பசவர், தமிழ் ஹிந்து – உளறல்களின் பெருக்கு

basava

இரா.வினோத் என்பவர் தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதிய மேற்கிலிருந்து பரவும் துப்பாக்கிக் கலாச்சாரம்: தபோல்கர் கொலை முதல் கவுரி லங்கேஷ் கொலை வரை... என்ற கட்டுரையை வாசித்தேன். உண்மையில்   இவர்கள் ஜூனியர் விகடன்களில் எழுதும்போது இன்னும்கொஞ்சம் தரமாக எழுதினார்களா என்ற எண்ணம் வருகிறது.

எதையாவது வாசிக்கிறார்களா? குறைந்தபட்சம் ஆங்கில இந்துவையாவது? இந்தத் தரத்தில் ஒருமைபன்மைப்பிழைகளும், முழுமையான தகவல்பிழைகளும் அசட்டுத்தனமான பொதுமைப்படுத்தல்களும் கொண்ட ஒரு கட்டுரையை இந்தியமொழிகளில் வேறெந்த நாளிதழாவது வெளியிடுமா? கூச்சமும் அருவருப்பும் உருவாக்கும் அறியாமை என்று அல்லாமல் இக்கட்டுரையை வேறெவ்வகையிலும் குறிப்பிடமுடியாது

ஒரு கட்டுரையை எழுதுவதற்கு முன் விக்கிப்பீடியாவையாவது பார்ப்பவர்கள் இப்படி எழுதமுடியுமா என்ன? “ கர்நாடக சமூக அரசியல் வரலாற்றில் ஒரே முற்போக்கு மையம் பசவண்ணர்”. என்ன அர்த்தம் இந்த வரிக்கு?

தமிழகத்தில் எட்டாம் நூற்றாண்டுவாக்கில் உருவாகி இந்தியாவெங்கும் சென்ற ஓர் அலையை பக்தி இயக்கம் என்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் அது பக்தியை முதன்மையாக முன்வைத்த ஞானிகளை உருவாக்கியது. அவர்கள் அன்றைய ஆசாரவாதத்திற்கும் பிரிவினைப்போக்குகளுக்கும் எதிரானவர்கள். ஆகவே சீர்திருத்தவாதிகள். அவர்களைத் தொடர்ந்தவர்கள் அமைப்புகளாக ஆனார்கள். காலப்போக்கில் துணைமதங்களாகவோ சாதிகளாகவோ ஆனார்கள்

அவ்வாறு உருவான பல மத இயக்கங்கள் இந்துமதத்திற்குள் உள்ளன. அத்தகைய இயக்கங்களான ராமானுஜர்,மத்வர், சைதன்யர், வல்லபர் போன்றவர்களின் அதே வரிசையில் வருபவர் பசவர். அவர் வலியுறுத்தியது சிவபக்தியை. அவர் உருவாக்கியது வீரசைவமரபுக்குள் ஒரு பிரிவை.. சைவமன்றி வேறுவழிபாட்டை தன் ஆதரவாளர்களுக்குத் தடைசெய்தார். கழுத்தில் சிவலிங்கத்தை கட்டித்தொங்கவிடும்படி ஆணையிட்டார். ஆகவேதான் அவர்கள் லிங்காயத்துக்கள் என அழைக்கப்பட்டனர்.  தமிழக சைவமரபின் நேரடியான நீட்சி அவர்.

லிங்கம் கட்டிய அனைவரையுமே தன்னவர் என அவர் ஏற்றுக்கொண்டார். ஆகவே அனைத்துச் சாதிகளிலிருந்தும் அவரிடம் சென்று வீரசைவ நோன்பை பெற்றுக்கொண்டார்கள் மக்கள்.  ஏறத்தாழ இதையே ராமானுஜரும் மத்வரும் வைணவர்களுக்குச் செய்தனர்.ஐந்துநாமங்களைச் சூடுபோட்டுக்கொள்ளுதல் முதலிய வைணவ அடையாளங்களை ஏற்றுக்கொண்ட அனைவரையும் இணைத்து தங்கள் பக்திமரபை உருவாக்கினர்

