“பாரதப்புழான்னு உள்ளூரிலே பேரு..,. நிளான்னு இன்னொரு பேருண்டு…” என்று நான் சொன்னேன். ஜஸ்டிஸ் காசிநாதன் படிக்கட்டின் தொடக்கத்தில் நின்று முகத்தை சற்று தூக்கி நதியைப்பார்த்தார். வான்வெளுக்காத முதற்காலையில் நீர்ப்பரப்பு தீட்டப்பட்ட கத்தியின் பட்டைபோல கரியநிறமான ஒளி கொண்டிருந்தது. அவரது மூக்குக் கண்ணாடியின் கீழ்ச்சில்லில் அந்த ஒளி மின்மினி போலத் தெரிந்தது.
“பாக்கத்தான் பெரிசு. ஆழமே கெடையாது. பேப்பர் ரிவர்னு இங்கே சொல்லுவானுக… தண்ணி சும்மா பாலிதீன் காகிதத்த பரப்பி வைச்சதுமாதிரித்தான் இருக்கும்…” என்றேன். அவர் திரும்பிப்பார்க்கவில்லை.
என் எல்லையை மீறிவிட்டேனோ என்று அஞ்சியவனாக “அதாவது படுத்துத்தான் தலைமுழுக முடியும்… அதச்சொன்னேன்“ என்றேன். அவர் அப்படிக்குளிப்பதை நினைத்தபோது இன்னும் தவறாகச் சொல்லிவிட்டதாக தோன்றியது.
காசிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியபோது நான் அங்கே வக்கீல்குமாஸ்தாவாக இருந்தேன். பலமுறை தொழில்சார்ந்து அவரைச் சந்தித்ததுண்டு. எல்லாரையும்போலத்தான் அவரும் என்றாலும் கண்டபடி அலைந்து கைநீட்டமாட்டார்.
கீழ்ப்படியில் நம்பூதிரியும் அவருடைய உதவியாளரும் அமர்ந்து பொருட்களை எடுத்து பரப்பிக்கொண்டிருந்தனர். நான் அவர்களை நோக்கி படிகளில் இறங்கி விரைந்து “கொஞ்சம் சீக்கிரமா செய்றது… பெரியவர் வந்தாச்சு” என்றேன்.
நம்பூதிரிகள் கேரளத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளைவிட ஒருபடி மேல். அவர் விழிதூக்க நான் தணிந்து “கொஞ்சம் தயவுபண்ணி… சீக்கிரமா….” என்றேன்.
நம்பூதிரி “அவங்க எல்லாரும் வந்தாச்சா?” என்றார். காசிநாதனை நோக்கிவிட்டு “அவருக்க பேரு என்னா? காசிநாதனா?” என்று என்னிடம் கேட்டார்
“ஆமா” என நான் ரகசியமாகச் சொன்னேன். “அவர் பேரை அப்டி யாரும் சொல்றதில்லை…”
நம்பூதிரி “பேரு சொல்லாம கர்மம் செய்ய முடியுமா? இது பித்ருகாரியமாக்கும்” என்றார்.
மேலே ஏறிச்செல்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை. நான் காசிநாதனின் அருகே சென்று “எல்லாம் முடிஞ்சாச்சு… அஞ்சுநிமிஷத்திலே ரெடியாயிரும்…” என்றேன். “அவங்க கெஸ்ட்ஹவுஸ விட்டு கெளம்பியாச்சான்னு கேட்டுக்கறேன்…” என செல்பேசியை எடுத்தேன்.
அவர் என்னை பார்க்காமல் “வந்திட்டிருக்காங்க” என்றார்.
நான் செல்பேசியை அணைத்து பையிலிட்டு ”வரட்டும் ஒண்ணும் அவசரமில்லை” என்றேன்.
கேரளத்தில் நிளாநதி ஓடும் ஷொர்ணூர் நகரில் நான் ஏழாண்டுகளாக மகனுடன் தங்கியிருக்கிறேன். அவன் இங்கே ஒரு எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கிறான். என் பழைய வக்கீல் நாராயணசாமிதான் கூப்பிட்டுச் சொன்னார், நீதிபதிக்கு வேண்டியதைச் செய்யும்படி. இரும்புக்கடை காதரின் ஓய்வுபங்களாவையும் அவரே ஏற்பாடுசெய்தார். என் வேலை இந்த சடங்குகளை ஒருங்கிணைப்பது மட்டும்தான். அதை நான் அரைமணிநேரத்தில் ஃபோனிலேயே முடித்துவிட்டேன். ஆனால் என் பணி எவ்வளவு பெரியது என காசிநாதனுக்கு உணர்த்தியாகவேண்டும். இதனூடாகக் கிடைப்பது ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியின் தொடர்பு மட்டும் அல்ல.
நான் நெடுநாட்களாகப்பழகிய பணிவான உடல்மொழி எனக்கு கைகொடுத்தது. ஆனால் காசிநாதன் என்னைப்போன்றவர்களை கையாள நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். அவரை பேச்சுக்கு இழுக்கவே முடியவில்லை.
நான் குடையை ஊன்றியபடி சற்று அப்பால் நின்றேன். கையில் அவர் தலைதுவட்டுவதற்கான துண்டும் மாற்றுவேட்டியும் கொண்ட பை இருந்தது. அதற்குள் அவருடைய செல்பேசி வண்டு போல அடிக்கடி அதிர்ந்தபடியே இருந்தது.
