மிக முக்கியமான கட்டுரை. அதில் வாசிப்புக்குச் சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே நிறையபேர் வாசித்திருக்க வாய்ப்பில்லை.. மேலைநாட்டுத் தத்துவ எழுத்து என்பது அந்த உள்வட்டாரத்தில் மட்டுமே வாசிக்கப்படுவது ஆகும். ஆகவே அவர்கள் மிகச்செறிவான ஒரு மொழியை அடைந்திருக்கிறார்கள். அதேயளவுக்குச் செறிவாக நாம் எழுதினால் பொதுவாக வாசிக்கமுடியாது என்பது தெரியும். அதை எழுதமுயற்சிசெய்தமையினால் அர்த்தமில்லாத சுத்துச்சொற்றொட்டர்களை பலபேர்கள் எழுதினார்கள். ஆகவே அவை வாசிக்கப்படுவதில்லை. இந்தக்கட்டுரை முக்கியமாக அந்தச் செறிவான மொழியை சாதித்து அடைந்துள்ளது. சொற்றொடர்களிலே பெரிய சிக்கல்கள் ஏதுமில்லை. ஓட்டமாக வாசிக்கமுடியவில்லை. ஆனால் வரிவரியாக வாசித்தால் தெளிவாகவே புரிகிறது.
ஹைடெக்கர் பற்றி தமிழிலே விரிவாக எழுதப்பட்ட முதல்கட்டுரை என நினைக்கிறேன். ஹைடெக்கர் பற்றியோ வேறு தத்துவசிந்தனையாளர்களைப்பற்றி எழுதும்போதோ அவர்கள் சொல்வதையெல்லாம் பொதுவான மொழிக்குக் கொண்டுவந்து பலபேர்கள் எழுதுவார்கள். அப்போது விஷயம் தெளிவாக இருக்கும். ஆனால் கருத்து கூர்மழுங்கியும் இருக்கும். உதாரணமாக ஹைடெக்கர் thrown என்று சொல்கிறார். இந்த இடங்களிலெல்லாம் man என்று போட்டு வாசிக்கலாம். They என்று சொல்லுமிடமெல்லாம் socoety என்றுபோட்டு வாசிக்கலாம். எளிதாகப்புரிந்துகொள்ளமுடியும். ஆனால் அவர் சொல்லும் விஷயம் பிழையாக ஆகிவிடும். தத்துவவாதிகள் இவ்வாறு அவர்களுக்குரிய தனித்தன்மைகொண்ட சொற்களைப்போட்டுத்தான் தங்கள் கருத்துக்களைச் சொல்வார்கள். அந்தச் சொற்றொடர்களுடன் அவற்றை அப்படியே எழுதுவதும் சிந்திப்பதும்தான் சிறந்தவழி. ஒரே வழி என்றுகூடச் சொல்லலாம். அதை இக்கட்டுரையிலே செய்திருக்கிறார்.
அதேபோல தத்துவங்களைப் பொதுவாக உதிரிவரிகளாக ஆக்கிவிடுவார்கள்/ மேற்கோள்களாக அவை நம்மை வந்தடைகின்றன. அவ்வாறு மேற்கோள்கள் வழியாக தத்துவவாதிகளை வாசிப்பது மிகப்பெரிய தடை ஆகும். அது என்ன செய்கிறதென்றால் அந்த வரிகளை வாசிப்பவர்கள் தாங்கள் ஏற்கனவே அறிந்திருக்கும் சிந்தனைகளுடன் அதைக்கொண்டுசென்று பொருத்திக்கொள்வார்கள். தங்கள் பார்வையில் அவற்றைச் சேர்த்துக் கொள்வார்கள். அப்போது அந்தமேற்கோள்கள் எல்லாம் நுட்பமாக உருவமாற்றம் அடைந்துவிடும். இங்கே தமிழிலே பேசப்பட்ட பல மேலைநாட்டுத் தத்துவவாதிகளின் கருத்துக்கள் இப்படி உருமாற்றம் அடைந்து நம்மை வந்துசேர்ந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்துபவர்கள் அவற்றை எல்லாம் தங்களுக்கேற்ப மாற்றிக்கொள்வதையே காண்கிறோம். ஃப்ராய்டிசம் மார்க்ஸிஸம் போஸ்ட்மாடர்னிசம் போன்ற சிந்தனைமுறைகளைச் சேர்ந்த பலர் இப்படி நிறைய மாறி மேற்கோள்காட்டப்படுகிறார்கள். இதைத்தடுக்கவே முடியாது. இந்தியாவில் சிந்தனைகள் மேற்கோள்காட்டப்படுவதைப்பற்றி நிறைய கேலிகள் கல்விநிலையங்களில் உண்டு. இப்போது கூகிள் வந்தபின் இதெல்லாம் இன்னும் அதிகம். தத்துவத்திலே அந்தப்பார்வையும் தர்க்கமுறையும் மட்டும்தான் முக்கியமானது. அதைமட்டும்தான் முன்வைக்கவேண்டும். மேற்கோள்கள் அந்த பரப்புவெளியிலேதான் இருந்தாகவேண்டும். இந்தக் கட்டுரையில் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இதில் ஹைடெக்கரின் தர்க்கமுறையும் அவருடைய ஒட்டுமொத்தப்பார்வையும் தொடர்ச்சியாகப்பேசப்பட்டுள்ளது. நான் தத்துவமாணவன் என்றமுறையிலே இதை நான் சிறப்பானதாக நினைக்கிறேன்.
