பிரபல மின்னூல் தயாரிப்பு மென்பொருளான PressBooks.com மற்றும் ஒலிப்புத்தகத் திட்டமான Librevox.org ன் நிறுவனர் Hugh McGuire எழுதிய “Why Can’t we read anymore?” என்ற கட்டுரையின் தமிழாக்கம். தமிழில் தி ஸ்ரீனிவாசன்
இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பனவற்றை பல சொற்களில் நான் முன்னரே பலமுறை சொல்லியிருக்கிறேன். கூடுதலாக இதில் அறிவியல்செய்திகள்தான் உள்ளன. ஆனால் எளிமையான நேரடியான கட்டுரை,
*
வாசிப்பைப் பற்றி நான் எழுதும்போது தொடர்ந்து எனக்கு வந்துகொண்டிருக்கும் எதிர்வினைகளிலிருந்து ஒன்று தெரிந்துகொண்டேன். மெய்யாகவே இணையப்போதையில் இருப்பவர்களால் நான் சொல்வதைப்புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் மிக அறிவார்ந்த ஓர் உலகில் இருப்பதாகக் கருதிக்கொள்கிறார்கள். அதோடு வாசிப்பை கைவிடுவதனால் தாங்கள் இழப்பதென்ன என்று அறியாமலுமிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் ஒருவகைக் குருடர்கள். நிறம் பற்றி அவர்களிடம் விவாதிக்கமுடியாது. போதைகளின் இயல்பு இது.
வாசிப்பைப்போலவே இங்கே கைவிடப்படும் இன்னொரு முக்கியமான விஷயம் நேரடியனுபவம். மக்களுடன் களப்பணிகளில் ஈடுபட்டோ, பயணங்கள் செய்தோ, கூட்டுச் செயல்களில் ஈடுபட்டோ, எதையாவது தொடர்ச்சியாக பின் தொடர்ந்து ஆராய்ந்தோ அறிந்துகொள்வது இணையப்போதையால் மிகமிகக்குறைந்துவிடுகிறது.சென்றகாலங்களில் உண்மையான அறிவை அடைந்தவர்கள் அனைவருமே அலைந்து திரிந்து கண்டு கேட்டு விரிவுகொண்டவர்கள் என்பதை இன்றைய தலைமுறை அறிவதில்லை.
நேரடியனுபவத்தை வாசிப்பனுபவம் சந்திக்கையில்தான் உண்மையில் அறிதல் நிகழ்கிறது. அறிதலென்பது செய்திகளைத் தெரிந்துகொள்வது அல்ல. செய்திகளிலிருந்து நாம் அடையும் ஒரு திறப்பு அது. ஒரு நகர்வு. ஒரு புதிய கோணம். அத்தகைய அறிதல்களின் புள்ளிகளின் வழியாக முன்னால் செல்வதற்குப்பெயர்தான் அறிவுச்செயல்பாடு.அது நம்மை மெல்லமெல்ல மாற்றிக்கொண்டிருக்கிறது. நம் மொழி மாறிக்கொண்டிருக்கும். நம் தர்க்கங்கள் வலுப்பெற்றபடியே இருக்கும். நம் உள்ளுணர்வு கூர்கொள்ளும்.
இன்று, இணையத்தில் உள்ள மிகப்பெரிய சிக்கல் இணையத்தினூடாக அறிவதையே இணையத்தில் திருப்பிச் சொல்வதே நிகழ்கிறது என்பதுதான்.வெவ்வேறு ஊற்றுமுகங்களில் இருந்து அறிவு இணையத்திற்கு வந்து நிறைவது மிகமிகக் குறைந்துவிட்டது. உலகளாவ கோடிக்கணக்கானவர்களை இணைத்திருக்கும் இணையவெளி ஒருவர் மூச்சை பிறிதொருவர் சுவாசிக்கும் சிறிய அறையாக மாறிவிட்டிருக்கிறது. நூல்களைப்பற்றி, கருதுகோள்களைப்பற்றி, ஒட்டுமொத்தச் சித்திரங்களைப்பற்றி பேசப்படுவது அரிதினும் அரிதாகிவிட்டிருக்கிறது. இங்கல்ல, உலகம் முழுக்க.
