இலக்கியத்தின் பல்லும் நகமும்

a.rengka
அ.ரெங்கசாமி

அ.ரெங்கசாமி தமிழ் விக்கி

இரண்டயிரத்தோடு சிற்றிதழ்களுக்கான வரலாற்றுத்தேவை முடிந்துவிட்டது என்பது என்னுடைய மனப்பதிவு. சிற்றிதழ்கள் என்பவை ஊடகம் மறுக்கப்பட்ட தரப்புகள் தங்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் அச்சு ஊடகம். அச்சு என்பது செலவேறிய ஒன்று. விநியோகம் அதைவிடச் செலவானது .அந்த முதலீட்டை நிகழ்த்த வாய்ப்பு கொண்ட தரப்புகளுக்கே சிந்தனை, பண்பாட்டுச்சூழலில் குரல் இருந்தது. அது எப்போதும் அரசியல், வணிக அதிகாரத்திற்கு ஆதரவான குரல்தான்.அக்குரலுக்கு எதிராகச் செயல்படும் தரப்புகளுக்கு ஊடக உலகம் இடம் அளிப்பதில்லை. ஆகவே மாற்றுக்குரல்கள் தங்களுக்கான ஊடகத்தை நாடின. அவ்வாறு உருவானதே சிற்றிதழ்

ஊடகம் வணிகமாகும்போது ஏற்கனவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட் தரப்புகளும் அவர்களால் விரும்பி வாசிக்கப்படும் குரல்களூம் மட்டுமே ஊடகங்களில் இடம்பெறத் தொடங்கின. மக்களுக்கு இன்றியமையாதவற்றை சொல்லும் தரப்புகளும் எதிர்காலத்தை முன்வைத்து அவர்களுடன் பேசும் தரப்புகளும் அவர்களால் புரிந்துகொள்ளப்படாமலோ ஏற்றுக்கொள்ளப்படாமலோ புறக்கணிக்கப்பட்டன. அவற்றுக்கு ஊடகம் மறுக்கப்பட்டது. சிற்றிதழ் என்பது அத்தரப்பின் குரல்.

cmu3
சீ முத்துசாமி

சிற்றிதழ்கள் இரண்டு வகையானவை. சில சிந்தனைக்களங்கள் சிறிய வட்டங்களுக்குள் மட்டுமே புழங்க முடியும் உயர்கல்வி ஆய்வுகள், தொழில்நுட்ப ஆய்வுகள் போன்றவை. சில சிந்தனைக்களங்கள் எதிர்த்தரப்பாக உருவாகி வருபவையாக இருக்கும். மாற்றுத் தொழில் நுட்ப ஆய்வுகள், இயற்கை வேளாண்மை முதலியவை. கல்வெட்டு, அகழ்வாய்வு போன்ற சில குறிப்பிட்ட துறைகளுக்குள் செயல்படும் அறிவியக்கங்கள் பரவலாக வாசிக்கப்பட முடியாதவை. அவற்றுக்கு சிற்றிதழ் என்ற வடிவம் இயல்பாகவே வசதியாக அமைகிறது.

தமிழில் சிறிய இதழ்களின் இயக்கம் அச்சு தொடங்கிய உடனேயே ஆரம்பித்திருக்கிறது. இயல்பிலேயே சிறிய வட்டத்திற்குள் தான் புழங்கியாகவேண்டிய குரல்கள் அவை உதாரணமாக கரந்தை தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செந்தமிழ்செல்வி என்னும் சிற்றிதழ். அறிஞர்கள் மட்டுமே வாசிக்கும் தன்மை கொண்டிருந்தது அது. ஆனால் அதில்தான் பிற்காலத்தில் தமிழ் பண்பாட்டுச்சூழலில் பேசப்பட்ட பெரும்பாலான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. தனித்தமிழ் இயக்கத்தின் தமிழ்பதிப்பியக்கத்தின் ஒரு கருத்தியல் மையமாகவே செந்தமிழ்செல்வி இருந்தது. அப்பேர்ப்பட்ட பத்திரிகைகள் தமிழ் வரலாற்றில் இருபதையாவது சுட்டிக்காட்ட முடியும்.

