தன்னம்பிக்கை மனிதர்கள்  

krish

[கிருஷ்ணன்]

ஈரோட்டில் கிருஷ்ணனிடமிருந்து குறுஞ்செய்தி ‘எனக்கு காய்ச்சல் வந்திருக்கிறது’. நான் அவரை அழைத்து “அப்படியே விட்டுவிடக்கூடாது கிருஷ்ணன், உடனே டாக்டரிடம் காட்டணும். மழைக்காலம் முடிஞ்சபின்னாடி வர்ர காய்ச்சல் ஆபத்தானது” என்றேன். “ஒண்ணுமில்லை, உடம்பு இரும்பா இருக்குல்ல” என்றார்.

மறுநாள் குறுஞ்செய்தி. “எனக்கு டெங்கு. கிராமிய மருத்துவம் பார்க்கிறேன்” [indigenous] மாலையில்தான் செல்பேசியை எடுத்தார். “டெங்குவா? பிளட் டெஸ்ட் பண்ணிட்டாங்களா?” என்றேன். “அதெல்லாம் இல்லை. சிம்ப்டம்ஸ் பாத்து முடிவு பண்ணினதுதான்” நான் கவலையுடன் “அப்டியா? ரத்தம் டெஸ்ட் பண்ணிப் பாக்காம முடிவுசெய்யமாட்டாங்களே” என்றேன்.

“இல்லையில்லை, சிம்ப்டம்ஸே தெளிவா போட்டிருக்கு” என்றார். நான் குழப்பத்துடன் “எங்கே?” என்றேன். ஆஸ்பத்திரியில் எழுதிவைத்திருப்பார்களா என்ன? இருக்கலாம், ஸ்வச்பாரத் இருக்கிற இருப்பில் மலம்கழிக்காதீர்கள் என பேருந்திலேயே எழுதியிருக்கிறார்கள். கிருஷ்ணன் “விக்கிப்பீடியாவிலே” என்றார். “அய்யயோ ” என்றேன் “விக்கிப்பீடியாவப்பாத்து டிரீட்மெண்ட் பண்ற டாக்டரா? என்ன கிருஷ்ணன் இது…”

“டாக்டர்லாம் இல்ல. நானேதான் சிம்ப்டம்ஸ பாத்து முடிவு பண்ணினேன்” எனக்குப் படபடப்பாக இருந்தது. “நீங்களேவா?” என்றேன். “ஆமா, விக்கிப்பீடியாவிலே தெளிவா இருக்கு…ஆர்ட்டிக்கிள் ஒன்ஃபார்ட்டி ஒன் பார் டூ…” நான் ”விக்கிப்பீடியா ரொம்பத் தெளிவுதான் கிருஷ்ணன். ஆனால் நாட்டுமருந்துன்னு சொன்னீங்க?” என்றேன்.

“ஆமா பப்பாளி எலைய மிக்ஸியிலே அரைச்சு நாலுவேளை குடிக்கிறது. செமகுமட்டல். ஆனா பலனிருக்கு” எனக்கு புரியவில்லை. “என்ன பலன்?” என்றேன். “கான்ஸ்டிபேஷனுக்கு நல்லது சார்… கிளீன்” அதையும் விக்கியில்தான் போட்டிருக்கிறார்கள். ஹீலர் பாஸ்கருக்கு அடுத்தபடியாக அதுதான் தமிழகத்தில் பிரபலமான மருத்துவமாம், மலச்சிக்கலுக்கு.

என்ன சொல்வதென்று தெரியவில்லை. “கிருஷ்ணன் நீங்கள் மாபெரும் கிரிமினல் லாயர்தான். கிரிமினல் லாயர்களெல்லாம் மேதைகளும்தான். ஆனா நோய் விஷயத்திலேயாவது ஒரு செகெண்ட் ஒபினியன் கேட்டிருக்கலாம்” என்றேன். உற்சாகமாக “கேட்டேனே. நேரா ஃபோன் போட்டு விலாவரியா கேட்டுத்தான் முடிவுபண்ணினேன்” என்றார்.

நான் ஒருநிமிட அமைதிக்குப்பின் “யார்கிட்டே கேட்டீங்க?” என்றேன். “ஈஸ்வர மூர்த்திகிட்டே. அவரே சொல்லிட்டார். பப்பாளி எலைகூட அவரே கொண்டுவந்ததுதான்” என்னால் பெருமூச்சுதான் விடமுடிந்தது. ஈஸ்வர மூர்த்தி கிருஷ்ணனின் நண்பரான இன்னொரு கிரிமினல் லாயர் “தயவுசெய்து டாக்டர பாருங்க. உங்களுக்காக இல்ல. டாக்டருக்காக” என்றேன்.

மறுநாளே டாக்டரைப்பார்க்கவேண்டியிருந்தது. இண்டிஜினியஸ் மெடிசினின் இயல்பான பின்விளைவுகளுடன் உடம்பெல்லாம் சிவப்பான தடிப்புகள் எழ கைத்தாங்கலாக [ஈஸ்வரமூர்த்தியின் கைதான்] படியேறிய கிருஷ்ணனை பத்தடித் தொலைவில் வைத்தே கண்டு மணல்வாரி அம்மை என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு முன்னரே ஆட்டோவிலேயே பப்பாளி இலையை அவர் சாப்பிட்டிருப்பது பரவலாகத் தெரிந்துவிட்டது.

மணல்வாரி அம்மைக்கு வேறு மருந்து. பப்பாளி இலைச் சாறு பிழிந்து ஃபிரிட்ஜில் வைத்தது வீணாகிவிட்டதே என கிருஷ்ணன் வருந்தினார். “மணல்வாரிக்கு அது கேக்காது இல்ல” என ஈஸ்வர மூர்த்தியிடமே கேட்டபோது பாரில் வேறு எவருக்காவது டெங்கு இருக்கிறதா என விசாரிக்கலாம் என இன்னொரு கைதேர்ந்த கிரிமினல் வக்கீலான ஈஸ்வரமூர்த்தி சொன்னார். ”ஆமாமா. சிம்ப்டம்ஸ வச்சு ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்” என்றார் கிருஷ்ணன்.

rajama

 [ராஜமாணிக்கம்]

இந்நிகழ்ச்சியை எங்கள் நண்பர் ஒருவர் கட்டிடப்பொறியாளரும் ஓய்வுநேர கல்வெட்டாய்வாளருமான ராஜமாணிக்கத்திடம் சொன்னார். ராஜமாணிக்கம் கொதித்துப்போய்விட்டார். “அறிவுகெட்டக் கூமுட்டத்தனம்னா இதுதான். லாயர்ஸுக்கே அறிவு கெடையாது. எப்பவுமே நோய் விஷயத்திலே மட்டும் நாமளே முடிவுசெய்யக்கூடாது. பெரிய டேஞ்சர்” என்று சொல்லி “பேசாம நல்ல ஒரு எஞ்சீனியர்ட்ட கேட்டிருக்கலாம்” என்றாராம்.

“மகாபாரதத்திலே மணல்வாரி அம்மைக்கு என்ன மருந்து சொல்லியிருக்குன்னா…” என கிருஷ்ணனிடம் என் கருத்தை கூப்பிட்டுச் சொல்லலாமா என யோசித்தேன். சரி, எங்கே போய்விடப்போகிறார், பார்ப்போம்.

***

முந்தைய கட்டுரைஇரண்டு செப்டெம்பர் ஐந்துகள்…
அடுத்த கட்டுரைஅலெக்ஸ் பற்றி…