மூன்று : முகில்திரை – 1
யாதவ நிலம் முழுக்க பகலிலும் இருள் மூடிக்கிடப்பதாக அபிமன்யூவுக்குத் தோன்றியது. பிரலம்பனிடம் “என்ன இது? இன்னும் இருள் விலகவே இல்லை” என்றான். பிரலம்பன் தன் புரவியைத் தட்டி சற்று முன்னால் வந்து “புரியவில்லை, இளவரசே” என்றான். “பொழுது இன்னுமா விடியவில்லை?” என்றான் அபிமன்யூ. “இல்லையே… விடிந்து நெடுநேரமாயிற்றே…” என்று அவன் சுற்றிலும் பார்த்தான். “இருள் விலகாதிருக்கிறது” என்றான் அபிமன்யூ.
அவன் என்ன சொல்கிறான் என்றே புரியாமல் சுற்றிலும் நோக்கியபடி பிரலம்பன் உடன் வந்தான். சப்தஃபலம் நோக்கி செல்லும் வண்டிப்பாதையில் ஓரிரு கன்றுத் தடங்கள் மட்டுமே இருந்தன. “இங்கு வணிகர் வண்டிகளும் அடிக்கடி செல்வதில்லை போலும்” என்று அபிமன்யூ சொன்னான். “ஆம், சில நாட்களுக்கு முன் மழை பெய்திருக்கிறது. அதன் பின்னர் வணிக வண்டிகள் எதுவும் போகவில்லை என்று தோன்றுகிறது” என்றான் பிரலம்பன்.
அபிமன்யூ “சப்தஃபலத்தில் துவாரகையின் அரசர் தங்கியிருக்கிறார் என்றால் அலுவல் வண்டிகளும் காவல் வண்டிகளும் சென்று கொண்டிருக்கத்தானே வேண்டும்?” என்றான். பிரலம்பன் குழப்பத்துடன் “ஆம், ஒருவேளை வேறு வழியிருக்கலாம்” என்றான். “வேறுவழியென்றால் அது கூர்ஜரத்தை ஒட்டி போகும் காந்தாரர்களின் பெருவழிப்பாதையாக இருக்கும். அரசுமுறையாக வருபவர்கள் அவ்வழியாக வருவார்களா?” என்றான் அபிமன்யூ. “எனக்குப் புரியவில்லை” என்ற பிரலம்பன் “ஒவ்வொருவரும் தூக்கத்தில் நடப்பவர்கள் போலிருக்கிறார்கள்” என்றான்.
அதன் பின்னர்தான் அபிமன்யூவுக்கு அவன் உணர்ந்ததென்ன என்று புரிந்தது. யாதவ நிலத்தில் சாலையோரத்து இல்லங்களிலும் மேய்ச்சல்வெளிகளிலும் தென்பட்ட அனைவருமே துயில் விலகாதவர்கள் போலவோ துயரின்எடை கொண்டவர்கள் போலவோ தோன்றினார்கள். எங்கும் மானுடவாழ்வு எழுப்பும் ஓசை ஏதும் எழவில்லை. மானுடருடன் அணுக்கமான நாய்களும் பசுக்களும்கூட ஓசையிழந்து நிழல்களென நடமாடின. “இவர்களை எல்லாம் ஏதேனும் இருள் தெய்வங்கள் பற்றிக்கொண்டிருக்கின்றனவா?” என்று அபிமன்யூ கேட்டான்.
பிரலம்பன் மேலும் அருகே வந்து தாழ்ந்த குரலில் “அரசரையே மூதேவி பற்றிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். பதினான்கு ஆண்டுகளாக அவர் தன்னை முற்றிலும் கூட்டுக்குள் இழுத்துக்கொண்டு உலகறியாது வாழ்கிறார். அவர் உயிரோடில்லை என்றுகூட பாரதவர்ஷத்தில் பேச்சிருக்கிறது. அங்கே சப்தஃபலத்தில் பெரும் கானகம் ஒன்றில் அவர் தவம் இருப்பதாகவும் சுற்றிலும் புற்று எழுந்து அவரை முற்றிலும் மூடிவிட்டதாகவும் அவருடைய தலையிலணிந்த மயிற்பீலி மட்டும் ஒளிமங்காது வெளியே தெரிந்து உலகை நோக்கிக்கொண்டிருப்பதாகவும் சூதர்கள் பாடுகிறார்கள்” என்றான்.
அபிமன்யூ “ஆம், இதை முன்னரே எவரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான். “ஆகவேதான் தங்களை அனுப்பியிருக்கிறார் பேரரசி. அவர் அனுப்பிய ஓலை அவருக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அதை இளைய யாதவர் நோக்கியிருக்கவே வாய்ப்பில்லை” என்று பிரலம்பன் சொன்னான். “கிளம்புவதற்கு முன்னர் காவலர்களிடம் உசாவியறிந்தேன். இங்கே உண்மையில் யாதவ அரசகுடியினர் எவருமில்லை. யாதவப்பேரரசின் முதன்மை அமைச்சர்கள்கூட இல்லை. இளைய யாதவரின் இளமைத்தோழர் ஸ்ரீதமரின் ஆட்சியில் எளிய காவலர்களால் இந்நகர் நடத்தப்படுகிறது.” அபிமன்யூ “ஆம், நான் இதையெல்லாம் கேட்டபின் கிளம்பவேண்டுமென எண்ணினேன். அங்கே உண்டாட்டும் களியாட்டுமாக அந்நாள் கடந்தமையால் மறந்துவிட்டேன்” என்றான்.
