தி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு

vanchi

 

இது தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரை

 

‘‘அன்றைக்கு தாத்தா செய்தது தப்புத்தானே..!” – பாட்டிக்காக வருந்தும் வீரன் வாஞ்சிநாதனின் பேரன்

*

அதற்கு பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய எதிர்வினை இது

 

 

தமிழகத்தில் மட்டும்தான் இது போன்ற படுமட்டமான கட்டுரைகள் வர முடியும். இது தி இந்துவில் வந்திருக்கிறது என்பது எனக்கு மிகவும் வருத்ததை தருகிறது. கட்டுரை எழுதியவருக்கு தகவல்களைச் சரிபார்க்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இருப்பதாகத் தெரியவில்லை. தமிழக வரலாற்றின் மீது குறைந்தபட்ச மரியாதை இருப்பவர் எவரும் இது போன்ற நேர்காணலை எடுத்திருக்க முடியாது.

 

கட்டுரை முழுவதும் முழுப் பொய்கள். அரைகுறை உண்மைகள்.

 

  1. எனக்குத் தெரிந்து வாஞ்சிநாதனுக்கு குழந்தை பிறந்து அவர் இருக்கும்போதே இறந்துவிட்டது. எனவே இவர் வாஞ்சிநாதன் பெயரனாக இருக்க வாய்ப்பே இல்லை. என் நினைவு சரியாக இருக்குமானால் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் பிரகாரத்தைச் சுற்றி இருந்த தெரு ஒன்றில் வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள் வசித்து வந்தார். அவருக்கு வாரிசு ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.
  2. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வாஞ்சியின் மனைவியை கைது செய்ய எந்த தேவையுமில்லை. ஒரு மூன்றாம்தர சினிமாரசிகன்கூட நம்பமுடியாத கட்டுக்கதை இது.
  3. வாஞ்சி இறக்கும்போது தேவருக்கு வயது மூன்று.
  4. திரு. அசோகனுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன் 

     

 

இன்று மேற்கண்ட எதிர்வினையை தி ஹிந்து வெளியிட்டிருக்கிறதா என்று பார்த்தேன். உலகமெங்கும், குறைந்தபட்சம் இந்தியாவின் கௌரவமான நாளிதழ்களில், கடைப்பிடிக்கப்படும் நாகரீகம் என்னவென்றால் அந்தக்கட்டுரையின் பிழைகளுக்காக ஆசிரியர் வருத்தம் தெரிவிப்பது. ஏனென்றால் அது நாளை ஓர் ஆவணமாகக் கருதப்படலகாது. நாளிதழ்ச்செய்திகளை ஆதாரமாகக் கொண்டே இங்கே அரசியல் பேசப்படுகின்றன என்னும் சூழலில் இது மிக முக்கியமானது

 

குறைந்தபட்ச அறம் என்பது பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய கடிதத்தையாவது பிரசுரிப்பது. அதுவும் செய்யப்படவில்லை. மேலே சொன்ன கட்டுரையில் உள்ள மாபெரும் பிழை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாஞ்சியின் மனைவியை பாதுகாத்தார் என்பது. அப்போது முத்துராமலிங்கத்தேவருக்கு மூன்று வயதுதான் எனச் சுட்டிக்காட்டப்பட்டபோது தாங்களே கண்டுபிடித்ததுபோல அது அவரது தந்தை என்று ஒரு ‘திருத்தச் செய்தி’ வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஆகா, தேவர்பிரானின் தந்தையும் தேசபக்தர்’ என்று ஒரு புளகாங்கிதம் வேறு. ஒரு பிழையை மறைக்க இன்னொரு அபத்தமான பிழைச்செய்தி.

 

மேலே சொன்ன கட்டுரையின் அத்தனை தகவல்களும் பிழையானவை. வாஞ்சி இறக்கும்போது அவருக்கு குழந்தை இல்லை. அவர் மனைவி கருவுற்றிருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை. அவர் பாளையங்கோட்டையில் தனியாக வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்கள் பலரால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவருடைய வாரிசுகள் என்பவர் எவரும் அதிகாரபூர்வ குருதிவழியினர் அல்ல. அப்படி அவர்கள் சொல்லிக்கொண்டால் அதற்கான ஆதாரங்கள் தேவை. அதை அவர்களிடம் கேட்டு அறிவதே இதழாளனின் வேலை. அதை கேட்காமல் அக்கட்டுரையைப் முட்டாள்தனமாக பிரசுரித்தது ஆசிரியர்குழுவின் பிழை. அப்பிழைகள் அறிஞர்களால் சுட்டிக்காட்டப்படும்போது அதை பதிவுசெய்யக்கூட முன்வராத அறியாமையை, தடித்தனத்தை என்னவென்று சொல்வது? இந்தியாவின் வேறெந்தமொழியிலாவது இத்தகைய கட்டுரை ஒன்று வரமுடியுமா?ஒரு எளிய விஷயத்தில் தன் பிழையை ஒப்புக்கொள்ளமுடியாதவர்கள் பேசும் சமூக அறங்களுக்கெல்லாம் என்ன அர்த்தம்?

 

நாளிதழ்க்கட்டுரைகளை நம்பி அரசியல்பேசுபவர்களுக்கு நம் நாளிதழ்கள் அரைவேக்காடுகளின் களம் என்பதை எடுத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. தமிழ் ஹிந்துவின் செய்தி பொய்யானது என்பதற்கான ஆதாரம் இணையத்தில் இருந்தாகவேண்டும் என்பதற்காக இக்குறிப்பு.

 

 

முந்தைய கட்டுரைகண்ணன் பிறந்த நாளில்..
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85