ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?

1200px-Temple_de_Mînâkshî01

அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களை எனக்கு உங்கள் இணையதளம் வாயிலாகவே தெரியும். பின்பு உங்கள் பதிவுகள் , நாவல்கள், சிறுகதைகள் என்று உங்களின் தாக்கம் தொடர்கிறது. சமீபகாலமாக உங்கள் மேடை பேச்சும் என்னை மிகவும் ஈர்க்கிறது. எது எப்படி இருந்தாலும் என்னை உங்களை பின்தொடர வைப்பது உங்களின் தத்துவம் சார்ந்த பார்வையும் அதை எளியோனும் புரிந்துகொள்ளும் வகையில் தக்க இடத்தில் பொருத்தி கூறுவதும் தான். மதங்கள் பற்றிய புரிதலை உங்களின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” வாயிலாகவே நான் பெற்றேன்.

சமீபத்தில் நான் அடைந்த குழப்பத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் “இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பலகையை ஒவ்வொரு முறை கோவிலுக்குச் செல்லும் போதும் பார்த்துக் குழப்பிப் போவேன். சிலசமயமங்களில் சிரிப்பும், பல சமயங்களில் எரிச்சலும் உண்டாகும்.

ஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது?

இந்துக்கள் மட்டும் கோவிலுக்குள் நுழைய என்ன தனிப்பட்ட தகுதிகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்?

முதலில் யாரை கோவில் நிர்வாகம் இந்துக்கள் என்று கூறிப்பிடுகின்றது?

முதலில் இந்து மதமென்பது ஒற்றைத் தலைமை, ஏக இறைவன், தொகுக்கப்பட்ட பிரத்யேக புனித நூல் என்று ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்படும் மஷினரி வகை மதம் கிடையாது. அஃது இந்திய நிலப்பரப்பில் தோன்றியக் குழு வழிபட்டு முறைகள், தத்துவங்கள், தரிசனங்கள், ஞான மரபுகளின் தொகுப்பு. அவ்வளவு ஏன் இந்து மதமே சைவம், வைணவம், சாக்தம், கணாபத்யம், கௌமாரம், சௌரம் என்கிற ஆறு மதங்களின் கூட்டுதான். அதில் பல நாட்டார் தெய்வ மற்றும் பழங்குடி இறை வழிபாட்டு முறைகளும் அடக்கம்.

இதில் யாரை இந்து என்று வகைப்படுத்துவது?

சட்ட ரீதியாக யார் இந்துக்களோஅவர்களுக்கு மட்டுமே கோவிலில் நுழைய அனுமதியென்றால், நமது இந்து குடும்பச் சட்டமே இந்து என்பதற்குச் சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை. சட்டம் யார் யாரெல்லாம் இசுலாமியர் இல்லையோ, கிறித்துவர் இல்லையோ, பார்சிகள் இல்லையோ அவர்கள் இந்துக்கள் என்று குழப்பியடிக்கிறது.

இன்றைய நவீன இந்து மதத்தின் ஆறு அடிப்படை தரிசனங்ககளான சாங்கியம், யோகம், நியாயம் ,வைசேடிகம், மீமாம்சம், வேதாந்தம் முதலியவற்றில் பெருபாலானவை கடவுள் என்ற கோட்பாட்டை மறுப்பவை. கடவுள் இருப்பினையே ஏற்றுக் கொள்ளாத சாங்கிய தத்துவத்தை நிறுவியவரான கபிலரை விஷ்ணுவின் அம்சமாகப் போற்றுவதும் இந்து மதத்தில் தான். இந்து மத அல்லது இந்திய மெய்யியலில் கடவுளை மறுப்பதும் ஒரு வகை. நவீன இந்து மதம் கடவுள் மறுப்பு தத்துவங்களையும் இனணத்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் கடவுள் மறுப்புக் கொண்ட , கடவுளை புனிதமாகக் கருதாத ஒரு நபர் இந்திய மெய்யியலின்படியும், சட்டத்தின்படியும் தன்னை இந்து என்று அறிவிக்கலாம். அவரும் இந்து என்றே வகைப்படுத்தப்படுவார். அவரைக் கோவில் நிர்வாகம் அனுமதிக்கும். அனால் இந்தத் தேசத்தில் பிறந்து இங்கு வாழும்பிற மதத்தவரோ அல்லது இந்திய கலாசாரத்தின் பால் அன்பும் , ஆர்வமும் கொண்டு இங்கு வரும் வெளிநாட்டாரோ இந்த இறைவனைத் தரிசிக்க வந்தால் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் தடை விதிக்கும். இதில் எந்தத் தர்க்கமும் இல்லை

காந்தியடிகள் மிகச் சரியாகச் சொன்னார் ” இந்து மதம் ஒரு பிரத்யேக மதம் அல்ல உலகில் உள்ள அத்துணை தீர்க்கதரிசிகளையும் அவர்களின் தத்துவங்களையும் வழிபடுவதற்கு அதில் இடம் உள்ளது” என்று .

