்தின் முன் நம் சிறிய அறிதல்களைக்கொண்டு முடிவெடுக்கிறோம். வாழ்கிறோம். நாம் ஆற்றுவதன் காரணங்களையோ விளைவுகளையோ அறியாத சிறிய வட்டத்திற்குள் இருந்துகொண்டிருக்கிறோம்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 14
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15