அதன் பின் வழிநெடுக அங்கிருந்த உயிரின்மையை அன்றி பிறிதொன்றை நோக்க அபிமன்யூவால் முடியவில்லை. சாலை முச்சந்திகளில் அமர்ந்திருந்த முதியயாதவர்கள் நெடுங்காலமாக ஒருசொல்லேனும் உரையாடிக் கொள்ளாதவர்கள் போலிருந்தனர். குளம்படியோசை கேட்டு திரும்பிப்பார்த்தவர்களின் விழிகள் இறந்து குளிர்ந்த மீன்களின் நோக்கு கொண்டிருந்தன. அவர்களிடம் சென்று வழி உசாவுகையில் பலமுறை கேட்ட பின்னரே அவர்களுக்கு உள்ளே சுருண்டுறங்கிய உள்ளம் அதை கேட்டது. அங்கிருந்து ஒரு சொல்லெழுந்து ஒலியாகி அவர்களை அடைவதற்கு மேலும் காலமெடுத்தது.
“ஒவ்வொருவரும் இறந்துவிட்டவர்களைப்போல் இருக்கிறார்கள். குழந்தைகள் கூட ஓசையும் விரைவும் இழந்துள்ளன. ஒரு நிலம் முழுக்க இப்படியாகுமா என்ன?” என்று அபிமன்யூ வியந்தான். பிரலம்பன் “அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்கிறார்கள். ஒருகாலத்தில் யாதவப்பெருநிலம் இசையிலும் காதலிலும் கொந்தளித்துக்கொண்டிருந்தது. யாதவ நாட்டில் ஆண்டு முழுக்க வசந்தம் என்று சூதர்கள் பாடுவதுண்டு” என்றபின் புன்னகைத்து “பிற நிலங்களில் மகளிர் பத்து மாதத்தில் பெறும் பிள்ளைகளை இங்கே ஐந்து மாதங்களில் பெற்றுவிடுகிறார்கள் என்பார்கள்” என்றான். அபிமன்யூ புன்னகைத்து “இப்போது இங்கு ஆடவரும் பெண்களும் ஒருவரை ஒருவர் நோக்குவது போலவே தோன்றவில்லை” என்றான்.
சப்தஃபலத்தின் சிறிய கோட்டையை அவர்கள் முன்மாலைப்பொழுதில் சென்றடைந்தனர். பெருஞ்சாலை ஓரமாக அமைந்திருந்த காவல் மாடங்களில் எவரும் இருக்கவில்லை. மழைப்பாசி படிந்த முரசுகள் வானின் ஒளி எதையோ எதிர்நோக்குவனபோல சரிந்து காத்திருந்தன. காவல் மாடங்களின் கீழ்த்தளத்தில் வேல்களையும் வாள்களையும் மடியில் வைத்தபடி சாய்ந்தமர்ந்து வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தனர் காவலர்கள். முகச்சாலையில் புரவியில் அவர்கள் கடந்து சென்றபோதுகூட ஒருசொல்லும் உசாவப்படவில்லை. கோட்டைமுகப்பில் அவர்களின் புரவிகள் சென்று நின்றபோது காவல் மாடத்திலிருந்து மெல்ல எழுந்துவந்த காவலன் கையாலேயே ’நீங்கள் யார்?’ என்றான்.
“இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வருகிறேன். இளையபாண்டவரின் மைந்தனாகிய என் பெயர் அபிமன்யூ. இவர் என் அணுக்கர். நாங்கள் இளைய யாதவரை அரசுப்பணியின் பொருட்டு பார்க்க வந்துள்ளோம்” என்றான் அபிமன்யூ. எந்த விழிமாறுதலும் இல்லாமல் அவன் “எவரும் அரசரை பார்க்க இயலாது. காவலர்தலைவர் சுதமரையோ அமைச்சுநிலைக் காவலர் கலிகரையோ நீங்கள் சந்திக்கலாம். நகரம் அரசரின் தோழர் ஸ்ரீதமரால் ஆளப்படுகிறது. நீங்கள் அவரையும் பார்க்கலாம். சில நாட்களுக்கு முன் துவாரகையிலிருந்து படைத்தலைவர் சாத்யகி வந்துள்ளார் அவரை வேண்டுமென்றாலும் பார்க்கலாம்” என்றான்.
“நாங்கள் இளைய யாதவரைப் பார்ப்பதற்காக மட்டுமே வந்தோம்” என்றான் அபிமன்யூ. “சென்ற பத்தாண்டுகளில் அவரை நாங்கள் எவரும் பார்த்ததில்லை” என்ற காவலன் “தாங்கள் சென்று பார்க்க முடியுமென்றால் அது யாதவர் அனைவருக்கும் நலம் பயப்பது” என்று தலைவணங்கினான். அவனுக்குப்பின்னால் அமர்ந்திருந்த இரு காவலர்கள் அவ்வுரையாடலை கேட்காதவர்கள்போல பொருள்தெளியாத விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தனர்.
