92. பொற்புடம்
கேசினி சிறிய கிண்ணத்தை எடுத்து தமயந்தியின் முன்னால் வைத்து “அடுமனையிலிருந்து எடுத்துவந்தேன், அரசி. இது பாகுகரால் சமைக்கப்பட்ட ஊனுணவு” என்றாள். தமயந்தி அதை எடுத்தபோதே முகம் மலர்ந்து “கனிச்சாறிட்டு சமைக்கப்பட்டது. இது நிஷத அரசரின் கைமணமேதான்” என்றாள். கேசினி “அவர் சொன்ன மறுமொழிகளை சொல்கிறேன்” என்றாள். மரக்கரண்டியால் அவ்வூனுணவை அள்ளி உண்ணப்போனபின் தாழ்த்திய தமயந்தி “சொல்” என்றாள். அவள் சொன்னதும் ஒருகணம் உளம் விம்மி விழிநீர் துளித்து முகம் தாழ்த்தினாள்.
பின்னர் எழுந்துகொண்டு “இதை நான் அவர்களிடம்தான் முதலில் அளிக்கவேண்டும்” என எழுந்தாள். கண்ணீரை துடைத்துக்கொண்டு வெளியே சென்றாள். சேடியிடம் “இளவரசர் எங்கே?” என்றாள். “ஆசிரியர் வந்துள்ளார். வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது” என்றாள் சேடி. தமயந்தி வகுப்பு நிகழ்ந்த சிற்றறைக்கு வெளியே நின்று “வணங்குகிறேன், அந்தணரே” என்றாள். அவள் எண்ணத்தை உணர்ந்த ஆசிரியர் “சென்று வருக!” என்று கைகாட்டினார். இந்திரசேனனும் இந்திரசேனையும் எழுந்து வந்தனர்.
பூமீசையும் குரல்வளைமுழையும் திரண்டதோள்களுமாக இருந்த இந்திரசேனன் விழிகளில் வினாவுடன் தலைவணங்கினான். இந்திரசேனை அவனுக்குப் பின்னால் வந்து பாதி மறைந்து ஒரு விழி காட்டி நின்றாள். தோள்கள் திரண்டு முலை முகிழ்த்து கன்னங்களில் சிறுபருக்களுடன் பெண்ணென்று உருக்கொள்ளத் தொடங்கியிருந்தாள். நளனால் அவர்களை அடையாளம் காணமுடியுமா என்ற ஐயம்தான் முதலில் அவளுக்கு ஏற்பட்டது. கையிலிருந்த கிண்ணத்தை நீட்டி “இவ்வுணவின் சுவை எதை நினைவூட்டுகிறது?” என்றாள்.
அவன் அதை வாங்கியதும் முகம் மாறினான். கைகள் நடுங்க அறியாது திரும்ப நீட்டினான். அதை இந்திரசேனை பற்றிக்கொண்டாள். “தந்தை” என்றான். “எங்கிருக்கிறார்? இங்கு வந்துவிட்டாரா?” என்று உரக்க கேட்டபடி அவள் தோள்களை பிடித்தான். “சொல்கிறேன்” என்றாள் தமயந்தி. “அகத்தளத்திற்கு வா!” இந்திரசேனை விம்மியழத் தொடங்கிவிட்டிருந்தாள். இருவருமே அந்த ஊனுணவை வாயிலிடவில்லை. அவள் நடந்தபோது உடன் சிலம்பொலிக்க இந்திரசேனை ஓடிவந்தாள். அவள் தோளைப்பற்றி நிறுத்திய இந்திரசேனன் “எங்கிருக்கிறார் தந்தை? நலமாக இருக்கிறாரா? அதைமட்டும் சொல்லுங்கள்” என்றான். “நலமாக இருக்கிறார் என்றே எண்ணுகிறேன்” என்றாள் தமயந்தி. “எங்கே இருக்கிறார்?” என்று அவன் தொண்டை உடைந்த இளங்குரலில் கூவினான்.
“அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. நேற்று நம் அடுமனைக்கு புதிய சூதன் ஒருவன் வந்தான். பாகுகன் என்பது அவன் பெயர். அவன் சமைத்த ஊனுணவு இது…” இந்திரசேனன் அவள் கைகளை பற்றிக்கொண்டு “அவர்தான் நம் தந்தை… அவர் மாற்றுரு கொண்டிருக்கிறார். ஐயமே இல்லை” என்றான். “ஆனால் நம் அரசர் அல்ல என்றே தோன்றுகிறது” என்று தமயந்தி சொன்னாள். “அவன் நம் அரசரை நன்கறிந்தவன். அவர் கைமணத்தை தான் கற்று அறிந்தவன். அவனுக்கு நம் அரசர் எங்கிருக்கிறார் என்று தெரியும் என்பது உறுதி.”
