மூன்று : முகில்திரை – 14
சோணிதபுரியிலிருந்து வெளியே சென்றதும் அபிமன்யூ பிரலம்பனிடம் “உடனடியாக சிருங்கபிந்துவிற்கு செய்தியனுப்பவேண்டும்… புறா உள்ளதா?” என்றான். “ஆம், மூன்று புறாக்களை காட்டில் ஒரு மரப்பொந்தில் வைத்திருக்கிறேன்…” என்றான் பிரலம்பன். “எடும் அதை… சிருங்கபிந்துவில் உள்ள நம் படைகள் அந்நகரை அப்படியே கைவிட்டுவிட்டு தென்மேற்காகக் கிளம்பி யாதவநிலம் நோக்கி செல்லட்டும்” என்றான் அபிமன்யூ. “கைவிட்டுவிட்டா?” என்று பிரலம்பன் தயங்கினான்.
“ஆம், கைவிட்டுவிட்டு. ஆனால் நாம் அதை கைவிட்டுவிட்ட செய்தி அசுரர்களுக்கு தெரியக்கூடாது. நம் படைகள் ஒருவர் இருவராக இருளில் தனியாகக் கிளம்பி காட்டுக்குள் ஒன்று சேரவேண்டும். அங்கே சிருங்கபிந்துவில் பத்து படைவீரர்கள் மட்டும் திறனுள்ள தலைவன் ஒருவனுடன் இருக்கட்டும். அத்தனை காவல்மாடங்களிலும் இரண்டு வில்லவர்கள் மிச்சமிருக்கவேண்டும்.” பிரலம்பன் “அவர்கள் அசுரர்களை எத்தனை நேரம் எதிர்க்கமுடியும்?” என்றான். “அங்குள்ள அசுரர்கள் அனைவருமே சிறையிருக்கவேண்டும். நாம் அவர்களை கொல்லக்கூடும் என்னும் அச்சமிருப்பதனால் அசுரர் வன்மையாக தாக்கமாட்டார்கள். நம்மை அச்சுறுத்திப் பணியவைக்கவே முயல்வார்கள். அதற்குள் நாம் எல்லைகடந்து யாதவநிலத்திற்குள் சென்றுவிடுவோம்.”
“நாம் ஏன் அவர்களை பணயப்பொருளாக முன்னிறுத்தக்கூடாது? அசுரர் அம்புகளுக்கு அசுரர்களே கேடயங்களாகட்டுமே?” என்றான் பிரலம்பன். “நான் அவர்களின் இளவரசனுக்கு சொல்லளித்துவிட்டேன்” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் மேலும் ஏதோ கேட்க முயன்றபின் நாவை அடக்கிக்கொண்டான். அவர்கள் சொல்லில்லாமல் இணைவிரைவாக காட்டுக்குள் சென்றனர். மரப்பொந்துக்குள் இருந்த புறாவை எடுத்து அதன் காலில் ஓலையை எழுதிக் கட்டி பறக்கவிட்டான் பிரலம்பன். அபிமன்யூவே எழுதிய ஓலையுடன் இன்னொரு புறா சப்தஃபலத்திற்குச் சென்றது. பிறிதொன்றை தன்னுடன் எடுத்துக்கொண்டான்.
“நாம் செல்வதற்குள் சப்தஃபலம் படையொருங்கியிருக்குமென்றால் நன்று” என்றான் பிரலம்பன். “வாய்ப்பில்லை. மூத்தவர் சாத்யகி மாதுலரின் அதே உளமூடலை தானும் கொண்டிருக்கிறார். பாணாசுரரிடம் பேசலாம் என்றே அவர் எண்ணுவார். பாணர் இருக்கும் உளநிலை என்ன என்று நாம் அறிவதை அவருக்கு சொல்லி புரியவைக்க முடியாது. அங்கே சென்று நாமே நகர்மக்களையும் யாதவகுடிகளையும் நோக்கி அறைகூவி படைதிரட்டவேண்டியதுதான்… அதுவும் இயலுமா என்றே ஐயமாக உள்ளது” என்றான் அபிமன்யூ.
