தன்மீட்சி

jm2

[ஆக்கம் சங்கர் அவர்களுடன்]

அவ்வப்போது எழும் சலிப்பு ஒன்று என்னை சற்று சோர்வுறச்செய்வதுண்டு. என் இயல்பால் நான் அதை களைந்து சென்றுவிடுவேன், சென்றாகவேண்டும். அவ்வளவு வேலைகளை எப்போதும் குவித்து வைத்திருப்பேன். அவ்வளவு பயணத்திட்டங்களை வைத்திருப்பேன்.

வசைகள், அவதூறுகள், கருத்துத்திரிபுகள் வந்துகொண்டே இருக்கும். அதேயளவுக்கு எரிச்சலூட்டுவது அசட்டுத்தனமான மேட்டிமைவாதத்த்தின் தன்னம்பிக்கையுடன் எழுதப்படும் கடிதங்கள். ஆனால் அவற்றை  அதிகபட்சம் ஐந்து நிமிடங்களில் மிக எளிதாகக் கடந்துசென்றுவிடுவேன். இன்று ஓரு சிலமணிநேரமாவது நீடிக்கும் சோர்வு என்பது சில நண்பர்களிடமிருந்து வருவது.

IMG_9400

[ஔவை மணி அவர்களுடன் ]

ஏதேனும் நிலைபாடுகளுடன் என் எழுத்துக்களை வாசிக்கவருபவர்கள் இவர்கள். உடன்பாடான கருத்துக்களைக் கண்டு நட்பும் நெருக்கமும் கொள்கிறார்கள். எங்கேனும் ஒரு புள்ளியில் மாற்றுக்கருத்து எழுந்ததும் மூர்க்கமான வசைகளில் இறங்கிவிடுகிறார்கள். கிண்டல், திரிபு, அவதூறு என தீவிரம் கொள்கிறார்கள். இவர்களில் இந்துத்துவர்களே அதிகம். நான் இந்துத்துவன் என பிறர் சொல்வதை நம்பி வருபவர்கள் பின்னர் ஏமாற்றமடைகிறார்கள். அதேபோல இடதுசாரிக் கோணம் கொண்டவர்களும் பலர் சீற்றம்கொண்டு எதிரிகளாகிறார்கள்.

பெரும்பாலானவர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட நிலைபாடுகள் வழியாகவே அனைத்தையும் பார்க்கிறார்கள். அதில் தர்க்கமோ நுண்ணுணர்வோ பங்கு வகிப்பதில்லை. கணிசமானவர்களின் நிலைபாடுகள் பிறதரப்பின்மீதான வெறுப்பிலிருந்து உருவாகின்றவை, எந்தவகையான அழுத்தமான பற்றுகளும் அவர்களுக்கில்லை. வெறுப்பை மையமாக்கி நிலைகொண்டு அதன்பொருட்டு  பற்றுகளை மாற்றிக்கொண்டே இருக்க அவர்களால் முடியும். ஒரு நிலைபாட்டை ஆவேசமாக எடுத்துக்கொண்டால் எவரையும் சிறுமைசெய்ய, அவதூறும் வசையும் பொழிய உரிமை வந்துவிடுவதாக எண்ணிக்கொள்கிறார்கள்.

கருத்தியலைவிடவும் உண்மையில் இதில் பெரும்பங்கு வகிப்பது சாதி. தங்கள் சாதிக்கு எதிராக ஒரு மெல்லியவிமர்சனத்தைக்கூட இன்றுள்ளவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. அதன்பின் மதம். அதன்பின் அமைப்புசார்ந்த ஈடுபாடு. அன்றாடச் சுயநலங்கள். பொதுநலம், சமூகப்பிரக்ஞை, அறிவியக்கம் என்றெல்லாம் காட்டப்படும் பாவனைகளுக்கு அடியிலிருப்பது வெறும் ஆணவமும் குழுப்பற்றும் மட்டுமே.

nan

[நந்தகுமார் அவர்களுடன்]

நான் ஆச்சரியப்படுவது, என் எழுத்துக்களை வாசித்து அணுக்கமாகிறவர்கள்,  அவற்றுடன் பல ஆண்டுகள் நீளும் உரையாடலை வளர்த்துக்கொண்டவர்கள், தனிப்பட்ட நட்புடன் நீடிப்பவர்கள், ஒரே ஒரு கட்டுரை தனக்கு உடன்பாடானது அல்ல என்பதனால் நான் அயோக்கியன் என எப்படி முடிவுசெய்து கொள்கிறார்கள் என்றுதான்.  அவர்கள் அதை உள்ளூர எப்படி நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்?

கருத்தியலும் நம்பிக்கையும் மனிதர்களை வெறுப்பும் காழ்ப்பும் கொண்டவர்களாக ஆக்கிவிடும். எந்தவகையான அறமும், மெல்லுணர்வுகளும் அவர்களை தடுத்து நிறுத்தாது. இது உலகமெங்கும் நிகழ்வது. நான் பின்தொடரும்நிழலின் குரல் நாவலில் விரிவாகப்பேசியது இது. ஆனால் என்னை வாசிப்பவர்கள் அதையும் அறிந்துதானே வருகிறார்கள்?

