சுரேஷ் பிரதீப் எழுதிய இந்தக்கதையை சற்றுமுன் படித்தேன். பிரைமரி காம்ப்ளெக்ஸ். அந்த தலைப்பில் உள்ளது கதையின் முடிச்சு. அந்த சிக்கலைக் கடப்பது கதை மோசமான கதை அல்ல. நல்ல கதை என்றுகூட சில வாசகர்களுக்குத் தோன்றலாம். ஏனென்றால் இளமையனுபவங்களுடன் இணைந்து எழும் எழுத்து பொதுவாக வாசகர்களுக்குப் பிடிக்கும். அவர்கள் கதையுடன் தொடர்புகொள்ள முடியும்
ஆனால் இருவினாக்களை இளம் எழுத்தாளர்கள் எழுப்பிக்கொள்ளவேண்டும். ஒன்று, அக்கதையை எழுதுவதனால் ஆசிரியராக அவர் கண்டடைவது என்ன, முன்னர்கவது எவ்வாறு? இரண்டு, தமிழ் இலக்கியச்சூழலில் இக்கதை மேலதிகமாக எதைச் சேர்க்கிறது?
ஒருகதையை எழுத்தாளன் கருவாகவே அடைகிறான். அதை எழுதிமுடிக்கையில் அவன் முன்பிலாத ஒன்றை கண்டுபிடித்திருந்தான் என்றால் அது இலக்கியமாக ஆகிவிடுகிறது. அது அக்கதையின் தரிசனமாக இருக்கலாம், அல்லது அக்கதையைச் சொல்லும் கோணம் வழியாக அடைந்த மாறுபட்ட நோக்காக இருக்கலாம், அழகியல்ரீதியான ஒரு மேலதிகப்பரிமாணமாக இருக்கலாம். ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கவேண்டும். அது ஆசிரியனுக்கே தெரியும். உண்மையில் கதை எழுதுவதிலுள்ள இன்பம் என்பது அவ்வாறு கண்டடைந்தபின் ஏற்படும் நிறைவே
இக்கதையில் அப்படி என்ன உள்ளது? ஒரு நினைவுச்சரடு. அதை குறிப்பிட்ட முறையில் சற்றேபூடகமாகச் சொல்லும் உத்தி. இது சிறுகதைக்குப் போதுமானதா என்ன? எளிய சிறுகதையாசிரியர்களைச் சொல்லவில்லை. அவர்கள் ஒரு சூழலின் பொதுத்தேவை. ஆனால் புதியனசாதிக்கும் வல்லமைகொண்ட, அடுத்த தலைமுறையின் எழுத்தாளன் இதை எழுதுவதனூடாக எதை முன்வைக்கிறான்?
தமிழ்ச்சிறுகதை மரபு மகத்தானது. இந்தியமொழிகளில் தமிழ்ச்சிறுகதைகளும் உருதுச்சிறுகதைகளுமே முதன்மையானவை. உலக அளவில் எழுதப்பட்ட மிகச்சிறந்த சிறுகதைகள் பல நிகழ்ந்தது இம்மொழியில். அந்த அடுக்கில் இக்கதையை கொண்டு வைக்கிறோம் என்னும் உணர்வு எழுத்தாளனுக்கு இருக்கவேண்டும். போட்டி என்றோ வெற்றிதோல்வி என்றோ சொல்லவரவில்லை. தொடர்ச்சி என்று சொல்லவந்தேன். அக்கதைகளின் உலகம் காட்டாத ஒரு துளியையேனும் காட்டியிருந்தால் இதன் வெளிப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது
இவ்வகையான கதைகளை தமிழில் அசோகமித்திரன் நிறையவே எழுதினார். அவர் எழுதியவற்றிலேயே கணிசமானவை வெறும் அனுபவப்பதிவுகள். அக்கதைகளில் சித்தரிப்புக்குள் மெல்லிய நகை ஒன்று ஓடும். அது எந்நிலையிலும் அவற்றை சுவாரசியமான கதையாக ஆக்கும். அசோகமித்திரனை முன்னுதாரணமாகக் கொண்டு மேலும் பலர் இதேபோன்ற கதைகளை எழுதிக்குவித்தனர். ஒருகட்டத்தில் இக்கதைகளை ‘கணையாழிக்கதைகள்; என நான் ஒட்டுமொத்தமாகவே நிராகரித்திருக்கிறேன். அன்றாட வாழ்க்கையின் எளியகாட்சி என்பதற்கு அப்பால் ஒரு அடிகூட எடுத்துவைக்காத கதைகள் இவை.
மிக எளிமையான கேள்வி இக்கதை ஆறுமாதமாவது எவர் நினைவிலாவது வாழுமா? வாழாதென்றால் இதன் இடம் என்ன? இது எங்காவது எவரையாவது சீண்டுகிறதா? எவர் கனவிலாவது நீட்சிகொள்கிறதா? எவர் உள்ளத்திலாவது அழியாத வினாவாக நீடிக்கிறதா? ஆழமான உணர்ச்சிப்பதிவாக நிலைகொள்கிறதா?
எழுதும்பயிற்சிக்காக இத்தகைய கதைகளை எழுதலாம். ஆனால் அவை இணையச்சூழலில் உடனடியாக வெளியாகிவிடுகின்றன. என்ன சிக்கல் என்றால் வாசகன் பொறுமையற்றவன் என்பதே. அவன் நாலைந்து கதைகளை அதிகபட்சம் வாசிப்பான். அதன்பின் ஒரு முன்முடிவை உருவாக்கிக்கொள்வான். சமீபத்தில் சில அடுத்த தலைமுறை எடுத்தாளர்களைப் பற்றி அதேதலைமுறை வாசகர்களிடம் பேசியபோது இரண்டு கதைகளைக்கொண்டே எழுத்தாளர்களை அவர்கள் வகுத்துக்கொண்டு பெரும்பாலும் புறக்கணித்திருப்பதைக் கண்டேன். இன்றைய சூழலில் பிரசுரம் மிக எளிது. கவனத்தைப் பெறுவதும் தக்கவைத்துக்கொள்வதும் மிகமிகக் கடினம்
சுரேஷ் பிரதீப் எண்ணங்களையும் சூழலையும் சொல்வதற்கான மொழியை அடைந்துவிட்டார். பயிற்சிக்கால எழுத்தாளர் அல்ல. எளிய இலக்குகளை விட்டுவிட்டு மேலும் மேலும் என ஒவ்வொருமுறையும் அவர் முயலவேண்டும்