தமிழில் இலக்கிய எழுத்து பாரதியிலிருந்து தொடங்குகிறது. பாரதி இந்தியா, விஜயா, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் எழுதினார். தொடர்ந்து ஆ.மாதவையா போன்றவர்கள் அவ்விலக்கிய இயக்கத்தை முன்னெடுத்தனர். மாதவையா பஞ்சாமிர்தம் போன்ற சிறிய பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார். சுதந்திர போராட்ட காலத்தில் சமூக சீர்திருத்தம், தேசிய விடுதலை, பண்பாட்டு மீட்டெடுப்பு ஆகியவற்றை இலக்காகக்கொண்டு பல்வேறு சிறிய பத்திரிகைகள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. இவை அன்றைய வாசிப்புச் சூழலையும் அச்சுச் சூழலையும் வைத்து பார்த்தால் ஓரளவுக்கு வாசிப்புவட்டம்  கொண்ட சிறிய இதழ்கள் என்று சொல்லலாம்.

shanmukasiva
ஷண்முகசிவா

ஆனால் 1930 களோடு தமிழில் வணிக எழுத்தும் வணிகப்பிரசுரமும் வீறு கொண்டன. ஒரு பெருந்தொழிலாக அச்சு ஊடகம் மாறியது. அப்போது மக்களால் வாசிக்கப்படும் படைப்பு, ஏற்றுக்கொள்ளப்படும் படைப்பு மட்டுமே பிரசுரத்துக்குரியது என்னும் விதி உருவாகியது. விளைவாக இலக்கியம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. தீவிர இலக்கியம் வணிக சூழலில் நீர்த்துப்போய்விடுவதையும் புதிய போக்குகள் மறுதலிக்கப்படுவதையும் கண்டு அவை அழியாமல் வாழ்வதற்கு சிறிய அளவிலேனும் களம் தேவை என்பதனால் சிறுபத்திரிகை என்னும் இயக்கம் உருவானது. தன் வட்டத்தை திட்டமிட்டு சிறிதாக அமைத்துக்கொண்டு, அதற்குள் மட்டுமே செயல்படுவது இது. ஆகவே முதலீடோ அமைப்போ தேவையற்றது. நட்புக்குழு ஒன்றோ தனிமனிதரோ வெளியிடக்கூடுவது.

தமிழிலக்கியத்தின் சிற்றிதழ் இயக்கம் சி.சு.செல்லப்பாவின்  ‘எழுத்து; விலிருந்து தொடங்குகிறது. அதற்கு நான்கு தலைமுறைக் காலகட்டங்கள் உண்டு. ’எழுத்து’, ‘சந்திரோதயம்’, ‘சூறாவளி’ போன்ற இதழ்கள் முதல் தலைமுறை. கணையாழி, தீபம், கசடதபற,நடை,ழ போன்ற இதழ்கள் இரண்டாவது காலகட்டத்தை சேர்ந்தவை. விருட்சம் ’சொல்புதிது’ ’சிலேட்’ போன்றவை மூன்றாவது காலகட்டம். ‘காலச்சுவடு’.’உயிர்மை’ உயிரெழுத்து போன்ற இதழ்கள் நான்காவது காலகட்டம்.

இந்நான்காவது காலகட்டத்தில் சிற்றிதழ்கள் தங்களை இடைநிலை இதழ்களாக மாற்றிக்கொண்டன. அரசியல் திரைப்படம் போன்றவற்றுக்கு பெருமளவு இடம் அளிக்க ஆரம்பித்தன.  1000 பிரதிகளிலிருந்து 5000 பிரதிகளாக இவற்றின் விற்பனை கூடியது இரண்டாயிரத்துக்குப் பின்னர்தான் இவ்வாறு சிற்றிதழ்கள் பேரிதழ்களாக உருமாற்றம் பெறத் தொடங்கின. இன்று ஏறத்தாழ பத்து இடைநிலை இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன.

punniavan11
கோ புண்ணியவான்

இரண்டாயிரத்துக்குப் பிறகு உருவான இந்த மாற்றத்துக்கு அடிப்படைகள் இரண்டு. ஒன்று இணையம். இரண்டு புத்தகக் கண்காட்சிகள் இணையம் வழியாக புத்தகம் பற்றிய தகவல்கள் சென்று மக்களை சேரத்தொடங்கின. புத்தகக் கண்காட்சிகளின் வழியாக மக்களிடம் புத்தகங்கள் சென்று சேரத்தொடங்கின. ஆகவே முன்பிருந்த வாசகர் வட்டம் பத்து மடங்கு பெருகியதென்று சொல்லலாம். அதன் விளைவாகத்தான் ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட சிற்றிதழ்கள் ஐந்தாயிரம் வரை அச்சிடப்படலாயின.