“ஆம், இப்போதே அவனை சென்று பார்க்கிறேன். அவனிடம் கேட்கிறேன்” என்று இந்திரசேனன் கிளம்பினான். தமயந்தி “நீயும் செல்! அவன் ஒருவேளை சினம் கொள்ளக்கூடும். நாம் அவ்வடுமனையாளனை கெஞ்சியோ மிஞ்சியோ அரசர் இருக்குமிடத்தை அறிந்தாகவேண்டும்…” என்றாள். முன்னால் சென்றுவிட்டிருந்த இந்திரசேனன் திரும்பி “விரைந்து வா… அன்னம்போல் நடக்கும் பொழுதா இது?” என்று தங்கையை அதட்டிவிட்டு படியிறங்கிச் சென்றான்.
தமயந்தி பெருமூச்சுடன் சற்று அப்பால் வந்து நின்றிருந்த கேசினியிடம் “என் மேலாடையை எடு” என்றாள். “என்ன இது, அரசி? எனக்குப் புரியவில்லை” என்றாள் கேசினி. “மனைவியிடமிருக்கும் இறுதிப்படைக்கலம்” என்றாள் தமயந்தி. அவளும் படியிறங்கி மைந்தர் சென்ற பாதையில் நடந்தாள். பின் நின்று தன் சிலம்புகளையும் வளையல்களையும் கழற்றி கேசினியிடம் அளித்துவிட்டு மேலாடையை நன்கு செருகிக்கொண்டு ஓசையின்றி நடந்துசென்றாள்.
இரு இளையோரும் செல்லும்தோறும் விரைவு மிகுந்து ஓடலானார்கள். அவர்கள் அடுமனைக்குள் நுழைந்ததும் இந்திரசேனன் “பாகுகர் எங்கே? நேற்று வந்த புதிய அடுமனையாளர்?” என்றான். முதிய குரல் “அவன் இன்று கிளம்பிச் செல்கிறானே? மூட்டைகளை கட்டிக்கொண்டிருந்தான். கிளம்பியிருப்பான் என எண்ணுகிறேன்” என்றது. தமயந்தி உளம் திடுக்கிட நெஞ்சில் கைவைத்தாள். இந்திரசேனன் “அவரது அறை எங்கே?” என்றபின் உள்ளே ஓடினான். இந்திரசேனை உடன் ஓடும் ஒலி கேட்டது.
தமயந்தி அவர்களை ஒலியினூடாகவே தொடர்ந்தாள். சிற்றறைக்கு முன் அவர்கள் தயங்குவதைக் கண்டதுமே நெஞ்சு நிலைகொள்ள பெருமூச்சுடன் சுவர் மறைவில் நின்றாள். அவர்கள் உள்ளே இருந்த பாகுகனைக் கண்டதும் திகைத்து சொல்லிழந்தனர். “பாகுகன் என்பவர்?” என்று இந்திரசேனன் கேட்டான். உள்ளிருந்த குரல் “நான்தான்… தாங்கள் யார்?” என்றது. அதிலிருந்த நடுக்கமே அவர்களை அவன் அறிந்துவிட்டான் என்பதை காட்டியது. “நாங்கள் எம் தந்தையை தேடிவந்தோம்” என்றாள் இந்திரசேனை. இந்திரசேனன் அவளை திருத்தும் முகமாக “அவரைப்போலவே சமைக்கும் ஒருவர் இங்கிருப்பதை உணர்ந்தோம். நீங்கள் சமைத்தது என்பதை அறிந்தோம். ஆகவே நீங்கள் எந்தை இருக்குமிடத்தை அறிந்திருக்கக்கூடுமென எண்ணினோம்” என்றான்.