“உண்மையில் பிறிதொரு ஓலையை தந்தைக்கு அனுப்பினாலென்ன என்று எண்ணினேன். அவர் சிறிய படையுடன் வந்தால்கூட பாணரை எளிதில் வெல்லமுடியும். ஆனால் அது நான் அஞ்சிவிட்டதாகவும் அவரிடம் உதவி கோருவதாகவும் பொருள்படுமோ என்னும் எண்ணம் வந்தது” என்று அபிமன்யூ சொன்னான். பிரலம்பன் “நாம் இப்போது வெல்வதே தேவையானது. இங்கே நாம் தோற்றால் இளைய யாதவர் தோற்றதாகவே பொருள்படும். அவர் வெல்லப்படமுடியாதவர் என்னும் எண்ணமே யாதவரை ஆற்றல்கொண்டவர்களாக ஆக்குகிறது. பிறரை அஞ்சித்தயங்கவும் செய்கிறது. அவரை பாணர் வென்றுவிட்டார் என்ற செய்தி போதும், நுரை உடைந்தமைவதுபோல யாதவநிலம் சீர்குலைந்து சிதையும். நோயுற்ற யானையின் செவியசைவு நிலைப்பதற்காகக் காத்திருக்கும் ஓநாய்க்கூட்டங்களைப்போல சூழ்ந்து நோக்கியிருக்கிறார்கள் ஷத்ரியர்” என்றான்.
“ஆம், ஆனால் நான் பிறிதொருவர் உதவியை கோரியதாக ஆகக்கூடாது” என்று அபிமன்யூ சொன்னான். பிரலம்பன் எரிச்சலுடன் “அப்படியொரு பெயர்க்குறை வந்தால்கூட பிறிதொரு களத்தில் அதை ஈடுசெய்யலாம், இளவரசே. இப்போது நாம் யாதவநிலத்தையும் இளைய யாதவர் புகழையும் காத்தாகவேண்டும்… நாம் வேறெதையும் எண்ணமுடியாது” என்றான். அபிமன்யூ “ஆம், ஆனாலும் என்னால் அது இயலாது. நான் வில்லேந்திச்சென்று பாணரிடம் போரிட்டு இறப்பேன். அதன்பின் எந்தைக்கு செய்தி செல்லட்டும். அதுவரை கூடாது” என்றான். “இது வீண் ஆணவம். முதிராச்ப்சொல்!” என்று பிரலம்பன் கூவினான். “ஆம், அதுவே நான். என்னால் பிறிதொன்று ஆற்றவியலாது.”
பிரலம்பன் “நான் ஸ்ரீதமரிடம் சொல்கிறேன். சாத்யகியிடம் சொல்கிறேன். அவர்கள் ஓலை விடுக்கட்டும்” என்றான். “இல்லை, அது என்னை அவர்கள் நம்பவில்லை என்றே பொருள்படும். அவ்வாறு நிகழுமென்றால் ஒருபோதும் நான் எந்தை வரும்வரை காத்திருக்கமாட்டேன்…” என்றான் அபிமன்யூ. “இளவரசே…” என பிரலம்பன் தொடங்க அபிமன்யூ கையமர்த்தி “என்னை பீஷ்மப் பிதாமகர் வாழ்த்தும்போது உடனிருந்தீர் அல்லவா? அவர் புகழ்கொள்வேன் என்றன்றி பிறிதொரு சொல் உரைக்கவில்லை. எனக்கு இப்பிறவியில் பெரும்புகழ் ஒன்றே மிஞ்சும்… வேறு எதுவும் கைப்படாது. நிமித்திகர்களின் பொய்யாமொழி அது” என்று சொல்லி புன்னகைத்தான். “என் களங்கள் நான் பிறப்பதற்கு முன்னரே ஒருங்கிவிட்டன, பிரலம்பரே.” பிரலம்பன் அவனை நோக்கிக்கொண்டு சில கணங்கள் புரவியில் அமர்ந்திருந்தபின் முகம்திருப்பிக்கொண்டான்.
அவர்கள் யாதவநிலத்தை அடைவதற்குள்ளாகவே சிருங்கபிந்துவிலிருந்து வேட்டுவர்தலைவன் மூர்த்தனின் தலைமையில் அவனுடைய சிறிய படை கிளம்பி அங்கே வந்திருந்தது. அவர்களின் புரவிக்குளம்படியோசையை தொலைவிலேயே கேட்டு மரக்கொண்டைகளில் ஏறி நோக்கி முழவொலிச்செய்தி அளித்தனர் வழிநோக்கர். அவர்கள் அணுகியதும் மூர்த்தன் புரவியில் தன் தோழர்கள் தொடர அவனை நோக்கி வந்து தலைவணங்கினான். “கடம்பர் கோட்டையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இறுதி வீரன் உயிருடனிருப்பதுவரை கோட்டை அசுரரிடம் பணியாது என உறுதிசொன்னார், இளவரசே” என்றான் மூர்த்தன். அபிமன்யூ வெறுமனே தலையசைத்தான்.