தொலைவில் இரு கார்கள் வரும் முகப்புவிளக்குகள் தெரிந்தன. காசிநாதன் திரும்பி நோக்கியபோது அவர் முகம் எரிவதுபோல செவ்வொளி கொள்ள கண்ணாடிச்சில்லுகள் சுடர்ந்து அணைந்தன.
முதலில் வெண்ணிற ஆடிகார் வந்து விரைவு குறைந்தது. நான் ஓடிச்சென்று கதவருகே பணிந்து நின்றேன். டிரைவர் இறங்கி சுற்றிவந்து கதவைத் திறக்க பின்னிருக்கையிலிருந்து மஞ்சள்நிறப் பட்டுப்புடவை கட்டியிருந்த கொழுத்த முதியபெண்மணி மெல்ல இறங்கினாள். “வணக்கம்மா” என்றேன்.
அவள் முனகல் போன்ற குரலில் “இங்கதானா?” என்றாள். “ஆமாம்மா… இதான் பாரதப்புழா… நிளான்னு சொல்லுவாங்க” என்றேன்.
கிழவி காசிநாதனின் மனைவி, எப்போதோ பார்த்திருந்தேன். அவள் என்னைப்போன்றவர்களிடம் பல ஆண்டுகளாகப் பேசிப்பழகியவள். சலிப்பு போன்ற முகம் ஒன்றைத்தான் என்னைப்போன்றவர்களுக்கு அவர்கள் அளிப்பார்கள்
காரிலிருந்து இறங்கிய சுடிதார் அணிந்த நாற்பது வயதுப்பெண்மணியிடம் “எறங்குடி… இதான் எடம்” என்றாள் கிழவி. “நாட் ஸோ கிரவுட்” என்றபடி அவள் இறங்கி மேலாடையைச் சீரமைத்துக்கொண்டாள். தவளைபோன்ற பெரிய முகவாய் கொண்டிருந்தாள்.
அதன்பிறகுதான் முன்னிருக்கை கதவு திறந்து காசிநாதனின் மகன் ஆறுமுகம் இறங்கினார். அவர்தான் என்னிடம் ஃபோனில் பேசியவர். நான் “வணக்கம் சார்” என்றேன்.
எரிச்சல் தெரிந்த முகத்துடன் “எல்லாம் ரெடியா? விடியறதுக்குள்ள முடிஞ்சாகணும்… கூட்டம்கூடிரப்பிடாது” என்றார். தூக்கமில்லாமையால் கண்களில் வளையங்கள் தொங்கின. குடியால் நீர் மீன்னும் கண்கள்.
“இங்க இந்த சீசன்ல கூட்டம் இருக்காது…” என்றேன்.
நாற்பதுவயதுக்காரி “இஸ் த வாட்டர் டர்ட்டி?” என்றாள். ஆறுமுகம் முகம்திருப்பிக்கொண்டதிலிருந்து அவள் அவர் மனைவி எனப்புரிந்து கொண்டேன்.
பின்னால் வந்த பெரிய ஃபோர்ட் எண்டெவர் காரிலிருந்து ஐம்பது வயதான டிரைவர் இறங்கி கதவைத்திறக்க ஐவர் இறங்கினர். இருவர் இருபதுகளில் இருந்த இளைஞர்கள். பழக்கமில்லாமல் வேட்டிகட்டியிருந்தமையால் கையால் அழுத்திப்பிடித்தபடி வந்தனர். ஓர் இளம்பெண்ணுக்கு பதினெட்டு வயதிருக்கும். முப்பதுவயதான இன்னொரு பெண் ஆறுமுகத்தின் அதே முகம் கொண்டிருந்தாள். காசிநாதனின் மகள் என்று தெரிந்தது. அவளும் பருமனாகவே இருந்தாள்.
நான் அருகே சென்று “வணக்கம்மா” என்றேன். அவள் என்னை நோக்கி வெறுமே தலையசைத்தாள். “வாங்கம்மா எல்லாம் ரெடியா இருக்கு” என்றேன். அவர்கள் மெல்ல நடந்து படிக்கட்டை அடைந்தார்கள். காலைக்காற்றில் அவர்களின் ஆடைகள் படபடத்தன.
காசிநாதன் படிகளில் இறங்கி நம்பூதிரியின் அருகே சென்று கைகளைக் கட்டியபடி அவர்செய்வதை நோக்கி நின்றிருந்தார். ஸ்பைக்ஸ் முடி விட்டிருந்த இளைஞன் என்னிடம் “ஹாய்” என்றான்.
நான் “வணக்கம் சார், என்பேரு சுந்தரேசன். சாருக்கு அந்தக்காலத்திலே ரொம்ப குளோஸ்… இப்ப இங்க இருக்கேன். என் பையன் மினர்வா எலக்ட்ரிக்கல்ஸ்னு ஒரு கடை வச்சிருக்கான்…” என்றேன்.
இன்னொருவன் என் அருகே வந்து “இந்தப்பூஜைக்கு என்ன பேரு?” என்றான். எதையோ மென்றுகொண்டிருந்தான்
“இது நம்மூரிலே தெவசம்குடுக்கறதுமாதிரி ஒரு சடங்குதான். செத்துப்போனவங்க தாகமும் பசியுமா பிராணலோகத்திலே இருக்காங்க. அவங்களுக்கு ஜலமும் அன்னமும் குடுக்கறது… ஒரு நம்பிக்கைதான்… இந்தச் சடங்க சமஸ்தாபராதபூஜைன்னு சொல்வாங்க. இத இங்க மட்டும்தான் பண்றாங்க. இந்த திருநாவாயவிலே நாவா முகுந்தன் சன்னிதியிலே பண்ணல்லன்னா கயாவிலே பண்ணலாம். ஃபால்குனி ஆத்திலே” என்றேன்
“ஏன்?” என்றான்
“இங்கயும் அங்கயும் மட்டும்தான் அதர்வவேதம் படிச்சவங்க இருக்காங்க… இது அதர்வவேதத்திலே உள்ள சடங்கு”
அவன் “ஓ” என்றபடி ஆற்றைப்பார்த்தான்.
