தி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்

vanchiதி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு

அறம் விக்கி

ஜெ,

முகநூலில் முரளிதரன் காசி விஸ்வநாதன் எழுதிய பதிவு இது:

 

திருநெல்வேலியின் ஆட்சியராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனின் குடும்பத்தினர் என்று கூறி ஒருவரது பேட்டி தமிழ் இந்துவில் வெளியாகியிருக்கிறது.

 

அதில் ஜெயகிருஷ்ணன் என்பவர், வாஞ்சிநாதனின் மகள் லட்சுமியின் மகன் என்கிறார். வாஞ்சிநாதன் கொலைசெய்த பிறகு, கர்ப்பமாயிருந்த அவரது மனைவியை பிரிட்டிஷாரிடமிருந்து காப்பாற்ற முத்து ராம லிங்க தேவர் தான் மூன்று மாதங்கள் கூட்டு வண்டியில் வைத்துச் சுற்றிக் கொண்டிருந்தாராம்.
 

குழந்தை பிறந்த பிறகு, கந்தர்வக்கோட்டையில் டீக்கடைக்காரர் ஒருவரிடம் 25 ஆயிரம் பணம் கொடுத்து, அந்தக் குழந்தையை ஒப்படைத்தாராம். பிறகு, சென்னையில் ஒரு வீட்டில் குழந்தையின் தாயையும் மறைவாக வைத்திருந்தாராம்.
 

முத்துராமலிங்கத் தேவர் பிறந்தது அக்டோபர் 30, 1908. வாஞ்சிநாதன் கொலைசெய்தது ஜூன் 17, 1911. ஆக. மூன்று வயதுக் குழந்தையாக இருந்த முத்துராமலிங்கத் தேவர், கர்ப்பிணிப் பெண்ணை வண்டியில் வைத்துப் பாதுகாத்திருக்கிறார். 4 வயதிலேயே 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வேறு ஒரு டீக்கடைக்காரரிடம் கொடுத்தாராம்.

 

அன்றைக்கு தங்கத்தின் விலை கிராம் 1.80 காசு. 25000 ரூபாய்க்கு தோராயமாக 13890 கிராம் தங்கத்தை வாங்க முடியும். அப்படியானால், இன்றைய மதிப்பில் சுமார் 3,85,44,750 ரூபாய்!! இவ்வளவு பணத்தைக் கொடுத்து ஒரு குழந்தையைப் பாதுகாக்கச் சொல்கிறது மற்றொரு குழந்தை.

 

இந்தக் கட்டுரை குறித்து வாஞ்சிநாதனின் தம்பியின் பேரன் கோபாலகிருஷ்ணனிடம் பேசினேன். இந்தக் கட்டுரை குறித்துப் பேசுவதற்காக, தான் இப்போது இந்து அலுவலகத்திற்குத்தான் போய்க்கொண்டிருப்பதாகக் கூறினார்.

 

வாஞ்சிநாதனுக்கு பிறந்த பெண் குழந்தை அவர் இருக்கும்போதே இறந்துவிட்டது என்று தெரிவித்த கோபாலகிருஷ்ணன், வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் சென்னையிலிருந்து மீண்டும் திருநெல்வேலிக்கு வந்த பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர் அவரைச் சென்று பார்த்ததாகச் சொல்கிறார்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் லட்சுமி, ஜெயகிருஷ்ணன் ஆகியோர் யாரேன்றே தெரியாது என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

 

இந்தக் கட்டுரை யாரைப் பற்றி நல்அபிப்ராயம் உருவாக்குவதற்காக எழுதப்பட்டது?

 

 

– முரளிதரன் காசி விஸ்வநாதன்

 

இன்று தி ஹிந்து அது தேவரின் அப்பாதான் என ‘திருத்தம்’ வெளியிட்டிருப்பதைப்பார்த்தால் அவர்கள் வெளியிட்டது வெறும் சாதிப்பாசக் குறிப்பு என தெரிகிறது. அத்தனை சாதிகளும் இப்படி புராணங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. காமராஜர் பற்றியும் வ.வு/சி பற்றியும். காஞ்சி சந்திரசேகரர் பற்றியும் வரும் கதைகளை எல்லாம் பார்த்தால் இங்கே இனிமே சரித்திரமே எழுதமுடியாது என்று தெரிகிறது. இப்போது நாளிதழ்ச்செய்திகளாகவே ஆக்கிவிட்டார்கள். இனிமேல் இதுவே அதிகாரபூர்வ வரலாறு

 

தமிழ்ச்சிந்தனையின் மிக மோசமான ஒரு காலகட்டம் இது

 

ராஜேஷ்

 

 

சாதிப்பாசத்தால் ஒரு நிருபர் எழுதிய செய்தி. அவர் ஜூனியர் விகடனில் இருந்தவர் என நினைக்கிறேன் . ஒரு செய்தித்தாளின் நிருபராக இருப்பதன் பொறுப்பு அவருக்குத்தெரியவில்லை. கிசுகிசுவை செய்தியாக்கியிருக்கிறார். அறிவார்ந்த பயிற்சி எல்லாம் அவரிடம் எதிர்பார்க்கமுடியாது. எப்படியோ வெளியாகிவிட்டது. கௌரவமாக மன்னிப்புகேட்டு எதிர்தரப்பின் கடிதங்களையும்போட்டு இனிமேல் ஜாக்ரதையாக இருந்திருக்கலாம். சொதப்பி நாறிவிட்டார்கள்

முருகேசன் சண்முகம்

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

தங்களின் “தி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு” என்ற பதிவை படித்தேன்.எனக்கும் இது மிகுந்த ஏமாற்றத்தையும்,வருத்தத்தையும் ஒரு சேர அளித்தது.ஒரு காலத்தில் அரசாங்க கெஜட்டில்(  Government Gazette) வரும் செய்தியை கூட நம்ப முடியாது ஆனால் “ஹிந்துவில்” வந்தால் கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் என்று சொல்லும் நிலை இருந்தது.இன்று எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி இது!.அதேபோல் ஒருதலைப்பட்சமான கட்டுரைகளையும்,

செய்திகளையும் கூசாமல் வெளியிடுவது,வாசகர்கடிதங்களிலும் அப்பட்டமான பாரபட்சம் காண்பிப்பது…இப்படி கூறிக்கொண்டே போகலாம்.இது நீங்கள் கணித்திருப்பதுபோல் சரியான “தடித்தனம் தான்” சந்தேகேமேயில்லை.

 

பி.குறிப்புசுமார் 35 வருட காலமாக எனது தந்தையின் காலத்தில் இருந்து இன்றுவரை கர்ம சிரத்தையாக எனது ஊரில் (18 முதல் 25 பிரதிகள்தான்) .    ஹிந்துவின் விநியோகஸ்தராகவும்  அதன் வாசகராகவும்  வேறு இருந்துவருகிறோம் .விட்டு தொலைக்கவும் மனம்                  வரவில்லை என்ன செய்ய!

அன்புடன்,

அ .சேஷகிரி.

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85
அடுத்த கட்டுரையானைடாக்டர்- மொழியாக்கம், பிரசுரம்