85. தொலைமீன்ஒளிகள்
குடில் வாயில் திறந்து பிருகந்நளை வெளியே வந்தபோது முக்தன் வேல்தாழ்த்தி வணங்கினான். இரும்புக் கம்பிகளால் முடையப்பட்ட மார்புக் கவசமும் இரு கைகளில் காப்புக் கவசங்களும் தோளில் சிறகென எழுந்திருந்த இலைக் கவசங்களும் அணிந்து இரும்புக்குடம் போன்ற தலைக் கவசத்தை இடையோடு அணைத்தபடி இரும்புக் குறடுகள் எடையுடன் ஒலிக்க படிகளில் இறங்கி அவனை நோக்கி கையசைத்துவிட்டு பிருகந்நளை தன் புரவியை நோக்கி சென்றாள். அவள் விழிகள் மாறிவிட்டிருந்தன. அவள் ஏறி அமர்ந்த பின்னர் தன் புரவியிலேறி அமர்ந்து அவளைத் தொடர்ந்தான் முக்தன். அணிக்காட்டை சீரான குளம்படித் தாளத்துடன் கடந்து சாலைக்கு வந்தனர்.
விடிவெள்ளி தோன்றியிருக்கவில்லை. வானம் விண்மீன் பெருக்கென கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தது. அது ஒரு ஓட்டம் என ஒவ்வொரு முறையும் ஏன் தனக்குத் தோன்றுகிறது என அவன் வியந்துகொண்டான். விழிதூக்கி வானத்தைப் பார்க்கையில் அவ்வசைவுக்கு சற்று முன்னர்தான் விண்மீன்கள் அவ்வாறு தங்களை அமைத்துக்கொண்டன என்று அவனுக்குத் தோன்றுவதுண்டு. கரவுக்காட்டின் காவல் மாடத்திலிருந்து அவன் இரவெலாம் கூர்ந்தும் துயில்மயங்கி கனவுக்குள்ளும் விழித்தெழுந்து அரையுள்ளத்துடனும் நோக்கிய விண்மீன்களை எண்ணிக்கொண்டான்.
இளவயதில் விண்மீன்களை நோக்கும்போது கண்ணீர் துளிர்க்கச்செய்யும் உள எழுச்சி ஒன்றை அடைவான். இங்கிருக்கிறேன் இங்கிருக்கிறேன் என்று நெஞ்சில் அறைந்து வான் நோக்கி கூவவேண்டும்போல தோன்றும். மண்ணில் நிகழ்ந்த தன் பிறப்பிற்கு அறியாத பெரும் பொருளொன்று உண்டு என்றும் ஆற்றவேண்டிய பெருஞ்செயல்களின் நிரையொன்று எதிர்காலமாக தன் முன் எழுந்து அகன்றிருப்பதாகவும் உள்ளம் பொங்கி எழும். பின்னர் வான்பரப்பு சோர்வு தரக்கூடியதாக மாறியது. அங்கிருக்கும் அச்சிமிட்டல்களுக்கு எப்பொருளும் இல்லை. இருக்கலாம், மானுடன் அறியக்கூடுவதொன்றுமில்லை. மண்ணில் சிமிட்டும் மின்மினிகள் அறிந்திருக்கலாம். பின்னர் இங்கிருக்கிறேன் என்பது ஒரு மன்றாட்டாக, ஒரு தனிமை மூச்சாக மாறியது. எப்போதேனும் ஒரு வலிமுனகலாக. பின்னர் அவன் விண்மீன்களை நோக்குவதையே தவிர்த்தான். ஒருமுறைகூட வானை நோக்காமல் முழு இரவும் காவல் மாடத்தில் அவன் அமர்ந்திருந்தான்.
சிவமூலியை இழுத்தபடி முதுகாவலர் காமிகர் சொல்வதுண்டு “வானை பார்க்கலாகாது, இளையவனே. யோகிகளன்றி எவரும் வானை பார்க்கலாகாது. உலகியலில் உழல நமக்கெல்லாம் மண்ணும் கூழாங்கற்களும்தான் அளிக்கப்பட்டுள்ளன. மண்ணை பார், கால்களை மண்ணில் நன்றாக ஊன்றிக்கொள். விண்ணை பார்த்த உலகியலாளன் வாழ்ந்ததில்லை.” பின்னர் ஆழ்ந்து சிவமூலிப் புகையை இழுத்து மூச்சை நிறைத்து மூக்கினூடாக மெல்லவிட்டபடி “இதோ நான் இழுத்து உள்ளே நிரப்புவது வானில் நிறைந்திருக்கும் அம்முகிலின் ஒரு துளியை. ஏதோ ஒரு பிழையால் எப்போதோ வானை பார்க்கத் தொடங்கினேன். நான் கொண்டிருந்த அனைத்தையும் வானம் உறிஞ்சிவிட்டது” என்றார்.