“ஆம், அறிவேன்” என்றான் பாகுகன். “அறிவீர்களா? எங்கே?” என்றான் இந்திரசேனன். “எங்கு இருள் கலையாமல் தேங்கியிருக்கிறதோ அங்கே. சில மீன்கள் ஒருபோதும் ஒளியை அறியாமல் ஏரிகளின் ஆழத்தில் சேற்றுக்குள் வாழ்கின்றன. அவற்றைப்போல” என்று பாகுகன் சொன்னான். “விலகாத இருளென்பது ஒருவன் தன்னுள் இருந்து எடுத்துக்கொள்வதே. நான் உங்கள் தந்தையைக் கண்டபோது அவர்மேல் இருள் கவிந்துகொண்டிருந்தது. நான்கு திசைகளிலிருந்தும் இருளை எடுத்து தன்னை மூடிக்கொள்ளத் தொடங்கியிருந்தார். பின்னர் இருள் முழுமையாக அவரை மூடியது.” எரிச்சலுடன் இந்திரசேனன் “அவர் எங்கிருக்கிறார் என்று தெளிவாகச் சொல்லமுடியுமா?” என்றான்.
“அதை அறிந்து என்ன செய்யப்போகிறீர்கள்? செல்வம் திகழ்ந்த அரசை வைத்து சூதாடியவன். திருமகளும் கொற்றவையும் இணைந்தவள்போலிருந்த துணைவியை நடுக்காட்டில் விட்டுச்சென்றவன். மைந்தரை ஏதிலிகளாக்கியவன். தன்னைத் தானே ஒளித்துக்கொண்ட கோழை. அவனை மீட்டுக்கொண்டுவந்து என்ன செய்யவிருக்கிறீர்கள்?” இந்திரசேனன் தன் இடையிலிருந்த குறுவாளை உருவி நீட்டி “இழிமகனே, ஒரு சொல் எழுந்தால் அக்கணமே உன் கழுத்தை வெட்டுவேன். அரசர் பெருமையை அடுமடையரா அறிவர்?” என்றான். “என்னை வெட்டலாம். ஆனால் நான் ஒரு நா அல்ல. அவ்வினா எழுந்தபடியே இருக்கும் என்றும்” என்றான் பாகுகன்.
சினத்துடன் பற்களைக் கடித்தபடி இந்திரசேனன் சொன்னான் “மூடா, எளியோர் எதிர்கொள்ளும் இடர்களும் தடைகளும் எளியவை. பெரியோர் நூறென ஆயிரமென அவற்றை அடைகிறார்கள். அவற்றைக் கடப்பதினூடாகவே அவர்கள் மாமனிதர்களென தெய்வங்களுக்கு முன் நிற்கிறார்கள். தந்தை என்ன செய்தார் என்று உசாவுதல் மைந்தனின் பணி அல்ல. தன் செவிமுன் தந்தையைப் பழிப்பதை கேட்டிருப்பது அவன் நெறியும் அல்ல. அவர் அடைந்ததில் எஞ்சுவதை மட்டும் முன்னோர்கொடையெனக் கொள்வதே மைந்தரின் வழி. செல்வமும் புகழும் அறிவும் அவ்வாறே வந்தடையவேண்டும். கடனும் பழியும் இழிவும்கூட தந்தைக்கொடையென்றால் தலைவணங்கி ஏற்றாகவேண்டும்.”
“எந்தையை நான் அறிவேன். தன் எல்லைகள்மேல் தலையால் மோதிக்கொண்டிருந்தவர். நிஷாதர்களை பேரரசென்றாக்கியது அவ்விசையே. அதுவே இன்று அவரை அலைக்கழிய வைக்கிறது. வென்று மீளலாம். மீளாது இருளில் மறையவும்கூடும். போரில் வெல்வதும் வீழ்வதும் ஷத்ரியர்களை விண்ணுலகுக்கே கொண்டுசெல்கிறது. தன்னுடன் போரிடுவதே வீரனின் முதன்மைப் பெருங்களம்” என்று இந்திரசேனன் சொன்னான். இந்திரசேனை கைகூப்பியபடி “பாகுகரே, தந்தையைப் பழிக்கக்கேட்டு மைந்தன் கொண்ட சினம் அது எனக்கொள்க! அருள்கூர்ந்து எங்கள் தந்தையின் இருப்பிடமேதென்று தெரிந்திருந்தால் சொல்க!” என்றாள். குரல் உடைய விம்மியழுதபடி “ஒருநாளும் அவரை எண்ணாமல் நான் துயில்கொண்டதில்லை. ஒருமுறையும் சுவையறிந்து உண்டதில்லை. அவரில்லாது புவியிலெனக்கு ஏதுமில்லை” என்றாள்.