தேச பிதாவை விடுங்கள் , தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்று கோவில் நிர்வாகமும் , பக்தர்களும் போற்றும் எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருப்பவரை லோக்கல் இறைவனாக மாற்றி எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல் அனைவரும் தரிசிக்க விடாமல் தடுப்பது கோவில் நிர்வாகத்தின் அறியாமை அன்றி வேறில்லை!

அன்புடன்

விக்னேஷ் குமாரராஜா

tem

அன்புள்ள விக்னேஷ்,

தத்துவத்தையும் நடைமுறையையும் நேரடியாகவே சம்பந்தப்படுத்திக்கொள்வதும் சரி அதை உணர்ச்சிகரமான வினாக்களாக ஆக்கிக்கொள்வதும் சரி, இளமையில் எனக்கும் வழக்கமாக இருந்தன. இன்று யோசித்தால் இத்தகைய நடைமுறைப் பிரச்சினைகளைப் பார்க்கையில் அவை எப்படி உருவாயின ஏன் நிலைநிறுத்தப்படுகின்றன என்றுதான் பார்ப்பேன்

இந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் மட்டும் அல்ல. அவை முன்பு சோதிடம் உட்பட பல உலகியல்செயல்பாடுகளுக்கான மையங்களாக இருந்துள்ளன. இன்று பெரும்பாலான ஆலயங்கள் கலைக்கூடங்கள், சுற்றுலாத்தலங்கள். ஆகவே வழிபாடு அல்லாத நோக்கங்களுக்காக பலநூறுபேர் இன்று ஆலயங்களுக்குள் வருகிறார்கள். அவர்களின் வருகை ஆலயவழிபாட்டுக்குத் தடையாக அமையக்கூடாது ஆலயங்கள் எதன்பொருட்டு நிகழ்கின்றனவோ அதில் சிக்கல் வரக்கூடாது.

ஆகவேதான் வழிபாட்டிற்குரிய இடங்களில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு நுழைவு மறுக்கப்படுகிறது. எல்லா ஆலயங்களிலும் வெளிப்புறவட்டங்களில் அனைவருக்கும் அனுமதி உள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் சாதாரணமாக புகைப்படம் எடுப்பதையும் சுற்றிவருவதையும் காணலாம். கருவறைகள் அமைந்துள்ள உள்வட்டத்திற்குள் மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது. அதுவும் சட்டமாக அல்ல, நடைமுறைமரபாக

கருவறைக்கு முன்னால் நூறுபேர் வழிபட்டுக்கொண்டிருக்க பத்துபேர் வழிபாட்டில் நம்பிக்கையில்லாமல் சிற்ப ஆய்வுசெய்துகொண்டிருப்பதும் புகைப்படம் எடுப்பதும் எவ்வகையிலும் உகந்தது அல்ல என்றே நினைக்கிறேன்.  இது அனைத்து வழிபாட்டிடங்களிலும் உள்ளது. கோவாவின் மகத்தான கிறித்தவ ஆலயங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கே அனைவருக்கும் எங்கும் அனுமதி உண்டு. ஆனால் பிரார்த்தனை நிகழும்போது பிரார்த்தனை செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை. ஆல்டரிலும் அதைச்சூழ்ந்துள்ள பகுதிகளிலும் நுழையமுடியாது.   வட்டிகனிலும் இதையே எழுதிவைத்திருப்பதைக் கண்டேன். இந்து ஆலயங்களின் கருவறைப்பகுதி என்பது அப்படி வழிபாட்டு நேரம் என தனியாக ஏதும் இல்லாதது. திறந்திருக்கும்பொழுது முழுக்க வழிபாட்டுநேரம்தான். ஆகவே வேறுவழி இல்லை