அவன் அவருடைய மெலிந்த மார்பு அதிர்வதை நோக்கிக்கொண்டிருந்தான். வெறி மின்னும் விழிகளுடன் அவர் கையூன்றி அவன் அருகே வந்தார். “பார், இந்தப் புவியிலுள்ள அனைத்தையும் வானெனும் கடுவெளி ஒவ்வொரு கணமும் உறிஞ்சிக்கொண்டிருப்பது தெரியும். பெருங்கடல்களை, ஏரிகளை, இலைநுனி நீர்த்துளிகளை. மூடா, இங்குள்ள அத்தனை மூச்சுகளையும் அது உறிஞ்சிக்கொண்டிருக்கிறது. அத்தனை சொற்களையும் இழுத்துக்கொள்கிறது. அது வெறும் இருள். அவ்வளவுதான். பிறிதொன்றுமில்லை.” மீண்டும் சிவமூலியை ஆழ இழுத்து இருமினார்.
“விண்மீன்களை பார்க்கிறாயா? அவை அந்த இருள் காட்டும் மாயத்தோற்றம் மட்டுமே. இதோ இந்த ஒவ்வொரு விண்மீனும் ஒரு தூண்டில் முனை. ஏதோ ஒன்றில் உன் தொண்டை சிக்கிக்கொண்டால் அவ்வளவுதான், சுண்டி மேலிழுத்துவிடும். அங்கே கிடந்து துள்ளித்துள்ளி மூச்சு மூச்சு என ஏங்குவாய். நான் பார்த்திருக்கிறேன். நேற்றுகூட முதுகாவலர் பூராடர் இறப்பதை சென்று பார்த்தேன். வாய் திறந்து நெஞ்சு உந்தி உந்தி எழ… பின்னர் வெறும் குளிர்ந்த உடல். அர்த்தமில்லாத ஒரு குப்பை.” அவர் உரக்க இருமினார். அவன் அவரது விழிகளை நோக்கினான். சிவமூலி இழுப்பவர்களின் விழிகளில் ஏன் அந்த கடந்தநோக்கு உருவாகிறது?
“பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் இங்கே வேள்வியில் அவி சொரிந்து விண்ணுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறான். விண்ணில் எவரோ அதை வாங்கிக்கொள்கிறார்கள் என்று நம்புகிறான். ஆம், வாங்கிக்கொள்கிறது. ஆனால் அம்முடிவிலிக்கு நீ இடும் அவியும் சொல்லும் எவ்வகையில் பொருள்படும்? மூடா, பெருங்கடல்களே அதற்கு ஒரு துமி அல்லவா? வெறும் இருள். ஒவ்வொன்றும் இருளுக்குள் சென்று விழுந்துகொண்டே இருக்கின்றது. விண்மீன்களை பார்ப்பவன் ஒளியை பார்ப்பதில்லை. இளைஞனே, உண்மையில் அவன் இருளைத்தான் பார்க்கிறான்.”
பிருகந்நளை அரண்மனையின் முற்றத்தில் புரவியை இழுத்து நிறுத்தி “இங்குதானே இளவரசர் இருக்கிறார்?” என்றாள். “நேற்றிரவு இருந்தார்” என்றான் முக்தன். பிருகந்நளை புன்னகைத்து “அவரை அழைத்துச் செல்வோம்” என்றாள். “போருக்கா? அவர் தலைமை தாங்குவது உண்மையா?” என்றான். புரவியிலிருந்து இருவரும் இறங்க காவலர் வந்து கடிவாளத்தை பற்றிக்கொண்டனர். பிருகந்நளையைக் கண்டதும் காவல்வீரர்கள் வேல்தாழ்த்தி வணங்கினர். முக்தன் “இளவரசர் இருக்கிறாரா?” என்றான். “துயின்றுகொண்டிருக்கிறார்” என்றான் காவலன்.
மருத்துவநிலையை அடைந்து அதன் வாயிலில் நின்ற இளம்மருத்துவரிடம் “இளவரசரின் அறையை காட்டுக!” என்றான். “அவர் உடல்நலமின்றி…” என அவன் சொல்லத் தொடங்க முக்தன் “அதை கேட்கவில்லை…” என்றான். “அவர் கால்கள் உடைந்து…” என அவன் மீண்டும் தொடங்க முக்தன் வாள்மேல் கையை வைத்தான். “அவரால் நடக்கமுடியும்… இதோ, நானே அழைக்கிறேன். முதல் பேரறைதான்” என்று அவன் உடன்வந்தான். “நானே செல்கிறேன்” என்றான் முக்தன். அவர்கள் படிகளில் ஏறி மேலே இடைநாழியை அடைந்து அறைகளை நோக்கி சென்றார்கள்.
கதவருகே பிறிதொரு இளம்மருத்துவன் அமர்ந்தபடி வாய்வழிய துயில்கொண்டிருந்தான். காலடி ஓசை கேட்டு அவன் எழுந்து வாயை துடைத்தபடி “இளவரசர் துயில்கிறார். எவர் வந்தாலும் தன்னை எழுப்ப வேண்டாம் என்று சொன்னார்” என்றான். “எழுப்பு” என்று பிருகந்நளை ஆண்குரலில் சொன்னாள். அவன் தலைவணங்கி “ஆணை” என்றபின் கதவைத் தட்டி “இளவரசே! இளவரசே!” என்றான். கதவு உள்ளே மூடப்பட்டிருந்தது. “இளவரசே! கதவை திறவுங்கள், இளவரசே!” என்று பலமுறை அழைத்தான். பிருகந்நளை இரண்டு அடிகள் பின்னால் வைத்து கதவை ஓங்கி மிதித்தாள். தாழ் உடைந்து திறந்த கதவு இரு சுவர்களை அறைந்து அதிர்ந்தது.
