தன்வழிச்சேரல்

lone

அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்

அன்பின் ஜெ,

கலைக்கல்வியும் அறிவியல் கல்வியும் “வாசித்தேன். மிகத்  தெளிவான விளக்கம் தந்திருக்கிறீர்கள்.இன்று தமிழ்நாட்டில் கல்வியில் நடக்கும் குளறுபடிகள் எல்லாம் இத்தகைய புரிதல்கள் இல்லாத பெரும்பான்மை மனநிலையின் விளைவுகளே .

மாணவர்களுக்கு பள்ளி வயதில் தங்கள் ஆர்வம்,இலக்கு பற்றிய சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதை விட ,அவர்களை மடைமாற்ற வேண்டிய பெற்றோருக்கும்,கல்வியாளர்களுக்குமே  அதுபற்றிய அடிப்படையே தெரியவில்லை என்பதே உண்மை

மருத்துவ படிப்பு தொடர்பாக நடைபெரும் எல்லா குழப்பங்களையும் பார்த்து ,என் மனதில் கடந்த சில வாரங்களாக என் வாழ்வை பற்றிய எண்ணங்கள் இருந்து கொண்டே இருந்தன.இன்று அது தொடர்பான உங்கள் இக்கட்டுரையை வாசித்ததும் தான் தோன்றியது என் பள்ளி நாட்களில் இதை வாசித்திருந்தால் நிச்சயம் நான் இன்று இருப்பதை விட நிறைவான வேறு நிலையில் இருந்திருப்பேன்.

ஆம் இன்று தமிழகமே பிதற்றிக்கொண்டிருகுக்கும் எம்பிபிஎஸ் என்பதையே  எனக்கும் என் பள்ளி நாட்களில் என் பெற்றோரும்,என் ஆசிரியர்களும் இலக்காக சொல்லிச்சொல்லி மனதில் பதித்தனர்.பதினைந்தாண்டுகளுக்கு முன் ஒரு சிறு மலைப்பகுதியில் நன்றாக படிக்கக்கூடிய  மாணவியான எனக்கு அவர்கள் சொல்வதே வேதமாகத் தெரிந்தது.என்னுடைய ஆர்வம் பற்றியெல்லாம் பிரித்தறியத் தெரியவில்லை.

.என் அப்பாவும்,அம்மாவுமே எனக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்,மற்றும் உதவித் தலைமை ஆசிரியர்கள்.எனவே பிற ஆசிரியர்களின் ஊக்குவிப்பில் அரவணைப்பில் என் பள்ளி நாட்கள் நன்றாகவே இருந்தன.பத்து ,பன்னிரண்டாம் வகுப்புகளில் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தேன்அந்நாட்களிலேயே  இலக்கியமும்,வாசிப்பும் என்னை ஈர்த்தன.பாடங்களை நன்றாக படித்ததால் என் இலக்கிய வாசிப்பிற்கு எந்த தடையுமில்லை. ஆனால்    கலைக்கல்வி  தான் என் துறை என்று அறியவும் இயலவில்லை.

பிளஸ்டூவில் தமிழ் மற்றும்  ஆங்கில பாடங்கள் எனக்கு அத்தனை பிடித்தமானதாக இருந்ததை இப்போழுது உணர்கிறேன்.நல்ல மதிப்பெண் இருந்தாலும் எனக்கு கட்ஆப் கிடைக்கவில்லை.தமிழ் ,ஆங்கிலத்தில் அதிக மார்க் வாங்கினால் எப்படி MBBS கிடைக்கும்?      அந்த சூழலிலாவது எனக்கு எங்காவது கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படி என்று யாரும் சொல்லவில்லை.எனக்கும் அதை உணரத் தெரியவில்லை.

புகழ்பெற்ற வேலூர் CMC மருத்துவக் கல்லூரியில் பாராமெடிகல் படிப்பொன்றில் சேர்த்தார்கள்.அங்கு சேர்ந்த  சில மாதங்களிலேயே இது என் இடமில்லை என்று உணரத்தோடங்கினேன்.ஜெ நீங்கள் சொன்னது போல மருத்துவத்துறையில் இருக்கும் பலருக்கும் தாங்கள் அறிவுஜீவிகள் என்ற தலைக்கனம் கொஞ்ச நஞ்சமில்லை.மருத்துவர்கள் என்றில்லை மருத்துவத்துறை சார்ந்த அத்தனை பேருமே அப்படிப்பட்ட மனநிலை கொண்வடர்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன்.