புரவியைத்தட்டி நகருக்குள் நுழைந்து அதன் சிறிய தெருக்களினூடாகச் செல்கையில் அபிமன்யூ “இந்நகர் துயிலரசியால் ஆளப்படுகிறது. மானுடர் மட்டுமல்ல மரங்களும் கட்டிடங்களும்கூட துயில்கின்றன” என்றான். எதிர்ப்படும் அத்தனை விழிகளும் ஒழிந்து கிடந்தன. “பறவையால் கைவிடப்பட்ட கூடு போன்ற முகங்கள்” என்று பிரலம்பன் சொன்னான். அபிமன்யூ திரும்பிப்பார்த்து “எந்தச் சூதர் பாடலில் உள்ள வரி?” என்றான். “நானேதான் சொன்னேன்” என்றான் பிரலம்பன். “ஆம், உமது தந்தை சூதராக இருக்க வாய்ப்புண்டு. முன்னரே எண்ணினேன்” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “என் தந்தையும் அரிய வரிகளை சொல்பவராகவே இருந்தார்” என்றான். அபிமன்யூ திரும்பிப்பார்க்காமலேயே “அவருடைய தந்தை சூதரா?” என்றான். பிரலம்பன் ஒன்றும் சொல்லாமல் தன் புரவியை இழுத்து தனக்கும் அபிமன்யூவுக்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக்கொண்டான்.
சாலையில் மக்கள் நெரிசல் இருந்தாலும்கூட எவரும் உரக்கப் பேசவில்லை, பணியாளர்கள் கூச்சல் எழுப்பவில்லை. சுமைதூக்குவோர்கூட மூச்சொலிகளுடன் கடந்துசென்றனர். வண்டியோட்டிகள் அத்திரிகளையோ புரவிகளையோ அதட்டி ஓட்டவில்லை. ஒன்றையொன்று துரத்திக்கொண்டு சென்ற இரண்டு குழந்தைகள்கூட கூச்சலிடாமல் சென்றன. “அச்சுறுத்துகிறது இந்த அமைதி” என்று அபிமன்யூ சொன்னான். “மிகப்பெரிய ஓர் அரக்குப்படலம் இது என்று தோன்றுகிறது. எங்கோ சற்று தொட்டுவிட்டால் சிக்கிக்கொள்வோம். திமிறி விலக முயலும்தோறும் மேலும் மேலும் சிக்குவோம். புதைசேறு போல் நம்மை உள்ளிழுத்து அழுத்திக்கொள்ளும். புதைவின் இனிமையிலிருந்து உள்ளமும் மீளமுடியாது.” பிரலம்பன் “இதுவும் சூதர் சொல்போலிருக்கிறது” என்றான். அபிமன்யூ உரக்க நகைத்தான்.
அரண்மனையின் ஆளுயர மண்கோட்டையின் காவல் முகப்பை அடைந்தபோது நெடுந்தொலைவு வந்துவிட்டதாகவும் நெடுங்காலம் கடந்துவிட்டதாகவும் தோன்றுமளவுக்கு உள்ளமும் உடலும் களைத்திருந்தன. காவலன் வெளியே வந்து தலைவணங்கியபோது அபிமன்யூ சலிப்புடன் பிரலம்பனை நோக்கி சொல்லும்படி கையசைத்தான். பிரலம்பன் அவனை முறைப்படி அறிவித்ததும் அவர்கள் தலைவணங்கி “நேராகச் சென்றால் வருவது கலிகரின் அலுவலறை. அமைச்சுநிலை இடப்பக்கம் அமைந்துள்ளது. அவருடைய குலத்தின் கன்றுக்கொடி பறக்கிறது” என்றான்.
முற்றத்தில் புரவியில் சென்று இறங்கி காவலனிடம் கடிவாளத்தைக் கொடுத்துவிட்டு படிகளில் ஏறி மரத்தாலான சிறிய அரண்மனையின் இடைநாழியில் நடக்கும்போது அபிமன்யூ தன் நாவில் சொற்கள் எழுந்து நெடுநேரமாயிற்று என்று நினைத்துக்கொண்டான். தன்னுள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சொற்பெருக்கு விசை இழந்து உதிரிச்சொற்களாக சொட்டிக்கொண்டிருப்பதை கண்டான். திகைப்புடன் திரும்பி அதை பிரலம்பனிடம் சொல்ல விழைந்தபோது உள்ளிருந்து சொற்கள் எழவில்லை. உயிரற்றதுபோல் நா வாய்க்குள் தயங்கிக்கிடந்தது. அவனை எதிர்கொண்டு தலைவணங்கிய முதியவரிடம் அபிமன்யூ “இந்திரப்பிரஸ்தத்தின் அர்ஜுனரின் மைந்தன்” என்றான்..