உள்ளே மஞ்சம் ஒழிந்து கிடந்தது. பிருகந்நளை உள்ளே சென்று நாற்புறமும் பார்த்து சாளரத்தை நோக்கி சென்றாள். சாளரக்கதவு திறந்து கிடக்க அப்பால் போர்வை ஒன்று கதவுச்சட்டத்தில் கட்டப்பட்டு கீழே தொங்கியது. “தப்பிவிட்டார்” என்றான் முக்தன். பிருகந்நளை சாளரத்தில் ஏறி மறுபுறம் குதித்தாள். முக்தன் சாளரத்தில் ஏறி அதன் ஆழத்தைக் கண்டு திகைத்தான். பின்னர் போர்வையைப் பற்றியபடி மெல்ல தொங்கியபடி கீழே சென்று பாதிக்குமேல் கீழே குதித்தான். அதற்குள் பிருகந்நளை கீழே தெரிந்த காலடிச் சுவடுகளைப் பார்த்தபடி அணிச்சோலைக்குள் சென்றுவிட்டிருந்தாள்.
முக்தன் அவள் காலடிகளை நோக்கி பின்னால் சென்றான். புதர்களுக்குள்ளிருந்து உத்தரன் அலறும் ஒலி கேட்டது. “என்னை விடு! நான் வரப்போவதில்லை. என்னை விடு. நான் தப்பி ஓடிவிட்டேன் என்று சொல். நீ கேட்பதை அளிக்கிறேன்… என்ன வேண்டுமென்று கேள்” என்று உத்தரன் கதறினான். பிருகந்நளை அவனை இரு கைகளையும் பற்றி இழுத்து வந்தாள். “நான் வரமாட்டேன். உயிர் துறப்பேன்” என்று உத்தரன் கூவினான். பிருகந்நளை தன் கையை அவன் கழுத்தில் வைத்து “நீங்கள் வருகிறீர்கள். கவச உடைகளை அணிந்து என்னுடன் கிளம்புகிறீர்கள். அதை மறுப்பதென்பது இக்கணமே இங்கு கழுத்து முறிந்து இறந்து விழுவதுதான்” என்றாள்.
“என்ன சொல்கிறாய்? நான் விராடபுரியின்…” என்று சொல்லத் தொடங்க “கழுத்து முறிந்தால் கீழே விழுந்து இறந்ததாக மட்டுமே பொருள்” என்ற பிருகந்நளை போர்வையை சுட்டிக்காட்டி “சான்றை நீங்களே உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றாள். உத்தரன் உதடுகளை அழுத்திக்கொண்டு விம்மினான். “இளவரசே, இரு வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளன. போர்க்களம் வந்தீர்களென்றால் உங்களைக் காக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். வரவில்லையென்றால் இங்கேயே உங்களை கொன்றுவிட்டு செல்வேன்” என்றாள் பிருகந்நளை.
“வருகிறேன், வருகிறேன்” என்று அவள் கைகளை பற்றினான். “வருக!” என்றாள் பிருகந்நளை. அவனை அழைத்து மறுவழியினூடாக உள்ளே வந்தாள். அவன் அடிபட்ட நாய்போல ஒரு கையை வளைத்து தூக்கிக்கொண்டு விசும்பி அழுதபடி வந்தான். வீரர்கள் அவனைப் பார்த்ததுமே சிரிப்பை அடக்கி விழிவிலக்கிக்கொண்டார்கள். பிருகந்நளை வீரர்களிடம் “இளவரசருக்கு கவசங்களை அணிவியுங்கள்” என்றாள். உத்தரன் “நான் அணியறைக்குச் சென்று கவசங்களை அணிந்தபின்…” என்று தொடங்கினான். “கவசங்களை இங்கேயே அணியலாம்” என்றாள் பிருகந்நளை.
உத்தரனுக்கு வீரர்கள் கவசங்களை அணிவிக்கத் தொடங்கினர். அவன் இரு கைகளாலும் முகத்தை மூடி அசையாமல் நின்றான். “கையை விரியுங்கள், இளவரசே “ என்று வீரர்கள் அதட்ட இரு கைகளையும் பறவைபோல் விரித்தான். அவர்கள் அவன் ஆடைக்குமேல் இரும்புக் கவசங்களை அணிவித்தனர். “நான் கொற்றவை ஆலயத்திற்குச் சென்று…” என அவன் தொடங்க “நீங்கள் எங்கும் செல்லவில்லை” என்றாள் பிருகந்நளை. அவன் “ஆனால்…” என்றான். “சொல் எழக்கூடாது” என்றாள். அவன் உதடுகளை அழுத்தியபடி விழிநீர் கன்னங்களில் உருள அழுதான்.