இணையம் இன்னொரு வாய்ப்பை அளித்தது. சிற்றிதழ்கள் என்று நேற்றுவரைக்கும் சொல்லிக்கொண்டிருந்த இதழ்களை அச்சில் கொண்டுவராமல் மின்வடிவிலேயே பரவலாகக்கொண்டு செல்ல முடியுமென்ற நிலை ஏற்பட்டது.சிற்றிதழ் உருவானதே மூதலீட்டையும் அமைப்பையும் தவிர்ப்பதற்காகத்தான். இணையத்தில் அவை தேவையில்லை. அதோடு அச்சிதழுக்குத் தேவையான சந்தா வசூலும், சந்தைவினியோகமும்கூட தேவையில்லை என்றாயிற்று

saipiir
சை பீர்முகம்மது

இன்று இலக்கியம் தமிழில் மிகப்பெரும்பாலாக மின் வடிவிலேயே படிக்கப்படுகிறது. இது அச்சு சிற்றிதழ்களின் தேவையை பெரும்பாலும் இல்லாமல் ஆக்கியது. அச்சுச் சிற்றிதழ்கள் என்பவை ஒரு கௌரவத்திற்காகவோ அழகிற்காகவோ பிடிவாதமாக அச்சிடப்படுபவை என்னும் நிலை இன்று உள்ளது. அவற்றை படிப்பவர்கள் மிகப்பெரும்பாலானவர்கள் சென்ற தலைமுறை வாசகர்கள். இன்று இணையத்தில் பத்தாயிரம் பேர் படிக்கும் ஒர் இணையச் சிற்றிதழை நிறுவி நடத்திவிட முடியும் என்றிருக்கையில் ஐநூறு அல்லது ஆயிரம் பிரதிகளை அச்சிட்டு தபாலில் அனுப்புவதில் பொருளேதும் இருப்பதாக தெரியவில்லை.

சிற்றிதழ் என்னும் மாற்று இயக்கத்தின் மேல் ஆர்வம் கொண்டு பிடிவாதமாக வெளியிடப்படும் சிற்றிதழ்களில்கூட பெரும்பாலும் இணையத்தில் அறிமுகமாகி இணையம் வழியாக எழுந்து வந்த எழுத்தாளர்களின் படைப்புகளே வெளியிடப்படுகின்றன. சிற்றிதழ்கள் வழியாக உருவாகிவந்த எழுத்தாளர்களோ வாசகர்களோ இன்று இருப்பது போல தெரியவில்லை.

*

naven
நவீன்

இச்சூழலில் தான் வல்லினத்துடன் எனக்கு அறிமுகம் உருவாகிறது. 2006-ல் வல்லினத்தின் நண்பர்குழுவை நான் கொலாலம்பூரில் சந்தித்தேன். என்னை சிங்கப்பூரில் இருந்து கொலாலம்பூருக்கு ஒரு வாசகர் சந்திப்புக்காக அழைத்திருந்தனர். நவீன் அன்று காதல் என்னும் சிற்றிதழை நடத்திவந்தார். வல்லினம் அதன்பின்னர்தான் உருவானது.

 ‘நாங்கள் வல்லினங்கள்’ என்று அறிவித்துக்கொண்டு வெளிவந்த சிற்றிதழ் சா.கந்தசாமி,ஞானக்கூத்தன்,ந.முத்துசாமி கூட்டில் வெளிவந்த கசடதபற. தமிழ்ப்புதுக்கவிதையின் ஒரு கூர்மையான வெளிப்பாட்டு ஊடகம் அவ்விதழ். [அதேசமயம் சிற்பி, தமிழ்நாடன்,ஞானி, அக்னிபுத்திரன் போன்றாரால் வெளியிடப்பட்டு வன்மையான முழக்கங்களை எழுப்பிய இதழ் ‘வானம்பாடி’ என்ற பெயரில் வெளிவந்தது என்பது வேடிக்கை]. மலேசியாவின் ‘வல்லினம்’ சிற்றிதழ் அப்பெயரிலேயே ஓர் அறைகூவலைக் கொண்டிருந்தது