மரநிழலில் சற்று இளைப்பாறி புரவியை மேயவிட்டு உடலுருவி இளைப்பாற்றியபின் உடனே மீண்டும் கிளம்பினர். அபிமன்யூவின் ஆணைகளை பிரலம்பன் உரத்த குரலில் கையசைவுகளுடன் அறிவிக்க படை வெறும் குளம்படியோசைகளாகவே அவனைத் தொடர்ந்தது. நடந்ததென்ன என்று அனைவரும் அறிந்துவிட்டிருந்தனர். எவ்வகையிலோ தோல்வி என்னும் எண்ணமும் சோர்வும் அவர்களிடையே இருந்தது. மிகச் சிறிய படையாக அசுரநிலத்திற்குள் ஊடுருவிச்சென்றபோதிருந்த ஆணவமும் களிப்பும் முற்றாக அழிந்துவிட்டிருந்தன. அந்தச் சோர்வு குதிரைக்குளம்படிகளிலேயே தெரிவதை பிரலம்பன் விந்தையுணர்வுடன் எண்ணிக்கொண்டான்.
முன்னால் சென்று மரங்களின்மேல் ஏறி நோக்கி அறிவுறுத்தி மேலும் சென்ற வழிநோக்கிகளில் ஒருவனின் முழவோசை எழுந்தது. அபிமன்யூ புரவியை நிறுத்தினான். “நம்மவர்” என்றான். “சாத்யகி! அவரேதான்!” என்று பிரலம்பன் கூவினான். “கேளும்!” என்றான் அபிமன்யூ. சற்றுநேரத்திற்குள் முழவுகள் ஒரே குரலில் “பிரத்யும்னர்! பிரத்யும்னர்!” என்று ஓசையிடத் தொடங்கின. “பிரத்யும்னரா?” என்று பிரலம்பன் வியந்தான். “படை! பெரும்படை!” என்று முழங்கின முழவுகள். அபிமன்யூ “திரும்புக!” என ஆணையிட்டான். “இளவரசே, நாம் தேடியது இதுவே… யாதவப்படை…” என்றான் பிரலம்பன். “ஆம், ஆனால் நாம் அவர்களுடன் சேர்ந்துகொள்ளப் போவதில்லை. நாம் முன்னால் செல்லப்போகிறோம். ஆசுரத்திற்குள் ஊடுருவிச்சென்று மீண்டும் சிருங்கபிந்துவை அடைவோம்…”
பிரலம்பன் “நாம் மட்டுமா?” என்றான். “அங்கே நாம் கடம்பரையும் நம்மவரையும் விட்டுவந்துள்ளோம். அவர்களை நம்மால் காக்க முடியும். நாம் அவர்களை மீட்டதுமே நம்மை அசுரர்கள் சூழ்ந்துகொள்வார்கள். அதற்குள் பிரத்யும்னரின் படைகள் அவர்களை மறுபக்கம் தாக்கும். நாம் மீண்டுவிடமுடியும்…” பிரலம்பன் “அவர்களை உயிரளித்து கோட்டையைக் காக்கும்படி ஆணையிட்டவர் நீங்களே” என்றான். “ஆம், ஆனால் அவர்களை காக்க ஏதேனும் ஒரு வழி இருக்குமென்றால் அதை நான் தவிர்க்கக்கூடாது. என் உயிரை எண்ணித் தயங்கவும் கூடாது.”