இந்து என்பவன் யார் என்பது இந்து சட்டத்தால் சொத்துரிமை, பிறசட்டபூர்வ உரிமைகளுக்காக வரையறுக்கப்பட்டது. நீங்கள் சொல்வதுபோல எவர் பிறமதத்தினர் அல்லவோ அவர்கள் அனைவரும் இந்து என்று சட்டம் அறுதிவரையறை செய்யவில்லை. அது சட்டம் எவரை இந்து என முதல்பார்வைக்கு எடுத்துக்கொள்ளும் என்னும் வரைவு மட்டுமே. அவர்களுக்குள் எவர் இந்துச் சொத்துரிமைமுறைக்குள் வருவார்கள் , எவர் இந்து வழிபாட்டுக்குள் வருவார்கள் என அது மேலும் பல துணைவிதிகளைக்கொண்டு விரிவாக வரையறை செய்கிறது. வட்டார ரீதியாகவும் வழிபாட்டுமுறை சார்ந்தும் பல்வேறு சட்டங்களும் தீர்ப்புச்சட்டங்களும் வழிகாட்டுநெறிகளும் நம் சட்டத்தில் உள்ளன. இந்தியாபோன்ற மாபெரும் தேசத்தில் அவ்வாறுதான் சட்டம் அமைக்கமுடியும். மேலும் இந்த வரையறை சிவில் நடவடிக்கைகளுக்காக மட்டுமே ஒழிய மதம்சார்ந்த வரையறையாக சட்டத்தால் முன்வைக்கப்படவில்லை. ஆகவே இந்த ஒற்றைவரியை அத்தனை மதம் சார்ந்த விவாதங்களிலும் போடுவதைத் தவிர்க்கவேண்டும். அது மேடைப்பேச்சாளர்களால் சொல்லிச் சொல்லி நிலைநிறுத்தப்பட்ட ஒர் பிழை மட்டுமே.

எவர் இந்து என்பது ஒன்றும் வரையறை செய்யப்படாதது அல்ல. இந்துமதம் மூன்று அடுக்குகள் கொண்டது. குலதெய்வங்கள், காவல்தெய்வங்கள் ஆகியவற்றால் ஆன ஒரு வழிபாட்டு வெளி முதல் அடுக்கு . நம் நாட்டார்த்தெய்வங்கள் அனைத்தும் அவ்வடுக்கில் உள்ளவை.சைவம்,வைணவம்,சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என்னும் ஆறு பெருஞ்சமயங்களின் தெய்வங்களைவழிபடும் அடுக்கு அடுத்தது. பிரம்மம் போன்ற தூய தத்துவ உருவகத்தை ஏற்றுக்கொள்ளும் அடுக்கு மூன்றாவது.இந்த மூன்று அடுக்குகளுமே ஒன்றுடன் ஒன்று பிணைந்துதான் எங்குமிருக்கும். ஒன்றுமட்டும் இருக்கும் நிலை மிகமிக அரிது. சாதாரணமாக ஓர் இந்து ஒரேசமயம் இந்த மூன்றுஅடுக்குவழிபாடுகளிலும் இருந்துகொண்டிருப்பார். இவை ஒன்றை ஒன்று மறுப்பவை அல்ல, நிரப்புபவை மட்டுமே.

அந்த ஆலயத்தின் கோரிக்கை என்ன? ஒருவர் இந்து என அறிவித்துக்கொள்ள முடியும் என்றால் உள்ளே வரலாம் என்பதுதானே? அவ்வாறு அவறிப்பவர் இந்து வழிபாட்டுமுறைகள் எனக்குத்தெரியும், அவற்றில் எனக்கு ஈடுபாடு உள்ளது, அவ்வழிபாட்டுக்குள் நான் கலந்துகொள்கிறேன் என அறிவிக்கிறார். அவ்வாறு அறிவித்தவரே வழிபாடு நிகழுமிடத்திற்குள் நுழையமுடியும் என்பதில் என்ன பிழை? சர்ச்சுக்குள் பிரார்த்தனைநேரத்தில் நுழையும்போது பிரார்த்தனை செய்தாகவேண்டும். அதன் வழிமுறைகளை அறிந்துமிருக்கவேண்டும் அல்லவா?