பிருகந்நளை முக்தனிடம் “படைகள் கோட்டை வாயிலில் அணிவகுத்துவிட்டன என்றார்கள். இன்னும் சற்று நேரத்தில் இளவரசர் படைமுகம் வருவார். செய்தியை படைத்தலைவர்களுக்கு அறிவித்துவிடு” என்றாள். “ஆணை” என்று சொல்லி முக்தன் கிளம்பிச் சென்றான். அவனுக்குப் பின்னால் உத்தரன் “நான் அன்னையை ஒருமுறை பார்க்கவேண்டும்” என்று சொல்ல ஒரு படைவீரனே “பேசாமலிருங்கள், இளவரசே” என அதட்டுவது கேட்டது.
முன்புலரியில் நகரம் ஆள் ஒழிந்து கிடந்தது. படைப்புறப்பாட்டின்போது எவரும் இல்லங்களை விட்டு வெளியே வரலாகாது என்ற ஆணை இருந்தது. விளக்குத் தூண்கள் அனைத்திலும் மீன் எண்ணெய் விளக்குகள் செவ்வொளி பரப்பிக்கொண்டிருந்தன. சிவந்த பூழிமண் இரவெல்லாம் சென்ற யானைக் காலடிகளும், குளம்புத் தடங்களும், சகடத் தடங்களும் பதிந்து குழம்பி உழுதவயலெனத் தோன்றியது. மரவுரி மெத்தைமேல் செல்வதுபோல முக்தனின் புரவிக் குளம்போசை அழுந்திக் கேட்டது. குளம்புகளின் ஓசை நகரத்தின் இருளின் மூலைகளில் எதிரொலி எழுப்பியது. அவன் உள்ளம் ஓய்ந்து கிடந்தது. எழுச்சியும் சோர்வுமென அலைக்கழித்த அனைத்தும் அவிந்தடங்கிவிட்டிருந்தன. அத்தனை அமைதியை அதற்குமுன் அவன் அறிந்திருக்கவேயில்லை.
கோட்டை முகப்பை அவன் அடைந்தபோது அங்கே நின்றிருந்த படையின் மெல்லிய முழக்கத்தை கேட்டான், காற்று இலைகளுக்குள் ஒழுகுவதுபோல. பல்லாயிரம் பேர் மெல்லிய குரலில் பேசி மூச்சுவிடும் ஒலியும், படைக்கலங்களும் கவசங்களும் முட்டிக்கொள்ளும் ஒலியும் நிறைந்த கார்வை. கோட்டைவாயிலைக் கடந்து ஒரே விழியகல்வில் படைவிரிவைப் பார்த்தபோது அவன் கடிவாளத்தை இழுத்து ஒருகணம் அசையாமல் நின்றான். கண் அழியும் இருளில் நீர்நிலையொன்றை பார்ப்பதுபோல் இருந்தது. விழிதொடும் தொலைவு வரை வேல்களும் வாள்களும் கவசங்களும் மெல்லிய பளபளப்புடன் அலையொளியெனத் தெரிந்தன.
தொலைவில் மறுமுனையில் படை முகப்பில் மட்டும் ஒரே ஒரு நெய்ப்பந்தம் எரிந்தது. அதனருகே நின்றிருந்த படைத்தலைவர்கள் தலைப்பாகைகளும் ஒளிகொண்ட தாடிகளுமாக செந்நிறப் பட்டுத் திரைச்சீலை ஓவியம் ஒன்றை தொங்கவிட்டதுபோல் தெரிந்தனர். அவன் சீரான குளம்படி ஓசையுடன் படைவிளிம்பை அடைந்தான். அங்கு நின்றிருந்த காவல்வீரன் ஒருவன் அவனுக்குக் குறுக்காக வேலைத் தாழ்த்தி “தங்கள் முத்திரை?” என்றான். அவன் ஓலையைக் காட்டியதும் திரும்பி இன்னொரு வீரனிடம் “படைத்தலைவரிடம் அழைத்துச் செல்” என்றான்.
படை நடுவே அமைந்த பாதை நேர்கோடாக அந்தப் பந்த வெளிச்சத்தை நோக்கி சென்றது. இருபுறமும் இருளுக்குள் பல்லாயிரம் பேர் இருப்பதை அவன் புலன்கள் நம்ப மறுத்தன. மானுட உடல்களின் வேலி. மானுட அலை. விழி துலங்கி தெரிந்த இடங்கள் அனைத்திலும் இருளுக்குள் நீர்மை மின்னிய கவசங்களும் தலையணிகளும் அணிந்து வேலேந்தி நின்ற வீரர்களின் முகங்கள். அத்தனை முகங்களும் ஒன்றுபோல் ஆகிவிட்டிருந்தன. போர்க்களத்தில் எவருக்கும் தனிமுகமென ஒன்று இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. ஏனெனில் தனி உணர்ச்சி என்று ஏதுமில்லை. பல்லாயிரம் கைகளும் கால்களும் கொண்டு ஒற்றை உயிரென படை தன்னை மாற்றிக்கொள்கிறது.
