வாசிப்பு, அறிவியல்கல்வி – கடிதங்கள்

 

adiction

அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்
நாம் ஏன் படிப்பதே இல்லை?

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

இன்று அறிவியல் மற்றும் கலை கல்விக்குமிடையே உள்ள வேறுபாடு பற்றி தங்கள் பதிவை பார்த்தேன்.

 

நீங்கள் கூறியது போல அறிவியல் கல்வி வெறும் தகவல் குப்பைகளை மனப்பாடம் செய்வதோடு நின்று விடுவது கிடையாது.

 

அறிவியல் கல்வி பல நிலைகளில் இயங்குகிறது.

 

1 ) முதல் நிலை அதன் அடிப்படையான அறிவியல் விதிகளை புரிந்துக் கொள்வது.  இவ்விதிகளை புரிந்துக் கொள்வது அவ்வளவு எளிதானது கிடையாது. இதற்குத் தேவை பகுத்தறிவு, தர்க்க அறிவு மற்றும் ஆழ்ந்த கணித அறிவு. இந்த நிலையில் தேர்ச்சியானவர் அறிவியில் விதிகளை புரிந்து அதை வாழ்க்கையுடன் பொருத்திக் கொள்ள முடியும்.

 

2 ) அடுத்த நிலை புதிய அறிவியல் விதிகளை தானே உருவாக்குவது.  இதற்கு கற்பனை திறன் இல்லாமல் முடியாது.

 

“The greatest scientists are artists as well,”

என்ற எய்ன்ஸ்தீனின் கூற்றை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது தொடர்பான ஒரு வலைப்பதிவின் சுட்டியும் கீழே இணைத்துள்ளேன்.

https://www.psychologytoday.com/blog/imagine/201003/einstein-creative-thinking-music-and-the-intuitive-art-scientific-imagination

 

 

3 ) மூன்றாம் நிலை புதிய கருத்தியல்களை உருவாக்குவது. இது அறிவியல் துறையின் பெரும் ஆளுமைகளாலே முடியும். இதற்குத் தேவை தர்க்க அறிவு, கற்பனைத் திறன் மட்டுமல்ல இந்த உலகை நீங்கள் எவ்வாறு தத்துவார்த்தமாக அணுகுகிறீர்கள் என்பதை பொறுத்தது. எய்ன்ஸ்ட்டின் போகர் இடையே நிகழ்ந்த கருத்தியல் மோதல்கள் வெறும் அறிவியல் ரீதானது மட்டுமல்ல ஆழ்ந்த தத்துவார்த்தமானதும் கூட.

 

அறிவியல் துறையின் பெரும் ஆளுமை தர்க்க அறிவு, கணித அறிவு, ஆழ்ந்த கற்பனைத் திறன் மற்றும் தத்துவ ஞானம் கொண்டவராகவே இருப்பார்.

 

அறிவியல் கல்வியை வெறும் தகவல் குப்பையாகவோ அல்லது கருத்தியல் ரீதியாக அணுகுவதோ அதை படிப்பவரை பொறுத்தே அமையும். பெரும்பான்மையான அறிவியல் மாணவர்கள் அதை வெறும் தகவல் குவியலாக அணுகுவது தான் கவலைக்கிடமான விஷயம். இது அறிவியல் துறை மட்டுமன்று எல்லா துறைக்கும் பொதுவான குறைபாடாகவே இருக்கிறது.

 

ஒரு நாட்டிற்கு அறிவியல் கல்வி அல்லது கலைக் கல்வி இது இரண்டில் எது முக்கியம். மேலை நாடுகளில் அறிவியல் கல்வி மீதான ஆர்வம் மிகவும் குறைந்து வருகிறது. ஆனால் இருக்கும் வேலை வாய்ப்புகள் அனைத்திற்கும் அறிவியல் கல்வி மிகவும் அவசியமாகிறது. அதனால் வேலை வாய்ப்புகள் பல இருந்தும் அதற்கு தகுதியானவர்கள் குறைவாகாவே இருக்கிறார்கள். இது மேலை நாடுகளின் பொருளாதாரத்தை பெருமளவு பாதிக்கிறது. அந்த வேலை நிரப்ப வரும் ஆசிய மக்கள் மீது அங்கிருக்கும் குடிமக்களுக்கு வெறுப்பும் வருகிறது.

 

இதற்கு நேர் எதிர் சூழ்நிலையில் இந்தியா மற்றும் ஆசிய தேசத்து கல்வி இருக்கிறது. இங்கு வெறும் அறிவியல் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. கலைக் கல்விக்கு எந்த மதிப்பும் இல்லை. அதனால் நாம் உருவாக்கும் மாணவர்களுக்கும் எந்திரங்களும் எந்த வேறுபாடும் இல்லாமலிருக்கிறது.