பாகுகன் விம்மியழுதபடி இரு கைகளையும் விரித்தான். “தன் இடம் ஏதென்று தேடியவன் இப்போது கண்டடைந்தான்… தந்தையரின் நீங்கா உறைவிடம் மைந்தர் நெஞ்சமே” என்றான். நெஞ்சு வெடித்தெழுந்த குரலில் “என் குழந்தைகளே, பாகுகனாகிய நானே நளன். நாகநஞ்சால் உருத் திரிந்தேன்” என்றான். இந்திரசேனன் “உங்கள் உணர்வுகள் மெய்யானவை. ஆனால்…” என்றான். “என் செல்வமே வா!” என்றபடி பாகுகன் எழுந்து இந்திரசேனையின் கைகளை பற்றவந்தான். அவள் அறியாது பின்னடைந்தாள்.
ஆனால் அவன் அவள் கையை பற்றியதும் “தந்தையே!” என்று வீரிட்டாள். பாய்ந்து அவனை அணைத்துக்கொண்டு “தந்தையே தந்தையே” என்று அழுதாள். அவன் தலையை தன் நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டு “எங்கிருந்தீர் தந்தையே… எத்தனை துயரடைந்தீர்?” என்று விம்மினாள். அவன் அவள் மார்பில் முகம் சேர்த்து கண்ணீர்விட்டு விசும்பினான். அருகணைந்து அவன் தோள்களைத் தொட்ட இந்திரசேனன் “இனி துயரில்லை, தந்தையே. எங்களுடன் இருங்கள்… இனி எங்களைப் பிரியாதீர்கள்” என்றான்.
சுவரோடு முகம் சேர்த்தபடி தமயந்தி விம்மி அழுதுகொண்டிருந்தாள். கேசினி அவள் தோளைத் தொட்டு “செல்க, அரசி! அவர் மீண்டு வந்துவிட்டார்” என்றாள். “இல்லை, அங்கு எனக்கும் இடமில்லை” என்றாள் தமயந்தி. கண்ணீருடன் சிரித்தபடி முகத்தைத் துடைத்து “அவர்களுக்குரிய பொழுது அது…” என்றாள். கேசினி அவள் குழலை மெல்ல நீவி “ஆம் அரசி, தொலைத்துக் கண்டடைந்தவர்கள் நற்பேறுடையோர். அவர்கள் பல மடங்காகப் பெறுகிறார்கள் என்று சூதர் சொல் உண்டு” என்றாள்.
நளன் குறுபீடத்தில் அமர்ந்திருக்க அவனை ஏவலர் அணிசெய்துகொண்டிருந்தனர். அவன் ஆடியையே நோக்கிக்கொண்டிருந்தான். வார்ஷ்ணேயன் அவனருகே நின்று ஆடியை நோக்கி “ஒரு திரையை உங்கள் மேலிருந்து தூக்கியதுபோல உள்ளது, அரசே. இத்தனை விரைவாக உடல்மீள்வீர்கள் என எண்ணவே இல்லை” என்றான். நளன் “நாற்பத்தொரு நாட்களுக்கு ஒருமுறை அனைத்து மானுடரும் முற்றாக இறந்து மீண்டும் பிறந்துவிடுகிறார்கள் என்பது உயிர்வேதத்தின் கூற்று. ஆகவேதான் அதை ஒரு மண்டலம் என்கிறார்கள்” என்றான்.
அவன் மீண்டு வந்துவிட்டதை குண்டினபுரிக்கு முறைப்படி அறிவித்திருந்தாலும் எந்த அவையிலும் அவன் தோன்றவில்லை. அவன் முழுமையாக உருமீண்டபின் எழுவதே மேல் என்றனர் அமைச்சர். “அரசனை தன்னைவிட மேலானவன் என்று நம்ப விழைபவர் மக்கள். ஆகவே அரசன் என்பவன் முதன்மையாக புகழாலும் இரண்டாவதாக ஆற்றலாலும் மூன்றாவதாக தோற்றத்தாலும் முந்தியிருத்தல்வேண்டும்.” மருத்துவர் சூழ வரதையின் கரையிலமைந்திருந்த தனித்த சோலைக்கு கொண்டுசெல்லப்பட்டான். நச்சு நீக்க மருத்துவரான முதுநாகர் சர்ப்பர் தன் பதினெட்டு துணைமருத்துவர்களுடன் குண்டினபுரிக்கு வந்தார். அவரது குழு அவன் உடலை மீட்கும் பணியை தொடங்கியது.