பிரலம்பன் திரும்பி ஆசுரத்திற்குள் நுழையும்படி அபிமன்யூ விடுத்த ஆணையைத் தெரிவித்ததும் வேட்டுவர்படை உள்ளக்கிளர்ச்சி கொண்டது. வெறிக்கூச்சலுடன் வில்களைத் தூக்கி ஆட்டியபடி புரவிகளை திருப்பினர். “செல்க!” என அபிமன்யூ ஆணையிட்டதும் அச்சிறிய படை இலைத்தழைப்பை காற்றென ஊடுருவி ஆசுரத்தின் எல்லையை நோக்கி சென்றது. முன்னரே காவல்மாடங்களில் இருந்தவர்களை அவர்கள் வீழ்த்திவிட்டிருந்தமையால் மிக எளிதாக எல்லைகடந்து ஆசுரத்தின் அடர்காட்டுக்குள் சென்றனர். மேலும் மேலும் விரைவதற்காக அபிமன்யூ கைகாட்டிக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் விரைவே விரைவுக்கான பயிற்சியை அளிக்க புரவிகள் அம்புக்கூட்டம்போல சென்றன.
தொலைவில் முரசொலியை அபிமன்யூ கேட்டான். “அவர்கள் சிருங்கபிந்துவை தாக்குகிறார்கள்” என்றான். பிரலம்பன் “நாம் அங்கிருந்து வெளியேறியதை அறிந்துவிட்டார்கள்” என்றான். “நம் புரவிக்குளம்புத்தடமே காட்டிவிடும். ஒருநாள் காலப்பழுதை மட்டுமே நான் எதிர்பார்த்தேன்” என்றான் அபிமன்யூ. “செல்க… நாம் அவர்களை பின்னின்று தாக்கவேண்டும். அவர்கள் சிருங்கபிந்துவை வெல்வதற்குள் நாம் அவர்களை வென்றாகவேண்டும்” என்றான். “அவர்கள் சிருங்கபிந்துவை வென்றுவிட்டால் நாம் உருவாக்கிய கோட்டையே நமக்கு எதிரியாக நின்றிருக்கும்.”
“அவர்கள் அதை எளிதில் வெல்லமுடியுமா?” என்றான் பிரலம்பன். “அவர்கள் போரைத் தொடங்கியதுமே கோட்டை வலுவாக இருப்பதை உணர்ந்திருப்பார்கள். ஆகவே மேலும் மேலும் படைகளைக்கொண்டு சூழ்வார்கள். அங்கே பணயமாக அவர்களின் அரசகுடிகள் உள்ளனர். போர் நீள்வதனால் அவர்கள் உயிரிடருக்கு ஆளாகக்கூடும். ஆகவே எண்ணவும் பொழுதளிக்காமல் விரைந்து போரை முடிக்கவே முயல்வார்கள்” என்றான் அபிமன்யூ. “அச்சுறுத்தி, வெல்லவே முடியாதென எண்ணச்செய்து, செயலிழக்க வைப்பதையே எவரும் இத்தருணத்தில் தெரிவுசெய்வார்கள். போர் தொடங்கி பல நாழிகைப் பொழுது கடந்துவிட்டிருக்கிறதென நினைக்கிறேன். போர்முரசின் ஒலியில் மெல்லிய தளர்வு இருக்கிறது.”
“ஆனால் அவர்கள் மூங்கில்கோட்டையை கடப்பதென்பது…” என பிரலம்பன் தயங்க “அங்கிருந்து வரும் அம்புகளைவிட மூன்றுமடங்கு வீரர்களை அனுப்பினால் போதும். இறந்தவர்களின் உடல்களே மேலும் செல்பவர்களுக்கு கேடயக் காப்பென்றாகும்” என்றான் அபிமன்யூ. முரசொலி மிகுந்து வந்து அவர்களை சூழ்ந்துகொண்டது. முதலில் சென்ற வழிநோக்குப் படைவீரன் கைகாட்டினான். கையசைவுகள் வழியாக செய்தி வந்துசேர்ந்தது. “கோட்டையைச் சூழ்ந்து தாக்குகிறார்கள். ஐந்தாயிரம் படைவீரர்களுக்கும் மேலாகவே இருப்பார்கள்…” ஐந்தாயிரம் என்ற எண்ணிக்கையை மீண்டுமொருமுறை சொன்னான் காவலன். பிரலம்பன் திரும்பி அபிமன்யூவை பார்த்தான். அவன் அதை கேட்டதாகவே தெரியவில்லை.