இந்து வழிபாட்டுமுறை சார்ந்த சடங்குகளை ஏற்றுக்கொண்டால் ஆலயங்களுக்குள் செல்ல எந்தத்தடையும் இல்லை. விபூதியோ திருமண்ணோ சந்தனமோ குங்குமமோ அணிதல். அங்குள்ள வழிபாட்டுமுறைகளுடன் ஒத்துழைத்தல். அவ்வளவுதான் தேவை. எங்கள் விருந்தினரான ராய் மாக்ஸம்  அவ்வாறு அறிவிக்கச் சித்தமாக இருந்தமையால் அத்தனை இந்து ஆலயங்களுக்குள்ளும் நுழைந்தார். . [நெறிகள் கறாராகக் கடைப்பிடிக்கப்படும் குமரிமாவட்டத்தில்].  வெறும் ஆயிரம் ரூபாயில் ஆரியசமாஜத்திலிருந்து சட்டபூர்வமாகவே இந்து சடங்குமுறைகளுக்கு உடன்பாடு உண்டு என ஒரு சான்றிதழ் பெறமுடியும். அத்தனை ஆலயங்களுக்குள்ளும் நுழையமுடியும்.

roy
ராய் மாக்ஸம்

அவ்வாறு ஆலயம் கோரும் ஒன்றைச் செய்ய என்னால் முடியாது, ஆனால் அந்த இடத்திற்குச் சென்றாகவேண்டும் என்பதில் என்ன பொருள் உள்ளது? அதாவது ஆலயம் கோருவது அவர்களின் சடங்குமுறைகளுடன் ஒத்துழைக்கும்படி ஓர் ஒப்புதல். அதை அளிக்கமாட்டேன் என்பவர் ஏன் உள்ளே செல்லவேண்டும்? ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு கலைக்கூடத்தில் அதன் நெறிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என்ற உறுதியின்பெயரால்தான் உள்ளே நுழைகிறீர்கள். ஏன் அது ஆலயத்திற்குள் மட்டும் செல்லுபடி ஆகாது?

இந்த அறிவிப்பு வந்ததன் பின்னாலுள்ள யதார்த்தம் ஒன்றுண்டு. ஓர் இந்துவுக்கு இன்னொரு வழிபாட்டுநிலையத்திற்குள் நுழைவதில், அங்குள்ள வழிபாட்டில் கலந்துகொள்வதில் எந்த உளத்தடையுமில்லை. நான் சீரான இடைவெளியில் சர்ச்சுகளுக்குச் செல்பவன். ஆனால் தீவிரக்கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் அப்படி இன்னொரு வழிபாட்டிடத்தின் நெறிகளை, அதன் நம்பிக்கைகளை ஏற்பவர்கள் அல்ல. அவர்கள் ஆலயக் கருவறைக்கு முன்புவரை வந்து அவமதிப்புகளைச் செய்த பல நிகழ்வுகள் உண்டு  அதற்குப்பின்னரே அந்த அறிவிப்புக்கான தேவை வந்தது. அதன்பின்னரும் ஆலயங்களுக்குள் முறைமைகளை மீறி நடக்கும் சுற்றுலாப்பயணிகளை ஒவ்வொருமுறையும் பார்க்கிறேன்.

இந்து என அறிவித்தபின் ஒருவர் முறைமையை மீறினால் என்ன செய்வது என்று கேட்கலாம். நட்சத்திர விடுதியில் அந்நெறிகளுக்கு ஒப்புக்கொடுப்பவர்கள், சர்ச்சில் அவர்களின் நெறிகளை மீறாதவர்கள் கோயிலுக்குள் வந்து நின்று நான் கும்பிடமாட்டேன், நாத்திகன் என்று சொல்வதை அடிக்கடிக் காண்கிறேன். அவர் இந்து என ஓர் உரிமையை  தவறாகப் பயன்படுத்துகிறார். அங்கிருக்கும் ஆத்திகர்களின் மெல்லியல்பைச் சுரண்டுகிறார்.

அதாவது அங்கே அவர் ஓர் ஒப்பந்தத்தை செய்து அதை மீறுகிறார். அதை ஆலயமோ பக்தர்களோ தட்டிக்கேட்கலாம். அப்படி ஒரு ஒப்பந்தம் இல்லாதபோது ஒருவர் விரும்பியபடி நடந்தால் எதுவும் செய்யமுடியாது. நீங்கள் மீனாட்சியம்மனுக்கு பூசைசெய்யுங்கள் நான் செல்ஃபி எடுப்பேன் என அவர் சொன்னால் அதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். எனேன்றால் அந்த அறிவிப்பு இல்லையென்றால் அது ஒரு பொது இடம் ஆகிவிடுகிறது.