வல்லினத்தின் பிரதிகளை நான் பார்க்கையில் அது இளைஞர்களின் தீவிரத்தின் வெளிப்பாடு என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. அச்சில் படைப்புக்களை வெளியிடுவதென்றால் மலேசியாவில் ஏராளமான வாய்ப்புக்கள் இருந்தன. உண்மையில் அங்குள்ள இதழ்கள் எழுத ஆளில்லாமல் தவித்துக்கொண்டிருந்தன. ஆகவே அங்குள்ள சிற்றிதழுக்கான தேவை என்ன என்று புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்களிடம் பேசியபோது அச்சிற்றிதழைச் சேர்ந்தவர்கள் ஒரு தனி அடையாளத்தை நாடுகிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.

vijaya
விஜயலட்சுமி

மலேசியச்சூழலில் அச்சு ஊடகம் பெரும்பாலும் அதிகாரத்துடன் செய்துகொள்ளும் சமரசத்தின் முகமாக இருந்தது. அங்குள்ள அரசியலில் வேறுவழியும் இல்லை. உண்மையில் ஒரு முகம் சமரசம் என்றால் எல்லா முகங்களிலும் சமரசம் காலப்போக்கில் வந்துவிடுகிறது. இலக்கியரசனை, இலக்கியமதிப்பீடுகள், கருத்துவிவாதங்கள் அனைத்தும் சமரசத்திற்குள்ளாகி நுட்பம், தீவிரம், கூர்மை என்பதற்கே இடமில்லாமல் ஆகிவிட்டிருந்தது. இந்த மழுங்கியதன்மை மைய ஊடகத்தின் அடையாளமாக ஆனபின்னர் அதில் என்ன எழுதினாலும் அதுவும் மழுங்கியதாகவே வெளிப்படும்.

மலேசியாவிலும் சரி, சிங்கப்பூரிலும் சரி, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் இந்தியநகரங்களிலும் சரி, தமிழ்ப்பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒருசில பொதுத்தன்மைகள் உண்டு. அவை அதிகார அமைப்புக்களுக்கு நயந்துசெல்லும் தன்மைகொண்டிருக்கும். காலப்போக்கில் வலுவான அமைப்பாக திரண்டு செல்வவளம் கொண்டிருப்பதனால் அதிகாரத்தையும் செல்வத்தையும் கையாள்பவர்களால் கையகப்படுத்தப்பட்டிருக்கும். அதன்பின் அத்தனை செயல்பாடுகளும் அந்த இலக்கை மட்டுமே கொண்டிருக்கும்.

விளைவாக உலக இலக்கியம், உலகசிந்தனைகளில் இருந்து முழுமையாகத் தன்னைத் துண்டித்துக்கொண்டு ஒருவகையான ‘பழங்குடி’ மனநிலையை அவர்கள் அடைந்திருப்பார்கள். உலகிலுள்ள அத்தனை பழங்குடியினரும் அவர்களின் பண்பாடுதான் தூய்மையானது அவர்களின் இனம்தான் தொன்மையான வரலாறுள்ளது என்னும் மூடநம்பிக்கை கொண்டிருப்பார்கள். வாசல்களை முழுமையாக மூடிக்கொண்ட தமிழ்வட்டங்களும் இந்நம்பிக்கையையே முதன்மையாகக் கொண்டிருப்பார்கள். பின்னர் அதை திரும்பத்திரும்பச் சொல்லும் எளிமையான கேளிக்கைப்பிரச்சாரர்களே அவர்களுக்கு உகந்த சொற்பொழிவாளர்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமாக இருப்பார்கள். பழங்குடிகள் அனைத்துமே சிந்தனைக்குப் பதிலாகக் கூட்டுக்கேளிக்கைகளில் திளைக்க விரும்புவார்கள். பழங்குடித்தன்மைகொண்ட நம் தமிழமைப்புக்களுக்கு அந்தத்தேவையை சினிமா நிறைவேற்றுகிறது.

pandi
அ.பாண்டியன்

ஆகவே அதிலிருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ள விரும்பினர் மலேசியாவின் இளையதலைமுறைப் படைப்பாளியினரில் சிலர். தங்கள் குரல் தனித்துக்கேட்கவேண்டும் என்றும் தீவிரமானவர்களாகவே தங்கள் எழுத்து தங்களை அடையாளம் காட்டவேண்டும் என்றும் எண்ணினர். அதன் விளைவே வல்லினம் என்னும் பெயர். வல்லினம் மைய ஓட்டத்தின் மீதான சமரசமில்லாத , முகம்பார்க்காத, விமர்சனம் மூலமே கவனம் பெற்றது. வாசகர்கள் இவர்கள் வேறுவகையினர் என்னும் எண்ணத்தை அடைந்தனர். சிற்றிதழ் என்னும் அடையாளமே அவர்களை வேகம் மிக்கவர்கள் என்று காட்டியது