அம்புபோல கைகாட்டிவிட்டு அபிமன்யூ புரவியில் முன்னால் பாய்ந்தான். அவன் படை அம்பு வடிவில் குவிந்து அவனை முனைகொண்டது. புரவியில் இருந்தபடியே அம்புகளை ஏவியபடி அவர்கள் பாய்ந்து சென்று அசுரப்படைகளை பின்னால் தாக்கினர். “முடிந்தவரை முழவுகள் ஒலிக்கட்டும்” என்று அபிமன்யூ கூவினான். அனைத்து முழவுகளும் முழங்க வீரர்கள் வெறிக்கூச்சலிட்டனர். அசுரப் படைகள் பின்னால் வருவது எத்தகைய படை என்று அறியாமல் குழம்பி சிதறினர். அபிமன்யூ விரிசிறை முத்திரை காட்ட அவன் வீரர்கள் விரியும் கழுகின் சிறகெனப் பிரிந்து மரங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அம்புகளை பெய்யத் தொடங்கினர்.
அசுரகுடிப் படைத்தலைவன் தன் படையினர் சிதறி விழுவதை நோக்கி முதலில் நிலையழிந்தாலும் உடனடியாக ஆணையிட்டு படைகளை இரண்டாகப் பிரித்தான். ஒரு பகுதியை திரும்பி நின்று அபிமன்யூவை எதிர்கொள்ளும்படி வகுத்து முன்னணிப் படையினரை கோட்டையை வெல்லும்படி செலுத்தினான். கோட்டைக்குள் அவர்கள் பெரும்பாலும் நுழைந்துவிட்டிருந்தார்கள். மூங்கில்வேலி உடைந்து உருவான இடைவெளி வழியாகச் சென்ற புரவிகள் உள்ளும் வெளியிலும் சிதறிக்கிடக்க அடுத்த அலையாக முன்னேறிய வில்லவர்கள் தவழ்ந்து சென்று புரவிகளின் உடல்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டு உள்ளே இரண்டாம் வேலிக்கு அப்பால் உடல் மறைத்து அமர்ந்து தங்கள்மேல் அம்பு செலுத்தியவர்களை நோக்கி அம்புகளை ஏவினர்.
அபிமன்யூவின் அம்புகள் முழு அசுரப்படையையும் கடந்துசென்று அந்த வேலியுடைவினூடாக உள்ளே செல்லமுயன்ற அசுரவீரர்கள்மேல் தைத்து அவர்களை வீழ்த்தின. பிற எவராலும் அத்தொலைவு வரை அம்பெய்ய முடியவில்லை. அவ்வளவு தொலைவுக்கு அம்புகள் செல்லும் என்பதை அசுரப் படைத்தலைவனால் நம்ப முடியவில்லை. “அந்த அம்புகளை தடுங்கள்…” என்று அவன் கூவிக்கொண்டே இருந்தான். மேலும் மேலுமென அந்த வாயிலில் அவனுடைய வில்லவர்கள் வீழ்ந்து ஒருவர் மேல் ஒருவரென குவிந்தனர். எதிரி விழியெதிரே தெரியாதிருந்தமையால் அவர்கள் உளச்சோர்வுற்றனர். மெல்ல பின்வாங்கலாயினர்.
“விடாதீர்கள்… அந்த வாயிலை இப்போதே நாம் கடந்தாகவேண்டும்” என அவன் கூவினான். மும்மடங்கு வில்லவர்கள் திரண்டு அந்தச் சிறு உடைவுவழியை நோக்கிச் செல்வதை அபிமன்யூ கண்டான். ஒரு கணமும் நிலைக்காமல் அம்புகள் சென்றபடியே இருக்க, விழிவிலக்காமல் அவன் பிரலம்பனுக்கு ஆணையிட்டான். “நம் வீரர்கள் அனைவரும் கோட்டையின் பின்பக்கம் செல்லட்டும். அங்கே ஏதேனும் ஒரு புள்ளியை உள்ளிருந்து உடைத்து கோட்டைக்காவலர் அனைவரும் வெளிவரட்டும். அவர்களை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் செல்லும். நான் இவர்களை அதுவரை தடுத்து நிறுத்துகிறேன்.”
“நீங்கள் தனியாகவா?” என உள்ளம் கேட்டபின்னரும் சொல்லெழாமல் தலைவணங்கிய பிரலம்பன் ஆணைகளைப் பிறப்பித்தபடி விலகிச்சென்றான். அவன் கையசைவில் விரிசிறை குவிந்து நாகம் என்றாகி காட்டுக்குள் வளைந்து ஊருடுவிச்சென்றது. முழவோசை எழுந்து நின்று ஆணையிட்டது. “தென்புறம் ஒரு துளை திறக்கட்டும். அனைவரும் வெளியேறுக! ஆணை! அனைவரும் வெளியேறுக!” கோட்டைக்குள் இருந்து “ஆணை ஏற்கப்பட்டது” என முழவு அறிவித்தது.
