வாஞ்சி -இந்துவின் மன்னிப்புகோரல்

vancj

வாஞ்சி,தி ஹிந்து, டி .ஆர்.வெங்கட்ராமன்
தி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்
தி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு

தி ஹிந்து [தமிழ்] நாளிதழ் இன்று ஒரு குறிப்பை வெளியிட்டிருக்கிறது. வாஞ்சிநாதன் வாரிசு என்று சொல்லிக்கொண்ட ஜெயகிருஷ்ணன் என்பவர் அளித்த பேட்டி ஆதாரமற்றது என்றும் அதை வெளியிட்டமைக்காக வருந்துவதாகவும். இக்குறிப்பை நேற்றே வெளியிட்டிருக்கலாம். தவறு சுட்டிக்காட்டப்பட்டபோது அதற்கு சப்பைக்கட்டு கட்டியதே பிழை.

இன்றைய செய்திப்பெருக்கில் இத்தகைய சிக்கல் எந்த நாளிதழுக்கும் வரும். அத்துடன் நம் சமூகம் என்பது தெளிவான வரலாறு அற்றது. வரலாற்றை புறவய எழுதிக்கொள்ளும் வழக்கமே அற்றது. ஏன் இன்றிருக்கும் தலைவர்களுக்குக்கூட புறவயமான வரலாறு நம்மால் எழுதப்படவில்லை.வாஞ்சிநாதன் இறந்து ஒருநுற்றாண்டு ஆகவில்லை. அதற்குள் கிட்டத்தட்ட அகழ்வாராய்ச்சி போல ஆய்வுகள் செய்யவேண்டியிருக்கிறது. கட்டுக்கதைகள், திரிபுகள், பாடபேதங்கள், ஊகங்கள் என வரலாறு சிக்கலாகிவிட்டிருக்கிறது.

நிருபர்கள், நாளிதழாசிரியர்கள் ஆய்வாளர்களாக இருக்கவேண்டியதில்லை. ஆனால் செய்திகள் மேல் ஐயம்கொள்ளத் தெரிந்திருக்கவேண்டும். அந்தந்தத் துறைகளில் நிபுணர்கள் எவர் என தெரிந்திருக்கவேண்டும். இச்செய்தி வந்ததுமே ஆ.சிவசுப்ரமணியம் [ஆஷ்கொலைவழக்கு] ஆ.இரா.வெங்கடாசலபதி [ஆஷ் அடிச்சுவட்டில்] போன்ற ஆய்வாளர்களில் ஒருவரிடம் தொலைபேசியில் கேட்டிருந்தாலேபோதும்.

அதேபோல அறிஞர்களிடமிருந்து மறுப்பு வரும்போது அதை வெளியிடுவதும் இதழியல் அறம். ஆதாரம் கேள்விக்குரியதாக்கப் பட்டால் சம்பந்தப்பட்ட நிருபரை அழைத்து ஆதாரம் கோரவேண்டுன். ஆதாரம் இருந்தால் அவர் தன் பெயரில் பதிலளிக்கவேண்டும். இல்லை என்றால் மன்னிப்பு கோரவேண்டும். அதுவே இதழியல் நடைமுறை

தமிழ் ஹிந்து இன்று ஓர் அறிவார்ந்த நாளிதழாக அறியப்படுகிறது. அதன் நம்பகத்தன்மையையே தங்கள் சொத்து என அவர்கள் எண்ணவேண்டும் என விரும்புகிறேன்

முந்தைய கட்டுரைவலசைப்பறவை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88