தொல்பழங்காலம்

kiiza

கீழடி – நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும்

இனிய ஜெயம்,

கீழடி குறித்த பதிவு வாசித்தேன். கொஞ்சநாள் முன்பு ஒரு வீடியோ உலவியது. பதிவின் ஓரத்தில் புதைக்கப்படும் தமிழர் வரலாறு எனும் தலைப்பு. படு சோக பின்னணி இசை. அகழ்வாய்வு களம் ஒன்று, [கீழடியாம்] டிப்பர் கொண்டு, மணலால் ஸ்லோ மோஷனில் மூடப் படுகிறது. இறுதியில் உண்மையான தமிழனாக இருந்தால் எனத் துவங்கி ஏதேதோ பிதற்றல்கள்.

கீழடி விவகாரத்தில் முதல் சிக்கல் அது மதுரைக்கு அருகே இருக்கிறது என்பது. இதுவே வந்தவாசி பக்கம் எனில் இத்தனை கூப்பாடு கிளம்பி இருக்காது. இரண்டாவது சிக்கல் இன்றைய அரசியலில் உருவாகி நிற்கும் வெற்றிடம்.

தேசியம் எனும் சிந்தனை ஓங்கும் போதே, அதில் ஒவ்வொரு பிராந்தியமும் தங்களது பண்பாட்டு தனித்தன்மையை பேணும் பொருட்டு மொழி வழி தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன. அதில் துவங்கியது முதல் தலைமுறை. இரண்டாம் தலைமுறை திக. தமிழன்டா என தமிழனை ஒருங்கிணைக்க, பாப்புலிசம் எனும் உத்தியையும், வலிமையான வெறுப்பு பிரச்சாரத்தையும் கையில் எடுத்தது. தேசியத் தமிழர் என அழைக்கப்படும் சின்ன அண்ணாமலை அவர்களின் வாழ்வு நிகழ்ச்சிகள் அடங்கிய சொன்னால் நம்ப மாட்டீர்கள் நூலில் ஒரு சம்பவம் வருகிறது. திக வினர் ஒரு வல்லடியில், ”தமிழன் ” எனும் ஒரே காரணத்துக்காக சின்ன அண்ணாமலையை மன்னித்து விட்டு விடுகிறார்கள். மூன்றாம் தலைமுறையின் தமிழின தலைவர் திரு மு கருணாநிதி அவர்கள் தமிழுக்கு நிகழ்த்திய தொண்டுகளை, சாதனைகளை வரலாறு அறியும். அடுத்த [ஓட்டு போடும்] இளைய தலைமுறையை மீண்டும் தமிழன்டா கோஷத்துடன் அணுகியது பா மா கா. அனைவரது காலமும் முடிந்து இதோ மீண்டும் ஒரு அரசியல் வெற்றிடம். இன்றைய ஓட்டு போடும் இளைய தலைமுறையை இதே தமிழன்டா கோஷத்துடன் அணுகிக்கொண்டு இருக்கிறது செந்தமிழன் சீமான் தலைமையில் அடுத்த கோஷ்டி.

சினிமா தொலைக்காட்சி முகநூல் தவிர வேறு ஒன்றுமே தெரியாத [அலைக்கற்றை, தாதுமணல், கடல் வளம் என பஞ்ச பூதத்தில் வைத்தும் தமிழன்தான் தமிழ்த்தொண்டு செய்கிறான் என இவர்கள் அறிவார்களா என்ன?] இன்றைய தமிழ் நிலத்தின் இளைய மனங்களை, என்ன வெறுப்பை கட்டி எழுப்பினால், என்ன அடையாளத்தின் கீழ் அவர்களை ஒன்று திரட்ட முடியும் என ஒவ்வொரு அரசியல்வாதியும் அறிந்தே இருக்கின்றனர். அந்த விளையாட்டின் ஒரு பகுதியே இன்றைய கீழடி கூப்பாடும்.