பக்தி மரபு பொதுவாக இந்தியாவின் அடித்தள மக்களைநோக்கிச் சென்றது. முதற்கட்டத்தில் அது வேதவேள்விகள், தத்துவ விசாரங்கள் போன்றவற்றுக்கு எதிராகவே அர்ப்பணிப்புள்ள பக்தியை முன்வைத்தது. ஆனால் காலப்போக்கில் அது பெரும் அலையாக மாறி மன்னர்களின் ஆதரவைப்பெற்றபோது மடங்களாக ஆகியது. ஆலயங்களை கைப்பற்றியது. வேள்விகளும் சடங்குகளும் உள்ளே வந்தன. இது இந்தியா முழுக்க ஏறத்தாழ ஒரேவகையில்தான் நடந்தது.

வீரசைவநெறியே கூட பசவருக்கு முன்னரே இருந்தது. அங்கே அது வசன இயக்கம் என கூறப்படுகிறது. அது பலநூற்றாண்டுகளாக இந்துமதத்திற்குள் வைதிக- வேள்வி மரபுக்கு எதிரானதாக இருந்துவந்த காபாலிகம் காளாமுகம் பாசுபதம் மாவிரதம் கங்காளம் வைரவம்   போன்ற ஆறு சைவ தாந்த்ரீக மதங்களில் இருந்து உருவான ஒர் இயக்கம். ஏறத்தாழ நம் சித்தர்மரபு போன்றது.வசனக்காரர்கள் எந்த அமைப்புக்களுக்குள்ளும் கட்டுப்படாமல் சுதந்திரமாக அலைந்து திரிந்தவர்கள். மானுடசமத்துவ நோக்கு கொண்டவர்கள். வேதவேள்விகளுக்கு எதிரானவர்கள்

பத்தாம்நூற்றாண்டில் தோன்றிய கன்னட வசன இயக்கம் ஏ.கே.ராமானுஜனால் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகப்புகழ்பெற்றது. தமிழில் வசன இயக்கப்பாடல்களை பாவண்ணன் மொழியாக்கத்தில் சொல்புதிது இதழில் வெளியிட்டிருக்கிறோம்.

வசன இயக்கத்தின் இறுதியில், வசன இயக்கத்தைச் சேர்ந்தவரான சென்னையாவின் மாணவராக வந்தவர் பசவர். அவர் வீரசைவ வழிபாட்டை ஓர் அமைப்பாக ஆக்கினார். அவருக்கு அன்றிருந்த தெற்குக் காலசூரி அரசமரபின் பிஜ்ஜளர் என்னும் மன்னரின் ஆதரவு இருந்தமையால் இது சாத்தியமாகியது.

பசவருக்கு முன்னரும் அவரது காலத்திலும் சைவபக்தியையும் சமூகசீர்திருத்தத்தையும் முன்வைத்த அக்கமகாதேவி, அல்லமா பிரபு போன்ற ஏராளமான ஞானிகள் இருந்துள்ளனர்.  வசன இயக்கத்திற்குள்ளேயே  சென்னய்யா போன்ற தலித் சாரணர்கள் இருந்துள்ளனர். அவர்கள் பசவரின் அமைப்புக்குள் செல்லவில்லை. அது தனி இயக்கமாகவே நீடித்தது.

“12-ம் நூற்றாண்டில் எழுச்சிபெற்ற பசவண்ணரின் லிங்காயத்து (வீரசைவம்) நெறி, இந்து மதத்துக்கு முற்றிலும் எதிரானது”  இது வினோத் என்ற இந்த வரலாற்றுமேதையின் வரி.