அவன் அளித்த சிமிழில் இருந்த மருந்தை மருத்துவர்கள் ஆராய்ந்தனர். “அரசே, இது அண்டபாஷாணம் எனப்படுகிறது. கருமுட்டையென இருக்கும் நஞ்சு. இதை உங்கள் உடலிலேயே அடைகாத்து வளர்த்தெடுக்கவேண்டும். பின்னர் இது சிறகுவிரித்து உங்கள் உடலில் இருந்து பறந்தெழுந்து அகலவேண்டும். இது உங்கள் உடற்கூட்டில் இங்கிருக்கையில் தன் ஆறாப் பெரும்பசிக்கு உங்கள் உடலையே உண்ணும். உடலில் முந்தி நிற்பது நஞ்சென்பதனால் அதை முதலில் இரையாக்கும். உடலையும் சற்று அழிக்கும். நஞ்சு நீங்கி இம்மறுநஞ்சும் அகன்றால் உடல் மீளும். தான் மீள்வதை உடல் தானே அறிந்தால் மழைக்கால அருவியென கணந்தோறும் பெருகும். முன்னைவிட ஆற்றலும் அழகும் பெறுவீர்கள்” என்றார் சர்ப்பர்.
கோசஸ்புடம் என்னும் மருத்துவமுறைப்படி அவன் உடலில் ஒன்பது துளைகளினூடாகவும் நச்சுநீக்கு மருந்துகள் உட்செலுத்தப்பட்டன. பகல் முழுக்க மருந்து கலந்த களிமண்ணால் அவன் உடல் மூடப்பட்டது. இரவில் அதை அகற்றி எண்ணையில் ஊறிய துணியால் சுற்றிக்கட்டப்பட்டது. ஒருதுளி ஒளிகூட நுழையாத சிறுகுடிலில் இருளில் அவன் நாற்பத்தொரு நாட்கள் வாழ்ந்தான். அவன் உடலின் அத்தனை அணுவறைக்குள்ளும் கரையான்புற்றில் நாகம் என நஞ்சு நுழைந்தது. அவன் உடலெங்கும் அனல்பற்றி எரிந்ததுபோல் துடித்தான். இரவும் பகலும் நினைவழியாது அரற்றிக்கொண்டிருந்தான். அவன் உடல் சிவந்து பழுத்து வீங்கியது. இமைகள் மடிப்பற்ற குமிழிகளாயின. முகம் பெரிய உருளையென்றாக குழவியுடல்போல சீர்த்தது.
நஞ்சு முழுமையாக அணுவறைகளில் நிறைந்ததும் தேன்நிறைந்த தட்டு என அவன் தசைகள் எடைகொண்டன. வலி அணைந்து உடலில் பெருப்புணர்வு மட்டும் எஞ்சியது. தன் உடலின் எப்பகுதியையும் அசைக்கமுடியாதவனாக அவன் விழிமலைத்து சித்தம் நிலைத்து இரவுபகல் நாள்பொழுதென்றில்லாமல் கிடந்தான். அவன் முடி முழுமையாக உதிர்ந்து முளைத்தது. நகங்களும் உதிர்ந்து மீண்டும் முளைத்தெழுந்தன. நாற்பத்தோராம் நாள்முதல் பதினெட்டு நாட்கள் காலையிலும் மாலையிலும் இளவெயிலில் அவன் உடல் காட்டப்பட்டது. மரப்பட்டைபோல பழைய தோல் உரிந்து அகல தளிர்த்தோல் வந்தது. தசைகள் இளகி பருத்துருண்டன.
அதுவரை அவன் தேனிலூறிய நெல்லிக்காயை மட்டுமே உண்டுகொண்டிருந்தான். பின்னர் பசியனல் எழ விழித்திருக்கும்போதெல்லாம் உண்டான். அறுபதாவது நாள் அவன் அரண்மனைக்கு மீண்டபோது தொலைவில் அவனைக் கண்ட தமயந்தி கூவியபடி எழுந்து பின் கால்தளர்ந்து அமர்ந்து கைகளில் முகம் புதைத்து தோள்குலுங்க விம்மினாள். மைந்தர் அவனை நோக்கி ஓடிவந்து கைகளை பற்றிக்கொண்டு கண்ணீருடன் சிரித்தனர். “மீண்டும் முளைத்தெழுந்துவிட்டார், அரசி. இனி அகவை அறுபது எஞ்சியிருக்கிறது” என்றார் மருத்துவர்.
