கௌரி, மீண்டும்…

 

Gauri_Lankesh_FB2

 

கௌரி லங்கேஷ்

அன்புள்ள ஜெயமோகன்,

 

கெளரி லங்கேஷ் கொலையானது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதும், கொலையாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியதிலும் எவருக்கும் மாற்றுக் கருத்தே இருக்கவியலாது, கொலையாளிகள் யாராக இருப்பினும்.

 

ஆனால் அவர் கொலை செய்யப்பட்டு, ரத்தத்தின் ஈரம் உலர்வதற்குள்ளாகவே, பாஜக/ஆர்.எஸ்.எஸ்ஸைக் குற்றம் சாட்டுவதும், நரேந்திர மோதியைக் கழுவிலேற்ற முற்படுவதுமான சமூக வலைத்தளங்களின் காழ்ப்பைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சமூக வலைத்தள அறிவுஜீவிகள் மட்டுமல்லாது, தமிழக எதிர்க்கட்சித் தலைவரே கூட, வலதுசாரித் தீவிரவாதம் வளர்கிறது; பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றெல்லாம் அறிக்கை விடுகிறார், இவர்கள் குடும்பத் தகராறில் மதுரையில் மூன்று ஜீவன்கள் பலியானதைப் பற்றிய கிஞ்சித்தும் ப்ரக்ஞையின்றி! இம்மாதிரியான நோய்க்கூறின் மூலத்தைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

கொலை செய்யப்படுவதற்கு முந்தைய தினம், கெளரி லங்கேஷ் ட்விட்டரில் ஓரிரு கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

 

“நாம் ஏன் நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்? நம்முடைய எதிரி யாரென்பது நமக்குத் தெரியும், அவர்களை நோக்கித்தான் நாம் போராட வேண்டும்! ஒருவரையொருவர் எச்சரிக்கை செய்து கொள்வோம், ஆனால் காட்டிக் கொடுக்கக் கூடாது, அமைதி தோழர்களே….என்று ட்வீட்டியிருந்தார்””.

 

தீவிர நக்ஸல் ஆதரவாளர் என்று அறியப்படுபவர், ஒரு வழக்கில் பிணையில் இருக்கிறார், இம்மாதிரி கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்; கொல்லப்படுகிறார்….ஆனால் பூர்வாங்க விசாரணை துவங்கும் முன்னரே தீர்ப்பெழுதும் போக்கு ஏன்?

 

ஆனால் இதே போன்ற அறிவுஜீவிகள் தமிழகத்தில் வலதுசாரிச் செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்ட போதும், கேரளத்தில் வலதுசாரிகள் கொல்லப்படும்போது கனத்த மெளனம் காக்கின்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். இவர்களது பிரச்சனைதான் என்ன? இதில் மதச்சார்பின்மை வேறு!

 

அன்புடன்,

 

 

பாஷ்யம்.

 

அன்புள்ள பாஷ்யம் அவர்களுக்கு

 

நீங்கள் அரசியல்தரப்பினரா  என தெரியவில்லை, ஆகவே இக்கடிதம். அரசியல்தரப்பினரிடம் பேச எனக்கு நேரமில்லை. எந்தத்தரப்பினராக இருந்தாலும்.

 

இந்தக் கோணம் முதல்பார்வையில் உங்களுக்கு ஏதோ சில நியாயங்கள் கொண்டது  எனத் தோன்றும், ஆனால் நேர்மையாக நோக்கினால் இதிலுள்ள மாபெரும் அறப்பிழைகள் தெரியும்.

 

கௌரியின் கொலையை ஒரு கொலை எனஎடுத்துக்கொள்வது முதல்பெரும் பிழை. அது ஓர் அரசியல்கொலை. கருத்துத்தரப்பில் செயல்படும் ஒருவர்,  சிந்தனைத் தளத்தில் மட்டுமே செயல்படுபவர், கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய கொலைகள் வெறுமே  ‘குற்றங்கள்’ அல்ல. அவை ஜனநாயகத்தின் மதிப்பீடுகளை, சமூகத்தின் ஒழுங்கை, அடிப்படை நம்பிக்கைகளைச் சிதைப்பவை. அவற்றை ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களாகவே கருதவேண்டும்.

 

ஆகவே நாம் ஒவ்வொருவருக்கும் எதிரான நடவடிக்கை இது. நம் முன்னோர் நமக்களித்தவற்றை அழிப்பது. நம் கொடிவழிகளுக்கு உரிமைப்பட்டவற்றை மறுப்பது. நம் அறம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது.