கிளர்ச்சியால் தன் உடல் விதிர்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தான். அவ்வப்போது ஏதோ நினைவுக்கு வந்ததுபோல் அடிவயிறு முரசொலியின் கார்வையை உணர்ந்தது. படைத்தலைவரின் அருகே சென்று தலைவணங்கி பிருகந்நளையின் ஆணைகளை போர்முனைக்குரிய சுருக்கமான சொற்களில் சொன்னான். படைத்தலைவன் “உத்தரர் படைத்தலைமை ஏற்க வரப்போகிறார்” என்று அருகிலிருந்த படைத்தலைவனிடம் சொன்னான். அவன் புன்னகைத்து “ஆம், இளவரசர் நம்மை வெற்றி நோக்கி கொண்டு செல்லப்போகிறார்” என்றான்.
முக்தன் “வெற்றி பற்றிய எந்த ஐயமும் தேவையில்லை, படைத்தலைவரே” என்றான். “ஏன்?” என்றான் படைத்தலைவன் ஏளனத்துடன். “உத்தரர் இந்திரனின் படையுதவி பெற்றிருக்கிறாரா என்ன?” முக்தன் “ஆம், இந்திரனின் மைந்தரால் இப்படை நடத்தப்படும் என்றார்கள்” என்றான். படைத்தலைவனின் கண்கள் சுருங்கின. துணைப்படைத்தலைவன் அவனருகே வந்து “என்ன சொன்னாய்?” என்றான். முக்தன் “நாம் இந்திரனின் மைந்தரால் நடத்தப்படுகிறோம்” என்றான். இருவர் விழிகளும் மாறின. “அது உண்மையா?” என்றான். முக்தன் “ஆம்” என்றான்.
படைத்தலைவன் முகம் மலர்ந்து “இப்போதே வெற்றி விழாவுக்கும் உண்டாட்டிற்குமான ஆணைகளை பிறப்பித்துவிட்டுச் செல்லலாம் போலிருக்கிறதே” என்றான். “ஆம், அதற்கும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன. வலவர் அடுமனை ஒருக்கங்களை துவங்கிவிட்டார்” என்றான் முக்தன். துணைப்படைத்தலைவன் உரக்க நகைத்து “வலவரா?” என்றான். இன்னொருவன் “புரவிகளுடன் கிரந்திகனும் நம்முடன் வருகிறாரல்லவா?” என்றான். முக்தன் புன்னகைத்தான்.
கஜன் மெல்ல உடலை அசைத்து நின்றான். அருகே நின்றிருந்த சற்று முதிய வீரன் திரும்பிப்பார்த்து புன்னகைத்தான். அப்புன்னகை அவனுக்கு எரிச்சலூட்டியது. வேலுடன் அவன் படைநிரைக்கு வந்தபோதே அப்புன்னகைகள் சூழ எழுந்துவிட்டன. இவருக்கு நாற்பது அகவையிருக்கும். அப்படியென்றால் கீசகருடன் படைசென்றிருக்கக்கூடும். பெரும்பாலும் எங்காவது ஓரமாக தங்கிவிட்டு மீண்டிருப்பார். முகத்திலோ தோளிலோ புண்வடு எதையும் காணமுடியவில்லை. ஆனால் போர்கண்டு சலித்து கனிந்த முகத்தை சூடிக்கொண்டிருக்கிறார். அடுத்த போரில் இந்த முகத்தை தானும் சூடிக்கொள்ளமுடியும் என எண்ணியபோது அவனுக்கு புன்னகை எழுந்தது.
அவன் முந்தையநாள் இரவு துயிலவில்லை. அன்னையிடமும் தந்தையிடமும் விடைபெற்றுக்கொண்டு அந்தியிலேயே கிளம்பினான். “நன்கு துயில்க, மைந்தா…” என்றார் தந்தை. அவன் தலையசைக்க “துயில் வராது என எண்ணாதே… நல்ல துயில் வரும். போர்சென்ற அனைவருமே அதை சொல்லியிருக்கிறார்கள்” என்றார். அவன் நேராக அடுமனைக்குத்தான் சென்றான். அங்கே அவனைக் கண்டதும் ஒருவன் வந்து “உலர் உணவுகள் ஒருங்கிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சற்றுநேரத்தில் நேராக படைமுனைக்கே சென்றுவிடும், வீரரே” என்றான். “நான் அதன்பொருட்டு வரவில்லை” என்றான்.
அவன் சிரித்து “ஒளிய வந்தீரோ? ஆனால் உமது உடலுடன் நீர் அடுமனையாளனாக இங்கே அமையமுடியாதே” என்றான். கஜன் சினத்துடன் நோக்க “சினம் வேண்டாம். உம்மைக் கண்டாலே தெரிகிறது வீரர் என்று. நான் களியாட்டு சொன்னேன்” என்றான். “என் பெயர் அஸ்வகன்…” என்று அறிமுகம் சொன்னான். கஜன் தன் பெயரை சொல்லிவிட்டு “நான் சம்பவர் என்பவரை சந்திக்கவேண்டும்” என்றான். “எதற்கு?” என்றான் அஸ்வகன். “நான் அவருக்குச் சிறிது பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. கடனுடன் படைசெல்லக்கூடாதே” என்றான். “ஆம், அடுமனையாளர்களை சற்றும் நம்பக்கூடாது. நரகத்திற்குக்கூட தேடிவந்து பணத்தைக் கேட்பார்கள்.”