மிகப்பெரிய தகவல்சேகரிப்புகள், நூல்தொகுப்புகள் இணையத்திலுள்ளன. ஆனால் அவை வாசிக்கப்படுவதில்லை. அவற்றுக்குச் செல்பவர்களே குறைவு என அத்தகைய பெரும் தகவல்தொகைகளை உருவாக்கியவர்கள் பலர் என்னிடம் வருந்திச் சொல்லியிருக்கிறார்கள். பெரும்பாலும் இணைப்புச்சுட்டிகள் வழியாகவே அங்கே வருகிறார்கள். அந்த உதிரிச்செய்தியை மட்டுமே வாசித்துவிட்டுச் செல்கிறார்கள். சொல்லப்போனால் ஓர் இணையதளச் செய்தியிலுள்ள மேலதிக ஆதாரத்துக்கான சுட்டியைச் சொடுக்குபவர்களே நூற்றுக்கு ஒருவர்தான். இது என் இணையதள வாசகர்களுக்கும் பொருந்தும்.
ஐயமிருந்தால் மதுரைத்திட்டம் [ http://www.projectmadurai.org/.] சைவம் [ http://shaivam.org/]போன்ற மாபெரும் தரவுத்தொகுப்புகளுக்கு எப்போதெல்லாம் சென்றீர்கள், அவற்றுக்கான சுட்டிகளை கடைசியாக எப்போது பார்த்தீர்கள் என்று நீங்களே கேட்டுக்கொள்ளலாம்.
ஹ்யு மெக்யூர் சொல்வதைக்கொண்டு நோக்கினால் நம் மூளையில் ஒரு செயற்கையான தூண்டுதலை அளிக்கும் ’இதமான மின்னதிர்ச்சிகளை’யே நாம் நாடுகிறோம். ஒட்டுமொத்தமானபார்வை, நடுநிலையான பார்வை, முழுமையான சித்திரம் அதற்கு உதவாது. ஒற்றைப்படையான பார்வை கொண்ட, மிகையுணர்ச்சி கொண்ட, கடும் கசப்பும் வெறுப்பும் கொண்ட அதிரடிக் கருத்துக்களே அதற்கு ஏற்றவை. அவை அதிகமாக வாசிக்கப்படுகின்றன. ஆகவே அவை மேலும் உருவாகின்றன. அவைபெருகப்பெருக அவையே எங்கும் கண்ணில்படுகின்றன. இணையத்தில்நுழையும் சராசரி வாசகன் அவற்றுக்கே பழகிப்போகிறான். அவற்றைமட்டுமே அவனால் வாசிக்கமுடிகிறது. இணையம் எப்போதுமே வசைகளால். நக்கல்களால் நிறைந்திருப்பது இதனால்தான். எப்போதுமே அது பற்றி எரிந்துகொண்டிருப்பதாகத் தெரிவது இவ்வாறுதான்.
இவ்வாறு பற்றி எரிவதற்குத்தேவை சமகாலத்தன்மை. ஏனென்றால் அதைத்தான் மானுடமனம் உடனடியாக அடையாளப்படுத்திக் கொள்கிறது. நாளிதழ்களிலேயே பற்றி எரிய எரியத்தான் செய்திகள் அளிக்கப்படுகின்றன. மேலும் சூடும்காரமும் தேடி இணையத்திற்கு வருகிறார்கள். அவற்றை பெற்றுக்கொண்டு மும்மடங்காக திருப்பி அளிக்கிறார்கள்.