நான் முதியபெண்களைப்பார்த்தேன் அவர்கள் படிகளை அணுகிவிட்டிருந்தனர். எங்கோ ஒரு கொக்கியைப்போட என் ஆவல் துடித்தது. “செத்துப்போன யாருக்காச்சும் நாம பெரிய தப்பு ஏதாவது பண்ணியிருந்தா இதைச் செஞ்சு பாவத்த கழுவிக்கிறது வழக்கம்… எல்லா பாவத்தையும் பித்ருக்கள்ட்ட சொல்லி தப்பு நடந்துபோச்சுன்னு ஒப்புத்துக்கறது. தெரிஞ்சும் தெரியாமயும் செஞ்ச பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கறது.. பிராயச்சித்தகர்மம்…” என்றேன்
பின்னால் வந்து நின்ற சிறியபெண் “பித்ருக்கள்னா?” என்றாள். நான் திரும்பி ”மூதாதையர்கள்… ஏன்ஸெஸ்டர்ஸ்” என்றேன். “ஓ” என்றாள். அது அவர்களின் குடும்ப உச்சரிப்பு என நினைத்துக்கொண்டேன்.
அவள் முன்னால் சென்று முதியபெண்களுடன் சேர்ந்துகொள்ள நானும் அந்த இளைஞனும் மட்டும் எஞ்சினோம். ”சார் என்ன பண்றீங்க?” என்றேன்.
அவன் “எம்பிஏ” என்றான். ஒளிகொள்ளத் தொடங்கியிருந்த ஆற்றுமணலை நோக்கியபடி ”நைஸ் பிளேஸ்” என்றான்
நான் குரல் தாழ்த்தி “சடங்கு பண்றவருக்கு நேர்வாரிசு யாரு?” என்றேன்.
அவன் “பெரியப்பாவுக்குத்தான் சடங்கு… ஹி இஸ் ஹிஸ் சன்” என்று இன்னொருவனைச் சுட்டிக்காட்டினான். நான் அந்த இன்னொரு இளைஞனை நோக்கிப் புன்னகைத்தேன். ஆக, இவன் ஆறுமுகத்தின் மகன். அந்தச்சின்னப்பெண் இவன் தங்கை.
சிலந்தி வலைகட்டுவதுபோல நான் அந்த உறவுகளை பின்னி விரிவாக்கிக்கொண்டேன். காசிநாதனுக்கு இரண்டு மகன்கள், ஒருமகள். மூத்தமகன்தான் இறந்தவர். அவருக்காகத்தான் சடங்கு. இளையமகன் ஆறுமுகமும் அவருடைய மகனும் மகளும் வந்திருக்கிறார்கள். இறந்தவனின் மகன் மட்டுமே வந்திருக்கிறான். நெறிகளின்படி அவன்தான் சடங்குகளைச் செய்யவேண்டும். ஆனால் அவன் இயல்பாக இருந்தான். சிகரெட் பிடிக்கும் வழக்கம் உண்டு என்று தோன்றியது. இறந்தவரின் மனைவி எங்கே?
இன்னொரு போர்ட் எண்டெவர் கார் ஏறியிறங்கி முகவிளக்கொளி சுழன்று வர அணுகுவதைக் கண்டதும் என் குழப்பம் தீர்ந்தது .அதில் இறந்தவரின் மனைவி இருப்பாள் என கணித்தேன். கார் வந்து நின்றதும் ஓடிச்சென்று கதவருகே குனிந்து கைகூப்பி நின்றேன். டிரைவர் கார்க் கதவைத் திறந்ததும் ஒர் இருபதுவயதுப் பெண் வெளிவந்தாள். சற்று வீங்கியமுகம் அவள் அழுதிருப்பதைக் காட்டியது. அவள் இறந்தவரின் மகள்தான். அந்தப்பையனின் சாயல்.
தொடர்ந்து ஐம்பதுவயதான பெண்மணி இறங்கினாள். அவளும் அழுதிருந்தாள் என தெரிந்தது. அவள்தான் இறந்தவரின் மனைவி. அவள் கூந்தலை அள்ளி பின்னாலிட்டு பெருமூச்சுவிட்டாள்
நான் “வாங்கம்மா எல்லாம் ரெடியா இருக்கு… உங்களுக்காகத்தான் காத்திருக்கோம்” என்றேன்
அவள் களைப்புடன் “நேத்து சரியா தூக்கமே இல்லை…ஏஸி ஒரே சத்தம்” என்றாள்.
நான் “சரி பண்ணிடலாம்மா… இங்கதாம்மா சடங்கு” என்றேன்.