 

ஆகவே அவரைக் கொலைசெய்தது எவர் என்னும் வினா எழுவதும் அவரை ஒழித்துக்கட்ட விழைபவர்கள் நோக்கி முதல்ஐயம் திரும்புவதும் மிகமிக இயல்பானது. அவர்கள் தங்களை நிரூபித்துக்கொள்ளத்தான் வேண்டும். அவருடைய செயல்பாடுகள் சென்ற இருபதாண்டுகளில் எவருக்கு எதிராக முனைகொண்டிருந்தன, எவர் அவரை முதன்மையாக எதிர்த்தனர் என்பதுதான் முக்கியமான கேள்வி.

 

அவரை கிரிமினல் என்று சாதாரணமாக எழுதுபவர்களை கண்டு அருவருக்கிறேன். கௌரி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டது திருட்டுக்கோ கொலைக்கோ அல்ல பாரதிய ஜனதாவினர் தொடுத்த அவதூறு வழக்குக்காக. அவரது குற்றச்சாட்டு ஒன்றை நீதிமன்றத்தில் அவரால் நிரூபிக்கமுடியவில்லை. பெரும்பாலான தருணங்களில் அரசியல்குற்றச்சாட்டுகளை ஐயம்திரிபற நீதிமன்றத்தில் நிரூபிக்கமுடியாது.நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவேண்டியவற்றை மட்டுமே சொல்லவேண்டும் என்றால் நீதிமன்றமே போதும், இதழியல் தேவையில்லை.

 

அடுத்த கேள்வி, அவர் வேறு எவராலாவது கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்பது. சாத்தியம்தான். ஆனால் அது அல்ல விவாத மையம். அவருடைய கொலை ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதலா என்பதே. அவருடைய டிவிட்டர் விவாதங்களெல்லாம் எளிய பூசல்களைப்பற்றியே. கொலைவரைச் செல்லும் வன்மங்களோ  மிகப்பெரிய சொத்துப்பூசல்களோ ஒன்றுமல்ல அவை. அவரை இந்துத்துவ அமைப்புகள் கொன்றிருக்கலாம் என்ற ஐயத்தை அத்துமீறல் என நினைக்கும் நீங்கள் மிக எளிதாக ஒரு டிவிட்டரை வைத்து அவரை நண்பர்கள் கொன்றிருக்கலாம் என வாதிடுவதன் அபத்தம் உங்களுக்கு உறைக்கவில்லையா என்ன?

 

எதிர்க்கட்சிகளைப்பற்றி. எதிர்க்கட்சிகள் இத்தருணத்தில் முழுமூச்சாக இந்துத்துவ அமைப்புகளை, அரசை எதிர்க்கவேண்டும். அழுத்தம் அளிக்கவேண்டும். அரசியல்லாபம் கிடைக்குமென்றால் அதற்கும் முயலவேண்டும். எதிர்க்கட்சி என்னும் அமைப்பே அதன்பொருட்டு ஜனநாயகத்தில் உருவாக்கப்பட்டதுதான். எதிர்க்கட்சிக்கும் ஆளும்கட்சிக்குமான மோதலின் முரணியக்கமே ஜனநாயகம் என்பது. அவர்கள் தங்கள் பணியைச் செய்கிறார்கள்.

 

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை, எதிர்ப்பை  ஜனநாயகபூர்வமாக எதிர்கொள்வதும் தன்னை நிரூபித்துக்கொள்வதும்தான் மத்திய ஆளும்கட்சியின் பணி. அது அரசைக் கையாள்கிறது என்பதனாலேயே மிகமிகக் கடுமையாக எதிர்க்கப்படவேண்டும். அந்த எதிர்ப்பே அரசு என்னும் வரம்பில்லா அதிகாரத்தை கட்டுக்குள் வைப்பதற்கான ஜனநாயகத்தின் ஏற்பாடு. உலகமெங்கும் ஜனநாயகம் என்பது அதுவே. நேற்றுவரை பாரதியஜனதா செய்ததும் அதுவே.

 

ஆம், மதுரையில் மூவர் கொலைச்செய்யப்பட்டனர். அதுவும் ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும் எதிரான செயல்பாடே. அக்குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாததும் அதில் நம் ஊடகங்களும் அரசியலாளர்களும் காட்டும் மௌனமும் கண்டிக்கத்தக்கவையே.

