88. அரியணையமைதல்
உத்தரன் அரண்மனைக்குள் நுழைந்து தன் அறைக்குச் சென்றதுமே “நான் சற்று இளைப்பாறவேண்டும்” என்றான். அவனுடன் வந்த படைத்தலைவன் சங்காரகன் “இளவரசே, நமக்கு பொழுதில்லை. குடியவை கூடிவிட்டிருக்கிறது. சாளரங்கள் வழியாக நம் மக்கள் கொந்தளிக்கும் ஓசை கேட்கிறது. இன்னும் சற்றுநேரத்தில் நீங்கள் அணியாடை புனைந்து அரசவைக்கு வந்தாகவேண்டும்” என்றான். “வெறும் அவைநிகழ்வுதானே? சற்று ஓய்வெடுத்தபின் வருகிறேன். என் புண்ணை அவிழ்த்துக் கட்டவேண்டும்” என்றான் உத்தரன். “இது வெறும் அவையல்ல. அரசர் தங்களுக்கு மகாகீசகரின் உடைவாளை அளிக்கவிருக்கிறார்” என்றான் சங்காரகன். உத்தரன் “அது எதற்கு?” என்றான் சலிப்புடன்.
சங்காரகன் சற்று வியந்து அதை மறைத்தபின் “மகாகீசகரின் உடைவாளை இரண்டு தலைமுறையாக எவரும் ஏந்தியதில்லை, இளவரசே. களம்வென்று அவையமரும் அரசகுடியினருக்குரிய சடங்கு, அதை உருவி மூதாதையர் முன் தாழ்த்தி உறுதிமொழி உரைப்பது. சதகர்ணிகளை வென்று மீண்டபோது கீசகர் அதை இடையணிய விரும்பினார். குலநெறி ஒப்பவில்லை. அவர் கொண்டிருந்த பெருங்கனவே அதுதான்” என்றான். உத்தரன் “ஆம், அறிவேன். ஆனால் இச்சடங்குகள் எதற்கும் ஆழ்பொருளெதையும் நான் காணவில்லை” என்றான். பின்னர் “நன்று, நான் வந்துவிடுகிறேன்” என்றான். சங்காரகன் வணங்கி விடைபெற்றான்.
ஏவலன் அவன் ஆடைகளை கழற்றினான். புண்ணைக் கட்டியிருந்த துணியின்மேல் குருதி ஊறிக் கசிந்துகொண்டிருந்தது. “புண்வாய் திறந்துவிட்டிருக்கிறது. நெடும்பயணம்” என்றார் முதிய ஏவலர் சாரதர். “கோட்டைக்குப்பின் அரசப்பெருவீதியைக் கடப்பதே கடினமாக இருந்தது. அதன் பின் அரண்மனை வாயிலில் வரவேற்புச் சடங்குகள்… ஒவ்வொருவரையாக குனிந்து வணங்கி முறைமைச்சொல் உரைத்தேன். உள்ளே கசியும் புண்ணுடன் முகம் மலர்ந்திருப்பது எப்படி என்று கண்டுகொண்டேன்…” சாரதர் சிரித்து “அரசப் பொறுப்பு என்பது முடிவிலாத ஒரு கூத்தில் நடிப்பதே என்பார்கள்” என்றார்.
அவன் மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். கால்களை நன்றாக நீட்டவேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கையிலேயே துயிலில் ஆழ்ந்தான். கரவுக்காட்டில் நிலவொளி அலையடித்த சிற்றாற்றின் கரையினூடாக நடந்துகொண்டிருந்தான். ஆற்றின் மறுகரையில் நீள்குழல் அலையலையாக சரிந்த பெண் ஒருத்தியை கண்டான். திரண்ட பெருந்தோள்கள். கரிய கற்சிலைமுகம். நீள்விழிகள். பிழையற்ற வளைவுகொண்ட மூக்கும் முகிழிதழ்களும். அவள் அவனை நோக்கவில்லை. அவன் நீர்வெளியில் அவள் நிழலையே நோக்கிக்கொண்டிருந்தான். ஆறு பெருகி ஓடிக்கொண்டே இருக்க அவள் அங்கே நின்றுகொண்டிருந்தாள். ஏதோ தோன்ற விழிதூக்கி நோக்கினான். அவள் அங்கே இல்லை. அவளுடைய நீர்ப்பாவை மட்டும் அங்கேயே இருந்தது.
கலம் ஒலித்த ஓசையை மணியொலியென கேட்டு விழித்துக்கொண்டான். குறுகிய துயிலில் அவன் உள்ளம் நீராடி எழுந்ததுபோல் புத்துணர்வு கொண்டிருந்தது. வெண்கலக் கிண்ணத்தை பீடத்தில் வைத்த மருத்துவர் நாசிகர் “கட்டு அவிழ்த்துக் கட்டவேண்டும், இளவரசே” என்றார். “சிவமூலி கொண்டுவந்துள்ளோம்… ஆனால் உடனே அவைநிகழ்வுகள் உள்ளன என்றனர். சற்று குறைவாக…” என்றார். “தேவையில்லை” என்றான் உத்தரன். “சற்று வலி இருக்கட்டும். தேடி அடைந்த நகை போன்றது இந்தப் புண். அதை முழுமையாக அறியவேண்டும் அல்லவா?”