அவள் என்னை கேட்காதவள்போல தள்ளாடியவளாக நடக்க அவள் மகள் கைகளைப்பற்றி கூட்டிக்கொண்டு சென்றாள். அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் அங்கே நடக்க ஏற்றவை அல்ல
பிறர் அனைவரும் படிகளில் இறங்கிவிட்டனர். வானம் வெளுத்து ஆற்றுமணல் துலங்கிக்கொண்டிருந்தது. நீர் கரியபளபளப்புடன் வழிந்தோடுவது தெரிந்தது. காற்றில் அவர்களின் முந்தானைகளும் கூந்தலும் பறந்தன
“இங்கதான் இதெல்லாம் பண்ற எடமா?” என்று அவள் கேட்டாள்.
அவள் என்ன அறியவிரும்புகிறாள் என்று தெரியவில்லை. நான் “பொதுவா பித்ரு தர்ப்பணம் பண்ணுவாங்க… சாதாரணமா சமஸ்தாபராதபூஜை எல்லாரும் பண்றதில்லை. இந்தமாதிரி வீட்டிலே யாருக்காவது கெட்டசாவு வந்தா…” என்றேன்
அவள் சிவந்தமுகத்துடன் திரும்பி “யாருக்கு கெட்ட சாவு?” என்றாள்.
நான் மேலும் பணிந்து “இல்ல, நாம பண்ணின தப்பால…” என்றேன்.
“என்ன தப்பு? யார் பண்ணினது?” என்று அவள் உரக்க கேட்டாள்.
“இல்லம்மா” என நான் தடுமாறினேன்
அவள் மகள் “அம்மா, நீ வா” என்று அழைத்துச்சென்றாள்.
நாங்கள் படிகளை அடைந்தபோது நம்பூதிரி “ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் கீழே வாங்கோ… ரக்தசம்பந்தம் உள்ளவங்க எல்லாரும் வந்தாகணும்…” என்றார். அவர்கள் கீழே சென்றனர்
“ஆம்பிளங்க குப்பாயம் கழட்டணும்” என்றார் நம்பூதிரி.காசிநாதன் என்னை நோக்க நான் “குப்பாயம்னா சட்டை” என்றேன். அவர் தலையசைத்தபின் சட்டையைக் கழற்றினார் நான் ஓடிச்சென்று அதை வாங்கிக்கொண்டேன்.
மற்றவர்களும் சட்டைகளைக் கழற்றி டிரைவர்களிடம் கொடுத்தார்கள். வயதான டிரைவர் குளிப்பதற்கான துண்டுகள் வேட்டிகள் மாற்று ஆடைகளை கொண்டுவந்து படிகளில் வைத்தார்.
“த வாட்டர் இஸ் ஸ்மெல்லி” என்றாள் ஆறுமுகத்தின் மனைவி
நம்பூதிரி படிக்கட்டில் சுண்ணாம்புக்கல்லால் களம் வரைத்து அதன்மேல் மிகச்சிறிய மண்அகல்களில் மூன்று நெய்விளக்குகளை ஏற்றிவைத்திருந்தார். தெச்சி, அரளி, செண்பகம் என மூன்றுவகை செம்மலர்கள் வாழையிலையில் குவிக்கப்பட்டிருந்தன. அவர் நீள்வட்டவடிவில் செதுக்கப்பட்ட மரப்பீடத்தில் கால்மடித்து அமர்ந்திருந்தார். செம்பட்டு ஒன்று விசிறிபோல மடிப்புகள் விரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தர்ப்பைப்புல்லும் கெண்டியில் நீரும் இருந்தது. கேரளத்துச் சடங்குகளை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. மந்திரங்கள் துல்லியமாக ஒலிக்கும். கூடவே வெவ்வேறுவகையான கைமுத்திரைகள்.
“யார் யாரெல்லாம் பூஜை செய்றது?” என்றார் நம்பூதிரி. நான் ஓடிச்சென்று “இவங்க எல்லாருமே…” என்று சொல்லத்தொடங்க நம்பூதிரி “குடும்ப அங்கத்தினரிலே ஆம்புளைங்க மட்டும் பலி போடணும்… பொம்புளைங்க சங்கல்பம் மட்டும் செஞ்சாப்போதும்… பிழையோ பாபமோ செய்தவங்கதான் பிராயச்சித்தம் செய்யணும்” என்றார்.
அவர்கள் காசிநாதனை நோக்க நம்பூதிரி “ஆனா அவரு யாருண்ணு தெரியக்கூடாதுன்னா எல்லாரும் சேந்தே பண்ணலாம்… சாதாரணமா எல்லாரும் சேந்து ஒண்ணா பண்றதுதான் வழக்கம். அதாக்கும் நல்லது. நாளைக்குப்பின்ன பேச்சு வந்திரக்கூடாது” என்றார்.
காசிநாதன் “சுவாமி, பிராயச்சித்தபூஜை செய்யவேண்டியது ஒருத்தர்தான்…” என்றார்.
“நீங்களா? நீங்க செத்துப்போனவருக்கு என்ன உறவு?” என்றார் நம்பூதிரி.
காசிநாதன் என்னை ஒரு கணம் நோக்கியபின் தயங்கியகுரலில் “செத்துப்போனவன் என் மூத்தமகன். ஆனா பிராயச்சித்தம் செய்யவேண்டியவன் அவனோட கடைசி மகன்தான்… ” என்றார்
நம்பூதிரி குழப்பத்துடன் “அவர் எங்கே?” என்றார்.