வாழ்த்து எதுவும் உரைக்காமல் தலைவணங்கி காத்திருக்கும்படி கைகாட்டிவிட்டு அவர் அறைக்குள் நுழைந்தார். அது ஓர் அமைச்சுநிலைபோல் தெரிந்தது. திறந்திருந்த இரு அறைகளுக்குள் பேச்சுகள் ஏதுமில்லை. நிழலசைவதுபோல் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மிகத்தொலைவிலெங்கோ காற்றில் ஒரு சாளரம் முறுகி அசையும் ஓசை மட்டும் கேட்டது. கதவு திறக்க மெல்ல வந்து பணிந்த முதியவர் “நான் கலிகன். அமைச்சர் காத்திருக்கிறார். வருக!” என்றார். அபிமன்யூ உள்ளே நுழைய பிரலம்பன் தலைவணங்கி அங்கேயே நின்றுகொண்டான்.
ஸ்ரீதமர் இளைய யாதவரின் களித்தோழர் என்று சொன்னபோது அபிமன்யூ இளைய அகவையினர் ஒருவரை தன்னையறியாது எதிர்பார்த்திருந்தான். நரைத்த குடுமியை விரித்திட்டு, தளர்ந்த கண்களுடன், சற்றே முன்னொடுங்கிய தோள்களுடன், வெளிறிய தோல்வண்ணத்துடன் மெல்லிய குரலில் முகமன் உரைத்த ஸ்ரீதமரைக் கண்டதும் அவன் தயங்கி நின்றான். பின்னர் “இந்திரப்பிரஸ்தத்தின் இளையபாண்டவராகிய அர்ஜுனனின் மைந்தன் நான். இளைய யாதவரை பார்க்கும்பொருட்டு வந்தேன்” என்றான். அப்பொழுதும் அவர் ஸ்ரீதமர்தானா என்ற ஐயம் அவனுக்கு இருந்தது.
“நான் அரசரின் அணுக்கனும் தோழனுமாகிய ஸ்ரீதமன். இந்நகரம் என் ஆளுகைக்குள் உள்ளது. தங்களைச் சந்தித்ததில் உவகை கொள்கிறேன். அமர்க! இன்நீர் அருந்துக!” என்று அவர் முறைப்படி முகமன் சொன்னபோது சலிப்பும் சோர்வுமெழ அவன் தலையை அசைத்தபடி சிறிய பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டான். ஸ்ரீதமர் ஏவலனிடம் இன்நீர் கொண்டு வரும்படி மெல்லிய குரலில் ஆணையிட்டுவிட்டு “தங்களை கைக்குழந்தையாக பார்த்திருக்கிறேன். இந்திரப்பிரஸ்தத்தில் இளவேனில் விழவொன்றின்போது அரசருடன் நானும் வந்தேன். என் கைகளில் தங்களை எடுத்து விளையாடியிருக்கிறேன்” என்றார்.
அந்நினைவால் மெல்ல சுடரேற்றப்பட்ட அகல் என முகம் ஒளிகொள்ள “அன்றே மிகை விசைகொண்ட சிறிய பொறி போலிருந்தீர்கள். என் நெஞ்சக்குழியில் எட்டி உதைத்து சற்று நேரம் மூச்சை நிறுத்திவிட்டீர்கள்” என்றார். அபிமன்யூ எரிச்சலுடன் “என்ன ஆயிற்று இந்நகருக்கு? யாதவ நிலமே நாணிழந்து கிடக்கிறது” என்றான். ஸ்ரீதமர் “இளவரசே, ஒளியைப்போலவே இருளும் பரவும் என்பதை பதினான்கு ஆண்டுகளில் கண்டுகொண்டிருக்கிறேன். முதலில் எங்கள் அரசர் மேல் இருள் கவிழ்ந்தது. பின்னர் அவர் அறை இருண்டது. அரண்மனையும் சோலைகளும் இருண்டன. நகர் இருண்டது. யாதவ நிலமும் இருண்டது. இரண்டாண்டுகளுக்குமுன் துவாரகை சென்றிருந்தேன். நெடுந்தொலைவில் மேற்குக் கடல் எல்லையில் அந்த வெண்பளிங்கு நகரும் இருண்டுகிடப்பதை கண்டேன். எட்டு மனைவியரும் இருண்ட நிழல்களாக மாறிவிட்டிருந்தனர்” என்றார்.
அபிமன்யூ “நான் அவரை சந்திக்க வேண்டும். அவர் எழுந்தாக வேண்டும். அவர் ஆற்றும் பணி அணுகியுள்ளது. பேரரசி அதற்கான சொல்லை அளித்து என்னை அனுப்பியிருக்கிறார்கள்” என்றான். “ஆம், நேற்று முந்தினமே பறவைச்செய்தி வந்துவிட்டது. உங்களுக்காக காத்திருந்தேன்” என்றார் ஸ்ரீதமர். “பேரரசியின் ஓலைகளை அரசர் பார்த்தாரா?” என்று அபிமன்யூ கேட்டான். “புறவுலகிலிருந்து ஒரு சொல்லோ ஒலியோ சென்றடைய முடியாத நெடுந்தொலைவில் அவர் இருக்கிறார்” என்றார் ஸ்ரீதமர். “நான் பார்க்க விழைகிறேன்” என்றான். “நீங்கள் அவர் உடலை பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றார் ஸ்ரீதமர்.