நாசிகர் அவனை திகைப்புடன் நோக்கிவிட்டு தன் உதவியாளனை பார்த்தார். அவனும் திகைப்பு கொண்டிருந்தான். நாசிகர் உத்தரனின் கட்டை சிறிய கத்தியால் வெட்டி விலக்கினார். குருதியுடன் சேர்ந்து ஒட்டி சேறு உலர்ந்ததுபோலிருந்தது. அவர் அதை பிடித்துக்கொண்டு அவன் விழிகளை நோக்க அவன் புன்னகைத்தான். அவர் அதை விரைந்து இழுத்து கிழித்தெடுத்தார். அவன் பற்களைக் கடித்து கழுத்தை இறுக்கினான். ஆனால் புன்னகை அவ்வாறே இருந்தது. புண்ணிலிருந்து பஞ்சு கருஞ்செம்மை நிறப் பொருக்கென விலகியது. குருதி வழிய அதன்மேல் பஞ்சை வைத்து அழுத்தித் துடைத்தார் நாசிகர்.
அவர் கட்டு போட்டு எழுவதுவரை அவன் ஓசையேதுமின்றி அமர்ந்திருந்தான். அவர் கைகளை நீரில் கழுவியபோது “முடிந்ததா?” என்றான். அவன் விழிகள் சிவந்திருந்தன. “ஆம்” என்றார் நாசிகர். அவன் எழுந்துகொண்டான். “நீராடலாகாது. உடலை மென்பஞ்சு நீரால் துடைக்கலாம். என் உதவியாளர்களே செய்வார்கள்” என்றார் நாசிகர். உத்தரன் தலையசைத்தான். அவர் வணங்கி விலகிச்செல்ல அவருடைய உதவியாளன் “சற்றுநேரம் ஓய்வெடுத்தபின்…” என்றான். “தேவையில்லை” என்றான் உத்தரன்.
அவன் நீராட்டறைக்குச் சென்று நறுநீர்ப் பஞ்சால் உடலைத் துடைத்துவிட்டு மீண்டான். அணியர் அவனுக்கு அரச ஆடையும் அணிகளும் சூட்டினர். ஆடியிலெழுந்த தன் உருவை நோக்கிக்கொண்டிருந்தான். அவனறியாத அயலான். அணியன் அஞ்சியபடி “முடிந்துவிட்டது, இளவரசே” என்றான். “நன்று” என அவன் திரும்பிக்கொண்டான். “பிழையேதும் இருந்தால்…” என அவன் சொல்ல விலகும்படி கைகாட்டிவிட்டு அவன் நடந்தான். அணியன் பின்னால் வந்து அவன் இடையாடையின் ஊசி ஒன்றை சீரமைக்க முயல “விடு” என்று அவனை விலக்கினான்.
அவனுக்காக ஏவலரும் அகம்படியினரும் காவல்வீரர்களும் காத்து நின்றிருந்தனர். அவன் படிக்கட்டின்மேல் தோன்றியதும் மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. பெண்டிர் குரவையிட்டனர். அவன் படிகளில் இறங்கி வந்து அங்கே நின்றிருந்த சிற்றமைச்சரிடம் “அரசர் அவைபுகுந்துவிட்டாரா?” என்றான். “இல்லை இளவரசே, படைத்தலைவர் சங்காரகர் போர் நிகழ்ந்ததை விரித்துரைக்கிறார். அரசர் தங்களுக்காக சிற்றறையில் காத்திருக்கிறார்…”
சிற்றமைச்சர் குரல் தாழ்த்தி “நெடுநேரமாகிறது. தங்களுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லவில்லை. ஆனால் அதற்காகவே என அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. வாயிலை எட்டிப்பார்த்துக்கொண்டும் எரிச்சலுற்று அனைவரையும் கடிந்துகொண்டும் இருக்கிறார்” என்றார். உத்தரன் புன்னகைத்து நடக்கையில் சாளரம் வழியாக எரியம்புகள் வானிலெழுவதை நோக்கினான். “என்ன அது?” என்றபடி நின்றான். “நாடெங்கும் பன்னிருநாள் போர்க்களியாட்டுக்கும் உண்டாட்டுக்கும் அரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார் சிற்றமைச்சர்.