காசிநாதன் தாழ்ந்தகுரலில் “கூட்டிட்டு வாடா…” என்று ஆறுமுகத்திடம் சொன்னார். ஆறுமுகம் படிகளில் ஏறியபடி டிரைவர்களிடம் “கொண்டுட்டு வாங்க“ என்று ஆணையிட்டார்
டிரைவர்கள் இரண்டாவது ஃபோர்ட் எண்டெவர் காரை நோக்கிச் சென்றனர். ஆவலுடன் நான் படிகளில் ஏறி மேலே சென்று நோக்கினேன். காருக்குள் இன்னும் ஒருவர் இருக்கிறாரா? ஓசையே இல்லாமல்? தூங்கிக்கொண்டிருக்கிறாரோ?
காரின் பின்னிருக்கையில் இருந்து அவர்கள் ஒருவனை தூக்கி கீழிறக்கினர். நான் சற்று அதிர்ச்சியுடன் முன்னகர்ந்து கூர்ந்து நோக்கினேன். காலை விடிந்துவிட்டிருந்தாலும் அங்கே மரநிழல்கொஞ்சம் இருந்தது. அவர்கள் அவனை மீண்டும் தூக்கிக்கொண்டபோது முகம் நன்றாகத்தெரிந்தது. ஒருபக்கமாகச் சப்பிய பெரிய தலை. பிதுங்கி இடுங்கிய சிறிய கண்கள். கீழ்வாய் நீண்டு உதடு தொங்கியது. பதினெட்டு பத்தொன்பது வயதுதான் இருக்கும். நெற்றியில் முடி நீட்டிச் சிலிர்த்திருந்தது. காதுகள் தலையோடு ஒட்டியவை போலிருந்தன. எச்சில் வழிந்த பெரிய உதடுகளால் ‘ர்ர் ர்ர்ர்” என ஓர் ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தான்.
அவர்கள் அவனை படிகளில் இறக்கிக் கொண்டுசென்றனர். நான் பின்னால் இறங்கிச்சென்றேன். நம்பூதிரி திரும்பி அவனை நோக்கி புருவத்தைச் சுளித்து “இவராக்குமா?” என்றார்.
“இவன்தான்… பிராயச்சித்தபூஜை செய்யவேண்டியது இவன் மட்டும்தான். நாங்க ஃபேமிலிங்கிறதனால சங்கல்பம் மட்டும் செய்யறோம்” என்றார் காசிநாதன்
அவர்கள் அவனை படிகளில் வைத்தனர். தலையை உருட்டியபடி ர்ர் ர்ர் என்று ஒலித்துக்கொண்டிருந்தான். சுற்றிலும் ஆட்களிருப்பதையே அவன் உணர்ந்ததாகத் தெரியவில்லை. உடல் சற்றுசரிந்து விழப்போக ஒருவன் குனிந்து பிடித்து நிறுத்தினான்.
நம்பூதிரி அவனை கூர்ந்து நோக்கியபின் “இவரா பாபம் செய்தார்?” என்றார்.
“ஆமா, இவன்தான்” என்றார் காசிநாதன்.
நம்பூதிரி “இவர் பேரு என்ன?” என்றார்.
“கதிரேசன்… கதிர்” என்றாள் அவன் அம்மா. “அவிட்டம் நட்சத்திரம்… எல்லாம் குறிச்சு குடுத்திருக்கோம்”
“பேசினா புரியுமா?” என்றார் நம்பூதிரி.
அவள் தயங்கி “செவிகேட்காது” என்றாள்.
“கேக்கவே கேக்காதா?” என்றார் நம்பூதிரி
“ஆமா, டெஃப் ஆன்ட் டம்ப்… பேச்சும் வராது”
நம்பூதிரி சிலகணங்கள் அவனை நோக்கிவிட்டு “எப்டி சொல்லிக்குடுக்கிறது?” என்றார்.
“ஒண்ணும் சொல்லி தெரியவைக்கமுடியாது… கண்ணும் கொஞ்சம் கம்மி. நாமே கையைப்பிடிச்சு செய்யவேண்டியதுதான்” என்றார் அவன் அம்மா
நம்பூதிரி காசிநாதனிடம் “ஸார், தான் செய்றது என்னன்னு இவருக்கு தெரியுமா?” என்றார்.
காசிநாதன் சங்கடத்துடன் “தெரியாதுன்னு நினைக்கிறேன்” என்றார்.
“மனசறிஞ்சு செய்தாத்தான் பாபமும் புண்ணியமும்” என்றார் நம்பூதிரி “பிராயச்சித்தமும் மனசறிஞ்சு செய்யணும்”
காசிநாதன் “இவன்தான் செய்யணும்” என்றார்.
நம்பூதிரி அவர்களை மாறிமாறி நோக்கிவிட்டு “சரி, இந்த ஜென்மத்திலே இப்டி ஒண்ணையும் முடிச்சிட்டுப்போகணும்னு அவருக்கு பிராப்தம் இருக்குன்னு தோணுது… செஞ்சிருவோம்” என்றார். பின்னர் என்னிடம் திரும்பி “பூஜையிலே இல்லாதவங்கள் எல்லாம் போங்கோ… மேலே தள்ளிப்போயிருங்கோ” என்று ஆணையிட்டார்
நான் மேலே சென்றேன். டிரைவர்கள் முன்னரே மேலே சென்று நின்றிருந்தார்கள். இருவர் மரத்தடியில் நின்றிருக்க ஒருவர் அப்பால் காருக்கு அருகே அமர்ந்திருந்தார். நான் வயதான டிரைவர் அருகே சென்று நின்றேன். அவர் காசிநாதனிடம் பேசுவதில் உரிமையும் ஒரு முரண்டும் இருப்பதை கவனித்திருந்தேன். இடுப்பில் கையூன்றி நின்றிருந்த விதத்திலேயே கசப்பு தெரிந்தது.
