ஜெ,
தொல்காடுகளின் பாடல் முதல் வாசிப்புக்கு கலையைப் பற்றி பேசுவதைப் போல தோன்றினாலும், முக்கியமான பண்பாட்டு சிக்கலையும் பேசும் கட்டுரை.
ஒரு சமூகம், தன் தரிசனங்களை கலை இலக்கியங்களின் வழியே வெளிப்படுத்துவதை கலாச்சாரம் என்கிறோம். அப்படி வெளிப்படுத்தப்பட்ட தரிசனங்களே அந்த சமூகத்தின் பொது விழுமியங்களை உருவாக்கி வழி நடத்துகிறது. இந்த சமூக விழுமியங்களின் அடிப்படையையே அந்த சமூகத்தின் பண்பாடு என்கிறோம்.
ஒரு கலாச்சாரம், ஒவ்வொரு கால கட்டத்திலும், அதன் தேவைகளுக்கும், நோக்கங்களுக்கும் ஏற்ப தன் தரிசனங்களின் வெளிப்பாட்டை மறு உருவாக்கம் செய்ய வேண்டி இருக்கிறது. அதை செய்யாததால்தான் மதத்தோடு கலாச்சாரத்தையும் வீசி எறிவதை முற்போக்காக கருதும் இடத்திற்கு நேற்று வந்து சேர்ந்தோம். அதன் எதிர் வினையாக கலாச்சாரத்தை மீட்டெடுகிறோம் என மத அடிப்படைவாதத்தை மீட்டெடுக்கும் சூழலில் இன்று சிக்கிக் கொண்டோம். விளைவாக நாம் ஆத்மீகமற்ற மத அடிப்படைவாதத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றோம். நாம் பார்த்து சூடு போட்டுக் கொண்ட ஐரோப்பியர்கள் கலையில் மதமற்ற ஆத்மீகத்தை நெருங்கி வந்து விட்டனர். உடைத்து வீசுவதும், உதாசீனம் செய்வதும் அல்ல. மறு உருவாக்கம் செய்வதே இன்றைய கலைஞனின் வேலை என்பதை வெவ்வேறு கோணங்களில் பேசுகிறது நத்தையின் பாதை.
இத்தனை சிக்கலான விஷயத்தை எவ்வளவு எளிமையாக எழுத முடிகிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. எல்லா முன்னோடிகளும் தங்கள் கலை குறித்த அறிக்கை ஒன்றை எழுதி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது உங்களின் பிரகடனமும், இனி வரும் கலைஞர்களுக்கு ஒரு கையேடும், வழிகாட்டியும், உங்கள் நத்தையின் பாதை.
ஏ.வி மணிகண்டன்
***
ஜெ,
மெல்ல மெல்ல நத்தையின் பாதையில் ஒரு மையக்கருத்து உருவாகி வருகிறது. நீங்கள் பல இடங்களில் பலகோணங்களில் தொடர்ந்து பேசி விவாதித்து வந்த விஷயம்தான். இப்போது இன்னும் தெளிவாகவும் கூர்மையாகவும் சொல்ல முடிகிறது. இலக்கியம் என்பது ஒருநாகரீகம் மீதான விமர்சனம் அல்ல. அந்த நாகரீகத்தை உருவாக்கும் பணியிலேயே அதற்கும் முக்கியமான பங்குள்ளது என்று நான் புரிந்துகொள்கிறேன். அதற்கு எழுத்தாளர்கள் அந்த நாகரீகத்தின் ஒட்டுமொத்தத்தை நோக்கிப் பேசவேண்டும். அதை அவர்கள் முறையாகக் கற்றுக்கொள்ளவும் வேண்டும்.
ஸ்ரீனிவாசன்
***
நத்தையின் பாதை 1 உணர்கொம்புகள்
நத்தையின் பாதை 2 இந்த இந்த மாபெரும் சிதல்புற்று
நத்தையின் பாதை 3 தன்னை அழிக்கும் கலை