கசாக்,இருத்தலியல்,ஹைடெக்கர் -கடிதம்

Heidegger3

 

இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்
இருத்தலியல்,கசாக் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

உங்கள் தளத்தில் வந்த இருகடிதங்களையும் [  இருத்தலியல்,கசாக் -கடிதங்கள் ]

கண்டேன். மிகுந்த மகிழ்ச்சி. பின்னர் ஓர் இணைக்கடிதம் கொஞ்சம் விரிவாக எழுதும் எண்ணம் இருப்பதால் சுருக்கமாக இப்போது;

 

சத்யமூர்த்தி அவர்களுக்கு,

 

பாராட்டுக்களுக்கு நன்றி. நீங்கள் கடைசி பகுதியின் மீது வைத்துள்ள விமர்சனம் என நான் புரிந்துகொண்டது, கஸாக்கின் இதிகாசத்தில் இருத்தலியல்வாதத்தின் தர்க்கங்கள் இல்லை, மேலும் அவ்வாறு ஒன்றை கண்டுபிடிக்க கட்டுரை முயற்சி செய்யவில்லை என்பது. கட்டுரையில் எங்கும் நான் இருத்தலியலின் தர்க்கங்களோ ஏன் தத்துவமோ கூட இடம்பெறுவதாக கூறவில்லை. அவ்வாறு நேரடியாக தத்துவமோ அதன் தர்க்கமோ இரண்டாம் நிலை படைப்புகளிலேயே இடம்பெறும். கசாக் நாவல் அதன் கூறுகளை கொண்டிருப்பதாகவே கூறியிருக்கிறேன். அவற்றை இவ்வாறு தொகுக்கலாம்-

 

1, இருப்பையும் காலத்தையும் இணைப்பது.

 

2, ஒட்டுமொத்தமும், தவிர்க்க முடியாமல் அதன் பகுதியாக தனிமனிதனும்.

 

3, இறப்பை எதிர்கொண்டு காத்திருப்பது.

 

4, எந்த நம்பிக்கைகளுக்கும் அடிப்படை இல்லை என்பது.

 

இவற்றை மட்டும் கூறிவிட்டு நான் கட்டுரையின் இரண்டாம் பகுதிக்கு நகர்ந்திருக்கலாம். அனால் இலக்கிய வாசகர்களுக்கு, குறிப்பாக நுண்ணுணர்வு கொண்ட இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு ,இருத்தலியல் ஒரு போலியான பாவனை மட்டுமே என்ற எண்ணம் இருக்கிறது. அப்படியல்ல அதற்கு விரிவான வரலாற்று பின்புலம், தர்க்கம்(முழுமையான ஹைடெகரின் தரப்பில்), கிழக்கில் சார்வாகத்திலிருந்து மேற்கில் ஸ்டோயிக்ஸிலிருந்து(Stoics) பரிணமித்து வரும் சிந்தனை தொடர்ச்சி ஆகியவை உண்டு என கூறி அறிமுகப்படுத்தவே கட்டுரையின் முற்பகுதி விரிவாக எழுதப்பட்டது.

 

மற்றபடி இருத்தலியல் கூறுகள் தென்படும் இடங்களை வாசகர்கள் தங்கள் வாசிப்பின் மூலம் கண்டடையலாம். நான் கசாக் குறித்து கூறியது சுருக்கமாக இதுவே:-

காலத்தை சுமந்து நிற்கும் தனியர்கள், அவர்கள் மீறமுயலும் ஒட்டுமொத்தம், அவ்வொட்டுமொத்தத்தின் மைய செயல்பாடாக இருக்கும் கதையாடல். கதையாடல்களை பிணைக்கும் சுழியாக மரணம், மரணமென தோண்றும் பிரம்மம்.

 

 

எஸ். கார்த்திக் அவர்களுக்கு,

 

உங்கள் கடிதத்திற்கு பல விதங்களில் மறுமொழியாற்றலாம். பின்னர் விரிவாக எழுதும் எண்ணமிருப்பதால் சுருக்கமாக இப்போது தத்துவத்தில் எப்போதும் இருந்துவரும் பொது புத்தி(Common sense)வாதத்தின் அடிப்படையில் பதிலளிக்கிறேன். தர்க்க நேர்நிலைவாதிகள் தத்துவத்திற்கு தர்க்கத்தை மட்டும் விதியாக முன்வைக்கவில்லை, எல்லா தத்துவமும் அவற்றுக்கான தர்க்கங்களை கொண்டதே. அவர்கள் தத்துவம் பேசும் உண்மைகள் பொருண்மையின் மொழியில் அமையவேண்டும் எனவும், நிருபணத்திற்கு உட்பட்டவையாக இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

 

இப்போது பொதுப் புத்தியின் அடிப்படையில் நான் கேட்பது, இவ்வாறு வரையறுப்பதன் மூலம் அவர்கள் எதை தத்துவமாக ஏற்றுக்கொண்டார்கள்? கிரேக்க தத்துவவாதிகள் தொடங்கி அதுவரை பேசப்பட்ட எதையும் இல்லை (ஆங்காங்கே கொஞ்சம் டெகார்தே(Decartes), ஹும்(Hume) போன்றவர்களை தவிர), கிழக்கை குறித்து சொல்லவே வேண்டியதில்லை, பின்னாள் அல்லது சமகாலத்திய ஹெடெகர்(Heidegger) போன்றவர்களது தத்துவத்தையும் இல்லை.

 

அப்போது இவ்வரையரைக்குள் தங்களை தவிர அவர்கள் ஏற்பது ருஸ்ஸலும்(Russel), அரம்பகால விட்ஜென்ஸ்டைனும்(Witgenstein), கார்ல் பாப்பரும்(Karl Popper)(உண்மையில் அவர் விமர்சனங்களையே கொண்டிருந்தார்) மேலும் மிக சொற்பமானவர்களையுமே. மற்றபடி இவ்வரையரைக்குள் அவர்கள் ஏற்றது அறிவியல், கணித உண்மைகளை.

 

இப்படி தத்துவத்தில் இருந்து தத்துவத்தை வெளியேற்றி அறிவியல் உண்மைகளை நடுவில் வைப்பதன் மூலம் உண்மையில் அவர்கள் அறிவியலை அல்லவா வரையறுத்துள்ளனர்? இது, நான் நாவலை இவ்வாறு வரையரை செய்கிறேன் அதன்படி நாவல்களாக எழுதப்பட்ட எவையும் நாவல்கள் அல்ல சிறுகதைகளே உண்மையில் நாவல்கள் என்று கூறுவது போல.

 

சமீபத்தில் இத்தளத்தில் தர்க்க நேர்நிலைவாதி எ. ஜெ. அயர்(A.J. Ayer)- உடணான நேர்காணல் ஒன்று வெளியானது. அதில் கிட்டதட்ட இத்தவறுகளை அவர் ஒப்புக்கொள்கிறார்.

 

நன்றி

கஸ்தூரிரங்கன்

இருத்தலியல்,கசாக் -கடிதங்கள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90
அடுத்த கட்டுரைவிஸ்வநாத நாயக்கர் அடைப்பக்காரரா?