உத்தரன் எரிச்சலுடன் “போர் என்பது களியாட்டல்ல. நேற்றுவரை நம்முடன் இருந்த எண்ணூற்றிப்பதினேழு வீரர்கள் இன்றில்லை” என்றான். சிற்றமைச்சர் “போர்ப்பலி என்பது உயிர்வேள்வி. அவர்களின் நினைவைப் போற்றவும்…” என்று சொல்லத்தொடங்க உத்தரன் கைகாட்டி அமர்த்தி “எல்லா இறப்பும் இறப்பு மட்டுமே. அப்பாலுள்ள அனைத்தும் சூதர்பாடல்களின் அளவுக்கே பொருள்கொண்டவை” என்றான். “இக்களியாட்டுக்கள் அவர்களை நினைவுகூர்வதற்காக அல்ல, மறந்துவிடுவதற்காகவே. சென்று கேட்டுப்பாருங்கள், அங்கே கள்ளுண்டு கூத்தாடுபவர்களில் எவருக்காவது எத்தனைபேர் பலியாயினர் எனத்தெரியுமா என்று?”
அவன் கசப்புடன் இதழ்வளையப் புன்னகைத்து முன் நடக்க சிற்றமைச்சர் பின்னால் வந்தார். “அவர்கள் இல்லை, நாங்கள் இருக்கிறோம். இதோ, எழும் களிக்கூச்சலின் பொருள் அது ஒன்றே” என்றான் உத்தரன். சிற்றமைச்சர் ஒன்றும் சொல்லவில்லை. இடைநாழிகளினூடாக வாழ்த்தொலிகள் சூழ உத்தரன் நடந்தான். எதிர்ப்படும் ஒவ்வொரு விழியும் பிறிதொன்றாக இருந்தது. ஒவ்வொரு உடல்மொழியிலும் தெரிந்த மாறுதல் அவர்கள் நோக்குவது தன்னையல்ல என அவனை எண்ணச்செய்தது.
நிமித்திகன் வரவறிவித்து முன்செல்ல கொடிக்காரனைத் தொடர்ந்து அணிச்சேடியரும் மங்கலச்சூதரும் நிரைவகுக்க அவன் நடந்தான். அகம்படியினர் பின்னால் வந்தனர். சிற்றறை வாயிலில் அரசரின் கொடியினனும் சேடியரும் அகம்படியினரும் நின்றிருந்தனர். அவன் அன்னையும் உத்தரையும் அவன் மீண்டுவந்தபோது அரண்மனை முற்றத்திற்கு வந்து வரவேற்றார்கள். நெறிகளின்படி அரசரை அவன் அவையில்தான் சந்திக்கவேண்டும். அவன் அவரிடம் சொல்லும் சொற்கள் சூதர்களிடம் பாடலாகும். நூலாகும். கொடிவழியினர் கதையென கேட்பார்கள். அவன் சொல்வதற்கும் அதற்கும் ஒருவேளை எந்தத் தொடர்பும் இருக்காது. ஆனால் அவன் அதை தொடங்கிவைக்கவேண்டும்.
அவன் வரவை அறிவித்த ஏவலன் தலைவணங்க ஒருகணம் தயங்கிவிட்டு உள்ளே நுழைந்தான். விராடர் புலிக்கால் பீடத்தில் நிமிர்ந்து அமர்ந்திருந்தார். அவன் வருவதை அறியாதவர்போல மறுபக்கமாக முகம் திருப்பி அங்கே நின்றிருந்த சேடியிடம் வாய்மணம் கொண்டுவரும்படி விரல்சுட்டி ஆணையிட்டார். அவள் தாலத்தைக் கொண்டுவந்து நீட்ட அதில் ஒரு நறும்பாக்குத் துண்டை எடுத்து வாயிலிட்டு மென்றபடி அவனைப் பார்த்தார். அவன் தலைவணங்கி “தங்கள் பெயருக்கு பெருமைசேர்த்துவிட்டேன், தந்தையே” என்றான். விராடர் அவன் விழிகளை சந்திக்காமல் வெறுமனே தலையசைத்தபின் “அவையில் என்ன பேசவேண்டும் என்பதை ஆபர் எழுதி அளிப்பார். அதை இருமுறை படித்துவிடு. வாயில் வந்ததை உளறி அங்கே நகைப்புக்கிடமாக வேண்டாம்” என்றார். உத்தரன் “ஆணை” என்றான்.
விராடர் மிகையான சலிப்புடன் “உன் அன்னை ஏதோ காட்டுக்கலி ஆலயத்திற்குச் சென்று பூசெய்கை நிகழ்த்தவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். என்னால் அங்கெல்லாம் வரமுடியாது. இங்கு பல நிகழ்வுகள் உள்ளன” என்றார். உத்தரன் “நானே சென்றுவருகிறேன்” என்றான். வெளியே கொம்புகளும் முரசுகளும் முழங்கின. “உன் அன்னையும் உத்தரையும் அவைபுகுகிறார்கள்போலும்… இந்த முறைமைகள் எதையும் விடமாட்டார்கள்” என்றார் விராடர். சலிப்பு நிலைகொண்ட முகத்துடன் எழுந்துகொண்டு “அந்த மூடன் அவன் போர்முகத்தில் ஆற்றியதைப்பற்றிய பொய்களை எல்லாம் முடித்துவிட்டான் என்றால் நாம் அவைபுகலாம்” என்றார். உத்தரன் அருகே நின்ற சேடியின் விழிகளை நோக்கியபின் திரும்பிக்கொண்டான்.