இத்தகு சூழலில், சமநிலையில் நின்று, இளையமனங்களுக்கு, சிந்தனைக்கான அழைப்பை விடுக்கிறது உங்கள் கட்டுரை. அக் கட்டுரையுடன் நின்று விடாமல் தமிழ்நிலத்தின், தொல்லியல் களங்கள், இன்றையநாள் வரை இதில் நிகழ்ந்த ஆய்வுகள் சார்ந்து மேலே வாசித்து முன் செல்ல விரும்பும் மனங்களுக்கு, இத்தகு விஷயங்களை நிறுத்தி வைத்துப் பார்க்கும் விரிவான பகைப்புலத்தை அளிக்கிறது., என்சிபி எச் வெளியீட்டில், தி. சுப்ரமண்யம் அவர்கள் எழுதிய தொல்பழங்காலம் எனும் நூல்.

thol

பத்து தலைப்புகளில், தமிழ்நிலத்தின் கற்காலம் துவங்கி எழுத்து வரலாறு துவங்குவதற்கு முன்பான இரும்பு காலக்கட்டம் வரை நிலவியல், தொல்லியல், மானுடவியல் வழியே தமிழ்நில மக்களின் அரூப வரலாறு, எவ்வாறு பல்வேறு ஆய்வுகள், விவாதங்கன், ஒப்புநோக்கல்கள், மறுப்புகள், ஊகங்கள், நிரந்தர விடுபடல்கள் வழியே இங்கே புறவய வரலாறாக நமக்கு கிடைத்திருக்கிறது எனும் விரிவான அறிவியல் கள முடிவுகளை முன்வைக்கிறது இந்த நூல்.

ஐந்து ஊழிக்காலங்கள் சமைத்து அளித்ததே இன்றைய பூமிப்பந்தின் கண்டங்கள். ஐந்தாவது ஊழிக்காலத்தின் இறுதியில் புலம்பெயர்த்த மனிதர்களே இன்றைய உலக மானுட சமுதாயத்தை உருவாக்கியவர்கள். உலகெங்கும் ஐந்தாவது ஊழி பனிக்காலமாக இருக்க, ஆசியாவில் குறிப்பாக மத்திய இந்தியாவில் அது இடையறாத நீண்ட பெருமழைகாலமாக இருந்திருக்கிறது. [இதில் இன்னமும் வாதப் பிரதிவாத ஆய்வுகள் தொடர்ந்துகொண்டு இருக்கிறது] எனவே உலகப்பொதுவில் பனியுக முடிவில் கற்காலத்தை வகுத்து வைத்து உருவான ஆய்வுகள், கருத்துகோள்கள் பல, இங்கு பெருமழை யுகம் எனும் புலத்தில் வரும் கற்காலத்தில் பொருத்திப் பார்க்க இயலாதவை. இங்கே துவங்கி, தென்னிலம் கொண்ட பருவ சிக்கல் ஆய்வுகள் தொடர்ந்து, எவ்வாறு கற்காலம், இடைக்கற்காலம், கடைக்கற்காலம், நுண்கற்காலம், புதிய கற்காலம், துவக்ககால பெருங்கற்காலம், இறுதிக்கால பெருங்கற்காலம் பகுப்புகள் இங்கே ஆய்வுகள் வழியே உருவாகி வந்தது என சொல்கிறது இந்த நூல்.

ஆய்வுக்கு ஒரு இடம், என்ன அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது, சென்னை பொன்னேரி அருகே முன்பு ஒரு பெரிய நதி ஓடிய தடயம் எவ்வாறு நிலவியல் ஆய்வில் வெளியானது, அங்கே நூறு அடி, அறுபது அடி, முப்பது அடியில் வெவேறு காலக்கட்டங்கள் வண்டல் மண்ணாக அங்கே கிடைத்து, அங்கே நிகழ்த்திய அகழாய்வில் கிடைத்த கற்காலக் கருவிகள், இப்படி தமிழகம் எங்கும் [ஒவ்வொரு இடமும் பெயர் சுட்டி] ஆதிச்சநல்லூர் உட்பட, நிலம் தேர்ந்து, நிகழ்த்திய ஆய்வுகள், கிடைத்த தரவுகள் மீது இன்றுவரை நிகழ்ந்த ஆய்வுகள் குறித்து நூல் விளக்குகிறது.

