ம்ம்ம்பி!!

DSC_0101

தம்பி [சிறுகதை]

முடிவடையாது நிகழ்ந்து கொண்டிருந்தது என்னை சுற்றிய இருள். இரவின் தனிமை, அகண்ட தனது மர்மக் கரங்களால் இறுக்கி சமன் குலைத்தது. என் ஜன்னல்கள், கதவுகளின் இடுக்குகள் அகாலம் கசியும் வாயாய் இரவைத் துப்பியது. எண்ணற்ற நிழல்கள், அதன் விகாரமடையும் உருக்கள், சந்தடிகளில் காத்துக் கொண்டிருக்கும் அழைப்புகள். மொத்த மனிதர்களும் நிழல்களாய் உருமாறி கரிய விராட ரூபமெடுத்து பின் தொடர்வதாய் உணர்கிறேன். எண்ணங்களின் தொகுக்க இயலாத முன் விரைவுகள் உள்ளும் புறமும் சலனமிட்டது. சாத்தியம் வரைந்த புள்ளிக் கோடுகள் ஒவ்வொன்றாய் அழிந்து முற்றிலும் தொடர்பில்லாத வடிவங்கள் இருள் அணைகின்ற இடங்களிலெல்லாம் முரணிட்டு சித்தம் கலக்கியது.

நான் எனும் பருத்தன்மை நெகிழ்ந்து திரவ வடிவாய் நகரத் தொடங்கியது. அதில் என் எண்ணிலடங்கா மந்தண நான்களை நான் கட்டவிழ்த்திருப்பதை பார்க்கிறேன், யாருக்கோ நிகழ்வதைப்போல. கால ஓட்டங்களின் நித்தியம் குலைந்து எங்கும் இரவு மட்டுமே காட்சிப்படுவதாய் மயக்கு. செவிப்பறைகளில் வலுக்கும் விளி “ம்ம்ப்பி, ம்ம்ப்பி”. ஆம் தோலுரிந்த ஒரு சொறிப்பட்டியின் ஈன ஓலம் போல அது என்னை ஆட்கொண்டது. மங்கலாய்டுகளைக் கண்டு நான் எப்பொழுதும் பயந்தே இருக்கிறேன். அவர்களைப் பார்த்திருக்கிறேன். விசித்திரமான அவர்களின் பார்வை, வெடித்து விழும் அந்தக் கண்கள், அவர்களின் தென்னும் குரல், ஊதிப் பெருத்த வயிறு, பெரும்பாலும் கருத்த பெரிய உருவம். சாதாரணமாகவே அவர்களில் உறைந்த மூர்க்கம். அருகில் கூட செல்ல மாட்டேன். ஏதோ ஜந்துக்களைப் பார்ப்பதைப் போல. உன் சகோதரன் ஒரு மங்கலாய்டெனில், அதை எப்படி ஜீரணித்துக் கொள்வது. தெரியவில்லை.

ஏன் இப்படிப் பிறவிகள் என்ற எப்பொழுதும் இருக்கும் கேள்வி, ஏன்? வாழ்க்கைக்கு இருக்கும் அதே அர்த்தமற்ற கேள்விகள். ஒரு சகோதரனை நாம் நம் எதிரொலியாய் அல்லது நம் பிம்பமாய் மாற்ற முயல்கின்றோமா? இல்லை அவர்கள் நம்மைப் பார்த்து உலகை அறிகையில், அவ்வாறு பிரதியெடுக்கிறார்களா? அண்னன், தம்பி என்ற உறவின் சில உள்ளீடில்லா தன்மைகளை அவதானிக்க முயல்கையில், தம்பியின் ஆளுமை பெரும்பாலும் அண்ணன் களால் நிர்ணயிக்கப்படுகிறதோ? ஒரு சிறிய தந்தைத் தோற்றம் இந்த அண்ணன்கள் பாவிக்கிறார்களா? சகோதரனை வெறுப்பது என்பது, நம்முடையதில் ஏதோ ஒன்றை நாம் மிகவும் வெறுப்பதைப் போல, அதனால் அதை ஒதுக்க முயலும் தோரணையில் மிக வலுவாக சகோதரர்களிடம் அதைக் கக்க முனைகிறோமா? உரிமையெடுத்துக் கொள்ளுதலில், அவனை நம் சொந்த உடலைப் போல நினைத்து வதைக்கிறோமா? ஆனால் தம்பிக்கள் அதை அறிவார்களா? ஆண்களிடம் இயல்பாக ஏற்படும் அந்த வலிமையின் கவர்ச்சியில், தம்பிக்களைக் காவு கொடுக்க நினைக்கையில், அது ஒரு போட்டிச் சூழலையும், வன்மத்தையும், பொறாமையையும், குரோதத்தையும், மற்ற மூன்றாவது மனிதர்களை விடவும் சொந்த ரத்தத்தில் மிக உயிர்த்தன்மையுடன் உணர்ந்து மோதுகிறோமா?