சிற்றமைச்சர் உள்ளே வந்து வணங்கி “கிளம்பலாம், அரசே” என்றார். உத்தரன் “குங்கர் எங்கே?” என்றான். “இங்குதானிருந்தார்… எங்கே அவர்?” என்றார் விராடர். “இடைநாழியில் நிற்கிறார்” என்றாள் சேடி. விராடர் மெல்லிய ஏப்பம்விட்டு “விரைவில் அவையை முடிக்கவேண்டும். என்னால் நெடுநேரம் அமர்ந்திருக்க இயலாது. உன் பெருமைகளை கொஞ்சம் குறைத்தே சொல்லச்சொல் சூதரிடம். வாய்ப்பு கிடைத்தால் காவியங்களை பாடத் தொடங்கிவிடுவார்கள்” என்றார். “சொல்கிறேன்” என்றான் உத்தரன்.
விராடர் ஏவலர் ஆடைதிருத்துவதற்காக நின்றார். அவருடைய ஆடையின் சுருக்கங்களை அவர்கள் நீவிச் சீரமைத்து ஊசிகளை மீண்டும் குத்தினர். “போர்வெற்றி என்பது பெரும்பாலும் தற்செயல். ஒரு வெற்றி வந்ததும் நானே பரசுராமன் என எண்ணிக்கொள்வது மடமை” என்றார் விராடர். “இவ்வெற்றி நம் கையில் ஒரு வீசப்படாத வேலாக இருக்கவேண்டும்.” சிற்றமைச்சர் தலைவணங்க விராடர் வெளியே சென்றார். அங்கே வாழ்த்தொலிகள் பெருகி எழுந்தன. இசையும் குரவையும் சூழ்ந்தன.
விராடர் “ஆபர் எங்கே?” என்றார். சிற்றமைச்சர் தயங்கி “அவர் அவையிலிருக்கிறார்” என்றார். “ஏன்?” என்றார் விராடர். அவர் பேசாமல் நின்றார். உத்தரன் கிளம்பும்பொருட்டு தன் அகம்படியினரை நோக்கி விழிதிருப்பும்போது தூணருகே நின்ற குங்கனை தன்னியல்பாக விழிதொட்டான். முகம் மலர்ந்து அருகே சென்று தலைவணங்கி “அருள்க, குங்கரே! களம்வென்று மீண்டுள்ளேன்” என்றான். குங்கன் “வெற்றிமகள் வலமுறைக! திருமகள் இடமுறைக!” என்று வாழ்த்தினான். உத்தரன் அவன் முகத்தை கண்கள் சுருங்க நோக்கி “என்ன புண்?” என்றான். குங்கன் “விசிறி பட்டுவிட்டது… பெரிதாக ஒன்றுமில்லை” என்றான். “எப்படி பட்டது? இருட்டில் நடந்தீர்களா?” என்றான் உத்தரன். குங்கன் விராடர் அப்பால் அவைநுழைவதை நோக்கிவிட்டு “அரசர் அவை நுழைந்துவிட்டார், இளவரசே” என்றபின் தன் மேலாடையை அள்ளி சுற்றிக்கொண்டு முன்னால் சென்றார்.
உத்தரன் “செல்வோம்” என்றபடி தன் அகம்படியினரை நோக்கித் திரும்பியபோது சிற்றமைச்சரின் விழிகளை ஒருகணம் பார்த்தான். விரைந்த நோக்கு மட்டுமே தொட்டெடுக்கும் ஒன்றை அறிந்து அவன் உள்ளம் கூர்கொண்டது. “என்ன நிகழ்ந்தது?” என்றான். அவன் குரலிலிருந்த மாறுபாட்டை உணர்ந்ததும் அவர் அச்சத்துடன் பின்னடைந்து “எங்கே இளவரசே?” என்றார். “அவர் முகத்தில் என்ன புண்?” சிற்றமைச்சர் “ஒன்றுமில்லை, இளவரசே” என்று சொல்லி மேலும் ஓர் அடி பின்னால் எடுத்துவைத்தார்.
உத்தரன் தாழ்ந்த குரலில் “இது என் ஆணை!” என்றான். அமைச்சர் தயங்கிய குரலில் “அரசர்தான்” என்றார். “என்ன நிகழ்ந்தது?” என்றான் உத்தரன் மேலும் தாழ்ந்த குரலில். “நான் அப்போது அரசரின் அறைக்குள் இல்லை. நான் அறிந்ததுதான். தாங்கள் அடைந்த வெற்றியை எண்ணி அரசர் விழிநீர் உகுத்தார். உவகை கொண்டாடினார்.” உத்தரன் “சொல்க!” என்றான். “அவரிடம் குங்கர் அவ்வெற்றி பிருகந்நளையால்தான் என்று சொன்னாராம். அரசர் உளம்பொறாமல் சினம்மீதூற விசிறியால்…” உத்தரன் இடையில் கைவைத்து சில கணங்கள் நின்றான். பின்னர் நடக்கலானான். நிமித்திகன் சங்கூதி முன் செல்ல கொடிக்காரனும் அணிச்சேடியரும் சூதரும் தொடர்ந்தனர்.