திரு,கஸ்தூரிரங்கன் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்கிறார். ஹைடெக்கர்தான் உண்மையில் இருத்தலியல் சிந்தனையின் மூலகர்த்தா. அவரிடம் மட்டும்தான் அது தத்துவத்திற்குரிய அகம்புறத்தன்மையுடன் இருந்தது. Suject-object என்பது தத்துவத்திலே முக்கியமானது. ஒரு தத்துவசிந்தனை அகமாகத்தான் இருக்கும். அதை தர்க்கம் வழியாக புறமாக நிலைநிறுத்தவேண்டும். அந்தப்புறத்தன்மையில்தான் அந்த அகத்தன்மை நிலைநிற்கவேண்டும். ஜெர்மன் மற்றும் பிரிட்டிஷ் தத்துவசிந்தனையாளர்களிடம் இந்த அம்சம் உண்டு. பிரெஞ்சுச் சிந்தனையாளர்களிடம் இல்லை.
இலக்கிய எழுத்தாளர்கள் தத்துவசிந்தனைகளை இலக்கியமாக ஆக்கும்போது அவர்கள் தத்துவத்தில் உள்ள அந்த புறம் என்பதை இல்லாமலாக்கிவிடுகிறார்கள். மீண்டும் அதை அகம் ஆக மாற்றிக்கொள்கிறார்கள். அதன்பின் அதை தர்க்கபூர்வமாகப் பேசமுடியாது. அதைப்பற்றி கற்பனைதான் செய்யமுடியும். இருத்தலியலுக்கு சார்த்ரே செய்தது அதுதான். அவர் இருத்தலியத்தை இருபது மேற்கோள்களாக ஆக்கிவிட்டார். அவை இருத்தலியத்தின் தர்க்கத்தைப்புரிந்துகொள்ள முடியாத சாதாரணமான வாசகர்களுக்கும்கூட பிடித்திருந்தன. ஆகவேதான். அவருடைய மேற்கோள்கள் உலகப்புகழ்பெற்றன. அவரும் உலகளவிய புகழ் பெற்றார். ஆனால் அந்தத் தர்க்கம்தான் இருத்தலியம். அந்த மேற்கோள்கள் எல்லாம் வெறும் கருத்துக்கள் மட்டும்தான். இருத்தலியம் ஒரு தத்துவமாகப் புகழ்பெறவே இல்லை. ஒரு இலக்கியக்கொள்கையாகத்தான் அது புகழ்பெற்றது. இந்தப்பிரச்சினை எப்போதும் தத்துவத்திற்கு உள்ளது. நீட்ஷே பின்நவீனவாதிகளிடம் இதேபோல மழுங்கலாக ஆனார்.