கஜன் புன்னகைத்து “அவர் எங்கே?” என்றான். “அவனா? இருங்கள், கேட்டு வருகிறேன்” என்று உள்ளே சென்ற அஸ்வகன் திரும்பிவந்து “அவன் யானைகளுக்கான கவளத்துடன் மேற்குவாயிலுக்கு சென்றான் என்கிறார்கள்” என்றான். கஜன் அவனிடம் விடைபெற்று மேற்குவாயிலுக்கு சென்றான். அங்கே அவனிடம் பேசிய முதிய யானைப்பாகனாகிய சீதளன் “இங்கே உச்சிப்பொழுதில்தான் வந்தார். கவளமூட்டு முடிந்ததுமே சென்றுவிட்டார்… எங்கே சென்றார் என்று தெரியாது… ஒருவேளை கிழக்குவாயிலில் இருக்கலாம்…” என்றார்.
கிழக்குவாயிலுக்கு அவன் செல்லும்போது வழியில் ஒரு குரல் உரக்க அழைத்தது. “அடேய், என்ன செய்கிறாய்? ஒளிந்து அலைகிறாயா? என்ன படைப்பிரிவு நீ?” அவன் தடுமாறி நிற்க தீர்க்கன் அவன் தோளை பிடித்துக்கொண்டான். “வா” என்றான். “நான் இளவரசர்…” என அவன் பேசத்தொடங்க “வா… எந்த மறுசொல்லையும் நான் கேட்க சித்தமாக இல்லை” என்றான் தீர்க்கன். அவன் “அரசாணைப்படி செல்கிறேன்… இப்போது…” என்று திமிறினான். அவ்வழியாக புரவியில் சென்ற அவனுடைய ஆயிரத்தவர்தலைவன் அவன் குரலைக் கேட்டு “நீ கஜன் அல்லவா?” என்றான். “ஆம், நான் இப்போது…” என்று கஜன் சொல்லத்தொடங்க “இதோ, இந்த ஓலையை படைத்தலைவரிடம் கொடு. நீயும் அங்கேயே இரு… நான் சற்றுநேரத்தில் அங்கே வருகிறேன்” என்றான்.
கஜன் தலைவணங்கி ஓலையை வாங்கிக்கொண்டான். அதன்பின் ஏதும் செய்வதற்கில்லை என்று தெளிவாகவே தெரிந்தது. அவன் பெருமூச்சுவிட்டான். சம்பவனிடம் சொல்லியிருந்தால் அவன் ஒரு பணியை முடித்துவிட்டதாக இருக்கும். சுபாஷிணியிடம் சொன்ன சொல். ஆனால் அது அவ்வளவு பெரியதல்ல என்றும் அப்போது தோன்றியது. ஆணும் பெண்ணும் இணையவேண்டுமென ஊழிருந்தால் இணைவார்கள். அவர்களை வைத்து ஆடும் கைகள் அதை முடிவு செய்யட்டும். அப்படியென்றால் தன்னை வைத்து ஆடும் கை எது? இப்போரில் அவன் இறந்துவிடுவான் என்னும் எண்ணம் அப்போது எழுந்தது. தொடக்கத்திலிருந்தே அனைத்தையும் எண்ணித் தொகுத்தபோது அந்த ஒழுங்கு அங்கேதான் கொண்டுசென்றது.
அவன் அளித்த ஓலையை வாங்கியபின் படைத்தலைவன் “அணிகளில் சென்று நில்… நீ கடைநிலையன் அல்லவா? எப்படி ஆயிரத்தவர் உன்னை பார்த்தார்? சாலையில் அலைந்தாயா?” என்றான். அவன் “ஆணைகளை…” என தொடங்க “சென்று நில்” என்றபின் அவன் திரும்பிக்கொண்டான். கஜன் அணிகளில் அவன் நிரையை சென்றடைந்தான். அங்கே அனைவரும் வெறுந்தரையில் படுத்து துயின்றுகொண்டிருந்தனர். உண்மையிலேயே பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த துயிலில் இருந்தனர். அவன் அவர்களை நோக்கியபின் தன் உடலை மண்ணில் நீட்டிக்கொண்டான். ஒருவர் படுக்கும் அளவுக்கே இடமிருந்தது. தோளோடு தோள் முட்டிக்கொண்டு மல்லாந்து படுத்து விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான்.
அவள் தன்னை நினைப்பாளா என எண்ணிக்கொண்டான். பெண்கள் அப்படி எல்லாம் எண்ணுவார்களா என்ன? “அவர்களுக்கு குழந்தை பெற்றபின் ஆண்கள் தேவையில்லை” என்ற வரி நினைவிலெழுந்தது. புரண்டுபடுத்து கண்களை மூடினான். கண்களுக்குள் விண்மீன்கள் தெரிந்தன. அவள் நினைவுடன் இந்த நிறைவேற்றப்படாத சொல்லுடன் இறக்கப்போகிறேன். ஆனால் இறப்பு என்னும் சொல் அச்சமூட்டவில்லை. இயல்பான ஓரு முடிவாகவே தோன்றியது. மீண்டும் விண்மீன்களை நோக்கி விழிதிறந்து கிடந்தான்.
