நந்தகுமாரின் கடிதங்கள்

DSC_0101

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

நந்தகுமாரின் நாகம்.  தாளத்தில், நடனத்தில் சற்றே தங்கள் சாயல்.  எப்போதும் போதையில் இருப்பார் போலும், களி ஆவலென என்னையும் தொற்றுகிறது.  தன்மீட்பிற்கு எனக்கு வெண்முரசு.  உங்களில் இருந்து தத்தம் மீட்பிற்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு சமயத்தில் உங்களது மீட்பிற்கும் செய்து தரவல்ல சம்பவன்களை, நந்தகுமாரை, சீனுவை, சுசித்ராவை என நான் ஓரளவு வாசித்த, இன்னும் வாசிக்க வேண்டியுள்ள மீட்பர்களை, ஆக்கம் வல்லார்களை அன்பில் உவக்கின்றேன்.

நாடே பற்றி எரிகிறது புனைவு வாசிப்பு ஒரு கேடா? இருப்பவற்றை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் தியானம், புனைவு வாசிப்பு என்று தப்பிச்செல்வது முறையா ? உள்ளதை காணுங்கள் கற்பனை உலகில் வாழாதீர்கள் – ஒரு நண்பரின் எரிச்சல்.

“நண்பரே எல்லோருமே புனைவில் தான் வாழ்கிறோம்.  “நாடே பற்றி எரிகிறது” என்பது இன்றைய உங்கள் புனைவு.  எப்படியும் எல்லோரும் புனைவில் தான் வாழ்கிறோம், எனவே புனையத் தெரியாமல் புனைந்து தம்மை தாமே கொடுமை செய்து வாழ்வதை விட தேர்ந்த கலைஞனின் புனைவில் உவகையில் வாழ்கிறேன், யாது பிழை? புதியதொரு ஊருக்கு, இடத்திற்கு செல்லும் போது அது இப்படி இருக்கும் என்று மனம் ஒரு காட்சியை புனைகிறது, ஆனால் போய் பார்க்கும் போது அது அப்படியா இருக்கிறது? அவர் என்னைப்பற்றி அவ்வாறு எண்ணுகிறார் என்பீர், ஆனால் அது உண்மையாகவே அவ்வாறா? இது புனைவு தானே? அந்த நடிகருக்கு ஐயாயிரம் கோடி சொத்து இருக்கிறது என்று புனைகிறீர்.  வேறொருவர் உலகிற்கு கெடுதல் செய்வதற்காகவே வாழ்கிறார் என்று புனைகிறீர்.  நான் யாரை வாசிக்கிறேனோ அவர் என்ன எழுதுகிறார் என்றே தெரியாமல் அதெல்லாம் தவறானது என்று புனைகிறீர்.  வெற்று அகந்தையின் புனைவுகளை விட கலைஞனின் புனைவுகள் ஒப்பிட முடியாத அளவிற்கு உயர்வானவை.  அது வெறுப்பில் வாழச் செய்வதில்லை அன்பில் வாழச் செய்கிறது.

நேருக்கு நேர், இங்கு இக்கணத்தில், உள்ளது உள்ளபடி யாருக்கு நெருக்கம் அதிகம்? இதோ இக்கணத்தில் என்முன்னம் மேசையில் வெண்முரசு – நீலம் நூல் இருக்கிறது – இது உண்மை, சொல்லுங்கள் எது கண் முன்னம் உள்ளதோ அதை அவ்வாறே காண்பவர் யார்?

ஆம். புனைவில் எங்கோ சென்று வருகிறேன் தான்.  ஆனால் அது வெற்று அகந்தையை விலக்கி வேறோர் உலகு என உயர்த்தி மீள்கையில் பரிசென இக்கணத்தை அளிக்கிறது.  அன்பும் அருளும் உவகையும் என புதியதொரு உலகை நிகழ்கணங்களில் அளிக்கிறது.  எல்லாவும் புனைவே ஆனால் விளைவு என்ன என்பது கண்டு இது என் தெரிவு.  வெறுப்பில் வாழ்பவரை விட உண்மையின் நெருக்கம் எங்களுக்கு மிக மிக அதிகம்.”

சீனுவை, நந்தகுமாரை, சுசித்ராவை மற்றும் ஆக்கம் வல்லார் யாவரையும் எழுத்தாளர் ஆவது உங்கள் கடமை என கட்டளை போல் தாங்கள் பிறப்பித்துவிட வேண்டும் அது குரு தட்சிணை என்றும் சொல்லிவிட வேண்டும் என்பது என் பேராவல்.  அதை வேண்டுகோள் என உங்கள் முன் வைக்கிறேன்.  ஏனெனில் எதிர்காலத்திற்கு ஏராளமான மீட்பர்கள் தேவை.

அன்புடன்
விக்ரம்
கோவை

***

அன்புள்ள ஜெ,

நந்தகுமார் எழுதும் கடிதங்களை வாசிக்கிறேன். அவை கதைகளைப்பற்றிய அபிப்பிராயங்களோ மதிப்பீடுகளோ அல்ல. அவர் அக்கதைகளிலிருந்து உணர்ச்சிகரமாக கட்டற்ற உரைநடையை பயன்படுத்திக்கொண்டு மேலே மேலே செல்கிறார். ஓர் எல்லையில் அப்படியே நின்ருவிடுகிறார். அந்த பயணம் ஒரு புனைவிலக்கியவாதியின் பயணம் என நினைக்கிறேன். முன்னோடிகளின் பயணத்தை மானசீகமாக மேற்கொண்டுதான் அடுத்தத்தலைமுறையினர் எழுதுவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு – ஐ ஏ ரிச்சர்ட்ஸின் ஒரு வரி அது. நந்தகுமாரின் உலகம் புனைவிலக்கியம்தான் என நினைக்கிறேன்.

மகாதேவன்

***

பெருங்கனவு – நந்தகுமார்

ம்ம்ம்பி!!
நாகம் -கடிதம்
உச்சவழு ஒரு கடிதம்
கழிவின் ஈர்ப்பு
சகரியாவின் ‘இதுதான் என்பெயர்’
ஒற்றைக்காலடி
ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்
முந்தைய கட்டுரைதிமிரம்
அடுத்த கட்டுரைகொல்லம் முற்போக்கு எழுத்தாளர் சங்க விழாவில்…