நத்தையின் பாதை 4
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் நிகாஸ் கஸண்ட் ஸகீஸின் ‘கிறிஸ்துவின் இறுதிச் சபலம்’ என்ற நாவலை வாசித்தேன் என்னை ஆட்டிப்படைத்த நாவல்களில் ஒன்று அது. அதன் தொடக்கத்தில் தச்சன் மகனாகிய ஏசுவின் மூளையை கழுகு ஒன்று தன் உகிர்க்கரங்களால் கவ்வி எடுத்துக்கொண்டு செல்வதுபோன்ற உவமை ஒன்றுவரும். அந்த பக்கங்கள் என்னை பதறச்செய்தன. ஏனென்றால் மூளைக்குள் நண்டு ஊர்வதுபோன்ற பதைப்பை நான் அப்போது மெய்யாகவே அடைந்துகொண்டிருந்தேன்.
மீண்டும் சில ஆண்டுகளுக்குப்பின் இளம் நண்பர் ஒருவர் அதேநூலின் ஒருபிரதியை எனக்கு அளித்தார். மீண்டும் அதை என்னால் வாசிக்கமுடியுமா என்ற ஐயம் எனக்கு இருந்தது. அப்போது அந்த அலைக்கழிப்புகளிலிருந்து வெகுவாக விலகி வந்திருந்தேன். விஷ்ணுபுரம் எழுதத் தொடங்கியிருந்தேன். . தயங்கித்தயங்கி வாசித்தேன். வேறு ஒருவகையில் என்னை உள்ளிழுத்துக்கொண்டது.
முன்பு தனிமனிதனின் மெய்த்தேடலின் தத்தளிப்பாகவே அந்நாவலை வாசித்திருந்தேன் என அறிந்தேன். அந்நாவல் கிறிஸ்து என்னும் உருவகத்தை உருக்கி மீண்டும் வார்க்கும் முயற்சி என்று தெரிந்தது. அல்லது ஒரு கிறிஸ்துவைக் கண்டடையும் முயற்சி. சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் எழுச்சி, ஐரோப்பிய மறுமலர்ச்சி, உலகப்போர்களுக்குப் பிந்தைய உளச்சோர்வு என என்னென்ன அம்சங்கள் சேர்ந்து அந்தக் கிறிஸ்துவை கட்டமைத்துள்ளன என்று ஆராயத் தொடங்கினேன்.
அந்நாளில் புகழ்பெற்ற கேரள இதழாளரும் என் நண்பருமான கே.சி.நாராயணன் மாத்ருபூமி இதழின் சென்னை நிருபராக கோடம்பாக்கம் பார்சன் காம்ப்ளெக்ஸில் தங்கியிருந்தார். அவருடைய அறை அன்று மலையாள இலக்கியவாதிகள் அன்றாடம்கூடும் ஒரு மையமாக இருந்தது. நான் சென்னை சென்று அங்கே தங்குவதுண்டு. ஒருநாள் பால் ஸக்கரியா அங்கே வந்திருந்தார். அவருடைய ஏசுவை மையமாக்கிய கதைகள் சில அப்போதுதான் வெளிவந்திருந்தன. [அவை ஏசுகதைகள் என்றபேரில் இப்போது வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன] அக்கதைகளைப்பற்றி பேச்சு திரும்பியது.
அப்போது அங்கே கிறித்தவ இறையியலில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வுசெய்துகொண்டிருந்த ஒரு நண்பர் இருந்தார். நாங்கள் ஏசுவைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தல்ஸ்தோய், செக்காவ் என பேச்சு சென்றுகொண்டிருந்தபோது. அவர் ஊடே புகுந்து ஐரோப்பா எப்படியெல்லாம் கிறிஸ்துவை தொடர்ந்து மறுகட்டமைப்பு செய்தது என விளக்கத் தொடங்கினார். என் பிற்காலப் புரிதல்கள் பலவும் அங்கிருந்து தொடங்கியவை
தொடர்ச்சியான இரண்டு மணிநேரப் பேச்சு. முடிந்ததும் “ஹால்லேலூயா! ஹால்லேலூயா!” என்று ஸகரியா கிண்டலாகக் கூச்சலிட எல்லாரும் சேர்ந்து “ஆமேன்” என்றனர் பிறர். ஒரே சிரிப்பு. அனைவரும் சேர்ந்து மேலும் அருந்துவதற்காக மது வாங்கும்பொருட்டு கிளம்பிச்சென்றார்கள்.நானும் அவரும் மட்டும் தனித்திருந்தோம். அவர் மேலும் கிறிஸ்துவைப்பற்றிப் பேசினார். “இலக்கியம் ஒவ்வொரு நாளும் ஒரு கிறிஸ்துவை உருவாக்கிக் கொண்டிருக்கிறது” என்றார் அவர்
கிறிஸ்து வரலாற்றால் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்ட ஓர் மெய்யுருவகம். ரோமப்பேரரசர் கன்ஸ்டண்டீன் காலத்தில் முதல்சித்திரம். தாந்தே போன்ற காவியகர்த்தர்களால் மேலுமொரு சித்திரம். ஸ்பெயினின் புனித ஜான் போன்று மரபான ஒழுக்கஎல்லைகளைக் கடந்து சென்ற பிற்காலப் புனிதர்களால் மூன்றாவது சித்திரம். பின்னர் சீர்திருத்த கிறிஸ்தவம் உருவாக்கிய சித்திரம்.