பீமகர் “நிஷதர் அவைபுகும் நாள் நோக்கி சொல்ல நிமித்திகரை அழைத்து வருக!” என ஆணையிட்டார். “நம் குடியவை தங்களை காணும்பொருட்டு ஒவ்வொரு நாளுமென காத்திருக்கிறது, நிஷாதரே” என்றார். நளன் பீமபலனை நோக்கி புன்னகைத்து “செல்வதும் மீள்வதும் எளியவையே என தெளிந்துவிட்டேன். இனி அஞ்ச ஏதுமில்லை” என்றான். பீமபலன் “மருத்துவரே, மானுட ஆளுமை என நாம் எண்ணுவது வெறும் தசைகளைத்தானா? அரசரின் நடையும் அசைவும் நகைப்பும் நோக்கும் முற்றிலும் மாறிவிட்டனவே?” என்றான். மருத்துவர் “அரசே, அருவனைத்தும் பருவிலேயே உருக்கொண்டாகவேண்டும் என்பது மருத்துவநூலின் முதல் சொல்” என்றார்.
குண்டினபுரியிலிருந்து மீள்கையில் ரிதுபர்ணன் நிகழ்ந்தவற்றை அறிந்து மகிழ்வுகொண்டிருந்தாலும் சிறிய உளச்சோர்வையும் கரந்திருந்தான். அவன் முன் பணிந்து நளன் சொன்னான் “உங்கள் உள்ளம் என்ன என்பதை தோழனாக நான் அறிவேன், அயோத்தியின் அரசே. நீங்கள் இழந்தவற்றுக்கு நிகராக ஒன்றை நான் அளிப்பேன். வார்ஷ்ணேயன் இங்கிருக்கட்டும். அவனுக்கு பரிநூலை முழுமையாகக் கற்பித்து அனுப்புவேன். நிஷதத்திற்கு இணையாக அந்த மெய்யறிவு அயோத்தியிலும் திகழட்டும். அது உங்களிடம் வாழும்வரை எவரும் உங்களை வெல்லமுடியாது.” ரிதுபர்ணன் முகம் மலர்ந்து அவன் தோளை தழுவிக்கொண்டான். “அது போதும். நாளை ஷத்ரியர் அவையில் என்னை எவரேனும் ஏளனம் செய்தால் பரிநூல் பெறும்பொருட்டு நான் ஆடியதே இவையனைத்தும் என்று சொல்வேன்” என்று சிரித்தான். “இது இளிவரல் அல்ல. தொல்குடி ஷத்ரியரின் ஒரே இடர் என்பது பிற ஷத்ரியர்களின் ஏளனமே. அதை அஞ்சியே ஒவ்வொரு கணமும் வாழவேண்டியிருக்கிறது.”
வார்ஷ்ணேயன் “கண்களுக்குக் கீழே சுருக்கங்கள் எஞ்சியிருக்கின்றன, மருத்துவரே” என்றான். “நாங்கள் மூப்புக்கும் இறப்புக்கும் மருத்துவம் செய்வதில்லை” என்றார் அவர். நளன் நகைத்தபடி எழுந்துகொண்டு “செல்வோம்” என்றான். “அவைநுழைகையில் நான் எதற்கு துணைவனாக?” என வார்ஷ்ணேயன் சற்று தயங்கினான். “ஏன்?” என்று நளன் திரும்பிப்பார்த்தான். “நான் சூதன்” என்றான் வார்ஷ்ணேயன். “நிஷதனுக்கு சூதன் நற்துணையே” என்றான் நளன். வார்ஷ்ணேயன் தயக்கம் விலகாமல் புன்னகைத்து “அவை என்னை அச்சுறுத்துகிறது” என்றான்.
நளன் நகைத்து “அனைத்தையும் அறிவால் கடக்கலாம். பரிநூலில் தேர்ந்தபின் இதே அவையை எளிய மாணவர்திரள் என நோக்கமுடியும்” என்றான். “நான் இங்கு இன்னும் கற்கத் தொடங்கவில்லை” என்றான் வார்ஷ்ணேயன். “மெய்யான கல்வி என்பது ஆசிரியருடன் இருத்தலே…” என்றபடி நளன் திரும்பி “அணிகள் முழுமையடைந்தனவா?” என்றான். “ஆம், அரசே” என்றார் அணிச்சமையர். அவன் வார்ஷ்ணேயனிடம் “அந்தச் சிறுபேழையை எடும்!” என்றான்.