அப்படியென்றால் இந்த எழுத்துக்கள் அவர்களிடம் எந்தவகையிலும் ஊடுருவவில்லையா? அவர்கள் உள்ளே வந்தபோதிருந்த அதே நிலைபாட்டுடன் வெளியே செல்கிறார்கள் என்றால் இவை அவர்களிடம் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லையா? அப்படி உருவாக்காது என்றால் எழுதுவதனால் என்ன பயன்? இது அவர்கள் மீதான கோபமோ வருத்தமோ அல்ல. அவர்கள் எனக்கு ஒருபொருட்டே அல்ல. என்னுள் எழும் என் எழுத்தின்மீதான அவநம்பிக்கை.

me1

அதை உடனே கடக்கும்பொருட்டு நான் சொல்லிக்கொள்வது இதுவே.   அவை எவரையும் எதுவும் செய்யவில்லை என்றே கொள்வோம். குறைந்தபட்சம் என்னை மாற்றியிருக்கின்றன. நான் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். திரும்பி நோக்கும்போது எழுதிய காலங்களைப்போல இனியவை வேறில்லை என உணர்கிறேன். இந்தப்பேறு உலகில் மிகச்சிலருக்கே வாய்க்கிறது. அது போதும்.

செப்டெம்பர் ஆறாம்தேதி உண்மையில் ஒரு பெரிய மனநிறைவின் நாள். எழுத்தின் உண்மையான மதிப்பை நானே உணர்ந்த தருணம். இத்தகைய தருணங்கள் அடிக்கடி அமைந்தபடியே உள்ளன, ஆனால் நமக்கு  மேலும் மேலும்   தேவையாகிறது அது  நண்பர் ஸ்டாலின் காந்தியக் கொள்கைகளை ஏற்று சூழியல், இயற்கை வேளாண்மை தளங்களில் பணியாற்றும் இருபது நண்பர்களைச் சந்திக்க அழைத்திருந்தார். திருப்பரங்குன்றம் குடைவரைக்கோயிலில் அச்சந்திப்பு நிகழ்ந்தது.

குக்கூ அமைப்பைச் சேர்ந்த ஸ்டாலின் என் நண்பர். மின்னணுப் பொறியியல் படித்துவிட்டு அதில் பணியாற்றியவர். மேலும் ஆக்கபூர்வமான ஒரு வாழ்க்கையை வாழும்பொருட்டு அதை விட்டுவிட்டு குக்கூ அமைப்புடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டார். இப்போது கிராமியத் தொழில்களை மீட்டமைப்பது சார்ந்து பணியாற்றிவருகிறார். கருப்பட்டிக் கடலைமிட்டாய் உருவாக்கும் இவருடைய திட்டம் பற்றி முன்னரே இத்தளத்தில் வந்துள்ளது வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது அது

ஸ்டாலினின் நண்பர்கள் அனைவருமே வெவ்வேறு வகைகளில் அவரைப்போன்றவர்கள். வெறும் சொல்லாடிகள் அல்ல, செய்து காட்டியவர்கள். வாழ்க்கையை சொல்லுகேற்ப அமைத்துக் கொண்டவர்கள். அவர்கள் அனைவரையுமே ஏதோ ஒருவகையில் குக்கூ சிவராஜ் பாதித்திருக்கிறார். காந்தி வழிகாட்டியாக அமைந்திருக்கிறார். அவர்களின் சிந்தனைகளில் என் எழுத்தின் செல்வாக்கு இருக்கிறது

IMG_20170906_123713

என் எழுத்துக்களால் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்களை, அவர்கள் தங்களை பிறிதொருவகையில் அமைத்துக்கொண்டதைப்பற்றி அவர்கள் சொல்லிக் கேட்டபோது எழுதுவதென்னும் செயல்மேல் ஆழமான நம்பிக்கையை மீண்டும் அடைந்தேன். பொதுவாக பொதுவெளியில் ஏதேனும் நிலைபாடுகள் எடுத்துக்கொண்டு சலம்புபவர்கள் வெறுக்கத்தக்கச் செயலின்மை கொண்டவர்கள். சுயநல வாழ்க்கையில் ஊறியவர்கள். எளிய பயணங்களைச் செய்து தாங்கள் சொல்வதை நேரில்காணும் அளவுக்குக்கூட அக்கறையற்றவர்கள். அவர்களே நம் கண்ணுக்குப்பட்டு சூழல் குறித்த அவநம்பிக்கையை உருவாக்குகிறார்கள். அவர்களுக்கு மிக அப்பால் தீவிரமான அர்ப்பணிப்புடன் தங்கள் தளங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இந்நண்பர்கள்.