அபிமன்யூ சலிப்புடன் தன் தொடையில் தட்டியபடி “என்ன செய்வது?” என்றான். “இவ்வாறே இருண்டு அழிவதா யாதவ நிலத்தின் ஊழ்?” ஸ்ரீதமர் “அந்த ஒரு வினாவே எங்களையும் நம்பிக்கை கொள்ள வைக்கிறது. எதன் பொருட்டு இந்த குலமும் நிலமும் இவரை ஈன்றெடுத்தனவோ இவரிலிருந்து பற்றிக்கொண்டு ஒளியும் வெம்மையும் கொண்டனவோ அது நிகழாமல் இவையனைத்தும் இவ்வாறே முடிவதற்கு வாய்ப்பில்லை. எனவே அவர் விழித்தெழுந்தாகவேண்டும். இந்தத் தவம் அவ்வாறு விழித்தெழுவதன் பொருட்டே என்று தோன்றுகிறது. மீள மீள அதைச் சொன்னபடி பதினான்கு ஆண்டுகள் காத்திருந்தோம்.”
பெருமூச்சுடன் கையை அசைத்து “பதினான்கு ஆண்டுகள், நிமித்திகர் பதினான்கு ஆண்டுகளில் அவர் எழுவார் என்றனர். அவர்கள் சொன்ன கணக்குப்படி பார்த்தால் இப்போது எழுந்திருக்க வேண்டும். யாதவ நிலத்தில் சூரியன் தோன்றியிருக்க வேண்டும்” என்றார். “நான் அவரை பார்த்தாக வேண்டும்” என்று அபிமன்யூ சொன்னான். “தாங்கள் தங்குவதற்கு மாளிகையும் பிறவும் ஒருக்கியுள்ளேன். இன்று ஓய்வெடுங்கள். நாளை புலரியில் தாங்கள் அவரைச் சந்திப்பதற்கு ஒருக்கம் செய்கிறேன்” என்று ஸ்ரீதமர் சொன்னார்.
புலரியிலேயே எழுந்து நீராடி ஏவலன் அளித்த புதிய உடைகளை அணிந்து அபிமன்யூ தன் அறைமுகப்பிலிருந்த இடைநாழியில் பொறுமையிழந்து முன்னும் பின்னும் நடந்தபடி காத்திருந்தான். படிகளில் காலடி ஓசை கேட்டதும் முதற்படியில் வந்து நின்று குனிந்து நோக்கி “ஸ்ரீதமர் அனுப்பினாரா?” என்றான். ஏவலன் அருகே வந்து தலைவணங்கி “ஆம், இளவரசே” என்றான். அவன் ஏவலனை முந்தியபடி படியிறங்கி கீழே வந்து வெளியே முகப்புக் கூடத்தில் காத்து நின்றிருந்த பிரலம்பனிடம் “கிளம்புக, ஏவலன் வந்துவிட்டான்” என்றான். “நானும் வரவேண்டுமா?” என்று பிரலம்பன் கேட்டான். அபிமன்யூ திரும்பி ஏவலனிடம் “எனது அணுக்கர் இவர். இவர் வரலாமா?” என்றான். “தங்களுக்கு மட்டுமே அழைப்பு” என்று ஏவலன் தாழ்ந்த குரலில் சொன்னான்.
அபிமன்யூ எரிச்சலுடன் தலையசைத்தபின் பிரலம்பனிடம் “சரி இங்கிரும், நான் உடனே வருகிறேன்” என்றான். முற்றத்தில் பிறிதொரு காவலன் கரியபுரவி ஒன்றை கொண்டுவந்திருந்தான். “நாம் புரவியிலா செல்கிறோம்?” என்று அபிமன்யூ கேட்டான். “ஆம், அரசர் குறுங்காட்டுக்குள் இருக்கிறார்” என்றான். அபிமன்யூ “அரண்மனையில் அல்லவா?” என்றான். ’இல்லை’ என்பது போல் ஏவலன் தலையசைத்தான். அபிமன்யூ புரவியில் ஏறிக்கொண்டதும் இருவரும் தங்கள் புரவியில் ஏறிக்கொண்டனர். அரண்மனை முற்றத்தை அடைந்து அதை குறுக்காகக் கடந்து மறுபக்கம் சென்று அங்கிருந்த திறப்பினூடாக கோட்டையைக்கடந்து வெளியே சென்றனர்.