“இப்பேழையைத்தான் என்றும் உடன் வைத்திருந்தீர்கள். இதற்குள் என்ன இருக்கிறது என்று பேசிக்கொள்வோம். சில நாட்கள் நள்ளிரவில் நீங்கள் இதை திறந்து நோக்குவதை கண்டிருக்கிறோம்” என்றான் வார்ஷ்ணேயன். அதைத் திறந்து உள்ளிருந்து வெண்ணிற பீதர்பட்டாடையை வெளியே எடுத்தான் நளன். “இது பீதர்பட்டாடை… பொன்னூல்பின்னல் கொண்டது.” நளன் “ஆம், பேரரசர்களுக்குரியது” என்றான்.
வெளியே ஏவலன் வந்து நின்று தலைவணங்கினான். அவனிடம் தலையசைத்தபடி நளன் நடக்க வார்ஷ்ணேயன் உடன் சென்றான். அவர்கள் படியிறங்கி முகப்புக்கூடத்தை அடைந்தபோது அங்கு திரண்டு நின்றிருந்த கவச உடையணிந்த அகம்படிக் காவலரும் ஏவலர்களும் வாழ்த்தொலி எழுப்பினர். அணிச்சேடியர் குரவையிட்டனர். அவனுக்காக பீமபலனும் பீமபாகுவும் காத்திருந்தார்கள். அவனைக் கண்டதும் முகம் மலர்ந்து வந்து கைகளை பற்றிக்கொண்ட பீமபலன் “தாங்கள் உடல்தேறிவிட்டீர்கள் என்று அறிந்தேன். இத்தனை ஒளிகொண்டிருப்பீர்கள் என எண்ணவே இல்லை” என்றான். பீமபாகு அவன் தோளைத்தொட்டு “மல்லர்போல் ஆகிவிட்டீர்கள், அரசே” என்றான்.
பீமபலன் நளன் கைகளைப் பற்றியபடி “அவைபுகுவதற்கு முன்பு சில சொற்களை நான் உங்களிடம் பேசவேண்டியிருக்கிறது” என்று அப்பால் அழைத்துச்சென்றான். அனைவரும் விலக இரு இளவரசர்களும் நளனின் இரு பக்கங்களிலும் அமர்ந்தனர். பீமபலன் “இனி நாம் காத்திருக்க வேண்டியதில்லை, அரசே. நம் படைகள் வில்நாணில் அம்பென ஒருங்கியிருக்கின்றன. இப்போதே அவையில் நிஷதபுரியின்மேல் படைஎழுச்சியை அறிவிப்போம்” என்றான்.
பீமபாகு “உண்மையில் இன்று நம் அவையினர் எதிர்பார்த்திருக்கும் செய்தியே அதுதான். நகரெங்கும் நாலைந்து நாட்களாக இதுவே பேச்சென புழங்குகிறது. நாளை காலையிலேயேகூட படைப்புறப்பாடு இருக்குமென எண்ணுகிறார்கள்” என்றான். நளன் “ஆம், நிஷதபுரியை நான் கைப்பற்றியாகவேண்டும், அதற்குப் பிந்துவதில் பொருளில்லை” என்றான். “உங்களுக்காக கணம்தோறும் காத்திருப்பவர்கள் நிஷதர்களே. சென்ற சில ஆண்டுகளாக அங்கு நிகழ்வதென்ன என்று அறிந்திருப்பீர்கள்” என்றான் பீமபலன். நளன் தலையசைத்தான்.
“குருதியுண்ணும் பேய்த்தெய்வமென ஆகிவிட்டிருக்கிறான் உங்கள் இளவல். குலத்தலைவர்கள் அனைவரையும் கொன்றழித்துவிட்டான். கொன்றவனை அடுத்த குலத்தலைவன் என அறிவிக்கிறான் என்பதனால் குலத்தலைவர்களை அவர்களின் இளையோரே கொன்றுவிடுகிறார்கள். அரசருக்கு எதிராக செயல்பட்டார் என குற்றம்சாட்டி எவரும் எவரையும் கொல்லலாம் என்பது இன்று அங்குள்ள வழக்கம். ஆகவே கற்றோரை கல்லாதோர் கொல்கிறார்கள். மூத்தோரை இளையோர் கொல்கிறார்கள். அங்குள்ள குலத்தலைவர்களில் மூத்தவனுக்கே வெறும் முப்பது அகவைதான்” என்றான் பீமபலன். “வழிதோறும் வெட்டிவைக்கப்பட்ட தலைகளே இன்று நிஷதபுரியின் அடையாளம் என்கிறார்கள்.”