பொறியியலை உதறிவிட்டு கைத்தறிநெசவுக்குத் திரும்பி அதில் நுட்பமான பல சாதனைகளைச் செய்துவரும் சிவகுருநாதன்  என் படைப்புகளுடனான தன் உறவைப்பற்றிப் பேசினார்.  சுயம்புச்செல்வி பொறியியலாளராகப் பணியாற்றுகிறார். குக்கூவுடன் இணைந்து கிராமப்புற குழந்தைகளுக்கான பணிகளில் ஈடுபடுகிறார். அறுவைசிகிழ்ச்சைக்கான கருவிகளுக்குரிய மென்பொருள் எழுதுபவரான நேசன் இன்று முழுநேர ஊழியராக மாற்றுக்கல்வி இயக்கத்தை முன்னெடுப்பதில் ஈடுபட்டிருக்கிறார். அவர்கள் என் எழுத்துக்களினூடாகப் பெற்றுக்கொண்டதைச் சொன்னார்கள்.

காந்தியவழியில் வாழ்க்கையை ஒரு சேவையாக ஆக்கிக்கொண்டவர்  ஆக்கம் சங்கர். உயிர்மவேதியல் நிபுணரான அவர் இன்று கிராமப்புற மாணவர்களின் கல்விக்காகப் பணியாற்றிவருகிறார். நந்தகுமார் அவர்கள் உள்ளாட்சி மற்றும் கிராமியப்பொருளியல் தளங்களில் பணியாற்றிவருகிறார். கோயில்பட்டியைச் சேர்ந்த ஔவை மணி நெசவாளர். ஜோல்னா பைகள் செய்வதில் ஈடுபட்டுவருகிறார். அவர்களை குக்கூ கௌரவித்ததில் நான் கலந்துகொண்டேன்

என் சிற்றுரையில் இன்று மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டேன். ஒன்று, எதிர்மறைச்செயல்பாடாக நம் வாழ்க்கையை ஆக்கிக்கொள்ளாமலிருப்பது.  எதற்கு எதிராக நாம் செயல்பட்டாலும் சோர்வும் அவநம்பிக்கையும் கசப்பும் கொண்டவர்களாகவே எஞ்சுவோம். நாம் எதிர்ப்பது எத்தகைய அநீதியானாலும் எந்தவகை தீமையானலும் சரி. எதிர்மறை மனநிலையே அடிப்படையில் கசப்பு கொண்டது. நம்செயல்பாடுகள் நேர்நிலை இலட்சியங்கள் கொண்டதாகவே இருக்கவேண்டும். அது கடினமானது, ஆனால் இலக்கு அதுவே.

எச்செயல்பாடும் மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். இல்லையேல் நெடுங்காலம் அதில் ஈடுபடமுடியாது. செய்யும்தோறும் நம்மை ஈடுபடுத்தி நிறைவளிப்பதாகவே அது அமையவேண்டும். சிரிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் உரியதாகவே சேவைகளும் இருக்கவேண்டும். அப்படி ஒரு கொண்டாட்டநிலை நம் செயல்களில் உள்ளதா என்பது முக்கியமான அளவுகோல்

நாம் செய்தவற்றால் வெளியே என்ன நிகழ்ந்தது என்பது நம் கேள்வி அல்ல. காந்தி மீளமீள கீதையைச் சுட்டிக்காட்டியது அதனால்தான். நாம் என்னவானோம் என்பதே நமக்கு முக்கியம். நம் செயல்களின் விளைவை நம்மால் ஒருபோதும் மதிப்பிட்டுவிடமுடியாது. அந்தந்த மனநிலை சார்ந்தே அந்த மதிப்பீடு நிகழும். நாம் நமக்குரிய வாழ்க்கையை தேர்ந்துகொண்டோம் என்றால் நம் தன்னறத்தை ஆற்றினோம் என்றால் நம் வாழ்க்கையை அர்த்தபூர்வமாக, மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறோம். அதுவே நம்மளவில் போதுமானது.

அதற்குப்பின் கேள்விகள் வழியாக உரையாடல்கள். காந்தியத்தின் வெற்றிதோல்வி குறித்து, கல்வி குறித்து.  கலந்துரையாடலுக்குப்பின் இயல்வாகை சார்பில் சாவி எழுதிய நவகாளி யாத்திரை என்னும் நூல் வெளியிடப்பட்டது.

மதியம் நாகர்கோயில் திரும்பினேன். செல்லும்போதிருந்த இடத்திலிருந்து நெடுந்தொலைவுக்கு வந்துவிட்டிருந்தேன். நான் சொன்னவை எனக்கே சொல்லிக்கொண்டவை.

=====================================================

E-mail id :
[email protected]
For Facebook link :

பேஸ்புக் இணைப்பு

ஸ்டாலின்.பா

(9994846491).

====================================================

இயற்கைக் கடலைமிட்டாய்
உன்னால் முடியும்: பாரம்பரிய சுவையைத் தேடி ஒரு பயணம்
ஜே.சி.குமரப்பா நூல்கள்
சத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)

முந்தைய கட்டுரைமதுரை சொற்பொழிவு
அடுத்த கட்டுரைரப்பர் முதல்…