 

ஆனால் அவர்கள் கௌரி போல ஒரு கருத்தியல்நிலைபாடு கொண்டவர்கள்,ஒரு தரப்பின் குறியீடாக ஆனவர்கள் அல்ல. மதுரைக்கொலைகளில் மௌனம்சாதிப்பவர்கள் கௌரி கொலையை எதிர்ப்பது நியாயமற்றது. ஆனால் அவர்கள் எதிர்க்கட்சிகள், அப்படித்தான் செய்வார்கள். அவர்கள் அப்படிச் செய்வதனால் பொதுவான நிலைபாடு கொண்டவர்கள் கௌரி கொலையை எதிர்ப்பவர்கள் நேர்மையற்றவர்கள் என நினைக்கவேண்டியதில்லை. இன்று கௌரி கொலைக்கு எதிராகத் திரளும் அத்தனை விசைகளையும் தொகுப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது.

 

நீ அப்போது அப்படிச் சொன்னாய் அல்லவா என்பதெல்லாம் வெறும் அரசியல் வாதங்கள். எதையும் அப்படிப்பேசி மழுப்பமுடியும். நீ மட்டும் யோக்கியமா என்பதைப்போல அயோக்கியத்தனமான கேள்வியே வேறில்லை – அதுவும் அதிகாரத்தை வென்றுவிட்ட தரப்பிலிருந்து எழுகையில்

 

கடைசியாக, கேரளத்திலோ வேறு இடங்களிலோ இடதுசாரி-  வலதுசாரிப் பூசல்கள் நிகழ்கையில் நடக்கும் கொலைகளுக்கும் கௌரி கொலைக்கும் பெரும் வேறுபாடுண்டு.இரு தரப்பும் கொலைகளைச் செய்தார்கள் என்றாலே அது ஒருவகையில் போர்தான். தாக்குதலில் ஈடுபடும்போதே தாக்கப்படுவதற்கான வாய்ப்பையும் ஒருவர் ஈட்டிக்ள்கிறார். பொதுவாக அந்தக் குற்றங்களைக் கண்டிக்கத்தான் வேண்டும்.

 

ஆனால் அக்குற்றங்களில் கொல்லப்படும் ஒருவரின் இறப்பும் ஒரு கருத்தியல்தரப்பாகச் செயல்பட்ட சிந்தனையாளரின் இறப்பும் சமானமானது அல்ல. மானுட உயிர் சமம்தான். ஆனால் குற்றம் அது உருவாக்கும் பாதிப்புகளால்தான் மதிப்பிடப்படுகிறது. கௌரியின் கொலை ஒரு குற்றம் மட்டும் அல்ல, ஒரு குறியீடும்கூட. சிந்தனைத்தளத்தில் செயல்படும் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். நீங்கள் மரபார்ந்த சிந்தனை கொண்டவர் என்றால் இப்படி யோசியுங்கள், ஒரு குடிமகனின் கொலைக்கும் போர்வீரனின் கொலைக்கும் என்ன வேறுபாடு? ஒரு தளபதி கொல்லப்படுவதற்கும் அமைச்சன் கொல்லப்படுவதற்கும் என்ன வேறுபாடு? ஒரு ரிஷியின் கொலை வெறும் கொலை மட்டும்தானா? ஓர் அன்னை கொலை செய்யப்பட்டால் அது கொலையா நிலமகள் மீதான பழியா?

 

ஆம், என்னைப்பொறுத்தவரை அதே வயதுள்ள ஓர் ஆண் இதழாளர் கொல்லப்படுவதை விட இது இன்னும் பலமடங்கு பெரிய குற்றம். பெரும்பழி. ஒரு முதியபெண்மணி அவருடைய அறிவுச்செயல்பாட்டின்பொருட்டு திட்டமிட்டுக் கொல்லப்படுவதென்பது எங்கெங்கோ நம் கீழ்மையைக் கட்டிப்போடும் மரபின் சரடுகளை நாம் அறுப்பதுதான். நம் எல்லைகளை மீறுவதுதான்.

 

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக எல்லைகள்  மீறப்பட்டுதான் வெறும் ரத்தவெறியாட்டாக வரலாற்றுப்பரப்பு மாறுகிறது. இது சென்றுநிற்கும் இடம் இங்கே ஐ.எஸ்.எஸ் போன்ற ஓர் அடிப்படைவாதக் கொலைவெறி இயக்கம் இந்துத்தரப்பில் உருவாவதில் மட்டும்தான்

 

இதைச்செய்தவர்கள் இத்தேசத்தின் ஆன்மாவில் பாவத்தைப் படியச்செய்கிறார்கள். இவ்வுணர்வு உண்மையிலேயே புரியவில்லை என்றால், ”கொலை கண்டிக்கத்தக்கது ஆனால்…”: என பேச ஆரம்பிக்கிறார்கள் என்றால், மிக அபாயகரமாக மனசாட்சி கறைபடியத் தொடங்கிவிட்டவர்கள் அவர்கள்.