புலரியை அறிவிக்கும் கொம்பு முழங்கியது. வீரர்கள் பாய்ந்தெழுந்தனர். சில கணங்களுக்குள் முழுப் படையும் பல சிறுகூறுகளாக சிதறுண்டது. கீழே தட்டப்படும் தாலத்தின் அதிர்வில் விலகும் நெல்மணிகள்போல வீரர்கள் அகன்றனர். அவர்கள் காலைக்கடன்கள் கழிக்கும் இடங்கள் படைநிலைக்கு அப்பால் குறுங்காட்டுக்குள் இடையளவு உயரமான மறைப்புத் தட்டிகளால் அமைக்கப்பட்டிருந்தன. கரையேற்றப்பட்ட தோணிகளில் குளிர்நீர் நிறைக்கப்பட்டிருந்தது. பந்தங்களின் நிழலொளிக்குள் புகுந்து சுரைக்கொப்பரையில் நீர் அள்ளி கால்கழுவி பல்தேய்த்து தலைப்பாகையை அவிழ்த்து உதறி அணிந்து கச்சை இறுக்கி படைப் பைகளை தோள்களில் மாட்டிக்கொண்டு கால்களில் தோல்குறடுகளை முறுக்கியபின் அவன் மீண்டும் படைநிரைக்கு வந்தான்.
அதற்குள் அணிவகுப்புக்கான கொம்பு முழங்கியது. அவன் நிரையில் அவனே இறுதியாக வந்தான். அவன் நிலைகொண்டதும் அருகே நின்றிருந்த முதிய வீரன் “வேலை சற்று தளர்வாகவே பற்றவேண்டும். நாம் நெடுநேரம் அதை வைத்திருக்க வேண்டியிருக்கும்” என்றான். நிரைகளின் முனைகளிலிருந்து பெரிய கடவங்களை ஏந்திய அடுமனையாளர்களும் ஏவலர்களும் வந்துகொண்டிருந்தார்கள். முதிய வீரன் “நீர்ப் பை எங்கே?” என்றான். அவன் தோளுக்குப் பின்னால் தொங்கிய நீர்ப் பையை முன்னால் இழுத்து விட்டான். “அது எப்போதும் விலாவில் தொங்கவேண்டும். நிரை செல்கையில் இன்னொருவர்மேல் இடிக்கலாகாது” என்றான். கஜன் அவனை எரிச்சலுடன் பார்த்தபின் திரும்பிக்கொண்டான்.
ஏவலர் ஆளுக்கு எட்டு உணவுருளைகளை அளித்தபடி வந்தனர். வெல்லம் கலந்த நீரை குடுவைகளில் அள்ளி பைகளில் நிறைத்தபடி அடுத்த ஏவலர்குழு வந்தது. ஓர் உருளை உரித்த தேங்காய் அளவு இருந்தது. “அது என்ன?” என்று அவன் முதிய வீரனிடம் கேட்டான். கேட்டிருக்கக் கூடாதோ என உடனே ஐயுற்றான். “உலர்மீனும் வறுத்த அரிசியும் இடித்து ஊன்நெய்யுடன் சேர்த்து உருட்டப்பட்ட கவளம். சுவையானது. ஒருநாளுக்கு ஒரு கவளம் மட்டுமே” என்றான் அவன். “உண்மையில் அதுவே போதுமானதாகவும் இருக்கும்… போர் முன்னரே முடிந்தது என்றால் வீட்டுக்குக் கொண்டுசென்று குழந்தைகளுக்குக் கூட கொடுக்கலாம். அவை விரும்பி உண்ணும்.”
அவனுக்கு அளிக்கப்பட்ட எட்டு கவளங்களையும் தோளில் தொங்கிய தோல்பைக்குள் சுற்றிக்கட்டினான் அவை சற்று கெடுமணம் வீசுவதாகத் தோன்றியது. அவன் கையை முகர்வதைக் கண்டு முதிய வீரன் “பழைய மீன். களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் அது. இத்தனை பேருக்கான மீன் புதியதாக இருக்கமுடியாது” என்றான். “ஆனால் படைநகர்வில் சென்றால் வெறியுடன் பசிக்கும். அப்போது இக்கெடுமணம் அமுதென தோன்றும்.” கஜன் தன்னருகே வந்துநின்ற முகத்தைக் கண்டு திடுக்கிட்டான். உள்ளம் அதிர்வது செவிகளில் முழங்கியது. அதன் பின்னரே அவனை அடையாளம் அறிந்தான். “நீங்கள் சம்பவர் அல்லவா?” என்றான். “ஆம், நீங்கள்?” என்றபின் சம்பவன் அவனை அடையாளம் கண்டுகொண்டான்.
“உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும். உங்களைத் தேடி அடுமனைக்கு சென்றிருந்தேன்…” அவன் சிரித்து “நீங்களா அது? எவரோ பணத்துடன் வந்ததாக கேள்விப்பட்டேன்” என்றான். “சூதரே, அது நான் சொன்ன பொய். நான் வந்தது உங்கள்மேல் ஒரு பெண் காதல் கொண்டிருக்கிறாள் என்று சொல்வதற்காக. அவள் பெயர் சுபாஷிணி. அரண்மனைச் சேடி” என்றான். சம்பவன் அதற்குள் நகர்ந்துவிட்டிருந்தான். அவன் விழிகள் மாறின. அவனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. எடை அகன்ற உணர்வுகொண்டு கஜன் புன்னகை செய்தான். அப்பால் சென்றபின் சம்பவனும் அவனை ப்பார்த்து புன்னகைதான்.