மொண்ணைத்தனம் என்று நீங்கள் எழுதும் அத்தனை அற்பங்களையும் எதிர்கொண்டேன்.எத்தனேயோ நாட்கள் மனஅழுத்தத்திலும்,கண்ணீரிலும் கழித்திருக்கிறேன்.அச்சூழலில் என்னைக் காப்பாற்றியது நிச்சயம் என் வாசிப்பு தான்.தேடித்தேடி அத்தனை நூல்களையும் வெறிகொண்டு வாசித்திருக்கிறேன் .மூன்றாண்டுகள் அங்கு படித்து, முடித்து இரண்டாண்டுகள் பணியும் செய்தேன்.

என் வாழ்வின் அகச்சிக்கல்கள் நிறைந்த நாட்கள் அவை.என்னால் அவ்வேலையை சிறிதளவும் ஈடுபட்டு செய்ய இயலவில்லை.மனம் முழுக்க இலக்கியமும்,தேடல்களும் நிறைந்து,புற உலகு அதற்கு கொஞ்சமும் சம்பந்தமற்ற அனாடமியும்,பிசியாலஜியும்,பெதாலஜியும் மெடிகல் டெர்ம்சும் கொண்டிருக்க, மனக்குழப்பத்திற்கு அளவேயில்லை.எப்படியாவது அங்கிருந்து தப்பி ஓடி விட எண்ணினேன்.அதுவும் அத்தனை எளிதன்று.என் மிகச்சிறந்த நண்பர்கள் மட்டுமே அச்சூழலில் என்னைக் காத்தனர்.

“உன் ஆர்வம் எது என்று கண்டுபிடித்து அத்துறைக்கு மாறி விடு.இல்லையென்றால் பைத்தியக்காரியாகத் தான் உன்னை இங்கிருந்து அழைத்துச்செல்வார்கள் என்று என்னை  சரியான நேரத்தில் அலர்ட் செய்தனர்.

நுண்மையும்,தேடல்களும் கொண்டவர்களுக்கு அப்படிப்பட்ட விருப்பமற்ற துறைகள்,அதுவும் அதிக வேலைப்பளு கொண்ட துறைகள் கொடுமையானவையே.ஆனால் நம் சமூகத்திற்கு அதைப்பற்றியெல்லாம் புரிதல்களே இல்லை.

“மிகச்சிறந்த நிறுவனத்தில் படித்திருக்கிறாய்.நல்ல வேலையிருக்கிறது.வெளிநாட்டிற்குச் சென்றால் இலட்சங்களில் சம்பாதிக்கலாம்.உனக்கு என்ன குறை இங்கே?”என்று என்னை அடி முட்டாளாக எண்ணி அறிவுரைகள் சொன்னார்கள்.என்னால் அந்த அறிவாளிகளின்(!) நடுவில் இருக்கவே இயலவில்லை.

இரவுப்பணிகளில்,ஓய்வறைகளில் நான் வாசிக்கும் புத்தகங்களைக் கண்டு அவர்களெல்லாம் என்னை விநோதமாக எண்ணினார்கள்.

மிக எளிய கிறித்துவ வழிபாடுகளைக் கொண்ட மதம் மாறி ஓரிரு தலைமுறைகள் ஆன அவர்களுக்கெல்லாம் கிறிஸ்து மற்றும் ஒரு தெய்வம் அவ்வளவே.ஆன்மீகப் புரிதல்கள் என்பதே தெரியாத அடிப்படைவாதிகள்.

கதைப்புத்தகம் வாசிப்பது மகாபாவமாக சபைகளில் போதிக்கப்பட்டு வளர்ந்த கூட்டத்திற்கு  என்னை எப்படியாவது புத்தகம் என்னும் பிசாசின் பிடியிலிருந்து இரட்சித்து பரிசுத்த ஆவிக்குள்(!)  கொண்டு வர வேண்டும் என்பது இலக்காக இருந்தது.