நகரின் அப்பகுதி இடுங்கலான சிறிய பாதைகளும் மண்ணால் சுவர்கள் கட்டப்பட்டு புல்கூரை வேய்ந்த தாழ்ந்த இல்லங்களும் கொண்டதாக இருந்தது. அனைத்து இல்லங்களின் முகப்பிலும் வில்களும் அம்புத்தூளிகளும் தொங்கின. முற்றத்தில் தோல்கள் தறிநடப்பட்டு இழுத்துக் கட்டப்பட்டு காயவைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியெங்கும் மட்கும் ஊனின் நெடி நிறைந்திருந்தது. அவர்கள் வேட்டைக்காரர்கள் என்று தெரிந்தது. யாதவர்களில் ஒருசாரார் வேட்டைக்காரர்களாகவும் பிறிதொருசாரார் விறகுவெட்டிகளாகவும் உருமாறுவதனூடாகவே அக்காட்டை அவர்களால் வெல்லமுடிந்தது. “முன்பொருகாலத்தில் மானுடக் கை நாகத்தலைபோல் இருந்தது. வேட்டைக்கும் உழவுக்கும் எழுதுவதற்கும் உண்பதற்கும் எனப்பிரிந்து அது ஐவிரல்களென்றாயிற்று” என அதைப்பற்றி பாடுகையில் சூதர் சொன்ன அணிமொழியை நினைவுகூர்ந்தான்
புரவிகளின் குளம்படி ஓசை கேட்டு அனைத்து இல்லங்களிலிருந்தும் நாய்கள் வெளிவந்து தங்கள் எல்லைக்குள்ளே நின்றுகொண்டு செவிகள் பறக்க எம்பிக்குதித்து வால் நீட்டி உறுமி குரைத்தன. அவற்றின் குரைப்பொலி கேட்டு மேலும் மேலும் நாய்கள் குரைக்க அத்தெருக்கள் அனைத்தும் உலோக்க் கலங்கள் முட்டிக்கொள்வது போன்ற ஓசைகளால் நிறைந்தன.
அந்நகரில் ஓசையென அவன் முதலில் கேட்டது அக்குரைப்பொலிதான் என எண்ணிக்கொண்டான். வேளாளன் விழித்தெழவேண்டும். வேட்டைக்காரன் துயிலாதிருக்கவேண்டும் என்ற சூதர்மொழி நினைவிலெழுந்தது. ஒருநகரில் ஒருவேட்டைக்குடி இருந்தாகவேண்டும். ஒவ்வொரு உள்ளத்திலும் ஒரு வேட்டையன் வாழ்ந்தாகவேண்டும் என எண்ணிக்கொண்டதுமே அச்சொற்கோர்வையை அவனே எண்ணி வியந்து மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டான். நினைவில் வைத்திருந்து எங்கேனும் அதை சொல்லவேண்டும்.
சாலை ஒற்றையடிப்பாதையாக மாறி வளைந்து சரிவேறிச்சென்று செறிந்த காட்டுக்குள் புகுந்தது. காட்டுக்குள் நுழைந்ததுமே சீவிடுகளின் ரீங்காரம் சூழ்ந்துகொள்ள நாய்களின் குரைப்போசை மிக அப்பால் என எங்கோ மழுங்கல் கொண்டது. சற்று நேரத்தில் எப்போதுமே காட்டுக்குள் இருந்துகொண்டிருப்பதைப்போல அவ்வோசையுடன் உள்ளத்தின் சொற்சரடு முற்றிலுமாக இணைந்தது. நெடுந்தொலைவில் புலரிமுரசின் ஓசை யானை ஒன்றின் வயிற்றுக்குள் உறுமலோசைபோல கேட்டது. காட்டுக்குள் இளங்கதிர்கள் ஆங்காங்கே மங்கலாக சரிந்திருந்தாலும் செறிவுக்குள் இருள் விலகாதிருந்தது.
ஒற்றையடித்தடம் முற்றிலுமாக மறைந்து புதர்களுக்குள் புல்லில் விரல் வகுந்த தடமென அகன்றிருந்தால் அறியும் அணுகினால் மறையும் ஒரு வழி தெரிந்தது. இருபக்கமிருந்தும் இலைகள் புரவிகளை விலாவிலும் தோள்களிலும் உரசி பின்சென்றன. சில இடங்களில் தாழ்ந்த மரக்கிளைகளுக்காக குனிந்தும் ஓரிரு இடங்களில் புரவியில் மார்பொட்டிப் படுத்தும் செல்ல வேண்டியிருந்தது.
இரண்டு ஓடைகளை தாவிக்கடந்து ஒன்றின்மேல் ஒன்றென விழுந்து கிடந்த இரு பெரும்பாறைகளின் நடுவே புகுந்து மறுபக்கம் சென்றனர். “இங்கா?” என்று அபிமன்யூ திரும்பி தன்னுடன் வந்த ஏவலனிடம் கேட்டான். “ஆம் இங்குதான் சற்று தொலைவில்” என்றான் ஏவலன். “இங்கா அவர் குடிலமைத்திருக்கிறார்?” என்றான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. மேலும் சென்றபோது சரிந்து நின்ற பாறையொன்றின் அருகே ஸ்ரீதமர் நிற்பது தெரிந்தது. பாறைக்கு நடுவே ஒரு வேர்போல அவருடைய வெளிறிய உடல் தெரிந்தது.