எந்த நிறுவனமும் அதன் நெறிகள் மற்றும் வழக்கங்கள் மூலமே நிறுவனமாகச் செயல்படுகிறது. அந்நிறுவனத்தை நீங்கள் நிராகரிக்கலாம். அதை ஏற்றால் அதன் நெறிகளையும் ஏற்றாகவேண்டும். இதில் சமூக அநீதி என ஒன்று இருந்தால், மானுட அறத்திற்கு அப்பாலுள்ள ஒன்று இருந்தால் அங்கே கண்டனம் செய்யலாம். நேற்று தாழ்த்தப்பட்டோர் உள்ளே அனுமதிக்க மறுக்கப்பட்டது அவ்வகையானது. சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை மூன்றாம்பாலினத்தவர் உள்ளே நுழைவு மறுக்கப்பட்டதும் அத்தகையது. ஆனால் ஆலயத்தில் குட்டைப்பாவாடை அணிய உரிமை வேண்டும், குத்துப்பாட்டுக்கு ஆட உரிமைவேண்டும் என்பதெல்லாம் எவ்வகையிலும் முற்போக்கு அல்ல. அது அந்நிறுவனத்தை இழிவுபடுத்தி அழிக்கும் முயற்சிமட்டுமே

*

ஆலயம் என்றால் என்ன ? ஒரு மசூதியோ, தேவாலயமோ வழிபாட்டிடம் மட்டுமே. இந்துமரபில் ஆலயத்தை  நுணுக்கமான பல்வகை ஆற்றல்களின் இருப்பிடமாகவும், அதன்பொருட்டு அதன் அமைப்பும் சிற்பங்களும் உருவாக்கப்பட்டதாகவும் நம்புகிறார்கள். உதாரணமாக  திரிச்சூர் வடக்குந்நாதர் ஆலயம் போன்ற கேரள ஆலயங்கள் அனைத்தும் தாந்த்ரீக முறைப்படி அமைந்தவை. நீங்கள் உள்ளே சென்றால் நூற்றுக்கணக்கான பலிபீடங்களைக் காணமுடியும். அவையனைத்தும் வெவ்வேறு தெய்வங்கள் குடிகொள்பவை. அவற்றுக்கு ஒவ்வொரு நாளும் மலரும் அன்னமும் இட்டு பூசை செய்யப்படுகிறது. அவற்றை தொடுவது கூடாது. மிதிப்பதும் அவை அமைந்துள்ள வளையத்தை கடப்பதும் பெரிய பிழை. ஆனால் ஆலய நடைமுறை தெரியாத ஒருவருக்கு அவை வெறும் கற்கள்.

இதேபோல ஆலயங்களுக்குள் ஏராளமான சடங்குநிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும். சாமியையும் வாகனங்களையும் கொண்டுவருவார்கள். தெய்வங்களுக்குரிய ஆடைகளும் நீரும் செல்லும். நோன்புகொண்ட பூசகர்கள் செல்வார்கள். பிராகாரங்களிலும் சுற்றுவட்டங்களிலும் ஏராளமான சிறுதெய்வங்கள் நிறுவப்பட்டு பூசை செய்யப்படும். அவை ஒவ்வொன்றுக்கும் பக்தர்கள் அளிக்கவேண்டிய மரியாதையும் முறைமைகளும் உண்டு. இந்து ஆலயம் என்பது ஏராளமான தெய்வங்கள் அமைந்திருக்கும் ஒரு பெரிய வளாகம். மொத்த வளாகமே இவ்வாறு வழிபாடும் சடங்குகளும் நிகழும் இடமாக உள்ள ஆலயங்களில் அயல்மதத்தார் நுழைவது தடுக்கப்படுகிறது

அது அவசியம் என்பதை நான் நடைமுறையில் உணர்ந்த பல நிகழ்ச்சிகள் உண்டு. பிராகாரத்தில் அமைந்த சிவபெருமானின் சிலைமேல் கால்வைத்து தொற்றி ஏறி படம் எடுத்த ஒரு சுற்றுலாப்பயணியை நான் கண்டித்திருக்கிறேன். அவர் இலங்கைக்கார்.

இந்த நடைமுறைகள் குத்துமதிப்பாகவே இன்று கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆலயங்களுக்குள் அன்னியமதத்தவர் உள்ளே நுழையக்கூடாது என்பது ஒரு பொதுவான கூற்று. வேண்டுமென்றால் அதை இந்து வழிபாட்டுமுறைகள் அறிந்து அதை மதிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என மாற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆலயத்திலும் அவ்வாறு நுழையக்கூடிய பகுதி மறுக்கப்படும் பகுதி என பிரித்துக்கொள்ளலாம்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்கடல் -கடிதம்
அடுத்த கட்டுரைசி.வி -50