“இளவரசே, இவை பிழையாக இருக்கலாம். அமைச்சு அவையில் பேசப்பட்ட சொற்கள். நான் என் சொற்களென ஏதும் சொல்லவில்லை” என்றபடி அவன் பின்னால் வந்தார் சிற்றமைச்சர். உத்தரன் அவர் அஞ்சவேண்டியதில்லை என கை காட்டியபின் அவைக்குள் நுழைந்தான்.
நிறைந்து விளிம்புகளில் நுரையலை எழும் ஏரிபோலிருந்த குடியவைக்குள் உத்தரன் நுழைந்ததும் வாழ்த்தொலி எழுந்து அவன் மேல் அறைந்தது. குடிமுதல்வர்களும் படைத்தலைவர்களும் பெருவணிகரும் அமைச்சர்களும் எழுந்து கைகளைத் தூக்கி அவன்மேல் அரிமலர் தூவி வாழ்த்தினர். கைகளைக் கூப்பி அவையை வணங்கியபின் அவன் சென்று அவையிலமர்ந்திருந்த குங்கனை தாள்தொட்டு வணங்கினான். “பேரரசர்கள் தந்தையென்றும் தெய்வமென்றும் நிலைகொள்பவர்கள். தங்கள் நல்வாழ்த்துக்களை என்றும் கோருகிறேன்” என்றான்.
விராடர் திடுக்கிட்டு எழுந்துவிட்டார். கைநீட்டி ஏதோ சொல்லவந்தாலும் அவரால் உளம்கூட்ட முடியவில்லை. ஆபர் எழுந்து கைகூப்பியபடி நிற்க உத்தரன் “அமைச்சரே, பேரரசரை நம் அரியணையில் அமரச்செய்க!” என்றான். விராடர் “என்ன சொல்கிறாய்? ஒரு சூதனை…” என்று சொல்லத்தொடங்க ஆபர் “அரசே, அவர் பெயர் யுதிஷ்டிரர். பாரதவர்ஷத்தின் தலைவர்” என்றார். “யார்?” என்றார் விராடர். அவர் கைகள் நடுங்கத்தொடங்கின. “அவர்தான்… ஓராண்டு இங்கே நம்முடன் மாற்றுருக்காலத்தை கழித்தனர். நேற்றுடன் அது முடிந்தது. இன்று அவர் குங்கன் அல்ல, தருமராகிய யுதிஷ்டிரர்.”
விராடர் தள்ளாடும் காலடி எடுத்து வைத்து குங்கரை நோக்கி வந்து “பேரரசே” என்றார். கைகூப்பி “எளியவன்… என் ஆணவத்தால்…” என்று திணறினார். குங்கர் அவர் அருகே வந்து தோளில் கைசுற்றி மெல்லத் தழுவி “ஓராண்டில் மிக அணுக்கமான பல தருணங்கள் நம்மிடையே அமைந்துள்ளன. பிறந்ததுமுதல் கண்காணா மணிமுடி ஒன்றைச் சூடியிருந்தமையால் நட்பென்று எதையும் நான் அறிந்ததில்லை. இங்கே என் குடியும் அரசும் இன்றி வெறும் மனிதனாக இருந்தேன். அவ்வண்ணம் பெற்ற நட்பு உங்களுடையது. இதுவே உண்மையில் நான் ஈட்டியது” என்றார்.
விராடர் தலைகுனிந்து கண்ணீர்விட்டார். “விராடரே, என்றும் என் முதன்மைத்தோழர் நீங்களே. உங்களுக்கு மட்டும் என்றும் குங்கன் என்றே அமைய விழைகிறேன். இன்றுவரை எவ்வண்ணம் என்னிடமிருந்தீர்களோ அப்படியே இருக்கவேண்டுமென கோருகிறேன்” என்றார் குங்கர். விராடர் ஓசையில்லாது விம்மிக்கொண்டிருந்தார். குங்கர் அவர் கைகளைப் பற்றி “நாம் ஆடும் களங்கள் பல இன்னுமுள்ளன, விராடரே” என்றார். அவையினர் அப்போதுதான் என்ன நிகழ்கிறதென்பதை புரிந்துகொண்டனர். கலைந்த ஒலியென அவையின் உணர்வு எழுந்து கார்வைகொண்டு சூழ்ந்தது.