அவர் பொடிபோடுபவர் என்று மூக்கில் தெரிந்தது. “பொடி இருக்கா?” என்றேன்.
அவர் முகம் மலர்ந்து “இருக்கு” என்றார். பொடிடப்பியை வாங்கி ஒரு கிள்ளு எடுத்துக்கொண்டேன்.
”இப்பல்லாம் பொடி போடுறவங்க யாரு?எல்லாம் சிகரெட்டு…” என்றார் டிரைவர்.
நான் பொடியை நினைக்கையிலேயே முகம் சுளித்து மூக்கு அதிர்ந்தேன். போட்டதும் இருமுறை ஆழமாகத் தும்மினேன். மெல்ல உடலில் இருந்த பதற்றம் அடங்கியது
”என்பேரு சுந்தரேசன்…இதெல்லாம் நம்ம ஏற்பாடுதான்… நீங்க?” என்றேன்
‘நம்ம பேரு முத்துசாமி சார். இவன் சண்முகம். நான் இருபத்தேளு வருசமா சார் கூட இருக்கேன்… இந்த புள்ளைங்களை எல்லாம் ஸ்கூல்கூட்டிட்டுப்போனதே நாந்தான்”
“இது கடைசி மகன் இல்ல?” என்றேன் பொதுவாக.
முத்துசாமி ”ஆமா, அதுக்கு என்ன தெரியும்?” என்றார். “செத்துப்போனவர் இதை கையால தொட்டதில்லை. பங்களா அவுட் அவுசிலே ஆயாங்க பாத்துக்கிடும். வாராவாரம் நர்ஸு ஒருத்தி வருவா. தூக்கி வைக்கிறது எடுக்கிறது எல்லாம் நாங்கதான்”
நான் “அவங்க இருக்கிற ஸ்டேட்டஸுக்கு…” என்றேன்.
முத்துசாமி சீற்றத்துடன் “என்னத்த ஸ்டேட்டஸு? சொந்த ரத்தம்லா? குப்பையிலே தூக்கி பொட்டிர முடியுமா? எட்டு நாயி இருக்கு. அதுங்கள ஊட்டுக்குள்ள கொண்டுபோயி வச்சு கொஞ்சுவாங்க… இத வீட்டுக்குள்ள கொண்டுவரக்கூடாது. வீட்டுக்கு முன்னாடியே வரக்கூடாது. கண்ணுல காட்டிரப்பிடாது. டாக்டர்ட்ட கொண்டுட்டு போறதானாக்கூட ஷெட்டிலேருந்து அப்டியே போயிரணும்… மனுஷன்தானே? இவங்க ரெத்தம்தானே?”
பேசப்பேச அவர் கொதிப்படைந்தார். “ஒரு அவசியம்னு வாறப்ப அந்த ரெத்தம்தானே வேண்டியிருக்குது உங்களுக்கு? மனுஷனானா ஆண்டவன் நெனைப்பு வேணும். அதில்லாட்டியும் செத்துப்போன பாட்டன் முப்பாட்டன் நெனைப்புவேணும்”
“செத்துப்போனவருக்கு இந்தப்பையன்தான் வாரிசா?” என்றேன்.
“என்னத்த வாரிசு? சொத்த இதுவா வச்சுக்கிடப்போவுது? ஊட்டிவிட்டா திங்கும். பேண்டா களுவி விடணும்” என்றார் முத்துசாமி “வாரிசுங்க இருக்கு .ஒரு பையனும் பொண்ணும்… அந்தா நிக்குதுல்ல?”
“என்ன ஆச்சு? நல்லாத்தானே இருந்தாரு?” என்றேன்.
“என்னத்த ஆவ? முட்டக்குடி, குடிச்சுட்டு கார ஓட்டுறது. கிளப்பிலேந்து வாரப்ப வாராவதியிலே முட்டிக்கிட்டாரு. மண்டையிலே அடி. எட்டுமாசம்ல ஆஸ்பத்திரியிலே கெடந்தாரு. ஞாபகமே திரும்பலை…எல்லாடாக்டரும் வந்து பாத்தாங்க. அமெரிக்காவிலேருந்து வெள்ளைக்கார டாக்டர்கூட வந்து பாத்தாரு”
அருகே நின்றிருந்த சண்முகம் “நமக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்… பெரிய எடம்…” என்றார்
“நாம யாரை பயப்படணும்? நாம உழைக்கிறத திங்கிறோம் திங்கிறத பேளுறோம். இன்னிக்கு வரை தப்புதண்டா ஒண்ணும்பண்ணினதில்லை” என்றார் முத்துச்சாமி
“இவரு என்ன தப்பு பண்ணினாரு?” என்றேன்
”தப்பா, இதுவா? இது என்னசார் தப்பு பண்ணும்? நாம மனுஷங்கதான் இதுக்கு தப்பு பண்ணணும்” என்றார் முத்துசாமி
“பின்ன?” என்றேன்.