Rajanit

சமானமான ஒரு சந்தர்ப்பம் நினைவிலெழுகிறது. 1989 ல் ராஜினி திரணகமே கொல்லப்பட்டபோது அந்தநாளில் இனி ஒருபோதும் புலிகள் என்னவர் அல்ல என முடிவெடுத்தேன் – அன்று நான் புலி ஆதரவாளன். ஆதரவாகப் பல பக்கங்கள் எழுதிக்குவித்திருக்கிறேன். அன்று என் ஈழநண்பர்களில் கணிசமானவர்கள் எனக்கு மிகநீளமான விளக்கங்களை, நியாயப்படுத்தல்களை எழுதினார்கள். ’ஒவ்வொரு சொல்வழியாகவும் மேலும் கீழ்மைகொள்கிறோம்’ என்றே நான் மறுமொழி எழுதினேன்.  எந்த நண்பரை இழக்கவும் நான் வருந்தவில்லை அன்று.

 

அன்று மீறப்பட்ட எல்லைகள் மீண்டும் மீண்டும் அகன்று சென்றன. அன்று  “அறமும் கருணையும் அல்ல, வெற்றியே போரின் வழி” என என்னிடம் சொன்னவர்கள் தங்கள் மீதும் அந்த எல்லைமீறல் திரும்பியபோது  மானுட அறத்தை நோக்கி மன்றாட்டை எழுப்பியதை நாம் காணவைத்தது வரலாறு. அன்று அவ்வாறு எனக்கு எழுதியவர்கள் பலர் இன்று அச்சொற்களை எண்ணி எண்ணி வருந்துபவர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.

 

இப்போதும் அதுவே – தர்க்கங்களுக்கு அப்பால் சென்று தாய்முலைப்பாலைக்கொண்டு உணரும் சில உண்மைகளுண்டு. உணரமுடியாவிட்டால் நீங்களே ஒருநாள் அந்த உண்மையை நோக்கியே காப்பாற்றும்படி அபயக் குரலெழுப்புவீர்கள். உங்கள் குழந்தைகளை நெஞ்சோடணைத்தபடி.

ஜெ

 

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

இன்று கன்னட எழுத்தாளரும் ,பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ்  அவர்கள் படுகொலை  செய்யப்பட்டதை கண்டித்து எழுதியிருந்தீர்கள்.அதில்

 

இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் நிகழ்ந்த அதே அரசியல்பரிணாமம் இங்கும் இந்து அடிப்படைவாதத்தால் தொடங்கப்பட்டுள்ளது என்பதையே இக்கொலைகள் காட்டுகின்றன.”என்று கல்பூர்கி போன்றவர்கள் கொலை செய்யப்பட்டதையும் தொடர்பு படுத்தி குறிப்பிட்டுஇருந்தீர்கள்.ஆனால் இந்தக்  கொலையில் ‘நக்சல்களின்’ தொடர்பு  இருக்கலாம் என்றும்  செய்தி வந்துள்ளது.எனவே பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.ஒருவேளை நீங்கள் சந்தேகிப்பதுபோல் இதில் இந்து அடிப்படைவாத அமைப்புகளின் கைகள்  இருந்தால் கண்டிக்கப்படவும்,முளையிலேயே கிள்ளியெறியப்படவும் வேண்டும். அது தேசநலனுக்கு மிக அவசியம்.

 

Why Gauri Lankesh’s brother thinks both Naxal, Hindu extremist angles should be looked into

அன்புடன்,

 

 

அ .சேஷகிரி.

 

அன்புள்ள சேஷகிரி,

 

கௌரிக்கும் அவரது மூத்தவருக்குமான பூசல் அனைவரும் அறிந்தது. அவர் கௌரியின் அரசியலை முழுமையாக நிராகரிப்பவர்.

 

ஆம், இருக்கலாம். ஒருவேளை வேறு தரப்பினர் செய்திருக்கலாம். ஆனால் அதுவரை இது இந்து இயக்கங்களின் பழியே. அவர்கள் தங்களை நிரூபிக்கவேண்டிய இடத்தில் இருக்கிறார்கள்

 

பொறுத்திருந்து பார்க்கும் விஷயம் அல்ல இது

 

ஜெ

 

பிகு

 

இவ்விவாதத்தை முடித்துக்கொள்கிறேன். இதற்கப்பால் தெளிவாகச் சொல்ல என்னால் முடியாது. இதற்கப்பால் விவாதிப்பவர்களிடம் சொல்லவோ கேட்கவோ எனக்கு ஏதுமில்லை

 

ஜெ

முந்தைய கட்டுரைகௌரி லங்கேஷ்
அடுத்த கட்டுரைநாகம் -கடிதம்