நீட்டலும் மழித்தலும்

m5

 

இன்று உச்சிப்பொழுதில் வெண்முரசு நீர்க்கோலம் எழுதி முடித்தேன். சிலநாட்களாகவே நாவல் முடிவதன் நிலைகொள்ளாமை. எழுதிமுடித்து கண்ணாடியில் பார்த்தால் பாதி மீசை காணாமலாகிவிட்டிருந்தது. சீர் செய்யலாம் என்று முயன்றபோது கிட்டத்தட்ட ஹிட்லர் மாதிரி ஆகிவிட்டது. மீசையை கடிப்பதை என்னால் விடமுடியாது. அதைவிட மீசையை விடலாம் என தோன்றியது. நாவல்களில் வடிவச்சமநிலை பேணுவதைவிட மீசையில் அதைப்பேணுவது கடினமானது

ஆகவே மீண்டும் பழையபடி நிர்மீசை. நானே கண்ணாடியில் பார்த்துக்கொண்டு சிவாஜி போல “எங்ங்ங்ங்ங்கடா போயிருந்தே ராசா?” என்று கேட்டுக்கொண்டேன். அதில் தெரிந்தவர் ஒரேசமயம் முறைப்பானவராகவும் சாந்தமானவராகவும் தோன்றினார். டோரா என்னைப்பார்த்தபின் “சரி அவன் இஷ்டம். நாம என்ன சொல்றது” என்று வாலை மெல்ல ஆட்டியபின் அப்பால் சென்றது. வாசலில் வந்து “அம்மா கருவாடு வேணுமா?” என்று கேட்ட பெண்மணி சற்று குழம்பி “சார் இல்லையா?” என்று கேட்டார். அதாவது இந்த தோற்றத்தில் நான் மேலும் பெரியமனிதனாகத் தெரிகிறேன். நல்லது என்று நினைத்துக்கொண்டேன்

me 7

மாலை வீட்டுக்கு வரும் அருண்மொழி அரைநினைவாக இருப்பாள். கதவை நான் திறந்ததும் “ஸாரி தெரியாம தட்டிட்டேன்” என்று வேறுவீட்டுக்குச் சென்றுவிடுவாளோ என்று ஒரு பயம். அதையும் கடந்தபின் மீசை வைக்கும்படி என்னிடம் மன்றாடிக்கொண்டிருந்த நண்பர் ராகவுக்கு ஓர் உருக்கமான கடிதம் எழுதவேண்டும்.

அக்கால முனிவர்களெல்லாம் எப்படித்தான் அவ்வளவுபெரிய தாடிமீசையுடன் சமாளித்தார்கள் என்று தெரியவில்லை. நண்பர் காட்சனே முனிவர் போல ஆகிவிட்டார். நமக்கே கடிக்க ஆசைவரும் அளவுக்கு அடர்த்தியான மீசை, தாடி. தாடியுடன் இருக்கையில் ஓர் ஒளிந்திருக்கும் கிளர்ச்சி வரும்போல. இந்த மழுங்கல் முகத்திற்குள்ளும் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொண்டால் ஒளிந்துகொள்ளமுடியும்

me1

சின்னவயதில் நான் எல்லா பிள்ளைகளையும்போல “நான் வளந்த ஒடனே…” என்று ஆரம்பித்து ஆசைகளைச் சொல்வேன் என்று அக்கா சொல்வாள். இந்திரா காந்தியை திருமணம் செய்துகொள்வது அவற்றில் ஒன்று. யானைமேல் ஏறி திருவனந்தபுரம் செல்வது அடுத்தது. இப்போது அதையே எண்ணிக்கொள்கிறேன். நான் வளர்ந்த உடனே நீண்ட தாடியும் மீசையும் வளர்த்துக்கொள்வேன். ஆனந்தமாக அதைக் கோதிக்கொண்டிருப்பேன்.

முகம்சூடுதல்

மீசை

 

 

முந்தைய கட்டுரைபனைமீட்பு
அடுத்த கட்டுரைஅன்னையரின் கதை