குங்கர் திரும்பி அவையை நோக்கி “இளையோரே” என்று அழைத்தார். ஏவலர்நிரையில் இருந்து வலவனும் கிரந்திகனும் எழுந்து வந்தனர். சேடியர் அருகிலிருந்து பிருகந்நளை எழுந்து வந்தாள். “எங்கே இளையவன்?” என்றார் குங்கர். “அவன் வரவில்லை. தவச்சோலைவிட்டு நீங்க உளமெழாதிருக்கிறான்” என்றான் அருகணைந்த கிரந்திகன். “அவனை நானே சென்று அழைக்கிறேன்” என்றார் குங்கர். “அழைப்பதா? அப்படியே தூக்கிக்கொண்டு செல்லவேண்டியதுதான். இங்கிருந்து விண்ணுக்குச் செல்லமுடியுமா என்று பார்க்கிறான் மூடன்” என்றான் வலவன்.
“இளையோரே, இவர் என் தோழர். இனி என் இடத்தில் என்றும் இருக்கப்போகிறவர்” என்றார் குங்கர். வலவன் வந்து விராடரின் கால்களைப் பணிந்து “வாழ்த்துக, மூத்தவரே!” என்றான். விராடர் நடுங்கும் கைகளால் அவன் தலையைத் தொட்டு “வெற்றியும் புகழும் சேர்க!” என்றார். பிருகந்நளையும் கிரந்திகனும் அவர் கால்களைத் தொட்டு வணங்கினர். குங்கர் “இங்கே சைரந்திரியாக இருந்தவள் என் அரசி திரௌபதி” என்றார். சுதேஷ்ணையின் அருகே நின்றிருந்த சைரந்திரி தலைவணங்கினாள்.
சுதேஷ்ணை உரத்த குரலில் “ஆம், நான் எண்ணினேன். இவ்வாறு நான் பலமுறை எண்ணினேன்… வடபுலத்துச் சூதர் அமூர்த்தர் அஸ்தினபுரியின் அரசி குழலவிழ்த்திட்டு கானகம் சென்ற கதையைச் சொன்னபோது இவர்கள்தானோ என்று என் சேடியிடம் கேட்டேன். கேட்டுப்பாருங்கள்” என்றாள். சைரந்திரியின் கையை பற்றிக்கொண்டு “என் அரண்மனையில் இருந்திருக்கிறீர்கள், பேரரசி. எங்களால் பேணப்பட்டிருக்கிறீர்கள். இனி தலைமுறைதோறும் இது இங்கே கவிஞர்களால் பாடப்படும்… நற்பேறுகொண்டவர்களானோம்…” என்றாள். திரும்பி உத்தரையிடம் “வணங்குக… பேரரசியின் வாழ்த்தைப்போல உன்னை வாழச்செய்வது பிறிதில்லை” என்றாள்.
உத்தரை சைரந்திரியின் கால்களைத் தொட்டு வணங்க அவள் தலைமேல் கைவைத்து “இல்லம் நிறைக! கொடிவழிகள் பெருகுக!” என சைரந்திரி வாழ்த்தினாள். அவள் தோளை மெல்ல அணைத்துக்கொண்டு “நீ அறிவாய் என எனக்குத் தெரியும்” என்றாள். “முக்தன் என்னும் வீரர் சொன்னார்” என்றாள் உத்தரை. அவள் முகம் துயர்கொண்டதுபோலிருந்தது. சுதேஷ்ணை “என்ன முகத்தை அப்படி வைத்திருக்கிறாய்? நீ பாரதவர்ஷமே கொண்டாடும் மாவீரரிடம் பயின்றிருக்கிறாய்… எத்தனை கதைகளில் கேட்டிருக்கிறோம். கதைகளெல்லாம் இப்படித்தான் நிகழ்கின்றன போலும்” என்றாள்.
உத்தரை மேலும் துயர்கொண்டு தலைதழைத்தாள். விழிப்பீலிகளில் நீர்ப்பிசிறுகள் தெரிந்தன. சுதேஷ்ணை “ஏன் அழுகிறாய்?” என்றபின் சைரந்திரியிடம் “உவகைக்கண்ணீர். அவளுக்கு இதெல்லாம் உள்ளம்தாங்காதபடி பெரியவை” என்றாள். “ஆம்” என்றாள் சைரந்திரி. “வருக!” என உத்தரையின் தோளைப்பற்ற அவளிடம் மெல்லிய திமிறல் ஒன்று வெளிப்பட்டது. உடலில் நிகழாது உள்ளத்தின் அசைவாகவே கைகளுக்கு அது வந்துசேர்ந்தது என்று தோன்ற அவள் உத்தரையின் விழிகளை பார்த்தாள். உத்தரை அவள் நோக்கை சந்திக்காமல் தன் மேலாடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு தலைநிமிர்ந்து அரியணையை நோக்கினாள். சைரந்திரி புன்னகையுடன் அவள் தோளில் அழுத்தமாகக் கையை வைத்து “வருக!” என்று மீண்டும் சொன்னாள்.