“பசவண்ணருக்குப் பிந்தைய சீடர்களின் வீழ்ச்சியால், பிராமணிய மடாதிபதிகள் லிங்காயத்துகளை இந்து மதத்துக்குள் உள்ளிழுத்துக்கொண்டனர். லிங்காயத்து நெறி, காலப்போக்கில் தன் புரட்சிகர இயல்பைத் துறந்து, இந்து மதத்தில் ஒரு சாதியானது. வேதங்களையும் கோயில்களையும் காக்க ஊர்கள்தோறும் லிங்காயத்து மடங்கள் பெருகின. எல்லா சாதியினரும் சேர்ந்து கன்னடக் கலாச்சாரத்தை இந்து மையப்படுத்திய சமூகமாகவும், மொழியை சம்ஸ்கிருதம் மையப்படுத்திய மொழியாகவும் வளர்த்தெடுத்தனர். இதனால் கடலோர மாக இந்துத்துவம் மகாராஷ்டிரத்திலிருந்து கர்நாடகத்துக் குள் இறக்குமதியானது”

இதெல்லாம் உண்மையிலேயே என்ன என்று எனக்குப்புரியவில்லை. இந்த உளறல்களை எல்லாம் இணையம்தான் பெருக்கியது. இன்று இணையத்திலிருந்து அச்சிற்குச் செல்கிறது இது. இனி இங்கே வரலாறே பேசப்படமுடியாதென்று தோன்றுகிறது.

இந்துமதம் என்று சொல்லப்படும் இந்த பெருந்தொகைக்குள் எப்போதுமே சீர்திருத்த இயக்கங்கள் உருவாகிக்கொண்டேதான் இருக்கின்றன. கண்மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப்போக வந்த வள்ளலார் , நாராயணகுரு வரை. வீரசைவம் இந்துமதம் அல்ல என்றால் வேறு எதுதான் இந்துமதம்?

வேதத்தை மையமாகக்கொண்ட மரபுகளும் வேதத்தை மறுத்தோ விமர்சித்தோ விலகும் மரபுகளும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு விவாதித்து முன்னகர்வதாகவே இந்துமதம் நாமறிந்த மூவாயிரமாண்டுகளாக இருந்துள்ளது. என்றும் வேதமறுப்புப்போக்கு இந்துமதத்திற்குள் உயிர்ப்புடன் இருக்கவே செய்யும்.

இந்துமதம் என்னும் அமைப்புக்குள் மூன்று பெரும் தத்துவப் போக்குகள் என்றும் உண்டு. வேதங்களை இறைவாக்குகளாக கொள்ளும் வைதிக மரபு. அதை புரோகிதமரபு என்றும் வேள்விமரபு என்றும் சொல்லலாம்.

இரண்டாவது மரபு வேதங்களை ஏற்று ஆனால் அவற்றை முன்னோடி ஞானநூல்கள் என்று மட்டுமே கொள்வது. அத்வைதம் இந்த மரபைச் சேர்ந்தது. அத்வைதம் வேதவேள்விச்சடங்குகளை நிராகரிப்பது. மதவழிபாடுகளை ஒதுக்கி இறைசார்ந்த தன்னுணர்வை முன்வைப்பது . மைய ஓட்டத்தைச் சேர்ந்த சைவமும் பெரும்பாலும் இந்நிலைபாடு கொண்டது.

மூன்றாவது மரபு, வேதங்களை முழுமையாக மறுப்பது. சைவ ,சாக்த தாந்த்ரீகமதங்களில் கணிசமானவை வேதவிரோதத் தன்மை கொண்டவை. இம்மூன்றுமே இந்துமதப்பிரிவுகளாகவே இரண்டாயிரமாண்டுகளாக இருந்துவந்துள்ளன.

இவற்றில் பசவரின் தத்துவம் இரண்டாவது மரபைச் சேர்ந்தது. அவர் வேதங்களை ஏற்றுக்கொள்கிறார். வேதங்களை ஒட்டியே தன் மரபை உருவாக்குவதாக தன் நூல்களில் திரும்பத்திரும்பச் சொல்கிறார். ஆனால் அவை மாறாத இறைவாக்குகள் அல்ல, ஞானநூல்கள் மட்டுமே என்கிறார்.