 

நம் அன்றாட வாழ்க்கையின் பொருளியல் தேவைக்கு அறிவியல் கல்வி அவசியம். இது பள்ளி மற்றும் கல்லூரிகளில் மட்டுமே கற்க முடியும். ஆனால் வாழ்க்கை பற்றிய விரிவான பார்வைக்கு  கலை மற்றும் தத்துவார்த்தமான கல்வி தேவை. இது எந்தக் கல்லூரியிலும் கற்க முடியாது. இதற்குத் தேவை சுயமாக கற்கும் ஆர்வம் மற்றும் நல்ல mentor அமைவது.

 

ஆகவே உங்கள் வாழ்க்கையின் தேவைக்கு கணிதத்தையும் அறிவியலையும் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் சுயத்தை விசாலப்படுத்துவதற்கு நல்ல இலக்கியம் மற்றும் தத்துவ புத்தகங்கள் நீங்களே தேடி படியுங்கள். நல்ல mentor  உடன் அதைப் பற்றி விவாதியுங்கள்.

 

மேலும் சிவா எழுப்பிய கேள்விக்கு உங்கள் பதில் pessimist  ஆக  முடித்திருந்தீர்கள். அவருக்கு 32  வயதாகி விட்டதால் அவரால் அவர் வாழ்க்கையின் போக்கை மாற்ற முடியாது என்று கூறியிருந்தீர்கள்.

 

இதற்கு என் பதிலும் திரு . கமல்ஹாசன் அவர்கள் பதிலும் ஒன்று  தான்.

 

“கல்வி என்பது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகே துவங்குகிறது.”

 

இது முற்றிலும் உண்மை. என் கல்லூரி வாழ்க்கையின் போது எனக்கு புரியாத விஷயங்கள் பல இருந்தன. ஆனால் இந்த 45  வயதில் அதைத் திரும்ப படிக்கும் போது புது கோணம் தென்படுகிறது.

 

கல்வி என்போது வாழ்க்கையின் ஒரு கட்டத்தோடு முடிவதல்ல. அது மரணம் வரை தொடரும் விஷயம். அது கற்பவரின் மன நிலையம் ஆர்வத்தையும் பொறுத்த விசயமே ஆகும்.

 

நன்றி.

சத்திஷ்

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் ‘நாம் ஏன் படிப்பதே இல்லை?’ கட்டுரை படிக்க நேர்ந்தது, தாங்கள் கூறியபடி இன்று ‘இணைய போதை அடிமைகள்’ நிறைந்த ஒரு மொண்ணை சமூகம் உருப்பெற்று வளர்ந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், அதன் ஆரம்ப வேர், இணையம் என்பது ஊடுருவாமல் இருந்த தொண்ணூருகளில் ஆரம்பித்துவிட்டது.

இப்படி நான் கூற காரணம், எண்பதுகள் வரை ஏதோ ஒரு  வழியில் வாசிப்பதை கராரகவோ, பொழுது போக்காகவோ அன்றாட நிகழ்வாக்கிக் கொண்ட ஒரு சமூகக் கூட்டம் இருந்தது ( எந்த சமூகத்திலும், எந்த காலகட்டத்திலும் வாசிப்பை முற்றும் நிராகரிக்கும் ஒரு பத்து சதமானம் மக்கள் போக). ஏதோ ஒரு வாசக சாலையில் எவராவது ஒருவர் அரசியல், சினிமா, பத்திரிக்கை, வரலாறு, என புத்தகங்களை தேடி வாசித்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு பொழுது போக்கு என்றால் அது வானொலி அல்லது திரையரங்கம், அல்லது வாசிப்பு, அவர்கள் என்ன வாசித்தார்கள்?, அது இலக்கியமா, வார இதழா, பழைய புதினமா, புராணமா என்பது முக்கியமல்ல, மாறாக அவர்கள் ‘வாசித்தார்கள்’ என்பது இங்கே நான் சொல்ல முற்படுவது.

இந்த பழக்கம் மெல்ல மறைய ஆரம்பித்தது தொண்ணூருகளில், தொலைக்காட்சி எண்பதுகளில் வந்திருந்தாலும், கேபிள் ஒளிபரப்பு முழு மூச்சாக வந்தது அப்பொழுதுதான், பொழுது போக்க ஒரு புது பழக்கம் என ஆரம்பித்து, பின் அது அன்றாட நிகழ்வாக ஆகி பின் அத்தியாவசிய தேவையாகி, ஆழ வேரூன்றிவிட்டது.

