அண்ணன்…
அலெக்ஸ் மரணம் குறித்த வார்த்தைகளில் அவர் சி எஸ் ஐ தேவாலயத்தை சார்ந்தவர் என்பதை ஒரு துணுக்குறலோடு வாசித்தேன். சி எஸ் ஐ திருச்சபை அவரது தனித்துவமன தேடல்களை சற்றேனும் பயன்படுத்திக்கொண்டதா என்பதை நான் அறியேன். தென்னிந்திய திருச்சபை தலித் மற்றும் ஆதிவாசிக்களுக்கென தனி பீடம் அமைத்து அவர்களுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இப்பேற்பட்டவர்களை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் அது எப்பேற்பட்ட இழப்பு. உங்கள் பதிவுகளில் வரும் நபர்களை தேடிச்செல்லும் எண்ணம் எனக்கு உண்டு. தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள் ஒன்றிணையும் புள்ளியாக நீங்கள் இருப்பது நம்பிக்கையளிக்கிறது.
காட்சன்
***
அன்புள்ள காட்சன்
அலெக்ஸின் முதன்மையான பணிகளில் ஒன்று அவர் மதுரை இறையியல்கல்லூரியின் ஆதரவில் ஒருங்கிணைத்த தலித் ஆதாரமையத்தின் ஆய்வுச்சேகரிப்புகள். ஓவியக் கண்காட்சிகள். ஆனால் அம்முயற்சிகள் பின்னர் முன்னெடுக்கப்படவில்லை என்று ஒருமுறை சொன்னார்.
ஜெ
***
அன்புள்ள ஜெ
அலெக்ஸ் அவர்களின் மறைவு துயரளிக்கிறது. அவருடன் விஷ்ணுபுரம் கூட்டத்தில் அறிமுகம் செய்துகொண்டேன். வரவிருக்கும் நூல்களில் இலங்கை மலையக எழுத்துக்கள் உண்டு என்று சொன்னார். அதுபற்றி அறிய ஆவலுடன் ஒருமுறை அவரிடம் மதுரையில் பேசியிருக்கிறேன். மிக இனிமையான அமைதியான நண்பர். எப்போதும் மென்மையான சிரிப்புடன் கண்களைச் சிமிட்டிக்கொண்டே பேசுவார். அது அவருக்கு ஒரு குறும்புத்தன்மையை அளித்தது. இன்று அந்தச்சிரிப்பு நினைவில் நிற்கிறது
சாமிநாதன்
***
அன்புள்ள ஜெ,
வெள்ளை யானை பற்றிய விவாதங்களில் பல இந்துத்துவ நண்பர்கள் அடிக்கடி என்னிடம் சொன்ன ஒரு செய்தி அலெக்ஸ் வழியாக ஏகப்பட்ட பணத்தை உங்களுக்கு அளித்து கத்தோலிக்கர்கள் உங்களை வாங்கிவிட்டார்கள் என்பது. நீங்கள் கத்தோலிக்கச் சர்ச்சின் ஊழியர் என்றுகூட ஒருவர் சொன்னார். நீங்களும் கேட்டிருப்பீர்கள். இன்று ஒருசெய்தி தெரிந்தது, அலெக்ஸ் நோயுற்று கடுமையான நெருக்கடியில் இருந்தார் என்பது ஒன்று. அதைவிட அவர் சி.எஸ்.ஐ காரர் என்பது இன்னொன்று
அஞ்சலி
ஸ்ரீனிவாசன்
***
அலெக்ஸ் -நிர்மால்யா கடிதம்
அலெக்ஸ் -கடிதம்
அலெக்ஸ் – கடிதங்கள்
அஞ்சலி வே.அலெக்ஸ்