நவீனத்துவம் என்பது மரபின் மீதான விமர்சனத்தில் இருந்து மட்டுமே உருவாக முடியும். தமிழ்நவீனத்துவம் பாரதியில் முனைகொண்ட கடுமையான மரபுவிமர்சனத்தில் தொடங்கி புதுமைப்பித்தனில் மேலும் தீவிரம் கொண்டது. நவீன இலக்கியத்தை பழைய இலக்கியத்தில் இருந்து வேறுபடுத்தும் அம்சம் என்பது ‘விமர்சனத்தன்மை’ என்று சொல்லலாம். அந்த விமர்சனத்தின் பொருட்டே நவீன இலக்கியம் ஒருவகை துடுக்குத்தன்மையை, அடங்காமையை அடைகிறது. எள்ளலும் பகுப்பாய்வும் அதன் வழிமுறையாக அமைகிறது. அதன் குரலில் தவிர்க்கமுடியாத ஒரு சீண்டும்தன்மை குடியேறுகிறது.

ஆகவே முன்னர் சொன்ன பழங்குடித்தன்மையை நிராகரிக்காமல், விமர்சனம் செய்து நிராகரிக்காமல் நவீன இலக்கியமும் நவீனசிந்தனையும் உருவாகவே முடியாது. அது அரசியல்நிலைபாடோ கருத்துமாறுபாடோ அல்ல. அது நவீன இலக்கியத்தின் அடிப்படை மனநிலை. புதுமைப்பித்தனைப்பற்றி ‘இவருக்கு இப்படியெல்லாம் எழுத என்ன உரிமை?’ என ராஜாஜி கோபம்கொண்டது அந்த மனநிலையைக் கண்ட மரபின் எரிச்சல்தான். ஜெயகாந்தன், சுந்தரராமசமை முதல் இன்றுவரை எழுத்தாளர்கள் அந்த விமர்சனத்தன்மை, அதிலுள்ள சீண்டும் தன்மை காரணமாகவே எதிர்க்கப்படுகிறார்கள்.

மலேசிய இலக்கியத்தில் நவீன இலக்கியத்தின் குரலாக வல்லினம் எழுந்ததனாலேயே அது விமர்சனத்தன்மையும் சீண்டும்தன்மையும் கொண்டு தனித்து விரிந்தது என நினைக்கிறேன். அங்கெ நவீன இலக்கியம் பிறந்ததே இவ்வியல்புகளால்தான். ஆனால் அதில் உருவான பெரிய தேக்கம் அங்கே இலக்கியத்தையும் ஒருவகை சடங்காக ஆக்கியது. அதிலிருந்து மீண்டும் விலகி எழுந்து பல்லும் நகமும் கொள்வதையே நான் வல்லினத்தில் காண்கிறேன். சமீகபாக தமிழிலக்கியத்தின் பல ஆழமனா படைபுகள் வல்லினத்தில் உருவாக முடிந்தது இவ்வியல்பால்தான்.

*

suyuva
சு யுவராஜன்

மிக எளிதாக மலேசியச் சூழலில் இணையத்தில் இதழ்களை வெளியிட முடியுமென்று இருக்கையில் அச்சிட்டு விநியோகிப்பதற்கான தேவை என்ன என்ற எண்ணம் எனக்கு அன்று எழுந்தது. ஆனால் தமிழ்ச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மலேசியச் சூழல். மலேசிய சூழலில் அச்சு ஊடகம் என்பது தமிழ்நாட்டைப் போல் பெருவணிகமாக ஆகவில்லை. ஏனெனில் மிகப்பெரிய அளவில் வணிக வாய்ப்புகள் அங்கில்லை ஆனால் மிகப்பெரிய அளவில் அதிகார மையப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் ஒத்துழைத்தும் கோரிக்கை வைத்தும்சில விஷயங்களைப்பெற்று தமிழர்கள் அங்கு வாழ்வதற்கான மொழி சார்ந்த முகமாகவே அச்சு ஊடகம் கருதப்படுகிறது. அதாவது அச்சில் வெளிவரும் நாளிதழ்களை சார்ந்து தான் தமிழர்கள் தங்கள் கருத்துக்களை அங்கு தொகுத்துக்கொள்கிறார்கள்.