கொம்பொலி எழுந்தது. ஒவ்வொரு இருநிரையின் நடுவிலும் புரவிகள் சீர்நடையிட்டு வந்தன. அவை சேணம் பூட்டப்பட்டு கடிவாளம் முதுகின்மேல் போடப்பட்டு வந்தன. சவுக்கு அவற்றின் கழுத்துப் பட்டையில் செருகப்பட்டிருந்தது. ஒவ்வொரு வீரன் அருகிலும் ஒரு புரவி வந்து நின்றது. வலப்பக்கம் நின்ற புரவியை கஜன் பற்றிக்கொண்டான். அது மெல்ல தும்மியது. மீண்டும் ஒருமுறை கொம்பு ஊதியதும் படையில் ஓர் அலை எழுந்து அகன்றுசென்றதுபோல அனைவரும் புரவிகள்மேல் ஏறிக்கொண்டனர்.
விடிவெள்ளியை அப்போதுதான் கஜன் கண்டான். பெருமூச்சுடன் அதை நோக்கி பின் ஏன் உள்ளம் எண்ணங்களற்று அசைவிழந்திருக்கிறது என்று எண்ணிக்கொண்டு புன்னகைத்தான். முகத்தசைகள் இழுபட்டன. மீண்டும் ஒரு கொம்பொலி எழுந்தது. படைகள் நடுவே உத்தரனின் களத்தேர் கொடிபறக்க பறக்கும் யானை என அணைந்தது. அதன் பீடத்தின்மேல் அவன் கையில் பெரிய வில்லுடன் நின்றிருந்தான். படையினர் அவனை திகைப்புடன் நோக்கினர். வாழ்த்தொலிகள் ஏதும் எழவில்லை. அவன் அணிந்த கவசத்தில் பந்தங்களின் ஒளி எதிரொளிக்க பற்றி எரியத் தொடங்குபவன் போலிருந்தான்.
கொம்பு முழங்கி அமைந்ததும் கோட்டைக்கு மேலிருந்த போர்முரசுகள் அதிரத்தொடங்கின. இடியோசைத்தொடர் என அவை படைநிரைகளை முழுமையாக மூடிக்கொண்டன. கஜன் தன் உடல் அதிர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். உடலுக்குள் விசைகொண்ட விலங்குகள் புகுந்துகொண்டதைப்போல. அவை தோல்கிழித்துப் பீறிட்டு வெளிவரத் துடிப்பதுபோல. அவன் உடலில் இருந்து அவ்விசையை அடைந்த புரவி காலெடுத்து வைத்து காற்றேற்ற படகுப்பாய் என உடல் விம்மியது. முரசொலி சுழல்காற்றென்றாகி அனைவரையும் மண்ணிலிருந்து பறந்தெழச் செய்வதுபோல விசைகொண்டது.
தேர்த்தட்டில் எழுந்து நின்ற உத்தரன் உரத்த குரலில் “வீரர்களே” என்றான். அவன் குரல் எழவில்லை. கைகளை மேலும் அசைத்து “வீரர்களே!” என்றான். “நாம் நம் எதிரிகளை சந்திக்கச் செல்கிறோம்.” படைகள் “ஆம்! ஆம்! வெற்றிவேல்!” என முழங்கின. அவன் உடல் மேலும் எழுந்ததுபோலத் தோன்றியது. “நம் எல்லைகளை நாம் வகுக்கலாகாது, ஊழ் வகுக்கவேண்டும்!” என்றான் உத்தரன். கஜன் மெய்ப்புகொண்டான். “தெய்வங்கள் அமைத்த எல்லையில் சென்று தலையால் முட்டுவோம். அவ்வேலியை உடைத்து அப்பால் செல்வோம். எண்ணுக, தன்னை நோக்கி அறைகூவுபவனை விரும்புகின்றன தெய்வங்கள். தன்னைக் கடந்தவனே யோகி. தன்னைக் கடந்தவனே ஞானி. வீரர்களே, தன்னைக் கடத்தலே வீரம்.”
கஜன் தன் கண்கள் பொங்கி கன்னங்களில் வழிவதை உணர்ந்தான். “நாம் செல்வது எதிரிகளிடம் போரிடுவதற்காக அல்ல. எதிரிகளை நாம் ஏற்கெனவே வென்றுவிட்டோம். நாம் வெல்லவேண்டியது நம்மை… எழுக நம் படைக்கலங்கள்! எழுக நம் தசைத்திரள்! வீரர்களே, எழுக நம் உள்ளம்!” “வெற்றிவேல் வீரவேல்!” படைகள் எழுப்பிய பேரோசை உடலின் ஒவ்வொரு வியர்வைத்துளை வழியாகவும் உடலுக்குள் புகுந்து நிறைந்தது. படைஎழுவதற்கான முரசுகள் முழங்க மடைஉடைத்த வெள்ளமென விராடப்படை கிளம்பியது.