விராடர் கைகூப்பியபடி அவையிடம் “இன்று விராடபுரி பேரரசாகியது. இனி என்றும் அது இந்திரப்பிரஸ்தத்தின் பகுதியென்றே இருக்கும். நானும் என் கொடிவழியினரும் அம்மணிமுடியால் ஆளப்படுவோம். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவையினர் எழுந்து நின்று வாழ்த்தொலி எழுப்பினர். “தொல்புகழ்கொண்ட விராட அரியணையையும் மணிமுடியையும் இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசருக்கு அளிக்கிறோம். அவர் இதை தனது என்று கொண்டு நம்மை வாழ்த்துக!” என்றார் விராடர். அவையினர் வாழ்த்தொலி எழுப்ப அவைக்கு வெளியே அச்செய்தி பரவி அங்கிருந்தும் முழக்கமாக வாழ்த்தொலி மேலெழுந்தது.
விராடரும் உத்தரனும் இரு பக்கங்களிலாக நின்று குங்கரை அரியணைக்கு அழைத்துச்சென்றார்கள். ஆபர் அரியணையில் அமரும்படி முறைச்சொல் உரைத்து அழைக்க குங்கர் அதில் அமர்ந்தார். மங்கல இசையும் குரவையொலிகளும் பெருகின. சுதேஷ்ணை சைரந்திரியை கைபற்றி அழைத்துச்சென்று குங்கரின் அருகே அரியணையில் அமரச்செய்தாள். ஆபர் ஆணையிட நிஷதகுலத் தலைவர்கள் எழுவர் விராடபுரியின் மணிமுடியை கொண்டுவந்து அளிக்க அதை விராடரும் உத்தரனும் எடுத்து குங்கருக்கு அணிவித்தனர். செங்கோலை ஆபரிடமிருந்து குங்கர் பெற்றுக்கொண்டார்.
வேதியர் பதினெண்மர் மேடையேறி தொல்மொழி ஓதி நீர் தெளித்து வாழ்த்தினர். நிஷதகுலத் தலைவர்கள் நிரையாக வந்து அரிமலரிட்டு வணங்கினர். செங்கோலும் முடியுமாக அமர்ந்த குங்கரின் இரு பக்கங்களிலும் விராடரும் உத்தரனும் நிற்க சைரந்திரிக்குப் பின்னால் சுதேஷ்ணையும் உத்தரையும் நின்றனர். வாழ்த்துச் சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்து முடிந்ததும் நிமித்திகன் அவைமேடை ஏறி இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரின் சிறப்புக்காக பன்னிரு நாட்கள் விழவும் உண்டாட்டும் நிகழும் என அரசாணையை அறிவித்தான். அதை ஏற்று முரசுகள் முழங்கின.
சடங்குகளினூடாக விராடர் நிலைமீண்டு முகம் மலர்ந்திருந்தார். நிமித்திகனை விலகும்படி கைகாட்டிவிட்டு அவரே அறிவிப்புமேடையில் ஏறி “அவையோரே, குடிகளே, நாளைப் புலரியிலேயே இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரும் பேரரசியும் இளவரசர்களும் விராடபுரியிலிருந்து கிளம்புகிறார்கள். அவர்கள் இங்கிருந்த பெருமை என்றும் நம்முடன் இருக்கும். நமது வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் அவர்கள் உடன்கொண்டு செல்லட்டும்” என்றார். அவை கைதூக்கி ஆரவாரம் செய்தது. “விராடபுரியின் கருவூலமே அவர்களுடையது. அவர்கள் விழைகையில் இதன் இறுதிச்செல்வம் வரை அவர்களின் காலடியில் வைக்கப்படும். ஆயினும் இங்கிருந்து அவர்கள் தங்கள் நகர்மீள்கையில் நாம் என்றும் குறையாச் செல்வமொன்றை பரிசாக அளிக்கவேண்டும்.”
அவர் சொல்லப்போவதைக் காத்து அவை அமைதிகொள்ள சிலர் புன்னகைத்தனர். “நாம் அனைவரும் எவ்வாறோ சற்று அறிந்த ஒன்று. அதை அவையிலறிவிக்கிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரும் மாமன்னர் பாண்டுவின் மைந்தரும் வில்யோகியுமான அர்ஜுனர் என் மகள் உத்தரைக்கு ஆசிரியராக அமைந்து இங்கே ஓராண்டு உடனுறைந்தார். அவர் தானறிந்தவற்றை எல்லாம் அவளுக்கு மேலும் கற்பிக்கட்டும்.” அவை சிரிக்கத் தொடங்கியது. “நம் இளவரசியை பாண்டவரின் குலமகளாக ஏற்றருளவேண்டும் என நான் அர்ஜுனரையும் அவர் தந்தைவடிவமாக அமைந்த பேரரசரையும் வேண்டிக்கொள்கிறேன்” என்று விராடர் வணங்கினார்.