என்னுடன் பேசி எப்படியாவது என்னை சர்ச்சிற்குள் கொண்டுவர முயற்சித்தவர்களுக்கு பைபிள் பற்றி நான் கேட்ட எந்த ஆழமான கேள்விக்கும் பதில் கூற இயலவில்லை.நிறைய பேரைக் கதற வைத்திருக்கிறேன் என்று இப்பொழுது எண்ணுகையில் சிரிப்பாகத் தான் உள்ளது.பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.அவர்களுக்கு அளிக்கப்பட்ட  ஆன்மீகப் புரிதல் என்பது MLM மாதிரி ,”நான்  இன்னிக்கு பரோட்டா  சாப்பிடனும் ஏசப்பான்னு காலையில ஜெபம் பண்ணேன்.மத்தியானம் அந்த எசபல் அக்கா எனக்கு பரோட்டா வாங்கிட்டு வந்தாங்க”நீயும் ஏசப்பாகிட்ட வா உனக்கும் பிரியாணி கிடைக்கும்” என்பது மாதிரியானதே.இதெல்லாம் நான் சும்மா கிண்டலுக்கு எழுதவில்லை.உண்மையில் சபையில் எழுந்து இப்படி சாட்சி சொன்னவர்களை நான் பார்த்திருக்கிறேன்.இந்நிலையில்  என் வாசிப்பு பற்றியெல்லாம் அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கும்?

ஜெயகாந்தனையும்,கிராவையும் கேள்விப்பட்டே இருக்க முடியாத ஓரிடத்தில் வாசிப்பு பைத்தியமான நான் எப்படி இருக்க முடியும்?    என்னுடைய தேடல்கள் இதுவல்ல என நான் உணர்ந்து எப்படியாவது விலகிவிட வேண்டுமென்று எண்ணினேன்.நான் அறிந்த கிறிஸ்துவை எப்படி அவர்களுக்குச் சொல்வது என்று அந்த வயதில் தெரியவில்லை.

“இந்த தனித்த இரவில் ..,.”.,கடவுளின் மைந்தன் கவிதையை வாசித்தபோது,ஓர் எளிய கூழாங்கல் வாசித்து .அந்த எளிய தச்சனை உணர்ந்த பொழுதில் எனக்கான புரிதல்இதுதான் என்று நான் அழுதிருக்கிறேன்.இலக்கியமன்றி அதனை எனக்கு அளித்தது வேறு எதுவுமில்லை.        என்னுடைய தேவையைத் தேடலை ஒருபோதும் இவ்விடத்தில் அடைய இயலாது என்று ஒரு நாள் முடிவெடுத்து மருத்துவத்துறையை விட்டு வெளியேறினேன்.யாரிடமும் நான் கருத்து கேட்கவில்லை.ஏனெனில் எனக்குத் தெரியும் அவர்களுக்கெல்லாம் நான் பேசுவதே புரியாது என்று.    இருந்தாலும் நான் எதிர்கொண்ட சிக்கல்கள் ,எதிர்ப்புகள் அநேகம்.”நீ  இத்தனை ஆசீர்வாதமான கிறித்தவ நிறுவனத்திலிருந்து வெளியேறினால் நிச்சயம் அழிந்து போவாய்.”என்று நேரடியாய் என்னைச் சபித்தவர்கள் உண்டு.

நல்ல வேளையாக என் இருபத்திரண்டு  வயதிலேயே  இது நமக்கான இடமில்லை என்று உறுதியாக வெளியேறி அதன் பிறகு ஆசிரியப்பயிற்சியும்,ஆங்கில இலக்கியமும்  படித்து  ஆசிரியையாகி விட்டேன்.இல்லையென்றால் அங்கு இருக்க முடியாமல் புலம்பிக்கொண்டிருந்திருப்பேன் அல்லது மன அழுத்தத்தில் செத்து தான் போயிருப்பேன்.ஆமாம் பிடிக்காத துறையில் வேறு வழியின்றி இருப்பது அத்தனை கொடுமையானது தான்.

கல்வித்துறையில் மட்டும் எல்லோரும் கம்பனையும்,கீட்சையும் தெரிந்திருக்கிறார்களா?  என்ற கேள்வி வரும்.அது உண்மைதான்.மொண்ணைத்தனங்கள் எங்கு தான் இல்லை?