“சாமி, நடந்தது இதுதான். எட்டுமாசம் சங்கரன் சார் மூக்கிலே வாயிலே கையிலே காலிலேன்னு ஏகப்பட்ட குழாயோட பாதிசெத்துக் கெடந்தாரு. டாக்டருங்க வந்து ஒண்ணும் செய்யமுடியாது, எல்லாத்தையும் எடுத்துடறோம் நிம்மதியா சாவட்டும்னாங்க. ஆனா குடும்பத்திலே பொறுப்பானவங்க தாளிலே கையெளுத்துப் போட்டுக்குடுக்கணும்… ஆஸ்பத்த்ரியிலே பொறுப்பு ஏத்துக்கிடமாட்டாங்கள்ல?” என்றார் முத்துசாமி
நான் ‘ஆமா, அது சட்டம்லா?” என்றேன்
“நியாயப்படி ஜட்ஜய்யாதான் எல்லாம் பண்ணணும். வீட்டிலே ஒரு கார ரிப்பேருக்குக் குடுக்கணுமானாக்கூட அவரும் ஒரு வார்த்த சொல்லணும்… அவரு ஒரு ஏளெட்டுநாளு யோசிச்சாரு. ஜோசியருங்ககிட்டல்லாம் போயி கேட்டாரு. பிள்ளைய கொன்னபாவம் வந்திரும்னு யாரோ சொல்லிட்டான். அப்டியே ஜகா வாங்கிட்டாரு. மகனானாலும் அவன் இன்னொரு குடும்பத்து ஆளு. அவன் பொஞ்சாதிதான் முடிவெடுக்கணும்னு சொல்லிட்டாரு. அந்தம்மா அழுதுபொலம்பிட்டு கோயில்கோயிலா போச்சு. கடைசியிலே நான் என் மனசறிஞ்சு அதச் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டுது… சரி, பெத்த அப்பன் விஷயம். மூத்தமகன் சொல்லட்டும்னு கூடி முடிவுசெஞ்சு அவன்கிட்ட சொன்னாங்க. நான் மாட்டேன், எனக்கு கெட்ட சொப்பனமா வருதுன்னு மகன் சொல்லிட்டான். பொண்ணுகிட்ட சொன்னப்பவே ஓன்னு அளுகை… என்ன செய்றது? அங்க அவரு கெடக்குதாரு… அப்டியே விட்டா ஒருவருசமோ பத்துவருசமோகூட அப்டியே போயிரும்னு டாக்டர் சொல்றாரு. என்ன செய்ய?” முத்துசாமி சொன்னார்
சண்முகம் “இவங்களுக்கு பல கேஸுங்க கெடக்கு. அவரு கையெளுத்துபோடாம ஒண்ணும் நகராது. ஆளு செத்துட்டார்னா எல்லாம் சரியாப்போயிரும். இருந்தார்னாக்க கஷ்டம்” என்றான் “ஆறுமுகம் சார் ஒருநாள் குடிச்சுட்டு வந்து கத்துகத்துன்னு கத்திட்டார். அப்டீன்னா நீ எளுதிக்குடுடான்னார் ஜட்ஜய்யா. நான் எதுக்கு எளுதணும், அந்தப்பாவம் என் தலையிலே விளுறதுக்கான்னு ஆறுமுகம்சார் கத்தினாரு. அவங்கம்மா நாம ஏன் இதப்பத்திப்பேசணும். அவன் பெஞ்சாதியோ புள்ளையோதான் முடிவெடுக்கணும்னு சொன்னாங்க. அதுக்குள்ள கோர்ட்டிலே தமுக்கோட வந்திருவான்னாரு ஆறுமுகம் சார்… ராத்திரி முளுக்க ஒரே சத்தம்”
“ஆமா, அது பெரிய எடம். கோடிகளோட கணக்கு… நமக்கு என்ன?” என்றார் முத்துசாமி. ”கடைசியிலே ஜட்ஜய்யா பாத்தாரு… இந்தப்புள்ளைய கொண்டாரச் சொல்லிட்டாரு. இதுவும் அவன் புள்ளதானே, இது முடிவெடுக்கட்டும்னு சொல்லிட்டாரு. எல்லாருக்கும் சம்மதம். இத கூட்டிட்டுப்போயி ஒக்கார வச்சு எல்லா தாளிலயும் இதோட கட்டவிரலப்புடிச்சு வச்சு முத்திரபோட்டு குடுத்தாச்சு. சங்கரன்சார் பொஞ்சாதியும் மகனும் அதுக்கு சாட்சிக்கையெளுத்து. நல்ல நாளுபாத்துட்டு ஆஸ்பத்திரியிலே டாக்டருங்க குழாயப்புடுங்கிட்டாங்க. இந்தப்புள்ளைய வச்சே எல்லா காரியத்தையும் முடிச்சு காடேத்திட்டாங்க” அருகே நின்ற சண்முகம் “அவனுக கேக்கிறதே சும்மா ஒப்புக்கு. என்னத்த குடுத்தாலும் அதில ஒண்ணுமில்ல” என்றார்
நான் பெருமூச்சுவிட்டேன். மெல்ல நகர்ந்து படிவிளிம்பில் நின்று கீழே சடங்குகள் நிகழ்வதை நோக்கினேன். நம்பூதிரி சொல்லும் மந்திரங்கள் மெலிதாகக் கேட்டன. அனைவரும் கைகளைக் கூப்பியபடி சூழ்ந்து நின்றிருந்தார்கள்.
“அவனுக்கு ஏதாவது தெரியுமா?” என்றேன்
“அது வாசல் ஜன்னல் ஒண்ணுமே இல்லாம ஆறுபக்கமும் மூடின வீடு மாதிரி சார். வெளியே இருந்து ஒண்ணுமே உள்ள போகாது” என்றான் சண்முகம்
“எப்டியோ உள்ள ஏதாவது போச்சுன்னாக்க வெளியே எடுக்கவும் முடியாதே” என்றேன். நான் என்ன சொல்கிறேன் என்று எனக்கே சரியாகப்புரியவில்லை. சண்முகம் ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டார். அவர்கள் ஏன் அதைச் சொன்னார்கள் என்று யோசித்தேன். அப்படிச் சொல்லி அவர்கள் அச்செயலில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டார்கள் என்று அவர்கள் அடைந்த நிம்மதியிலிருந்து தெரிந்தது. எப்படியும் இன்னும் ஐம்பது பேரிடம் சொல்லிவிடுவார்கள்.