ஐரோப்பிய மறுமலர்ச்சியானது தனிமனித உரிமை, மானுடசமத்துவம், அறிவியல்நோக்கு என்னும் மூன்று அடிப்படைகளை உருவாக்கியபோது அதனடிப்படையில் கிறிஸ்து மறுவரை செய்யப்பட்டார். ஆக்ஸ்ஃபோர்ட் இயக்கம் போன்றவை இறையியலில் ஒருபக்கம் அதைச்செய்தன என்றால் அச்செயல்பாட்டை முதன்மையாக முன்னெடுத்தவை இலக்கியப்படைப்புகளே’
நவீன இலக்கியத்தில் கிறிஸ்து மூன்றுமுறை புதிதாகக் கண்டடையப்பட்டார் என்று சொல்லலாம். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, மேரி கெரெல்லி போன்றவர்கள் போன்றவர்கள் மதம்சார்ந்த அடையாளமாக இருந்த கிறிஸ்துவை தனிமனித இலட்சியவாதம். அந்தரங்கமாக அவன் அறியும் தெய்வீகம் ஆகியவற்றின் சின்னமாக ஆக்க முயன்றவர்கள். பார் லாகர் க்விஸ்ட், நிகாஸ் கசண்ட்ஸகீஸ் போன்றவர்கள் கிறிஸ்துவை தனிமனித ஆன்மிகக் கொந்தளிப்பின், மெய்த்தேடலின் உருவமாகச் சித்தரித்தவர்கள். யோஸ் சரமாகோ போன்றவர்கள் கிறிஸ்துவை ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களின் மெய்மையைச் சொன்னவராக காட்டினர்.இந்த ஒவ்வொரு மரபிலும் நூற்றுக்கணக்கான நல்ல நூல்கள் உள்ளன.
இத்தனை தீவிரமாக தன் வரலாற்றுடன், மதத்துடன், பண்பாட்டு மரபுடன் உரையாடியிருக்கிறது ஐரோப்பிய இலக்கியம். அதன் இடைவெளிகளைக் கற்பனையால் நிறைதிருக்கிறது. மீண்டும் மீண்டும் புனைந்திருக்கிறது. இதேபோல கிரேக்க மரபு குறித்து, சிலுவைப்போர்கள் குறித்து, மதவிசாரணைகளின் காலகட்டம் பற்றி ஐரோப்பிய இலக்கியம் பல படிகளாக மீண்டும் மீண்டும் புனைந்து பெரும்சித்திரம் ஒன்றை உருவாக்கியிருப்பதைக் காணலாம்.
இலக்கியத்தின் வழி இது. அது மதத்தையும் பண்பாட்டையும் வரலாற்றையும் இணையாக மீளாக்கம் செய்துகொண்டே இருக்கிறது. நாம் பேரிலக்கியங்கள் என்று சொல்பவை அனைத்துமே இதைச் செய்தவையே. கம்பராமாயணமோ பெரியபுராணமோ திருவிளையாடற்புராணமோ.
ஆனால் நம் நவீன இலக்கியத்தில் இந்தப் பணி நிகழ்ந்துள்ளதா? அனைத்துக்கும் அடித்தளமிட்ட புதுமைப்பித்தன் இதற்கும் வழிகாட்டினார். ஆனால் அது பெருகியதா? இல்லை என்றே சொல்லவேண்டும். இரண்டு காரணங்கள். இங்கே நவீன இலக்கியம் எழுதவந்தவர்கள் பெரும்பாலானவர்களுக்கு பண்பாட்டுமரபு, மதம், தத்துவம் ஆகியவற்றில் போதிய அறிமுகம் இல்லை. அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்தவாழ்க்கையின் சில சித்திரங்களையே இலக்கியமாக எழுதினர். தன்னைநோக்கி அனைத்தையும் குறுக்கிச் சிறிதாக்கிக் கொள்ளும் தன்மை நம் தீவிர இலக்கியவாதிகளுக்கு இருந்தது. இந்த கோழிமுட்டை வட்டத்தையே இலக்கியம் என எண்ணி அதை நம்பவைக்கவும்செய்தனர்.
இரண்டாவது காரணம், நம் சிற்றிதழ்சார் இலக்கியமரபுக்கு இருந்த ஐரோப்பிய வழிபாட்டு மனநிலை. ஐரோப்பாவே நவீன இலக்கியத்தின் பிறப்பிடம் என்பதில் ஐயமில்லை. அவர்களிடமிருந்தே நாம் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்தக்கட்டுரையையே கூட அவர்களிடமிருந்து எதைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதைப் பற்றித்தான். ஆனால் இங்கிருந்தது எளிய வழிபாட்டு மனநிலை. அடியொற்றும்போக்கு.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஐரோப்பிய இலக்கியப்போக்குகளில் இருந்து சில ஆக்கங்கள் இங்கே மொழியாக்கம் மூலம் வந்துசேர்கின்றன. இப்போது இதுவே அங்கே அலை என அதைக் கொண்டுவருவோர் சொல்கிறார்கள். அக்கணமே இங்குள்ள இலக்கியம் அதை அப்படியே பின்பற்றத் தொடங்கிவிடுகிறது.