நான் சொல்லவருவது என்னவென்றால் திரு.கஸ்தூரிரங்கன் இந்தக்கட்டுரையிலே செய்திருப்பதும் அதைத்தான். முதல்பகுதியில் அவர் இருத்தலியத்தை தர்க்கமாக முன்வைக்கிறார். அதன்பின் அதை அவர் ஓ.வி.விஜயனின் நாவலுக்குப் போட்டுப்பார்க்கிறார். அங்கே அவர் அதன் புறம் என்பதை இல்லாமலாக்கி அகம் மட்டுமே வைத்து விமர்சனம் செய்கிறார். அதாவது இருத்தலியத் தர்க்கங்கள் எதுவுமே கசாக்கின் இதிகாசத்தை புரிந்துகொள்ள உதவிசெய்யாது. அவை எல்லாம் விடப்பட்டுவிட்டன. அவற்றை மேற்கோள்களாக ஆக்கினால்மட்டுமே இலக்கியவிமர்சனம் செய்யமுடியும். அதாவது தத்துவம்வேறு இலக்கியம் வேறு. இலக்கியத்தில் உள்ள pure subjectivity தத்துவத்துக்கு நேர் எதிரானது. தத்துவத்தில் உள்ள objectivity யை இல்லாமல் ஆக்கினால் மட்டும்தான் அதை இலக்கியவிமர்சனமாக பயன்படுத்திக்கொள்ளமுடியும். இதை எல்லா தத்துவவாதிகளையும் அவர்களின் தத்துவங்கள் இலக்கியமாக ஆனபோதையும் பார்த்துக்கொண்டால் புரிந்துகொள்ளமுடியும். மற்றபடி நல்ல கட்டுரை. முதல்பகுதியை மட்டும் முக்கியமானதாக நான் நினைக்கிறேன்.
சத்யமூர்த்தி
அன்புள்ள சத்யமூர்த்தி,
எனக்கும் நேரடியான தத்துவத்தர்க்கமொழிக்குள் நுழைய பெரும் தடை உள்ளது. உருவகங்கள் உவமைகள் அணிச்சொற்றொடர்கள் வழியாகவே என்னால் தத்துவத்தைப்புரிந்துகொள்ளமுடியும். இக்கட்டுரை இளம்வாசகர் ஒருவர் எழுதியது. நீண்டகடிதமாக. அதை நான் கட்டுரையாக ஆக்கினேன். ஒரு தொடக்கத்துக்காக
ஜெ
அன்புள்ள ஜெ,
நீங்கள் வெளியிட்ட கட்டுரை முக்கியமானது. ஆனால் அதில் லாஜிக்கல் பாஸிடிவிஸம் பற்றிய குறிப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல .
ஆசிரியர் இவ்வாறு சொல்கிறார். “இவர்கள் தத்துவாதிகளே ஆயினும் அறிவியலின் குறிப்பாக கணிதத்தின் பெரும்பற்றாளர்களாக இருந்தனர். மீபொருண்மை எனும் வார்த்தையயே அத்துறையினருக்கு இழிசொல்லென ஆக்கிய புகழ் இவர்களுக்கு உண்டு. ஆயினும் இவ்வாறு தங்களை அடைத்து கொள்வதன் மூலம் அவர்கள் எந்த ஆழமான தத்துவக் கேள்வியையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாதவர்களாக ஆயினர்”
இது சரியானப் பார்வை அல்ல. சொல்லப்போனால் ஒரு குற்றச்சாட்டு. தர்க்க நேர்நிலைவாதிகள் [என்ற சொல் சரிதானா என்று தெரியவில்லை. ஆனால் அதையே பயன்படுத்துகிறேன்] என்பவர்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த ஒரு வலுவான தரப்பு. தத்துவ வரலாற்றில் அவர்களுக்கு மிகமுக்கியமான இடம் உண்டு. தத்துவம் என்றால் கருத்துக்களைத் தூய்மையானத் தர்க்கமாக ஆக்கி விவாதிப்பது என்பதே அன்றுவரை இருந்துவந்த பார்வை. தத்துவத்திற்கும் தியாலஜிக்கும் இடையே உள்ள வேறுபாடு 17 ஆம் நூற்றாண்டில் தெளிவானது. ஆனால் தத்துவத்துக்கும் மீபொருண்மைவாதத்திற்கும் [மெடஃபிஸிக்ஸ். இதுவும் சரியானதா என்று தெரியவில்லை. ஆனால் சொல்லப்பட்டபின்னாடி பெயர்களை மாற்றுவதில் அர்த்தமில்லை] உள்ள வேறுபாடு அப்படியேதான் நீடித்தது. இன்னும்சொல்லப்போனால் நேச்சுரலிசம், டிரான்ஸிடெண்டலிசம் போன்ற சிந்தனைகள் வழியாக மீபொருண்மைவாதம் தத்துவத்திற்குள் பெரிய அளவில் வியாபித்தது. மீபொருண்மைவாதத்திலே உள்ள சிக்கல் என்னவென்றால் அதை நாம் எந்த ரெஃப்ரென்ஸும் இல்லாமல் செய்யமுடியும் என்பதுதான். எனக்கு இப்படித் தோன்றுகிறது என்று சொன்னாலே போதும். மீபொருண்மைவாதம் எப்படி அதன் பாதிப்பைச் செலுத்துகிறதென்றால் அதன் தர்க்கம் வழியாக இல்லை. அதன் கவித்துவம் வழியாகத்தான். ஆகவே அதற்கு தத்துவ மதிப்பு இல்லை. மீபொருண்மைவாதம் எப்படி முன்வைக்கப்பட்டாலும் அது வெறும் இமேஜ்களை உருவாக்குவதிலேதான் சென்றுசேரும். அதனால் தத்துவத்திற்குரிய அப்ஜெக்டிவிட்டியை உருவாக்கமுடியாது. ஆகவே அது பழைய மதங்களின் கருவியாக ஆகும். இல்லாவிட்டல் புதிய மதங்களை உண்டுபண்ணும். மார்க்ஸிஸம் போல.