அச்சூழலில் இணையத்தில் தனியாக இலக்கியம் எழுதிக்கொண்டிருப்பது என்பது அங்குள்ள சூழலில் எந்தவிதமான தலையீட்டையும் நிகழ்த்தாமல் தனிப்போக்காக ஒதுங்கிக் கொள்வதாக இருக்கும். அங்கே தேவையாக இருந்தது ஓர் இடையீடு. ஒரு மாற்றுக்குரல். அதற்கு சிறிதென்றாலும் இன்னொரு அச்சு ஊடகமே ஆயுதமாகமுடியும். அவ்வாறுதான் வல்லினம் போன்ற இதழின் அவசியம் உருவாகிறது. அது தன்னை அச்சில் கொண்டுவரும்போது அங்கு ஏற்கனவே இருக்கும் அச்சு ஊடக துறைக்குள் ஒரு மாற்றுக்குரலாக ஒலிக்க முயல்கிறது. அங்கு இருக்கும் அச்சு ஊடகத்துறையின் குறைபாடுகளை போதாமைகளை விமர்சனம் செய்கிறது. அதன் விளைவாக கடும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறது. அந்தப்போக்கால் முன்னிறுத்தப்படும் படைப்பாளிகளுக்கு மாற்றான படைப்பாளிகளை முன்னிறுத்துகிறது. வேறுவகையான சொல்லாடல்களை நிகழ்த்துகிறது.

bala
பாலமுருகன்

வல்லினம் அங்கு குவிக்கப்பட்டிருக்கும் மொழிசார் அதிகாரமையத்திற்கு எதிரான ஒரு குரல். தமிழர்கள் மேலும் தீவிரமானவர்கள் என்றும் மேலும் உண்மையானவர்கள் என்றும் மேலும் உலகப்பண்பாட்டுடன் நேரடித்தொடர்பு கொண்டவர்கள் என்று அது காட்ட விரும்புகிறது. சிறிய ஒரு நண்பர் வட்டத்தால் முன்னெடுக்கப்பட்ட வல்லினம் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நடந்து தனது இடத்தை இங்கு நிறுவிக்கொண்டிருக்கிறது. அங்குள்ள நெருக்கடிகளால் வல்லினம் சமீபகாலமாக அச்சில் இல்லை, இணைய இதழாகவே வெளிவருகிறது. ஆனால் அது அச்சிதழ் என்னும் அடையாளத்தைப் பெற்றுவிட்டது.

வல்லினம் முன்னெடுத்த சந்திப்புகளில் பங்கெடுப்பதற்காக பலமுறை நான் சென்றிருக்கிறேன் .வல்லினத்தின் மாநாடுகளில் கருத்தரங்குகளில் பங்கு கொண்டிருக்கிறேன். இலக்கிய பயிற்சி பட்டறைகளை இரண்டு முறை நடத்தியிருக்கிறேன். தேர்ந்த இலக்கியத்தை படிப்பதற்கும் அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடுவதற்கும் தரமான இலக்கியத்தைப் படைப்பதற்கும் மலேசிய இளம் தலைமுறைக்குப் பயிற்சி அளிப்பது இன்று வல்லினத்தின் முதன்மையான பணியாக உள்ளது. அதன்பொருட்டே ஏற்கனவே மலேசியாவில் விவாதிக்கப்படக்கூடிய விஷயங்களையும் குறைபாடுகளையும் சமரசங்களையும் வல்லினம் சுட்டிக்காட்டுகிறது. இது பண்பாட்டு இயக்கமாக இருந்தாலும் அங்குள்ள மொழி மையமாகிய அதிகாரத்திற்கு அறைகூவலாக இருப்பதனால் ஒருவகையான மாற்று அதிகாரச்செயல்பாடாகவே உள்ளது.