இங்கே இரண்டுவகை தீவிர இலக்கியமே உள்ளது. கிராமிய, அன்றாட யதார்த்தத்தையும் அரசியலையும் முன்வைக்கும் நேர்ச்சித்தரிப்புப் படைப்புக்கள். இவை பெரும்பாலும் நேர்மையானவை, ஆகவே நம்மை நாம் அறிய முக்கியமானவை. அவ்வப்போது கலைத்தன்மை கைகூடுபவை. ஆனால் தத்துவமோ வரலாற்றுநோக்கோ அற்றவை. பிறிதொருவகை ஐரோப்பாவிலிருந்து வந்த இலக்கியவடிவங்களையும் மனநிலையையும் பின்பற்றி எழுதப்படுபவை. பெரும்பாலும் போலிப்படைப்புகள். ஒரு சில ஆண்டுகளிலேயே பொருளிழப்பவை.
பின்பற்றுபவர்களின் சிக்கல் என்ன? ஓர் ஐரோப்பிய நாவல் அதற்கு முன்னால் வந்த நாவல்களின் வடிவ, தத்துவத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. பார் லாகர்க்விஸ்ட் உருவாக்கிய பரபாஸ் என்னும் ஆளுமையின் தலைகீழ் நீட்சியே கசந்த் ஸகீஸின் இரட்டையனாகிய யூதாஸ். இன்றைய புனைவுகள் முன்னரே எழுதப்பட்ட புனைவுகளின் பெரும்பரப்பில் நின்றுகொண்டு அவற்றை அள்ளி மறுபுனைவு செய்கின்றன. நேரடியாக இக்காலத்து மீபுனைவுகளை சென்றடையும் வாசகனுக்கு சிக்கலான ஒருவடிவம் மட்டுமே கிடைக்கும். புனைவை ஒரு புதிர்விளையாட்டு என்று மட்டுமே அவன் புரிந்துகொள்வான். ஆகவே அந்த வடிவத்தை மட்டும் நகலெடுக்க முயல்கிறார்கள் இங்குள்ளவர்கள்.
உண்மையில் ஒருவாசகன் ஐரோப்பிய புனைவிலக்கியத்தின் அத்தனைச் சரடுகளிலும் விரிவான வாசிப்பை அடையமுடியாது. உதாரணமாக என் ஆர்வம் மதம், ஓரளவு தத்துவம் சார்ந்தவற்றில் மட்டுமே. இதே தீவிரத்துடன் ஐரோப்பிய இனவாத அரசியலை பற்றிப் பேசும் படைப்பை தொடர என்னால் முடியாது. அறிவியலை விவாதிக்கும் ஒரு புனைவுக்களத்தை தொடவே முடியாது.
இங்கே இந்தத் தமிழ்மண்ணில் விக்ஞானவாத பௌத்தம், சைவசித்தாந்தம் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் நான்கு தத்துவமரபுகள் உருவாகி வளர்ந்துள்ளன.பக்திமரபு எழுந்து தாந்த்ரீக மதங்கள் பலவற்றை மறையச்செய்திருக்கிறது.அவை பக்திக்குள் சித்தர் மரபாக முளைத்தெழுந்தன. அந்தத் தத்துவப்பின்புலத்தில் இருந்து வள்ளலார் போன்ற மெய்யியலாளர்கள் எழுந்துள்ளனர். நாத்திகவாதமும் மதச்சார்பின்மையும் எழுந்தன. இவை அனைத்திலும் நவீன இலக்கியத்தின் கோணம் என்ன? பண்பாட்டில் மதத்தில் வரலாற்றில் அது எப்படி அது தனக்கான சித்திரத்தை உருவாக்கிக் கொண்டது?
அந்த ஊடாட்டம் நிகழாததனால்தான் இங்குள்ள பெரும்பாலான வாசகர்களுக்கு இங்குள்ள இலக்கிய ஆக்கங்களுடன் எந்த சந்திப்புப் புள்ளியும் இல்லாமலிருக்கிறது. இன்று நாம் நம்மைநோக்கித் திரும்பவேண்டியிருக்கிறது. இலக்கியம் என்பது வரலாற்றின், பண்பாட்டின் ஓரமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் முணுமுணுப்பு அல்ல. அது வரலாற்றையும் பண்பாட்டையும் உருவாக்கும் பழம்பாடல்.
***
The Last Temptation of Christ – Nikos Kazantzakis
The Master-Christian – Marie Corelli
Barabbas- Par Lagerkvist
The Gospel According to Jesus Christ – José Saramagot
***
விகடன் தடம்/ நத்தையின்பாதை தொடர்- 1