புத்தகங்களும்,வாசிப்பும் தவறு என்று இங்கு யாரும் எண்ணுவதில்லை.எனக்கு வாசிக்கவும்,எழுதவும் உகந்த சூழலும் நேரமும் எனக்கு இங்கு இருக்கிறது .அது எவ்வளவோ பரவாயில்லை.குறைந்த அளவில் பாரதியும்,திருவள்ளுவருமாவது அறிந்தவர்கள் இருக்கிறார்கள்.

என்னுடன் மருத்துவத்துறையில் இருந்த பலர் இன்று நான் பணியாற்றும் பள்ளிக்கே அவர்கள் வேலையாக வரும்பொழுது  என்னைப் பார்த்து வியக்கிறார்கள்.சீரழிந்து போயிருக்க வேண்டியவள் எப்படி அரசுப்பணியில் இருக்கிறாள் என்று எண்ணிக்கொள்வார்கள்.ஒரு சிலர் மட்டுமே மனம் திறந்து நானும் கூட அப்பவே உன்கூட வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.        என்   ,வாசிப்பும்,இலக்கியமும் என் எல்லா சூழலிலும் நின்று எதிர்கொள்ளும் பக்குவத்தை அளித்தது என்பதில் சந்தேகமேயில்லை.

நம் கல்விச்சூழலில் நன்றாக படிக்கும் மாணவர்கள் எல்லோரும் அறிவியலும்,பொறியியலும,மருத்துவமும் கற்கத் தள்ளப் படுகிறார்கள் என்று நீங்கள் கூறுவது மறுக்க இயலா உண்மை. இத்தகைய அபத்தமான சூழல் மாறி அவரவர் ஆர்வங்கொண்ட படிப்பினை தேர்ந்தெடுக்க உதவும் கல்வி என்று இங்கு சாத்தியமாகும்?           மருத்துவமும்,மென்பொருளும் தவிர பிற படிப்புகளும் உள்ளன என்று நடுத்தரவர்க்கம் உணர்வது எப்படி? நிச்சயம் இது பற்றிய விரிவான விவாதங்கள் தமிழகத்திற்கு தேவை. எத்தனையோ மாணவர்கள் காப்பாற்றப் படுவார்கள்.     என் அலைவரிசைக்குள் வரும் நிறைய பேருக்கு இதை விவரித்திருக்கிறேன்.இன்றைய உங்கள் கட்டுரையை  நிறைய நண்பர்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.

மிக்க நன்றி

அன்புடன்

மோனிகா .

***

அன்புள்ள மோனிகா

நீண்ட இடைவெளிக்குப்பின் ஷோப்பனோவரின் கருத்துக்களுடன் என் கருத்துக்களை ஒப்பிட்டுக்கொள்ள வாய்ப்பு வந்தது. நவஐரோப்பிய இலட்சியவாதத்தின் மையம் அவர். டால்ஸ்டாய் , தாமஸ் மன். எமர்சன் , கஸண்ட்ஸகீஸ் என நான் வழிபடும் பலர் அவரிடமிருந்து வந்தவர்கள் என இன்றுதான் தொகுத்துக்கொள்கிறேன். மிக இளமையிலேயே அவருடைய பல கருத்துக்களை நான் என்னுடையதென வளர்த்துக்கொண்டிருக்கிறேன். கிழக்கைச் சந்தித்த மேற்குள்ளங்களில் முதன்மையானது அவருடையதே.

தன்னறம் என நான் சொல்வதை அவர் மிகமிக விரிவாக பேசுகிறார். ஆத்மாவுக்கு உகந்ததைச் செய்கையிலேயே நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் பெரும்பாலும் அதைச் செய்வதில்லை. என்ன காரணம் என்று நோக்கினால் மூன்று கட்டாயங்கள் நம் கண்களுக்குப் படும்.

ஒன்று, மரபு அளிக்கும் மனப்பயிற்சியும் சமூகக் கட்டாயமும். இந்த சாதி இதைத்தான் செய்யவேண்டும், பெண்கள் இதைத்தான் செய்யவேண்டும், இது உயர்ந்தது அது தாழ்ந்தது – போன்ற முன்முடிவுகள். அவற்றை மன அளவில் கடப்பது எளிது. நடைமுறையில் கடப்பது அதேயளவுக்குக் கடினம். பெரும்பாலானவர்கள் கடப்பதேயில்லை.