அபிமன்யூவின் அம்புகள் அரைநாழிகைப்பொழுதுவரை அங்கே ஒரு படை உள்ளது என்றே அசுரரை எண்ணச் செய்தன. பின்னர்தான் கோட்டையின் இடைப்பழுது மட்டுமே தாக்கப்படுகிறது என அசுரர் படைத்தலைவன் உணர்ந்தான். அப்படியென்றால் படைகள் முற்றழிந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு முற்றழிவது இயல்வதல்ல. மறுகணமே அவனுக்கு நிலைமை புரிந்தது. “சூழ்ந்துகொள்க… ஒருவரும் கோட்டையிலிருந்து வெளியேறலாகாது” என அவன் ஆணைகூவியபடி படைமுகப்பு நோக்கி ஓடினான்.
அதற்குள் தென்புறம் கோட்டை உள்ளிருந்து உடைந்து திறக்க அம்புகளைப் பெய்தபடியே உள்ளிருந்த வேட்டுவவீரர்கள் வெளியே வந்தனர். முன்னரே அவ்வழியில் பிரலம்பனின் தலைமையில் சென்ற படைவீரர்கள் அம்புசெலுத்தி அசுரர்களை வீழ்த்தியும் விலக்கியும் உருவாக்கியிருந்த பாதையினூடாக அவர்கள் விரைந்து வந்து சேர்ந்துகொண்டார்கள். அந்தப் படை காடுகளுக்குள் புகுந்து யாதவநிலம் நோக்கி சென்றது. அசுரப் படைத்தலைவன் “கோட்டையை கைவிடுக… தப்பிச்செல்பவர்களை துரத்திப்பிடியுங்கள்” என ஆணையிட்டான். ஏதோ ஓர் உளஎழுச்சியில் அவன் யானையொன்றின்மேல் ஏறிய கணம் அவனை அபிமன்யூவின் அம்பு வீழ்த்தியது.
அசுரப்படை குழம்பி முட்டிமோதியது. அம்பு வந்த திசையை அசுரர் உய்த்தறிந்து விற்களுடன் கிளம்பி விரைந்துவந்தனர். இமைக்காமல் அசையாமல் நோக்கி நின்ற அபிமன்யூ வீழ்ந்த தலைவனை நோக்கி வந்தவனை துணைப்படைத்தலைவன் என்று அருகே நின்றவர்கள் விலகிய முறையிலிருந்து உணர்ந்தான். அபிமன்யூவின் இன்னொரு அம்பு அவனையும் வீழ்த்தியது. சினம் மீதூற கூச்சலிட்டபடி கையசைத்தவன் அதற்கடுத்த நிலையினன் என உணர்ந்து அவனையும் வீழ்த்தியபின் அவன் புரவியைத்திருப்பி காட்டுக்குள் விரைந்தோடினான்.
மிக அருகே அவனை நெருங்கிவிட்டிருந்த அசுரப்படையினர் குளம்படியோசையை கேட்டனர். “அது இளவரசனேதான்… ஐயமில்லை… கொல்லுங்கள். புரவியின் குளம்புகளை குறிவையுங்கள்…” என்று வில்லவர் தலைவன் கூவினான். “நோக்குக! அவர் உடலைவிட புரவியுடல் சிறந்த இலக்கு… வீழ்த்துக!” வில்லிறுகும் ஒலிகூட அபிமன்யூவுக்கு கேட்டது. அருகே மரங்களில் அம்புகள் வந்து தைத்து சிறகதிர்ந்தன. அவன் திரும்பி திரும்பி அம்பு செலுத்தியபடியே சென்றான். அவனைத் தொடர்ந்தவர்களில் இருவர் வீழ்ந்து மண்ணிலறைந்து அலறினர். அவர்களின் புரவிகள் நிலையழிந்தன என்றாலும் பயிற்சியினால் அங்கேயே நிற்காமல் விலகி அடுத்த புரவிக்கு இடைவெளிவிட்டன.