கர்நாடகத்திற்குள் சைவமும் வைணவமும் வேரூன்றிய வரலாற்றுச்செயல்பாடு கிபி இரண்டாம்நூற்றாண்டிலேயே முழுமைபெற்றுவிட்ட ஒன்று. தென்னகத்தின் மகத்தான சைவ, வைணவ ஆலயங்கள் அங்கே ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளிலேயே உருவாகிவிட்டன.  கன்னடநிலத்தில் உருவான முதல் வைதிகப்பேரரசு கிமு ஐந்தாம்நூற்றாண்டுவாக்கில் எழுந்த சாதவாகனப்பேரரசு. பின்னர் சாளுக்கியர்கள்,கங்கர்கள், காலச்சூரிகள்,ஹொய்ச்சாளர்கள் என இந்துப்பேரரசுகள் தொடர்ந்து அங்கே இருந்தன.அந்த பெரும்போக்குக்கு எதிராக எழுந்ததுதான் வசன இயக்கமும், பசவரின் பக்தியியக்கமும்

பசவரின் மடங்களை பிராமணர் கைப்பற்றிக்கொள்ளவுமில்லை. பசவரின் வீரசைவம் எப்போதும் மன்னர்களின் ஆதரவைச் சார்ந்தே இருந்தது. ஒருகட்டத்தில் அது தென்கன்னடத்தின் அரசமதமாகியது. மடங்கள் மன்னர்களின் ஆதரவால் உருவானவை. பெரும் சொத்துக்களும் அப்போது வந்தவை. பசவர் தன் அமைப்புக்குள் பூசைகளைச் செய்ய தனிப்பிரிவினரை உருவாக்கினார்.ஜங்கமர்கள் என்னும் இந்த வீரசைவப் பூசாரிகள் இன்று தங்களை தொன்மையான சைவப்பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

உண்மையில் ஜங்கம மரபு பசவருக்கு முன்னரே இருந்தது. பசவர் ஜங்கம மரபை ஒட்டி தன் வீரசைவமரபுக்குள் ஒரு ஜங்கமர் குலத்தை உருவாக்கினார் என்பவர்கள் உண்டு. அவர்களின் மைய ஆலயம் என்பது ஆந்திரத்திலிருக்கும் ஸ்ரீசைலம். இன்றும் பல்லாயிரக்கணக்கில் பாதயாத்திரையாக ஸ்ரீசைலத்திற்கு வீரசைவர் வந்துகொண்டிருக்கிறார்கள்.

லிங்காயத் என்பது இன்று ஒரு மதமல்ல, ஒரு சாதி. எல்லா சாதிகளையும்போல அது குட்டிக்குட்டிக் ‘கூட்டங்களின்’ தொகுப்பு. அந்த ஒவ்வொரு கூட்டமும் சொந்தமாக மடங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஆலயங்களை கட்டுக்குள் வைத்திருக்கிறது. சொத்துக்கள் கொண்டிருக்கிறது
நவீன காலகட்டத்தில் பசவமடங்களின் பெருந்தொழில் என்பது கல்வி. நூற்றுக்கணக்கான கல்விநிறுவனங்களை அவர்கள் நடத்திவருகிறார்கள். பசவரின் மரபை தனி மதமாகக் கோருபவர்கள் அந்த மக்களை அமைப்புரீதியாக கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பழைமைவாதிகளான மடாதிபதிகள். நிறுவனங்களை நடத்துபவர்கள். சென்றகாலத்தில் அத்தனை முற்போக்குச் சிந்தனைகளுக்கும் எதிராக இருந்தவர்கள்

பசவமடங்கள் பசவரை முற்போக்குக் கோணத்தில் எழுதிய எழுத்தாளர்களை சென்ற கால்நூற்றாண்டாக வேட்டையாடியிருக்கிறார்கள். டி.ஆர்.நாகராஜும் எச்.எஸ்.சிவப்பிரகாஷும் அவர்களால் அவமதிக்கப்பட்டனர். எச்.எஸ்.சிவப்பிரகாஷ் தெருவில் இழுத்துச்செல்லப்பட்டு மடாதிபதி முன் நிறுத்தபட்டு அவர்களால் தண்டிக்கப்பட்டார். கொல்லப்பட்ட கல்பூர்கி  கூட  பசவ மடங்களின் எதிர்ப்பால் துரத்தப்பட்டவரே.