இரண்டு, நம் ஆணவம். நாம் நம்மை பிறர் மதிக்கும் செயலைச் செய்யவிரும்புகிறோமா அல்லது நம் உளமகிழ்ச்சிக்குரிய செயலைச் செய்ய விரும்புகிறோமா என்றுபார்த்தாலே இது தெரியும். பெரும்பாலும் ஆணவநிறைவையே நாம் மகிழ்ச்சி என கற்பனைசெய்துகொள்கிறோம். ’நான் யார்னு காட்டுறேன்’ என்ற வீம்பினாலும் ‘அவனைவிட நான் எப்டி குறைஞ்சுபோயிட்டேன்” என்ற சீற்றத்தாலும் ‘அன்னிக்கு என்னை குனிஞ்சு பாத்தவன்லாம் இன்னிக்கு வயிறு எரிகிறான்’ என்ற பெருமிதத்தாலும் அடித்துச்செல்லப்படுகிறோம்.

மூன்று, நம் சபலங்கள். எளிமையான உலகியல் ஆசைகள் நம்மை பலசமயம் ஆட்டிவைக்கின்றன. நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றைவிட சற்றே கூடுதலான ஊதியம் அளிக்கும் ஒன்றை நாம் எப்போதும் தெரிவுசெய்கிறோம்.

அவற்றை வெல்வது ஒரு கனவிலிருந்து உலுக்கி விடுவித்துக்கொள்வதுபோல. எழுந்தபின் கனவு எங்கோ என மறைந்துவிடும். எழாதவரை கனவே உண்மையான வாழ்க்கை. மீறமுடியாத சூழல்.

ஷோப்பனோவர் தூயஅறிதலின் கிளர்ச்சியும் நிறைவும் மட்டுமே மானுடனுக்குரிய உண்மையான இன்பம் என்கிறார். நமக்கு அது எங்கே இருக்கிறதோ அதுவே நம் துறை. அதில் ‘வெல்ல’  ‘சாதிக்க’ வேண்டியதில்லை. மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே சாதனைதான். ஆனால் தூய அறிதலின் உவகை மானுடரில் அனைவருக்கும் உரியதல்ல என்றும் அதற்கு இயல்பிலேயே அறிவாற்றலும் நுண்ணுணர்வும் தேவை என்றும் சொல்லும் ஷோப்பனோவர் அவற்றைப் பெற்றவர்கள் அவர்கள் அடையும் அந்த இன்பத்தின் மறுபக்கமாக அந்த அறிவும் நுண்ணுணர்வும் அளிக்கும் பலவகை சோர்வுகளையும் துன்பங்களையும் அடையவேண்டியிருக்கும், அதைத் தவிர்க்கமுடியாது என்கிறார்.

போட்டிகளில் வெல்வதே இன்பம் என நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறோம், நமக்கும் அவ்வாறு சொல்லித்தரப்பட்டுள்ளது. இந்தியா போன்ற குறைவான வாய்ப்புகள் கொண்ட  பெரியநாடுகளில் அதுவே சரியான இளமைக்காலப் பயிற்சி. அதைச் சொல்லிக்கொடுப்பது தவிர்க்கப்படக்கூடாது. அவ்வகையில் வளர்க்கப்பட்டு உலகின் முன் குழந்தைகளைவிடுவதே நல்லது. அக்குழந்தைக்கு மெய்யான தேடலும், அதை நோக்கிச்செல்லும் தீவிரமும் இருந்தால் அது தன் வழியை, தன் இன்பத்தைக் கண்டடையவேண்டியதுதான். அதுவே உங்களுக்கும் நிகழ்ந்துள்ளது. சில விதைகளுக்கு கெட்டியான மேலுறைத்தோல் இருக்கும். அதை உடைத்து எழும் ஆற்றல் அந்த முளைக்கு இருந்தால் அது முளைத்து வளர்ந்தால்போதும் என்பதே நியதி

ஜெ

முந்தைய கட்டுரைஉள்ளத்தின் நாவுகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 14