நளன் பெருமூச்சுடன் “கொல்வது பிழையல்ல என ஓர் அரசு அறிவித்தால் போதும், எந்தக் குமுகமும் தன்னைத்தானே கொன்றழித்துவிடும்” என்றான். “அங்கு நிகழ்வது அதுதான். எளிய மக்களுக்கு பொதுவாக அன்றாடப் பகையும் பூசலுமன்றி தனிப்பட்ட எதிரிகள் இருப்பதில்லை. ஆகவேதான் அவர்கள் அரசரைப்பற்றி வம்புரைக்கிறார்கள். அரண்மனைப்பூசல்களில் தாங்களும் ஈடுபடுகிறார்கள். ஆனால் இன்று நிஷதபுரியில் ஒவ்வொருவருக்கும் நூறு எதிரிகள். சற்று அடிபிறழ்ந்தால் தலையுருளும். ஆகவே ஒவ்வொரு கணமும் கூர்முனையில் நின்றிருக்கிறார்கள். ஒவ்வொரு முகமும் வலியில் அச்சத்தில் ஐயத்தில் வஞ்சத்தில் உச்சம்கொண்டு பாதாள தெய்வங்களைப்போல தோற்றமளிக்கின்றது என்கிறார்கள் ஒற்றர்கள். இளஞ்சிறார் கண்கள்கூட ஓநாய்களைப்போல் தோன்றுகின்றன என்கிறார்கள்” என்று பீமபலன் சொன்னான்.
“மக்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள விட்டுவிட்டு அரண்மனையில் அவன் கீழ்க்கேளிக்கைகளில் திளைக்கிறான்” என்று பீமபாகு சொன்னான். “ஒருநாள் தன் அவையை நோக்கிவிட்டு அவன் சொன்னானாம் அது வாழும்காடு என்று. காடு என்றும் இளமையானது, ஏனென்றால் அங்கே முதுமையும் நோயும் இளமையாலும் பசியாலும் அழிக்கப்படுகின்றன என்று அவன் சொன்னபோது அந்த அவை மகிழ்ந்து கூத்தாடியதாம்.” வெறுப்புடன் உதட்டைச் சுழித்து “நிஷதர்கள் அப்படியே அழுகி அழியட்டும் என விட்டு சதகர்ணிகளும் பிறரும் காத்திருக்கிறார்கள். ஆனால் தாங்கள் இருப்பது அறிந்தால் நிஷதபுரியை கைப்பற்றிவிடுவார்கள். ஆகவே நாம் இன்னமும் பிந்துவது அறிவுடைமை அல்ல” என்றான்.
சிற்றமைச்சர் சாரதர் வந்து அவர்கள் அவைபுகலாமென்று அறிவித்தார். நளன் எழுந்துகொண்டு “செல்வோம்” என்றான். “சொல்க அரசே, இன்று படையறிவிப்பு உண்டா?” என்றான் பீமபலன். “நெறிகளின்படி எவருடைய படை நிலத்தை வெல்கிறதோ அவர்களுக்குரியது அந்நிலம். விதர்ப்பத்தின் படை நிஷதத்தை வெல்ல நிஷதனாகிய நானே அழைத்துச்செல்வது முறையல்ல. இன்று நான் வெல்லலாம், ஆனால் அது நிஷதகுலங்களின் உள்ளத்தில் வடுவென்று எஞ்சும். என்றாவது வஞ்சமென்று எழவும்கூடும்” என்றான் நளன்.
பீமபலன் ஏதோ சொல்லவர “அதை கொடையெனப் பெறுவது எனக்கு இழுக்கு. அதை என் மைந்தருக்கு அளிக்கும் உரிமையையும் இழந்தவனாவேன்” என்றான் நளன். “எவ்வகையில் இழந்தேனோ அவ்வகையிலேயே அதை மீட்கிறேன். அதுவே முறை.” அவன் நடக்க அவர்கள் உடன் சென்றனர். நிஷதபுரியின் காகக்கொடியுடன் வீரன் முன்னால் செல்ல அணிச்சேடியர் மங்கலத்தாலங்களுடன் தொடர்ந்தனர். இசைச்சூதர் முழங்கியபடி அவர்களுக்குப் பின்னால் அணியமைத்தனர்.
நளன் கைகளைக் கூப்பியபடி அவைபுகுந்தபோது பெருங்குரலுடன் அவை எழுந்து வாழ்த்திக் கூச்சலிட்டது. குரவையொலிகளும் இசையும் முயங்கிய முழக்கம் அவையை நிறைத்திருந்தது. அரிமலர் மழையில் நடந்து அவன் அவை நடுவே வந்து நின்றான்.