ஆறு மணி நேர ஒளிபரப்பு, பன்னிரெண்டு மணி நேரமானது, பின் இருபத்தி நாலு மணி நேரம், பின் சானல்களின் என்ணிக்கை கூடியது, பின் வார சீரியல், பின் மெகாசீரியல், அதற்கு பின் இன்று பிக் பாஸ் வரை எத்தனை வகை போதைகள்.

 

இந்த போதை ஆசாமிகளுக்கு ஒரு மாற்று போதையாக கிடைத்தது இணையம், அது வரை உட்கார்ந்து ‘என் கடன் சானல் மாற்றிக் கடவது’ என ரிமோட்டும் கையுமாக இருந்தவர்களுக்கு, கையில் இணைய பயன்பாடு மேலும் போதை தேட வைத்துவிட்டது.

 

உண்மையில் வாசிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இருந்து அறுபட ஆரம்பித்து இருபது வருடங்கள் ஆகிவிட்டிருக்கிறது.

நானும் எண்பதுகளில் பிறந்த குழந்தைதான், தொண்ணூருகளில் கேபில் சானல்களின் விஸ்வரூபத்தை கண்டவன் தான், ஆனாலும் நான் ஏன் வாசிக்கிறேன் என்று காரணம் தேடினால், அதற்கான் காரணம், தொடர்ச்சியாக வீட்டில் வாங்கப்பட்ட வாரப் பத்திரிக்கைகள், எங்கள் வீட்டின் கீழ் வீட்டில், ஒரு வயதான தம்பதியர் வைத்திருந்த பழைய அலமாரி, அதில் முழுக்க பழைய ‘பூந்தளிர்;’ புத்தகங்கள், நான்  எப்பொழுது வேண்டுமானாலும் சென்று அங்குள்ள புத்தகங்களை எடுத்து படிக்கலாம் என்று அவர்கள் அனுமதித்திருந்தார்கள், பின் என் தாத்தா வீட்டில் இருந்த அதே போன்ற அலமாரியில்  பழைய புதினங்கள், சிற்சில மாயாஜாலக் கதைகள்(விக்கிரமாதித்தன் கதைகள், ஹாத்திம் தாய்), மற்றும் நான் படித்த காமிக்ஸ் கதைகள்.

 

இவைகள் தான் நான் வாசிக்க ஆரம்பிக்க காரணமாய் இருந்தன, முதலில் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன், சுஜாதா என்று வாசிக்க ஆரம்பித்தேன், பின் அவர்களுக்கு அப்பால் செல்வதற்கு வழிகாட்ட ஆள் இல்லை, எதேச்சையாக தங்களது கன்னியாகுமரியை ஒரு நூலகத்தில் கண்டெடுத்தேன், அது ஒரு புதிய வெளியை காண்பித்தது,  அதைப் பற்றி என் நண்பன் ஒருவனுக்கு சொல்ல அவன், தங்களது விஷ்ணுபுரத்தை படிக்கச் சொன்னான், அது ஒரு மாபெரும் உலகை விரித்தது, பின் இன்று வரை பல புதினங்கள், பல ஆளுமைகள், ஒரு முடிவிலியாக என் வாசிப்பின் பயணம் தொடர்கிறது.

 

எனக்கு வாய்த்த அந்த அலமாரிகளைப் போன்ற Goldilocks zone அமையப் பெறாதவர்களுக்கு, வாசிப்பு ஒரு வகை வெட்டி வேலை, அவர்களுக்கு சுஜாதாவும் , சு.ரா.வும் ஒரே வகை, அதாவது எழுத்தாளர்கள்.  விஷ்ணுபுரமும், சிவகாமியின் சபதமும் புராண வகை புதினங்கள்.

 

அவர்களுக்கு வாசிப்பின் வாசனை கூட ஆகாது, நான் முயன்று பார்த்துவிட்டேன், ஐந்தில் வளையாது விட்டதனால் இனி வளைப்பது சாத்தியமில்லை என அம்முயற்ச்சியை விட்டுவிட்டேன்.

 

இனி வரும் தலைமுறைக்கேனும் அலமாரிகள் செய்வது நம் போன்ற வெட்டி வேலை ஆசாமிகளுக்கு உசிதம் என நினைக்கிறேன்.

சந்திரமௌலி ராமு

இணையப்போதை -கடிதம்
முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 8
அடுத்த கட்டுரைகேட்கப்படுகின்றனவா பிரார்த்தனைகள்?