அபிமன்யூ அவரை அணுகியதும் புரவியிலிருந்து இறங்கி தலைவணங்கினான். “வருக!” என்று அவன் தோளில் தட்டி பாறையிடுக்கினூடாக அழைத்துச் சென்றார். எங்கோ நின்ற ஆலமரங்களின் வேர்கள் பாறைகளை தசையை நரம்புகள் என பின்னிக்கட்டி நிறுத்தியிருந்தன. அங்கே ஓநாய்களோ நரிகளோ வசிக்கின்றன என்பதை மட்கிய ஊன்நாற்றமும் நாட்பட்ட முடி அவியும் நெடியும் காட்டின. பிளந்து நின்ற பாறையொன்றுக்கிடையே ஒரு பாறையில் மடியில் கைகளைக் கோத்தபடி தொலைவை நோக்கி அமர்ந்திருந்த முனிவரின் தோற்றம் கண்ணில் பட்டதுமே அபிமன்யூ உளம் நடுங்கினான். அது இளைய யாதவரென்று அவன் அகம் அறிந்ததுதான் அந்நடுக்கம் என்று அதன் பின் தெரிந்துகொண்டான்.
கால் தளர்ந்து நின்றுவிட்ட அவனை தோளில் தட்டி “வருக!” என்றார் ஸ்ரீகரர். இருமுறை உதடுகளை அசைத்தபின் “இவரா?” என்றான். என்ன சொல் அது என்று உடனே உணர்ந்து “ஏனிப்படி இருக்கிறார்?” என்றான். ஸ்ரீதமர் ஒன்றும் சொல்லாமல் “வருக!” என்றார். எடை மிகுந்து குளிர்ந்து மண்ணுடன் ஒட்டிக்கொண்டிருந்த கால்களை முழு சித்தத்தாலும் உந்தி அசைத்து எடுத்து வைத்து முன்னால் சென்றான். அதற்குள் மூச்சு வாங்க நெஞ்சு உரத்த ஒலியுடன் துடிக்கத் தொடங்கியிருந்தது.
இளைய யாதவரின் தலையிலிருந்து சடைமயிர்க்கற்றைகள் முதுகிலும் தோள்களிலுமாக விழுந்து பரவியிருந்தன. அவற்றில் சருகுத் தூசியும் மண்ணும் கலந்து அகழ்ந்தெடுத்த கிழங்கு வேர்கள் போலிருந்தன. தாடியும் சடை கொண்டு பிடுங்கிய புல்லின் வேர்க்கொத்துபோல முகவாயில் தொங்கியது. இடையில் அணிந்திருந்த தோலாடை மட்கிக் கிழிந்து சிதிலங்களாக உடலுடன் சில இடங்களில் ஒட்டி புண்பொருக்கென தெரிந்தது. உடலெங்கும் தோல் பொருக்கடித்து மண்ணும் சேறும் படிந்து நெடுங்காலம் புதைந்திருந்து அக்கணத்தில் எழுந்தமர்ந்ததுபோல் தோன்றினார். அவர் உடலில் இருந்து பிணத்தின் நாற்றமெழுந்தது.
ஸ்ரீதமர் அருகணைந்து “வணங்குகிறேன், யாதவரே” என்றார். இளைய யாதவரின் விழிகள் அசையவில்லை. முகத்தில் பதிக்கப்பட்ட இரு கருங்கல்மணிகள்போல் முற்றிலும் நோக்கற்ற ஒளிகொண்டிருந்தன அவை. அபிமன்யூ அருகே சென்று “மாதுலரே, நான் சுபத்திரையின் மைந்தன். உபபாண்டவன். தங்களைப் பார்க்கும்பொருட்டு பேரரசியின் ஆணையுடன் வந்துள்ளேன்” என்றான். கற்சிலையை நோக்கிப் பேசுவதுபோல உணர்வெழ மேற்கொண்டு சொல்லெடுக்கவே அவன் தயங்கினான். ஆயினும் குலுக்கப்பட்ட நிறைகலத்து நீர் என அவனையறியாமலேயே சொற்கள் சிதறின.
“தாங்கள் மட்டுமே இன்று என் தந்தையரையும் அரசியையும் காக்க முடியும் என்று பேரரசி சொல்கிறார். தங்கள் காலடியில் விழுந்து மன்றாடியோ தேவையெனில் வாளெடுத்து சங்கறுத்து விழுந்தோ அழைத்து வரவேண்டுமென்று எனக்கு ஆணையிட்டிருக்கிறார்.” மேலும் காத்திருந்தபின் “தங்கள் கடன் இது, அரசே. எதன் பொருட்டேனும் இதை தாங்கள் இங்கு இயற்றவில்லை என்றால் நாங்கள் முற்றழிவோம். தங்கள் குலமழியும். அதன்பிறகு தங்கள் பிறவி நோக்கம் இலாதாகும்” என்றான்.