சில ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணமடம் தன்னை இந்துமதம் அல்ல, தனிமதம் என அறிவித்துக்கொண்டது  ‘ராமகிருஷ்ண மதம்’ வேதவேள்விகளை ஏற்றுக்கொள்வதில்லை என்பதை முதன்மைவாதமாக முன்வைத்தது.நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. காரணம் சிறுபான்மை மதத்திற்கு அளிக்கப்படும் சலுகைகளைப்பெறுவது.  வீரசைவ மடங்களும் அந்தவழியை தாங்களும் கையிலெடுத்துக்கொண்டன. கல்லூரி இடங்களையும், ஊழியர் இடங்களையும் நிரப்பும் உரிமையை முழுமையாக எடுத்துக்கொள்வதே நோக்கம். இன்று நாராயணகுருவின் இயக்கத்திலும் அக்குரல் எழுகிறது.வள்ளலார் இயக்கத்தில் கல்லூரிகள் இருந்திருந்தால் அவர்களும் அவ்வாறு கோரக்கூடும்

இது ஓர் அரசியலாக ஆனது மிகச்சமீபத்தில். பி.எஸ்.எதியூரப்பா லிங்காயத்துக்களின் முதன்மைத்தலைவர், முதல்வராகவும் வாய்ப்புள்ளவர். அவருக்கு எதிராக லிங்காயத்துக்களின் வாக்குவங்கியில் பத்துசதவீதத்தை திருப்பினால்கூட அவரது வெற்றியை தடைசெய்ய முடியும். ஆகவே காங்கிரஸும் இடதுசாரிகளும் லிங்காயத் மடங்கள் தங்களை தனிமதமாக ஆக்கும்பொருட்டு கோருவதை ஆதரிக்கின்றன. பாரதியஜனதாவின் கொள்கையின்படி எதியூரப்பா அதை ஆதரிக்கமுடியாது. அவர் வசமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறார்.  இதுதான் சூழல்.

*

தமிழ் ஹிந்துவுக்கு மீண்டும் ஒரு மன்றாட்டு. தமிழில் ஓர் அறிவியக்கம் உருவாகக்கூடும் என்ற நம்பிக்கையை அளித்த இதழ் இந்து. அதை உங்கள் அறிவின்மையால் சிதைத்துவிடவேண்டாம். உங்கள் ஆசிரியர்குழுவினரே எல்லாவற்றையும் எழுதவேண்டாம். தகுதியானவர்களிடம் கட்டுரை கேட்டு வாங்கிப்போடுங்கள். அல்லது மொழியாக்கம் செய்யுங்கள்.

பாரதியஜனதாவுக்கு எதிராக எழுதுவதானாலும் சரி, இந்துமதத்திற்கே எதிராக எழுதுவதனாலும் சரி அது உங்கள் நிலைபாடு. ஆனால் அதையும் கொஞ்சம் வாசிக்கத் தெரிந்தவர்களிடம் வாங்கிப்போடுங்கள். அப்பட்டமான உளறல்களை கட்டுரை என பிரசுரிக்காதீர்கள். நீங்கள் நடத்துவது நாளிதழ், துண்டுப்பிரசுரம் அல்ல. இது முப்பதாண்டுகளாக இந்த அறிவுத்துறையில் செயல்படும் ஒருவன் உங்களை வணங்கிக் கேட்டுக்கொள்வது. கொஞ்சம் தயவுசெய்யுங்கள்.

முந்தைய கட்டுரைகௌரி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுக்கூ .இயல்வாகை – கடிதம்