பெருங்கற்காலம், நடுகற்கள், பாதி பூமியில் புதைந்த கல்லறைகள், முழுவதும் பூமி மட்டத்தில் அமைக்கப்பட்ட கல்லறைகள் என மூன்று வகைமையில் காணக்கிடைக்கிறது. இரும்பின் உபயோகம் உருவானபின் வந்தவை இரண்டாம் காலகட்ட பெருங்கற்காலம், தமிழ் நில குகை ஓவியங்கள் இக் காலக்கட்டத்தை சேர்ந்தவையே. இரும்பு காலக்கட்டத்தின் துவக்கமே தமிழ்நில மக்களின் வரலாற்றின் தொடக்கம் என்று சொல்கிறது இந்த நூல். சிந்து நதிக்கரை நாகரீகம் எப்படி இரும்பு என்ற ஒன்றை அறியாத நாகரீகமோ, அதுபோல தமிழ்நிலம் வெண்கலம் என்ற ஒன்றினை அறியாத நாகரீகம் கொண்டதே. கிடைத்த வெண்கல எச்சங்கள் எல்லாம் வட இந்திய நாகரீகத்தில் இருந்தே இங்கு வந்ததாக யூகிக்கப் படுகிறது. முதலும் அடிப்படையான காரணமுமாக அமைவது தமிழ் நிலம் எங்கும், வெண்கலம் உருக்கும் தொழில் சார்ந்த தொல் பொருட்களோ, கருவிகளோ கிடைக்கவில்லை என்பதே, நிற்க.

தமிழக பெருங்கற்கால கட்டிடக் கலை மரபு எனும் தலைப்பில் மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடாக ராசு பௌன் துரை நூல் ஓன்று, தமிழ்நிலத்தில் ஆய்வு நடந்த முன்னூறு பெருங்கற்கால கல்லறைகளையும் குறித்து முழுமையான நூல் இது.

ராஜராஜனின் கல்வெட்டு செய்தி ஒன்று, இத்தகு கல் பத்துகை ஒன்றுக்கு,அதன் வழிபாட்டுக்கு அளிக்கப்பட நிவந்தம் குறித்து சொல்வதாக தி.சுப்ரமணியன் கூறுகிறார்.

வேட்டை, மேய்ச்சல், விவசாயம் என இங்கிருக்கும் மானுடக் குமுகம் மெல்ல மெல்ல அடைந்த வளர்ச்சி, சமூக நிலை,பொருளாதார நிலை, தாய்த்தெய்வ,நீத்தார், குலசின்ன வழிபாடுகள் என செறிவான சித்தரத்தை ஆய்வுப் பின்புலத்தில் வைத்து விவரிக்கிறது நூல்.

இந்திய மானுட இனங்கள் [ரேஸ்] என்னென்ன அதில் தென்னிலத்தை சேர்ந்தோர் யார்? காலனியாதிக்கம் செய்ய வந்த கப்பல்களில் வந்த அயல்நாட்டு ஆய்வாளர்கள், ராபட் ப்ரூஸ் ப்ரூட் துவங்கி இன்று வரை தொல்லியல் ஆய்வில் பங்களித்த உலக,இந்திய,தமிழ் ஆய்வாளர்கள், அவர்களின் ஆய்வு நூல்கள் என தென்னிலத்தின் தொல்பழங்காலம் சார்ந்த அடிப்படை கையேடு என இந்த நூலை சொல்லலாம்.

ஆய்வு நூலுக்கே உறிய, செறிவான அடுக்குகள் கறாரான மொழி கொண்ட நூல் ஆயினும் எந்த பொது வாசகரும் இடர் இன்றி வாசித்து உள்வாங்கும் வண்ணம் சரளம் கொண்ட நூலும் கூட. தமிழண்டா என முஷ்டி முறுக்கி வானம் குத்தும், இளையோர் மத்தியில், சிந்தனை தேட்டம் கொண்டு மீறும் ஒரு சிலருக்கான நூல் இந்த தொல்பழங்காலம்.

கடலூர் சீனு

***

பொன்விழா கண்ட தமிழகத் தொல்லியல்ரவிக்குமார்
முந்தைய கட்டுரைதொல்காடுகளின் பாடல்
அடுத்த கட்டுரைதன்னம்பிக்கை மனிதர்கள் -கடிதங்கள்