அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களது படைப்புகளை வாசிக்க தொடங்கிய நாட்களை திரும்ப திரும்ப நினைத்து பார்கின்றோம்.நேரில் சந்தித்து உங்களின் உரையாடலை கேட்ட பொழுதுகளை,வருடங்கள் கடந்து விட்ட போதிலும் “யானை டாக்டர்” கதையினையும் அதன் வழியே பெற்ற மன எழுச்சியயையும் அதை பலதரப்பட்ட நண்பர்களிடம் கொண்டு சேர்த்த்தின் மூலமாக பெற்ற நல்ல அனுவங்களின் வழியே உங்களுடன் இன்னும் மிக அனுக்கமாக நெருங்கினோம்.
கோவையில் நாஞ்சில் நாடன் அவர்களின் இல்லத்தில் உங்களுடனான முதல் சந்திப்பு,சாலை விபத்தில் கால்கள் சிதைந்து போன சிறுமி கீர்த்தனாவை அழைத்து வந்திருந்தோம்.அழகேஸ்வரி அக்கா,கெளதமி என பல நண்பர்களும் கலந்த கொண்ட அதே நாளில் வானதி மற்றும் ரேவதி அக்கா முதன் முதலாக உங்களை சந்தித்து அஜிதனுக்கு பிறந்த நாள் பரிசாக குட்டி இளவரசன் புத்தகத்தை அவர்கள் கைகளினால் கொடுத்தார்கள்.தற்பொழுது கீர்த்தனா பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்த படியே படித்து இந்த வருடம் பத்தாவது தேர்வு எழுதுகிறாள்.
அறம் கதைத் தொகுப்பு மனிதர்களில் ஒருவரை கண்டது போலவே,திருப்பூர் காது கேளாதோர் பள்ளி முருகசாமி அய்யாவை நாங்கள் கண்டடைந்தோம்.அவரின் கைகளினாலேயே குக்கூவின் அந்த வருடத்திற்கான முகம் விருதினை உங்களுக்கு கொடுத்த அந்தக் குளிர் கால டிசம்பர் நாளும் அன்று அந்த ஒட்டு மொத்த குழந்தைகளும் எழுப்பிய சந்தோச மெளன கூச்சல் இன்றும் காதில் ஒலிக்கிறது.கடந்த மூன்று நான்கு மாதங்களாக.அந்த பள்ளியும் முருகசாமி அய்யாவும் சந்தித்து வரும் பெரும் நெருக்கடியினை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.உங்களின் கடிதங்கள் வழியாகவும் நண்பர்கள் மூலமாகவும் நீங்கள் அளிக்கும் தார்மீக ஆதரவும்,அக்கறையும் பெரும் நன்றிக்கடனுக்குரியது.
உங்களின் படைப்புகளும்,நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்கும் தளங்களும்,ஆளுமைகளும் என இணையத்தின் வழியே மிக நெருக்கமாக உங்களினை தொடர்கின்றோம்.
நண்பர்கள் ஒவ்வொருவரும் இன்றைய காந்தி புத்தகம்,காந்தி டுடே இணையதளம்,காந்தி மற்றும் கல்வி,ஆன்மீகம் குறித்த கட்டுரைகள்,காணொளிகள்,பயணக் கட்டுரைகள்,வெண்முரசு கதைகள் என ஒவ்வொன்றின் வழியே உங்களின் படைப்புகளை வந்தடைந்தவர்கள்.உங்களின் இணையதளத்தைப் போலவே எங்கள் நண்பர்களுக்கு இடையேயும் படைப்புகள் குறித்த விமர்சனங்களும்,வாதங்களும்,எதிர்வினைகளும் காரசாரமாகவே அரங்கேரும்.எப்படியாயினும் சமகாலத்தில் பல முக்கிய தளங்களில் உரையாடல் வைத்துக்கொள்ள,தெளிவு படுத்திக் கொள்ள,மனிதத்தை கைக்கொண்டு பயணத்தை தொடர நல்ல ஒரு தகப்பனாக உங்களை உணர்கின்றோம்.
எந்தக் கல்வியை நோக்கி இன்றைய சமூகம் வெகு விரைவாக செல்கிறதோ அந்தக் கல்வியினை முழு மூச்சாக கற்று அதன் வழியே பலதரப்பட்ட பணிகளையும் பெற்ற நாங்கள் ஒருவர் பின் ஒருவராக அந்தப் பணிகளை உதறிவிட்டு இன்று எங்களின் இயல்புக்கேற்ற அறம் சார்ந்த பணிகளை கைக்கொண்டுள்ளோம்.இந்த மாறுதலுக்கான பாதையில் கைவிளக்காக நாங்கள் ஏந்தியிருப்பது காந்தி,ஜே.சி.குமரப்பா,நம்மாழவார் என இவர்களைத்தான்/
இந்த்த பாதையில் பயணத்தை மேற்கொள்ளும் 30 நண்பர்கள் உங்களை சந்திக்கின்றோம் மற்றும் இந்த நிகழ்வில் எங்கள் முன்செல்லும் மூத்தவர்களான ஆக்கம் சங்கர் போன்றவர்களையும் கெளரவிக்க உள்ளோம்.
காந்தி தோற்குமிடம் என்ற தலைப்பில் நீங்கள் பேசிய காணொளி பல மாறுபட்ட அரசியல் தளங்களில் வேலை செய்யும் நண்பர்களிடையே கூட நல்ல ஒரு அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. அதன் நீட்சியாகவே மனதுக்கு மிக நெருக்கமான நவகாளி யாத்திரை புத்தகத்தினை .இயல்வாகை பதிப்பகத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது .அதனை உங்கள் கைகளினால் வெளியிட விரும்புகின்றோம்.
இடம் : தென்பரங்குன்றம் சமண குகைக்கோயில்,மதுரை.
நாள்: 06.09.2017 காலை 7 மணி முதல்