மீபொருண்மைவாதத்தை தத்துவத்திலிருந்துப் பிரித்தவர்கள் தர்க்க நேர்நிலைவாதிகள்தான். அவர்களின் ரோல் அதுதான். அவர்கள்தான் தத்துவம் என்பது ’பயன்பட’வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கினார்கள். பிராக்மாட்டிஸிஸம் போன்றவை அவர்களிடமிருந்துதான் உருவாகி வந்தன. தத்துவம் அறிவியலுடன் தொடர்பாடத் தொடங்கியதும் அதன்பிறகுதான். இன்று பயன்படும்தத்துவம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அது லாஜிக்கல் பாஸிடிவிஸ்டுகள் உருவாக்கிய தர்க்கங்களினால்தான்.
லாஜிக்கல் பாஸிட்டிவிஸ்டுகளை தூக்கிப்போடும் இந்தப்பார்வை இருபது ஆண்டுகளாக கல்வித்துறையிலே இருக்கிறது. இதைச் சொல்பவர்கள் பெரும்பாலும் போஸ்ட்மாடர்னிஸ்டுகள். அவர்கள் லாஜிக்கல் பாஸிட்டிவிஸத்தை வெறும் தர்க்கமாகச் சொல்லி புறமொதுக்குகிறார்கள். போஸ்ட்மாடர்னிஸ்டுகளுக்கு தர்க்கத்தைக் கடந்து சூனியத்திலே ஏதோ உண்மை ஒளிந்துகிடக்கிறது என்ற மாயை இருக்கிறது. அதற்கு இலக்கியத்திலே ஏதாவது மதிப்பு இருந்தாலும் தத்துவத்திலே இல்லை. தத்துவத்தில் போஸ்ட்மாடர்னிசம் என்பது ஒரு முண்டக்குள்ளன்தான். போஸ்ட்மாடர்னிஸ்டுகளின் பெரிய அப்ஸெஷன் என்பது மெடஃபிஸிக்கலான விஷயங்களைச் சொல்வது. அதை இலக்கியத்தில் மதிக்கலாம். அதற்கு அப்ஜெக்டிவான மதிப்பு ஏதும் இல்லை. இந்தக்கட்டுரையாசிரியரே ”தத்துவம், வரலாறு இவை இரண்டையும் முறையே மானுடத்தின் சிந்தனை, செயல் ஆகியவற்றின் வெளிவடிவமாகமாகக் கொண்டால்…” என ஒரு சொற்றொடர் எழுதுகிறார். இந்தவகையான பார்வை நேராக மெடஃபிஸிகல் பார்வைக்கே கொண்டுசெல்லும். ஆகவேதான் அவர் லாஜிக்கல் பாஸிடிவிசத்தை எதிர்க்கிறார்.
எஸ். கார்த்திக்
அன்புள்ள கார்த்திக்,
நீண்ட கட்டுரை. நீண்ட கடிதங்கள். தோராயமாகவே புரிகிறது. ஆனால் ஒன்றை மட்டும் சொல்வேன். நானறிந்தவரை தத்துவம் பயில்பவர்கள், பேசுபவர்கள் அனைவருமே கடுமையான ஏற்பும் மறுப்பும் கொண்டவர்கள். உறுதியான நிலைபாடுள்ளவர்கள்.
ஜெ