அன்புள்ள ஜெ
நேற்று ஜென்மாஷ்டமி. காலையில் எழுந்ததுமே கண்ணன் நினைப்பு. ஆகவே கண்ணனின் புகழை வாசிப்போம் என்று நினைத்தேன். வழக்கமாக பாகவதம். கூடவே கண்ணன் பாடல்கள். இந்தமுறை நீலம் வாசிக்கலாம் என முடிவுசெய்தேன். ஆகவே நீலத்தை வாய்விட்டு வாசிக்க ஆரம்பித்தேன். வீட்டில் அத்தனைபேரும் கூடிவிட்டார்கள். சிலர் ஏதோ பழைய கிளாஸிக்கல் நூல் என்றே நினைத்தார்கள். சில இடங்களில் சொற்களை விளக்கவேண்டியிருந்தது. ஆனால் ஒன்று கவனித்தேன். மௌனமாக வாசிக்கும்போது புரியாமல்போகும் பகுதிகள் கூட சத்தமாக அந்த மெல்லிய rhetoric க்குடன் வாசித்தால் தெளிவாகவே புரிகின்றன. அந்த உணர்ச்சிகளும் நன்றாகவே அமைகின்றன. நவீன இலக்கியத்திற்குள் இப்படி ஒரு கிளாஸிக் டெக்ஸ்ட் அமைவது ஆச்சரியமான விஷயமாகவே இருக்கிறது.
பகல் முழுக்க ஒரு பெரிய பரவச நிலையில்தான் இருந்தேன். நீலத்தின் அழகுக்கு என்ன காரணம் என நினைத்தேன். அது இனிமையான மொழியில் பழம்பாடல்களை ஞாபகப்படுத்துகிறது. அதேசமயம் இன்றைய இலக்கியமாகவும் அமைந்திருக்கிறது. வாசித்து எடுக்க மரபான இலக்கியங்களில் இல்லாத நவீனமான அர்த்தங்கள் செறிந்திருக்கிறது. வணக்கம் ஜெ
ஸ்ரீனிவாசன்
அன்புள்ள ஜெ,
நேற்று கிருஷ்ணஜெயந்தி. வீட்டில் விசேஷங்கள் முடிந்தபின்னர் என் மனைவிக்கும் மகளுக்கும் நீலம் நாவலின் சிலபகுதிகளை வாசித்துக்காட்டினேன். அம்மாவும் வந்தார்கள். அம்மாவுக்கு பூதனை வரும் பகுதிகள் மிகமிகப்பிடிக்கும். பூதனையை ஒரு கெட்ட அரக்கியாகவே அவர்களுக்கு கதைகள் வழியாகப் பழக்கம். ஆனால் நீலத்தில் அவள் நிலம். பூமியில் உதித்தவள். முலையூட்டிய அன்னை அவளும் ஒரு வகை முக்தியையே அடைகிறாள். அந்தக் கதையைக் கேட்டாலே அம்மா அழுதுவிடுவாள். காடராக்ட் சிகிச்சைக்குப்பின் அம்மாவால் வாசிக்கமுடியாது. ஆகவே நான் வாசித்துக்காட்டினேன். இன்றையநாள் அற்புதமான ஒரு நிறைவுடன் இருந்தது. நன்றி
அன்புடன்
எஸ்.கண்ணன்
அன்புள்ள ஜெ,
இன்று கிருஷ்ணஜெயந்தி. நீலம் நாவலை இதுவரை பத்துதடவையாவது வாசித்திருப்பேன். இன்று மீண்டும் வாசித்தேன். எவரிடமாவது வாசித்துக்காட்டவேண்டும் போலிருந்தது. என் மகள்களுக்கு வாசித்துக்காட்டினேன். மூத்தமகள் வெளிநாட்டில் இருக்கிறாள். அவளுக்கு ஸ்கைப்பில் வாசித்துக்காட்டினேன். அந்த மொழிதான் அதன் அழகு. ஒவ்வொருவரியிலும் அழகான சொற்கள். ஆனால் இத்தனை வாசிப்புக்குப்பிறகுதான் அந்நாவலே கொஞ்சம்பிடிகிடைக்கிறது. அது தூய்மையான ப்ரபத்தி. அதில் ராதைதான் கண்ணனை கையில் எடுத்துப் பெயரிடுகிறாள். பீலி சூட்டுகிறாள். வானம் காட்டுகிறாள். கண்ணனை அவள் உருவாக்கி எடுத்து தன் தெய்வமென்று அறிந்துகொள்கிறாள். கண்ணன் என்பது பரமபுருஷன் அவளுக்குக் காட்டிய ஒரு வடிவம்தான். இன்றுமுழுக்க நீலம்தான்
ஆனால் உங்கள் தளத்தில் கிருஷ்ணஜெயந்தி பற்றி ஒருவரிகூட இல்லை என்பது ஆச்சரியம் அளித்தது. அதை எழுதியதுமே அப்படியே கடந்துவிட்டீர்களா? அப்படிக் கடந்துசெல்லமுடியுமா?
