கிராதம் செம்பதிப்பு வருகை

balaki

 

அன்புள்ள ஜெ,

 

இன்று அலுவலகத்தில் இருந்து வந்ததும், பழுப்பு நிறக் கூரியர் உறையில் கிராதம் செம்பதிப்பு காத்திருந்தது. நேற்றே பதிப்பகத்தில் இருந்து மின்னஞ்சலில் தகவல் வந்திருந்ததால் இன்று வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். புத்தகத்தைப் பிரித்து உங்கள் கையெழுத்து இருக்கிறதா என்று  பார்க்கும் வரை சற்றே பரபரப்பு. பார்த்ததும் மகிழ்ச்சி.

 

முந்தைய நாவலான சொல்வளர்காட்டைவிடக் கிட்டத்தட்ட  200 பக்கங்கள் அதிகம். 60 அழகிய வண்ணப்படங்கள், 18 சொல்விளக்கப் பக்கங்களுடன் பெரிய அழகிய நூல். சொல்விளக்கப் பக்கங்களைப் பார்க்கும்போது, எப்படி இவ்வளவு சொற்களுக்கு நேரடி அர்த்தம் தெரியாமலே இணையத்தில் தினம் தினம் படித்து முடித்தோம் என்று ஆச்சரியமாக உள்ளது. நாவல் படிக்கும்போது தெரியாத சொற்களுக்கான அர்த்தத்தை, வாக்கியத்தைக்கொண்டு  மனம் கற்பனை செய்து கொள்கிறது. படிப்பதை நிறுத்திவிட்டுப் பொருள் தேட முயற்சிப்பதில்லை. ஆங்கில நாவல்களைப் படிக்கும்போது இதை அதிகம் செய்திருக்கிறேன். இப்போது என் பிள்ளைகளும் இதே தவறைச் செய்வதைப் பார்க்கிறேன். இப்போது kindle அல்லது இணையத்தில் படிக்கும்போது தெரியாத சொற்களைச் சொடுக்கி உடனே அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளும் வசதி இருந்தாலும் அவர்கள் அதை அதிகம் பயன்படுத்திக் கொள்வதில்லை.

 

சொல்விளக்கத்தில் சில சொற்களுக்கு விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.  ‘கொம்பரக்கு’ என்ற சொல் அது உருவாவதில் ஆரம்பித்து ‘தகடரக்கு’ ஆக மதிப்புக்கூட்டப்படுவது வரை விவரிக்கப்பட்டுள்ளது. பாசத்திற்கான விளக்கம் ஒரு பெரும் தத்துவமாகவே தோன்றுகிறது  – ‘உயிரைப் பறிக்க எமனின் கையிலிருக்கும் பாசக்கயிறு, உயிர்களிடத்தில் தோன்றும் அன்பு’! ‘கூறை’ என்பதற்கு வண்ணமில்லாத புடவை (வெண்கூறை) என்ற விளக்கம் ஆச்சரியமாக இருந்தது. கூறை என்றால் திருமணத்தில் மணமகள் அணியும் வண்ணக் கூறைப் புடவை என்றே மனதில் இருந்தது. ‘சொல் விளக்கம்’ பகுதியை விரிவாக்கம் செய்து ஒரு தனி அகராதியாக வெளியிடும் எண்ணம் தங்களுக்கு உண்டா? வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

தாங்கள் முன்பு சொன்ன “அத்தியாயங்களாக வாசிக்கையில் ஒரு இன்பம் உள்ளது. துளித்துளியாக வாசிப்பது அது. நூலாக ஒட்டுமொத்தமாக ஓரிரு நாட்களில் ஆழ்ந்து அமர்ந்து வாசிக்கையில்தான் நாவலின் வடிவமே தெரிகிறது என பலர் சொல்லியிருக்கிறார்கள்” என்பதை நினைவில் கொண்டு கிராதம் மீள்வாசிப்பைத் தொடங்குகிறேன்.

 

அன்புடன்,

பாலகிருஷ்ணன், சென்னை

 

kiratham

அன்புள்ள ஜெ

 

கிராதம் செம்பதிப்பு வரப்பெற்றேன். பிரம்மாண்டமான நூல். மிக அழகானது. திருவாரூர்த் தேரை சில ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தேன். அதைப்போல இருந்தது. என் பக்கத்துவீட்டுக்காரர் பார்த்துவிட்டு ’என்னசார்?” என்று கேட்டார். புத்தகத்தைப்பார்த்துவிட்டு வாயடைந்துபோனார். ’இத எப்ப வாசிப்பீங்க?” என்றார். ‘இதேபோல பதினான்கு வந்துவிட்டது’ என்று சொன்னேன். காய்ச்சலே வரட்டும் என்று நினைத்தேன்

 

கிராதம் எனக்கு முக்கியமான நாவல். இதிலுள்ளது வேதத்திற்கு முந்தைய ஆதிகுடி வாழ்க்கை. வேதம் உருவான வேதங்கள். அது சென்று சிவனைச்சென்றடைகிறது. சோமாஸ்கந்தரில் முடிகிறது. அது சைவனாக எனக்கு நிறைவை அளித்தது. வணக்கம்

எம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88
அடுத்த கட்டுரைசன்னிபாதை