ஒவ்வொரு சொல்லுக்கும் அவன் உடல் தளர்ந்துகொண்டே வந்தது. நாக்கு குழைய குரல் தழுதழுப்புகொண்டது. “அருள் புரியுங்கள், மாதுலரே. விழித்தெழுங்கள். தங்கள் காலடியில் என் தலையை அறைந்து கேட்கிறேன். தாங்கள் எழாவிட்டால் இப்பாரத வர்ஷமே அழிந்துவிடக்கூடும். தாங்கள் எதன் பொருட்டு மண் நிகழ்ந்தீர்களோ அத்தருணம் அணுகியுள்ளது. இனி பொழுதில்லை. விழித்தெழுங்கள்!” அச்சொற்களுக்குப்பின் நெடுநேரம் அமைதியிலிருந்து மீண்டபோதுதான் தன் உள்ளம் அவை கேட்கப்படுமென்றோ மறுமொழியொன்றையோ எதிர்பார்க்கவில்லை என்று அவனுக்குத் தெரிந்தது.
அத்தன்னுணர்வு எரிச்சலையும் பின் ஆற்றாமையையும் கிளப்ப இன்னதென்றறியாத ஒரு கணத்தில் ஓர் உறுமலுடன் முன்னால் சென்று இளைய யாதவரின் மடியில் வைக்கப்பட்டிருந்த அவர் கைகக்ளைப்பற்றிக் குலுக்கி “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இருண்டு அசைவிழந்து மட்கிக்கொண்டிருக்கிறீர்கள். இதன்பேர் தவமல்ல. எரிந்தெழுவதற்குப் பெயர்தான் தவம். கருகி அணைவதல்ல. எழுக!” என்றான். “எழுக! எழுக! எழுக!” என அவரை உலுக்கினான். ஸ்ரீதமர் அவன் தோளைப்பிடித்து நடுங்கும் குரலில் “வேண்டாம், அது இருட்தவம். எவரும் அவரை தொடக்கூடாது…” என்றார்.
அபிமன்யூ ஸ்ரீதமரின் கைகளைத் தட்டிவிட்டு உரத்த குரலில் “கடல் அலைகள் கரை பாறையில் என பதினான்கு ஆண்டுகள் இந்த நிலம் உங்கள் காலடியில் தலையறைந்து மன்றாடிக்கொண்டிருக்கிறது. இதன் கண்ணீரும் துயரும் உங்களுக்குத் தெரியவில்லையென்றால் எதன் பொருட்டு இங்கு வந்தீர்கள்? ஏன் இங்கு எங்கள் தெய்வமென அமர்ந்தீர்கள்? சொல்க, ஏனிந்த விளையாட்டு?” என்றான். தானே சொன்ன சொல்லொன்று குளிர்ந்த ஊசியென உள்ளத்தை சுட்டுத்துளைக்க இடையிலிருந்து உலோக ரீங்கரிப்புடன் வாளை உறையுருவி “இக்கணம் தாங்கள் எழுந்தாக வேண்டும்.இல்லையேல் தலையறுத்து உங்கள் காலடியில் இடுவேன். ஆணை!” என்றபின் கூர்முனையை தன் கழுத்தில் வைத்தான். “தன்குருதி கொடுத்துத்தான் தெய்வமெழுமென்றால் அவ்வாறே ஆகுக!”
இளைய யாதவரின் கண்கள் அவன் அசைவுகள் அனைத்தையும் பார்த்தன. ஆனால் விழிகளில் அசைவென்று ஏதும் எழவில்லை. “இதோ, இதைக்கொள்க!” என்றபடி அவன் வாளை அசைப்பதற்குள் ஸ்ரீதமர் அவன் கையை பற்றிக்கொண்டார். “இளவரசே, வேண்டாம் உங்கள் தலை இங்கு விழுந்தால்கூட அவர் எழப்போவதில்லை” என்றார். அதை முன்னரே அவன் உள்ளம் அறிந்திருந்தது. அவர் அவன் வாளைப்பிடுங்கி அப்பால் வீசினார். மூச்சிரைக்க, கைகால்கள் தொய்ந்து சரிய, கண்கள் நீர்மை கொள்ள அவன் இளைய யாதவரை நோக்கிக் கொண்டிருந்தான். அங்கு வந்ததையோ உரைத்ததையோ உணர்வதையோ அறியாத வேறெங்கோ முற்றிலும் அகன்று அவர் அமர்ந்திருந்தார்.
“இது மானுடர் திறக்கும் கதவு அல்ல. அங்கிருந்து அவரே தன் தளைகளையும் தாழ்களையும் விலக்கி வந்தாலொழிய நம்மால் ஏதும் செய்ய இயலாது” என்றார் ஸ்ரீதமர். “நான் வஞ்சினம் உரைத்து வந்தேன். இதை இயற்றாமல் இங்கிருந்து செல்லமாட்டேன்” என்றான் அபிமன்யூ. ஸ்ரீதமர் “இளவரசே, நம் முயற்சி வெல்லவேண்டுமெனில் அதற்குரிய பொழுதும் கனியவேண்டும்” என்றார். “பதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. சற்று பொறுப்போம் நிமித்திகரிடம் மீண்டும் உசாவுவோம். தருணம் அமையட்டும். நம் முயற்சிகள் அதனுடன் பொருந்தட்டும்.” தயங்கி நின்ற அவன் கைகளைப்பற்றி “வருக!” என்று இழுத்துச்சென்றார். இளைய யாதவரை பிறிதொருமுறை நோக்காமல் நோயாளன் என அவன் உடன்சென்றான்.