வல்லினத்தின் இணைய வடிவம் வெளிவருகிறது. உலகம் முழுவதிலும் வாசகர்கள் அதைப்படிக்கிறார்கள் ஆனால் அதன் அச்சு வடிவமே மலேசியாவில் மிக முக்கியமாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். ஆகவே அது அச்சிலும் வந்தாகவேண்டும். அதற்கு காரணம் அதில் இருக்கும் குறியீட்டுத்தன்மை. மின்வடிவம் எண்ணத்திலிருந்து எண்ணத்திற்கு செல்வது போல, அதற்கு ஒரு பருவடிவம் இல்லாதது போல தோன்றுகிறது. அதுவே அச்சில் கையில் தொட்டுப்பார்க்கக்கூடிய இதழாக வரும்போது கண்கூடாக முன்னால் வந்து நிற்கும் ஒரு இயக்கமாக ஆகிவிடுகிறது. சிற்றிதழுக்கு இப்படி ஒரு தனித்தன்மை உண்டு என்பதை வல்லினம் மூலமாகவே நான் அறிந்தேன்.

dayaji
தயாஜி

*

இன்று தமிழ்நாட்டுக்கு வெளியே கனடா, ஃப்ரான்ஸ்,நார்வே,,அமெரிக்கா, இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் என பல நாடுகளில் தமிழிலக்கிய வாசிப்பும் எழுத்தும் நிகழ்கிறது.. சில நாடுகளில் தமிழர் அனேகமாக எந்த பண்பாட்டு நடவடிக்கைகளும் இல்லாமல் காலத்தில் மிகப்பின்னடைந்து அடையாளம் இழந்து சிதறிப்போயிருக்கிறார்கள் இலங்கையில் உள்நாட்டுப்போராலும் அது உருவாக்கிய கடுமையான கசப்புணர்வுகளாலும் ஒற்றைப்படைக் கருத்துநிலைகளின் மூர்க்கத்தாலும் இலக்கிய இயக்கம் சிதறுண்டு பொருளிழந்துள்ளது. ஆனால் அங்கே வலுவான இளையதலைமுறைப் படைப்பாளிகள் எழுந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

தங்களை ஓரளவுக்கு தொகுத்துக்கொண்டு பண்பாட்டுச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும் தமிழர்கள் கனடாவில் மட்டும்தான் இருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த அமெரிக்கா போன தமிழர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பக் கல்வி அடைந்தவர்கள் பண்பாட்டுப் பயிற்சி இல்லாதவர்கள். எளிய திரைப்பட ரசனை என்பதற்கு அப்பால் அவர்களுக்கு தமிழுடன் தொடர்பில்லை.

vallinam

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தை பொறுத்தவரை அங்கு தரமான படைப்பாளிகள் சிலர் இருந்தாலும் படைப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் ஏறத்தாழ எல்லாமே இலக்கியப்படைப்புகள்தான் என்று முன்வைக்கப்படுகின்றன. கூரிய விமர்சனங்கள் அங்கு உருவாகவில்லை. முன்னரே உருவாகி நிலைபெற்றுள்ள அமைப்புகள் இலக்கியத்தின் மையப்போக்குகளை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. மாற்றுப்போக்குகளுக்கு அங்கு இடமில்லாமல் இருக்கிறது.

மலேசியாவில் அந்த நிலைதான் இருந்தது. வல்லினம் அச்சூழலை மிக விரைவாக மாற்றியது இன்று தமிழகத்திற்கு வெளியே தீவிரமும் ஆழமும் கொண்ட இலக்கியச் செயல்பாடு நடைபெறும் ஒரே களமாக மாறியிருக்கிறது மலேசியா .அதை உருவாக்கிய வல்லினம் நண்பர்கள் மிகப்பெரிய வரலாற்றுப் பங்களிப்பொன்றை செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த மகத்தான வரலாற்று பங்களிப்பும் அது நிகழும் போது சரியாக மதிப்பிடப்படாததாகவே இருக்கும். காலத்திற்கு அப்பால் நின்று பார்க்கும் எழுத்தாளர்களுக்கே அது கண்ணில் படும் அவ்வகையில் இங்கிருந்துகொண்டு ஒரு வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று வல்லினத்தைப்பற்றி என்னால் சொல்ல முடியும்.

[வல்லினம் நூறாவது இதழ் மலரில் எழுதப்பட்ட கட்டுரை]

வல்லினம் நூறாவது இதழ்

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஈர்ப்பதும் நிலைப்பதும் பற்றி…
அடுத்த கட்டுரைஇந்தியப்பயணம் –ஒரு மதிப்புரை