தன்னைக் குரூபியாய் பார்க்கையில், அந்த சப்பிய மண்டையில், பிதுங்கும் விழிகளில், மூர்க்கமாய் உறுமும் விளிகளில், திரும்பத் திரும்ப அவன் பார்ப்பது தன் உருவத்தைத் தான் என்பதை வாழ் நாள் முழுதும் எப்படி சகித்துக் கொள்வது. கொன்றாலொழிய அடங்காத வன்மம் கொதிக்கும் அகம், எப்பொழுதும் தீமையின் குணங்கள் தான் மனித இயல்போ என்ற குழப்பம் கவ்வுகிறது. தன் உருவின் விகாரத் தோற்றத்தை நாம் விரும்புவதில்லை. நாம் நம்மைக் காட்டிக் கொள்வது சுற்றியிருப்பவர்களுக்காகத் தானே. அதனால் தானே மேலும் மேலும் பாவனைகளைப் புனைந்து கொண்டு வாழ்கிறோம். அதன் நொறுங்கிய பிழைக் காட்சி நமக்கு முன்னாடியே நின்று நம்மைப் பரிகாசம் செய்கையி, அவனின் தூய அன்பு கூட நம்மைக் கேலி செய்யத் தவறுவதில்லை.

கட்டில்லாத வெறுப்பு எங்கே ஓளிந்திருந்தது. எதன் நுனி ஸ்பரிசத்தில் அது புகை விட்டு எழத் தொடங்கியது. வெறும் சட்டை கூட அமானுஷ்யமாய் வெளிப்பது, நம்மை சுற்றிலும் மயங்கும் இருளின் வடிவிலியாய் உருமாறும் பல பேயுருவங்களைக் கண்டிருக்கிறேன். அவைகள் அங்குதான் வாழ்கின்றனவோ என்ற மயக்கு, எப்பொழுதும் உறங்கச் செல்லும் முன் தோன்றி கனக்கும். உறக்கத்தின் பொழுது எதிரில் திரும்பிப்படுத்துக் கிடந்த அம்மையின் பரந்திருந்த கூந்தல், கரிய பற்கள் நீண்ட, கூர் நாக்கு பேயாய் தோன்றிக் காய்ச்சல் வந்திருக்கிறது. அது ஒரு மன மயக்கு என்றே நினைத்திருக்கிறேன். பிறள்வு நோய் அதை உண்மையாக்குகிறது. உயிர் போகும் தீவிரத்தில் சாத்தானுடன் வாதிடும் இவான் தோன்றி மறைந்தான்.

வெறுப்பின் குமிழ் உடைந்து வழிகையில், அவனை அறியாமலேயே கிணற்றில் தள்ளினானா? இல்லை. நிச்சயம் இல்லை. எதேச்சையாக அது நிகழ்ந்தது. அதை அம்மை அறிந்தததால் தான் அவளும் உடனே செத்தாளா? ஒவ்வொரு முறை தன்னைக் கொல்வதைப் போலவே, அண்ணனை வதைத்தான். அந்தக் குற்ற உணர்வை அவன் வெகு நாள் பாதுகாத்து வந்தது, ஜான் நாஷைப் பார்த்தவுடன் வெளித் துளிர்த்தது. பின் அவனை வரவழைத்தான். தன்னைத் தானே அவனைக் கொண்டு வதைத்தான். ஆம்! அந்த அவனும் இவனும் ஒரே ஆடிப் பிம்பங்களாய் இருந்து தங்களுக்குள் உறவு கொண்டார்கள். தன்னைத் தானே கடித்துண்ணும் மிருகத்தைப் போல, அம்மை அறிந்திருக்கா விட்டால் இத்தனைத் தீவிரத்துடன் அவன் திங்க முயன்றிருப்பானோ என்று தோன்றியது.

இறந்த பின் கேட்கும், உறுமல் சப்தத்திலிருந்து திரும்ப அவதானிக்க எத்தனித்தேன். ஒரு குரூபி அப்பனாவோ, மகனாகவோ இருந்திடலாம். சகோதரனாக மட்டும் இருந்து விடக்க்கூடாது. ஏன்? சகோதர்கள் தங்களுள் ஒருவருக்கொருவர் நிரம்பிக் கொண்டு வாழ்க்கையை அறிகிறார்களோ?

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

நந்தகுமார்.

முந்தைய கட்டுரைகீழடி – நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும்
அடுத்த கட்டுரைமுடிவின்மைக்கு அப்பால் (சிறுகதை)