ஜெயஸ்ரீ
ஜெ,
வெண்முரசில் நீலம் மட்டும் நான் இதுவரை இருபது தடவையாவது வாசித்த நூல். இந்திரநீலத்தின் பலபகுதிகள் அந்த உச்சத்தை அடைந்தவை. அதேபோல கிராதம் வேறு ஒருவகை உச்சம். ஆனாலும் நீலம் மிக நெருக்கமானது. இன்று கிருஷ்ண ஜெயந்தி. இன்றைக்கு நீலத்தை வாசிக்கலாமென்று எடுத்தேன். வாசித்துச்சென்றபோது இந்த வரி
அரசி, உன் கரம்தொட்டு வருடி கறந்தெடுக்கும் புதுப்பால்நுரை எழும் பொன்னொளிர் சிறுகலம் வெறுமையள்ளி வீற்றிருக்கிறது. அதை நிறைக்கும் அமுதம் விண் நிறைந்த பாற்கடலில் அலைததும்பி எழுந்து அன்னைப் பசுவின் அகிடுகளில் துளிவிட்டு ததும்பி நின்றிருக்கிறது. எங்கே சென்றிருக்கிறாய்?
இந்தவரியை காற்று ராதையிடம் கேட்பது போல நீலம் சொல்கிறது. அவ்வகையில் அது மரபான ஒரு தன்மைகொண்டிருக்கிறது. ஆனால் ராதை கறக்கும் அந்தப்பால் அவள் உள்ளத்தில் அமைந்த காதல் என்று இன்றைக்கு வாசித்தபோது தோன்றியது. அவ்வரி ஒரு கவிதையில் வந்திருந்தால் அதன்மேல் கவனம் நின்றிருக்கும். ஆனால் நாவலின் அத்தனைவரிகளுமே இப்படி இருக்கையில் தவறிவிடுகிறது. ஹளபீடு சிற்பங்களைப்பார்க்கையில் பார்த்துப்பார்த்துத் தீராது என்பதுபோல.
ஆனால் ஒரு பூத்தகாடும் அப்படித்தானே இருக்கிறது. அதிலுள்ள பூக்களில் பெரும்பகுதி எவராலும் பார்க்கப்படுவதே இல்லைதானே? அது கிருஷ்ணார்ப்பணம் என்று மலர்கிறது
ராகவ்
ஜெ,
இன்று ஜென்மதினம்.காலை எழுந்ததுமே நீலம் நாவலை எடுத்தேன். வீட்டில் கிருஷ்ணபாதங்கள் ஓடிப்பதிந்திருந்தன.. கைபோனபோக்கில் விரித்தபோது இந்த வரி ‘தண்பாறை கரந்துள்ள தணலை, தளிரெழுந்த மரத்தின் அனலை’ வேறு ஒரு வரியே தேவையில்லை என மூடிவிட்டேன். அந்த அத்தியாயத்தில் எங்குமுள்ள அனலைப்பற்றிச் சொல்கிறது. ஆனால் எனக்கு இந்த வரி கிருஷ்ணனையும் ராதையையும் சொல்வதாகவே தோன்றியது. இன்று முழுக்க இந்த வரிதான். கவிதையாகவே இத்தனை பக்கங்கள் நீங்கள் சென்றிருப்பது கிருஷ்ணார்ப்பணத்தால்தான்.
ஆனந்த்
அன்புள்ள நண்பர்களுக்கு,
நேற்று முழுக்க நீலம் பற்றிய கடிதங்கள் வந்துகொண்டே இருந்தன. தஞ்சையில் இருந்து ஹேமலதா என்னும் வாசகி அதன் சிலபகுதிகளை வாசித்து அனுப்பியது முதலில் வந்தது. அதன் பின் அந்திக்குள் ஏழெட்டுபேர் வாசித்துப் பதிவுசெய்து அனுப்பியிருந்தனர். நான் அதிலிருந்து உணர்வுரீதியாக வெளிவந்துவிட்டேன். இல்லையேல் அடுத்தபகுதிகளை எழுதமுடியாது. ஆனால் ஏறிய படி ஏறியதுதானே?
பொதுவாக பண்டிகைகள், நினைவுநாட்கள் எனக்கு சரிவருவதில்லை. என் உளநிலையை அன்றுகாலை இருக்கும் சூழலே தீர்மானிக்கிறது. என் இளமைப்பருவத்தில் முக்கியமான கொண்டாட்டங்களாக இருந்த ஓணம், தீபாவளி, திருக்கார்த்திகை போன்றவற்றை எவரேனும் சொன்னால்தான் நினைவுகூர்கிறேன். சமீபத்தில் வாவுபலி நாள் தெரியாமலே கடந்துசென்றது. என் பிறந்தநாள், என் பெற்றோர் மறைந்தநாட்கள், சுந்தர ராமசாமி பி.கே.பாலகிருஷ்ணன் போன்றவர்களின் நினைவுநாட்கள், நித்யா சமாதிநாள் எதுவுமே அப்படி நினைவுகூரப்படுவதில்லை.
எது நினைவுக்குரியதோ அது இயல்பாகவே என்றும் நினைவிலிருக்கிறது. நித்யாவையோ சுந்தர ராமசாமியையோ பி.கே.பாலகிருஷ்ணனையோ அனேகமாக நாளூம் நினைவுகூர்கிறேன். நாட்கள் முக்கியமனாவை. உலகியலில் மூழ்கி வாழ்கையில் அவை கொஞ்சம் வெளியே இழுக்கின்றன. நல்லவேளையாக நான் உலகியலுக்குள் பெரும்பாலும் இல்லை
ஜெ
நீலம்- மொழி மட்டும்
மயில்நீலம்
நீலம் யாருக்காக?
நீலம் -வரைபடம்
’நீலம்’ மலர்ந்த நாட்கள் -1
நீலம் மலர்ந்த நாட்கள் 2
நீலம் மலர்ந்த நாட்கள் -3