தொலைவில் முழவோசை கேட்டது. பிரலம்பன் பிரத்யும்னனுடன் சென்று சேர்ந்துவிட்டிருந்தான். அபிமன்யூ மேலும் மேலுமென புரவியை செலுத்தினான். முழவோசை பெருகியணைந்தது. அவன் புரவி ஓடிச்சென்ற விசையிலேயே முகம் மண்ணிலறைய குப்புறவிழுந்து அவனை தூக்கிச் சுழற்றி வீசியது. விழுந்து உருண்டு எழுந்து அதே விசையில் புதர்களிடையே ஓடி பதுங்கி விரைந்தான். “வீழ்ந்துவிட்டார்? இங்குதானிருப்பார்…” என்றன குரல்கள். “அவர் குறிபிறழா வில்லவர்… நோக்குக!” அக்குரலே இலக்காக அவன் அலறி வீழ்ந்தான். “யார்?” என்ற ஒலியால் மீண்டுமொருவன் இலக்களித்தான். ஓசையின்றி நாகம்போல புதர் நடுவே சென்ற அபிமன்யூ தன்னிடம் ஒரே ஒரு அம்புமட்டும் எஞ்சியிருப்பதை உணர்ந்தான். மரத்தில் தைத்திருந்த இரு அம்புகளை எடுத்துக்கொண்டான். ஒரு புரவி சீறியது. அவ்வோசையே அதன் மேலிருந்தவனின் கழுத்தை அவன் விழிகளுக்குக் காட்டியது.
மேலும் மேலும் வீரர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்பால் அசுரப்படைகள் முரசுகள் முழங்க ஒருங்கிணைந்து காட்டுக்குள் நுழைந்துகொண்டிருப்பதை அவன் அறிந்தான். புதர்களுக்கு நடுவே காவல்மாடமொன்றை கண்டான். அதன் மேல் தோல் மின்னும் முரசு இருந்தது. கீழே அம்புத்தூளிகளுடன் எழுவர் விழுந்துகிடந்தனர். அவன் அம்புகளை சேர்த்துக்கொண்டான். மரத்தடியில் பதுங்கி ஒரு கல்லை எடுத்து முரசின்மேல் எய்தான். அது முழக்கமிட்டதும் புதர்களுக்கப்பால் “முரசொலி” என ஒரு குரல் எழ “எங்கே?” என மறுமொழி எழுந்தது. இருவரும் விழுந்தனர்.
பின்னர் ஓசைகள் எழவில்லை. அபிமன்யூ மெல்ல தன்னை முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டு மரப்பொந்து ஒன்றில் பதுங்கிக்கொண்டான். மேலே பறந்த புட்களை நோக்கினான். நாகணவாய் ஒன்று கிளையில் அமர்ந்திருந்தது. அது தலைதிருப்பியதுமே அதனால் நோக்கப்பட்டவன் வீழ்ந்தான். உடனே அங்கிருந்து எழுந்த அம்புப்பீரிடலால் அபிமன்யூவைச் சூழ்ந்திருந்த மரங்கள் அனைத்திலும் அம்புகள் தைத்தன. சில கணங்களுக்குப்பின் பிறிதொரு பறவை எழுந்துபறந்து இருவரை காட்டிக்கொடுத்தது. மீண்டுமொரு பறவை ஒருவனை வீழ்த்தியது.
அவர்கள் மெல்ல பின்னடைந்துவிட்டார்கள் என்பதை அபிமன்யூ உணர்ந்தான். ஆனால் அவர்களுக்குப் பின்னால் அசுரப்படை திரண்டுவருவதன் ஓசை எழுந்து வலுத்தபடியே வந்தது. ஒரு நாழிகைப்பொழுதுக்குள் அசுரப்படைகள் அங்கே பரவி நிறைந்துவிடும் என உணர்ந்தான். மெல்ல அசைந்து பின்னடைந்தான். அதற்குள் அவன் காலில் அம்பு ஒன்று தைத்தது. அவன் வலியோசையை உடலுக்குள் நிறுத்திக்கொண்டு மேலும் பின்னால் சென்றான். தலைக்குமேல் ஒரு குரங்கு “இங்கே இங்கே இங்கே” என்று கூச்சலிடத் தொடங்கியது.
