மிக இளம்வயதில் கல்யாணசௌகந்திகம் கதகளி வழியாகவே பீமன் எனக்கு அறிமுகமானான். பின்னாளில் பல்வேறுவகையாக படித்திருந்தாலும் அந்தக் கதகளிமுகம் எனக்குள் மறையவில்லை. கல்யாணசௌகந்திகத்துடன் திரௌபதியை வந்து சந்திக்கிறான். பெருங்காதலுடன் அதை அவளிடம் அளிக்கிறான். அன்று நான்கண்ட அந்த முகம் என் கனவுகளில் எப்போதும் இருந்தது
பின்னாளில் அந்த முகத்தை சிற்பங்களில் கண்டடைந்தேன். தெய்வங்களின் காலடியில் அமர்ந்து அண்ணாந்து நோக்கும் தேவர்களில். ஊழ்கத்தில் அமர்ந்த முனிவர்களில். நீண்ட நாளுக்குப்பின் அகோபிலம் சென்றபோது அங்கே செஞ்சுலட்சுமியைக் கொஞ்சும் நரசிம்மத்தின் முகத்தைப்பார்த்தேன். அதே முகம். தன்னை முற்றிலும் உருக்கி நெய்யாக்கி எரிந்துச் சுடர்விடுவது. அதுவே பெருங்காதலின் முகம்
பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவன் காதலின்பொருட்டு நிராகரிக்கும் ஓர் இடம் இந்நாவலில் வருகிறது. எதையும் தத்துவார்த்தமாக ஆக்காமல் எங்கும் பின் திரும்பி நோக்காமல் சென்றுகொண்டே இருப்பது அவன் ஆளுமை
மாமலர் பீமனுக்குச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவன் காதலன். காதலனே பெண்ணை அணுகி அறியமுடியும். அன்னையரையும் அவனால்தான் அறியமுடியும். இது அவனுடைய மூதன்னையரின் கதைகளும்கூட.
வெண்முரசு தொடரின் 13 ஆவது நாவல் இது. இந்நாவலுடன் வனவாசம் முடிகிறது. தருமன், அர்ஜுனன், பீமன் என்னும் மூன்று கதாபாத்திரங்களால் பாண்டவர்களின் வனவாசம் சொல்வளர்காடு,கிராதம், மாமலர் என்னும் இம்மூன்று நாவல்களிலுமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ஞானத்தின், யோகத்தின், பிரபத்தியின் வழிகளாக இம்மூன்றும் அமைக்கப்பட்டுள்ளன
இந்நாவலை எழுதியபோதே என் உள்ளத்தில் சுகதகுமாரி இருந்தார். அவருடைய கவிதைகள் வழியாகவே நான் பிரபத்தியின் தீவிரங்களை இளமையில் அறிந்திருக்கிறேன். என் அம்மாவுக்குப் பிரியமான கவிஞர் என்பதனால் என் அன்னையின் இடத்தில் இருப்பவர். இந்த நாவலை அவருக்குச் படைக்கிறேன்
ஜெயமோகன்
[கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் மாமலர் நாவலின் முன்னுரை]