அவை எழுந்து நின்று உவகைக் கூச்சலிட்டது. அச்செய்தி வெளியே பரவ விராடபுரியின் தெருக்களிலும் இல்ல முகப்புகளிலும் கூடிநின்றவர்கள் அனைவரும் வாழ்த்துக் கூச்சலிட்டனர். நகரம் அமைந்தும் எழுந்தும் முழங்கிக்கொண்டே இருந்தது. விராடர் கையமர்த்தி அவையை அமரச்செய்ததும் எங்கிருந்தோ மீண்டும் வாழ்த்தொலி எழுந்தது. உத்தரை தன் குழலாடையால் முகம் மறைத்து மெல்ல விம்மிக்கொண்டிருந்தாள். அவள் தோளை சுதேஷ்ணை பற்றியிருந்தாள்.
கைகூப்பியபடி அர்ஜுனன் எழுந்ததும் அவை அமைதியடைந்தது. ஆனால் நகரிலிருந்து எழுந்த முழக்கம் அவர்களை செவியும் நாவுமில்லாதவர்களாக ஆக்கியது. வெளியே முரசுகள் முழங்கின. கலைந்து சிதறிய பசுக்களை வேட்டைநாய்கள் என முரசொலி அவ்வோசையை ஒன்றுசேர்த்து அமைதியடையச் செய்தது. பின் செவிகள் முழங்கும் அமைதி எழுந்தது.
அர்ஜுனன் அவையை வணங்கியபின் விராடரிடம் “அரசே, தங்கள் மகளுக்கு நான் ஆசிரியனாகவே இருந்தேன். பிறிதொன்றுமாக அல்ல” என்றான். விராடர் திகைப்புடன் உத்தரையை நோக்கினார். “இந்தக் கான்வாழ்வில் எந்தையின் நகர்வரை சென்று இன்பங்களில் மானுடன் அறியக்கூடுவதனைத்தையும் அறிந்து மீண்டிருக்கிறேன். அரசே, மண்ணில் மானுடன் அடையும் இன்பங்கள் அனைத்தும் அறியுமின்பங்களே. அறிவதற்கேதுமில்லாதவற்றில் இன்பம் என ஏதுமில்லை. இனி இங்கு நான் அடைவதற்கேதுமில்லை” என்றான்.
“நான் அறியவேண்டியவை இனி என்னை உரித்திட்டுக் கடந்துசென்று அறியவேண்டியவை. அனலாடி உருமாறிச் செல்லவேண்டிய பாதைகள் அவை. அது நிகழக்கூடும்” என்றான் அர்ஜுனன். விராடர் மறுமொழி சொல்வதற்குள் “ஆனால் அவையிலெழுந்து நீங்கள் சொன்ன சொல் நிலைகொள்ளவேண்டும். உங்கள் மகள் பாண்டவரின் குலக்கொடியாவாள். அவளை நான் ஏற்றுக்கொள்கிறேன், என் மகன் அபிமன்யூவுக்குத் துணைவியாக” என்றான்.
விராடர் முகம் மலர்ந்து “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் நிமித்திகனை நோக்கி கை தூக்கினார். அவன் அறிவிப்பு மேடையில் ஏறி “அவை அறிக! நுண்வடிவில் வந்த மூதாதையர் அறிக! என்றும் சூழ்ந்திருக்கும் தெய்வங்கள் அறிக! விராட இளவரசி உத்தரையை பாண்டவர்குலத்து இளவல் அபிமன்யூவுக்கு அறத்துணைவியென அளிக்க விராடபுரியின் அரியணையமர்ந்த அரசர் தீர்க்கபாகு ஒப்புதல் அளிக்கிறார்” என்று கூவினான். அவை எழுந்து வாழ்த்துக்கூவ மீண்டும் நகரம் ஒலிவடிவென்று எழுந்து வானை அறைந்தது.
உத்தரன் உத்தரையை நோக்கினான். முகத்தை மூடிய ஆடைக்குள் அவள் உணர்வுகள் ஏதும் தெரியவில்லை. ஆனால் தோள்கள் இறுகி முன்குறுகியிருந்தன. சுதேஷ்ணை கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். அவன் சைரந்திரியின் விழிகளை நோக்கியபின் திரும்பிக்கொண்டான். தன் முன் அலையடித்துக்கொண்டிருந்த பேரவையை முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத ஒன்றை என நோக்கினான். வானம்போல மலைகளைப்போல கடலைப்போல கண்முன் எழுந்து நின்றிருக்கும் பேருரு. அறிந்த வரை இது என்று ஒரு பெயரும் அடையாளமும் இட்டு உள்ளத்தில் வைத்துக்கொள்ளலாம். கைக்குச் சிக்கியது வரை பயன்படுத்தி ஆளலாம். அப்பால் அது பிறிதொன்று. அறியப்படவே இயலாதது.
விராடர் கண்ணீருடன் ஆபரின் கைகளை பற்றிக்கொண்டார். பின்னர் குங்கரின் அருகே வந்து கைகூப்பினார். குங்கர் அவரிடம் ஏதோ சொல்ல விழிநீருடன் சிரித்தார். ஒவ்வொன்றும் நிகழ அவன் வேறெங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருந்தான். அந்த விலக்கத்தை போர்க்களத்திலும் உணர்ந்ததை நினைவுகூர்ந்தான்.