நன்றாக விடிந்துவிட்டது. நிளை நதியின் அலைகளில் காலைவெயில் அலையடித்தது. கரையோர மரங்களின் இலைகளில் எல்லாம் நீர்போலவே ஒளி. என்னால் வேறு எதையும் யோசிக்கமுடியவில்லை. மீண்டும் அந்தப் பையனிலேயே வந்து சேர்ந்தது மனம். கதிர், என்ன ஒரு பெயர்.
“இப்ப திடீர்னு என்ன?” என்றேன்
“சங்கரன்சார் மாத்தி மாத்தி சொப்பனத்திலே வாராராம். ஆத்மா அலைஞ்சிட்டிருக்கு. பல கோயிலிலே போயி பூசைல்லாம் போட்டாங்க. அப்பதான் மலையாள ஜோசியன் சொன்னான், தெரியாம பண்ணினாலும் இது கொலைதான்னுட்டு. இங்கவந்து இப்டி பிராயச்சித்தபூசை பண்ணினா ஆத்மா சாந்தி அடைஞ்சு மேலே போயிரும்னு சொல்லியிருக்கான்”
“இது அதுக்கான எடம்தான்” என்றேன்
“எவ்ளவுநேரம்… விலாவரியா பண்ணுறாங்க” என்றார் முத்துசாமி
“இங்கெல்லாம் இப்டித்தான்… முறையா பண்ணுவாங்க” என்றேன்
“நம்மூரு அய்யிரெல்லாம் சட்டுபுட்டுனு முடிச்சு காசவாங்கிட்டு போயிடறாங்க” என்றார் முத்துசாமி
மேலும் ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். ஃபோர்ட் எண்டெவர் கார் சிறந்தது என்று முத்துசாமி சொன்னார். ”ஆடி பி.எம்.டபிள்யூ எல்லாம் ஃபேஷன் சார். இதான் பக்கா வண்டி…”
வெயில் ஏறிக்கொண்டிருந்தது. நான் கால்கள் கடுக்க அங்கே எங்காவது அமரமுடியுமா என்று பார்த்தேன். கீழே காசிநாதன் கைகாட்டி அழைத்தார். கையில் சட்டையும் குடையுமாக படியிறங்கிச் சென்றேன்.
காசிநாதன் வேட்டியுடன் நீரிலிறங்கி கைகளை ஊன்றி குப்புற விழுந்து மூழ்கி எழுந்தார்.நீர் வழிந்த தலையுடன் படியேறி வந்து என்னிடம் கைநீட்டினார். நான் அளித்த துண்டை வாங்கி தலையை துவட்டிக்கொண்டார். அவர் மனைவியை மகள் பிடித்துக்கொண்டாள். இருவரும் நீரில் மூழ்கி கரையேறினார்கள். ஆறுமுகம் சண்முகத்திடம் துண்டை கொண்டுவர கைகாட்டிவிட்டு நீரில் இறங்க இளைஞர்களும் தொடர்ந்து நீரில் இறங்கினர். முத்துசாமியும் சண்முகமும் துண்டுகளும் மாற்றுடைகளுமாக ஓடிவந்தார்கள்.
அவர்கள் ஒவ்வொருவராக நீரைத் தொட்டு வணங்கியபடி ஈரத்துணியின் ஓசையும் மூச்சொலியுமாக மேலேற நான் ஒரு விசும்பலோசையைக் கேட்டேன். அது சங்கரனின் மனைவி என முதலில் நினைத்தேன். அந்தப்பெண்மணி நீர் வழிந்த முகத்தை வழிந்து உதறியபின் மகளின் தோளைப்பிடித்துக்கொண்டாள். மகள் முகத்திலும் அழுகையில்லை.
மீண்டுமொரு விசும்பல் ஒலித்தபோது என் உடல் சிலிர்த்தது. அது யாரென்று நான் உணர்ந்துவிட்டிருந்ததை அறிந்தேன். அந்தப்பையன் கதிர்தான் உதடுகள் இழுபட தலைகுனிந்து அழுதுகொண்டிருந்தான். கண்ணீர் வழிந்து மடியில் சொட்டியது.
படபடப்புடன் காசிநாதனை நிமிர்ந்து பார்த்தேன். அவர் முகம் உச்சகட்ட அச்சத்தில் இருப்பதுபோல கோணலாகியிருந்தது. கைகால்கள் உதற படிகளில் மேலேறி மூச்சிரைக்க விரைந்து அகன்றார். அவர்கள் அனைவருமே கதிரை ஒருகணம் நோக்கிவிட்டு படிகளில் ஓடி மேலெறிச்சென்றனர்.
என் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. நான் கதிரின் அழுகையை மீண்டுமொருமுறை நோக்கிவிட்டு பின்காலெடுத்து வைத்து படிகளில் ஏறினேன். மூச்சிரைக்க மேலே வந்து நின்றுகொண்டேன். பின்னர் கீழே பார்க்கவேயில்லை.
[ஆனந்தவிகடன்செப் 20, 2017]