இந்த சமகாலத்தன்மை ஒவ்வொன்றையும் பெருக்குகிறது, கூடவே ஒவ்வொன்றையும் அழிக்கவும் செய்கிறது. ஒன்றை மிகைப்படுத்திக்கொண்டால் நூறு விஷயங்களை அது மறைத்துவிடும். இன்று ஜல்லிக்கட்டு ஏன் நடந்தது என எவருக்கும் தெரியாது. கோரக்பூர் குழந்தைகளுக்காக இணையம் எரிந்தது என்பதே நினைவில் இல்லை. கும்பகோணம் பள்ளிவிபத்தில் குற்றகரமான அலட்சியத்தால் குழந்தைகளைக் கொன்றவர்கள் வழக்கை அரசு ஒழுங்காக நடத்தாத காரணத்தால் நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்ட செய்தியை எவருமே அறியவில்லை. இன்றைய செய்தி மட்டுமே இன்றைய அனல். அதிலும் எது பற்றிக்கொள்ளுமோ அது மட்டும்.
இணையப் போதையடிமைகள் உண்மையில் பிறரை தாக்குகிறார்கள், அவமதிக்கிறார்கள். இன்று ஒரு கல்வெட்டு அறிஞர் தன் ஆய்வில் மூழ்கியிருந்தால் அவரிடம் ‘நீட் தேர்வால் நாடே பற்றி எரிகிறது, உனக்கு கல்வெட்டு ஒருகேடா? ‘ என்பார்கள். பெருந்தார்மீக எழுச்சியுடன் இதைச் சொல்வதாகப் பாவனைசெய்கிறார்கள். உண்மையில் ஒரு போதையடிமையின் நிலைகொள்ளாமை மட்டும்தான் இது. ஐந்தே நாட்களில் இந்த போதையடிமைக்கு நீட் தேர்வே மறந்துவிட்டிருக்கும்.
நீடித்த ஆர்வமும், தொடர்ச்சியான கல்வியும் நிகழமுடியாத சூழல் இன்று உள்ளது. அர்ப்பணிப்புள்ள எச்செயலுக்கும் எதிராக உள்ளது இணையமென்னும் போதை. அதை வெல்லாமல். கடக்காமல் எவரும் எதையும் இங்கே சாதிக்கமுடியாது.
என் இணையதளம் அடிப்படையில் ஒரு மின்னணுச் சிற்றிதழ். இதில் வரும் நீளமான கட்டுரைகளை ஆரம்பம் முதலே வேண்டுமென்றேதான் போடுகிறேன். ஒவ்வொருநாளும் கட்டுரை மிக நீளம் என எனக்குக் கடிதங்கள் வரும். இளையவாசகர் என்றால் நீளமானவற்றை ஏன் படிக்கவேண்டும் என விளக்கமாக பதில் அனுப்புவேன்.
நீளமான கட்டுரைகளே சமநிலைகொண்ட, முழுமையான நோக்கை அளிக்கமுடியும். அனைத்துக்கோணங்களையும் சொல்லமுடியும். நீளமானவையே கட்டுரைகள், மற்றவை குறிப்புகள்தான். அவை ஒற்றைப்படையாகவே பேசமுடியும். வெறும் சீண்டலை மட்டுமே அவை அளிக்கும். நீண்ட கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கமே தொடர்ச்சியாக யோசிக்கும் திறனை அளிக்கிறது. சிந்தனைத்திறன் என்பது மொழியின் கூர்மைதான். அது அத்தகைய வாசிப்பால்தான் அமையும் – இதை மீண்டும் மீண்டும் எழுதுவேன்.
ஆனால் அதற்கப்பாலும் கோரிக்கைகள் வந்துகொண்டே இருக்கும். அப்படி நான்கு கடிதங்கள் அனுப்பப்பட்ட ஓர் இளைஞர் கடைசியாக எழுதியிருந்தார். ’உள்ளடக்கம் பற்றிய ஒரு பத்துவரி குறிப்பை ஒவ்வொரு கட்டுரையின்மேலும் அளிக்கலாம்.என்னை மாதிரி பரபரப்பாக வாழும் இளைஞர்களுக்கு உதவும்’. நான் நிலைமறந்த தருணங்களில் ஒன்று அது. “ஃபேஸ்புக்குக்குப் போடா வெண்ண. ஏன்டா இங்கே வர்ரே?” என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அவருக்கு ஒருதுளி டோபோமினை நானும் அளித்திருப்பேன்.
***