வில்லவர் தலைவன் “அங்கே இருக்கிறார்… விடாதீர்கள்… சூழ்ந்துகொள்ளுங்கள். நேராக செல்லாதீர்கள். அம்புகள் ஓயவே கூடாது” என்று கூச்சலிட்டான். சவுக்கு சுழலும் ஒலியும் நாகம் சீறும் ஒலியும் வீணைநரம்பு சுண்டும் ஒலியுமென அம்புகள் வந்து அத்தனை மரங்களிலும் தைத்துக்கொண்டிருக்க அபிமன்யூ தரையில் இழைந்து சென்றுகொண்டிருந்தான். பின்னால் அசுரப்படைகள் அணுகிவிட்டன என்று தெரிந்தது. ஆசுரத்தின் எல்லை நெடுந்தொலைவு என புரிந்தது. கைகளையும் கால்களாக்கி அவன் தவழ்ந்து முன் சென்றான்.
“தவழ்ந்து செல்கிறார். ஆகவே கீழே நின்று அவரை வீழ்த்த இயலாது. மரங்கள்மேல் ஏறி தேடுங்கள்…” என்றான் வில்லவர் தலைவன். அபிமன்யூ மல்லாந்து படுத்து கால்களால் உந்தித் தவழ்ந்தபடி மரங்களில் ஏறிய இருவரை வீழ்த்தினான். “அவர் ஒருவர்தான்… மரங்களில் ஏறுங்கள்” வில்லவர் தலைவனின் குரலில் இருந்து அவன் மரத்திற்குப் பின்னால் ஒளிந்து நின்று ஆணையிடுவது தெரிந்தது. மீண்டும் மூவர் மரங்களிலிருந்து விழுந்தனர். “அம்புகள் வரும் திசையை நோக்குக!” என்றான் வில்லவர் தலைவன்.
அசுரப்படைகளின் குளம்படியோசை காட்டைச் சூழ்ந்தது. பறவைகள் எழுந்து வானில் ஒலிநிறைத்தன. அப்பால் ஒரு பாறையை அபிமன்யூ கண்டான். அதன் பிளவுக்குள் சென்றுவிட்டால் ஒரு நாழிகைப்பொழுது வில்கொண்டு நின்றிருக்கமுடியும். அசுரப்படைகள் முற்றாகச் சூழ்ந்துகொள்வது வரை. ஆனால் விழிகளால் அளந்தபோது அது சற்று தொலைவிலிருந்தது. அதற்கு செல்லும் மண் உயரமற்ற புதர்களால் ஆனதாக இருந்தது. அவர்களை குழப்பி சற்றுபொழுதுக்கு அம்புகளை நிறுத்தமுடிந்தால் சென்றுவிடலாம்.
அபிமன்யூ காற்றில் அம்புகளை எய்து அந்த அம்புகளை பிற அம்புகளால் அடித்தான். ஓசை அப்பால் கேட்க வில்லவர்கள் அத்திசை நோக்கி திரும்பினர். “அது அஸ்திரசந்தி முறை… ஓசையை கேட்காதீர். அம்புகள் கிளம்பும் திசையை நோக்குக!” என ஆணையிட்டான் வில்லவர் தலைவன். அதற்குள் அபிமன்யூ எழுந்து ஓடி அந்தப் பாறையைக் கடந்து அப்பால் பாய்ந்தான். அவன் காலில் பிறிதொரு அம்பு தைக்க பிற அம்புகள் பாறைமேல் உலோக ஒலியுடன் உதிர்ந்தன. அவன் எழுந்து எய்த அம்பில் ஒருவன் அலறி வீழ்ந்தான். அதற்குள் அப்பால் இலைத்தழைப்புக்குள் அசுரப்படையின் அணுகும் புரவிகளை அவன் கண்டான்.
வில்லை இழுத்து நாண் விம்ம அம்பேற்றி முன்னால் வந்த புரவி வீரனை அவன் வீழ்த்தியபோது தனக்குப் பின்னால் புரவிகளின் குளம்படியோசையை கேட்டான். பிரத்யும்னனது படையின் முன்னணி புரவிவீரர்கள் அம்புகளைப் பாய்ச்சியபடி போர்க்கூச்சலுடன் கிளைகள் உடைந்து தெறிக்க கூழாங்கற்கள் சிதறிப்பரக்க பெரிய வலையொன்று நீரிலிருந்து எழுவதுபோல செறிகாட்டுக்குள் இருந்து தோன்றினர்.