கடிதம் என்னும் இயக்கம்

sura

அன்புள்ள ஜெ

வேறெந்த எழுத்தாளரும் உங்களைப்போல தொடர்ச்சியாக வாசகர்களுடன் கடிதங்கள் வழியாக உரையாடுவதாகத் தெரியவில்லை. இவ்வாறு எழுத்தாளர்கள் வாசகர்களுடன் உரையாடலாமா என்று எனக்கு தெரியவில்லை. கேள்விபதில் என்ற வடிவம் எப்போதுமே இருந்துள்ளது. ஆனால் நீங்கள் நாள்தோறும் கடிதங்கள் எழுதுகிறீர்கள். என் நண்பர்கள் சிலர் இந்தக் கேள்விபதிலை கேலிசெய்வதுண்டு. ஆகவேதான் இந்த கேள்வியை எழுப்புகிறேன்

ஆர்.செந்தில்

kiraa

அன்புள்ள செந்தில்

இணையம் என்னும் ஊடகம் திறந்துகொண்டதுமே நான் அதில் கண்டுகொண்டது அதிலுள்ள பரவலாக உரையாடும் வாய்ப்பைத்தான். இன்றுவரை தொடர்ச்சியாக வாசகர்கள், நண்பர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதென்பது அந்த உரையாடலுக்காக. அது இங்கே பேசப்படும் அனைத்துக்கும் நடுவே என்னை வைத்திருக்கிறது. வெளியாகாத பலநூறு தனிப்பட்ட கடிதங்கள் வழியாக நான் சமகால உளவியலையே அறிந்துகொண்டிருக்கிறேன். என் நீண்ட பயணங்கள் எப்படி என் படைப்பூக்கத்திற்கு உதவுகின்றனவோ அப்படித்தான் இந்தக்கடிதங்களும்.

என் மின்னஞ்சலுக்கு வெவ்வேறுவிஷயங்கள் சார்ந்து உரையாடலுக்கான அழைப்பு பலவகையான கடிதங்களாக வந்துகொண்டே இருக்கும். நான் சினிமா பற்றிப் பேசுவதில்லை. ஆனால் சினிமா பற்றிய கேள்விகள், ஐயங்களே அதிகம். அடுத்தபடியாக அரசியல். சமகால அரசியலை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். சமீபகாலமாக முகநூல் விவாதங்கள் குறித்து கடிதங்கள் வருகின்றன.அவற்றில் நான் ஏதேனும் சொல்வதற்கிருக்கும் கேள்விகளை மட்டும் பதில் சொல்லத்தெரிவுசெய்கிறேன். முகநூல் வந்தபின் வசைகள் குறைவு. வசைகளை அங்கேயே எழுதிவிடுகிறார்கள் என நினைக்கிறேன்.

gnanani
கோவை ஞானி

 

எனக்குவரும் கடிதங்களில் வெளியாகும் கடிதங்கள் பத்திலொன்றே. ஆனாலும் நேரில் சந்திக்கையில் ‘உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்னு ரொம்பநாளா நினைச்சேன். எழுதி எழுதி பாத்தேன். விட்டுட்டேன்” என்று அறிமுகமாகிறவர்களே அதிகம். கடிதங்களில் விரிவான உரையாடலுக்குப்பின் நேரில் சந்திக்கையில் ஓரிரு சொற்களுடன் நிறுத்திக்கொள்பவர்கள் அதைவிட அதிகம். கோவை புத்தகக் கண்காட்சியில் இதைப்பற்றி நண்பர்கள் ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டோம்

ஆனால் இந்த விஷயம் இணையத்தால் உருவானது அல்ல. எழுத்தாளர் –  வாசகர் உரையாடல், எழுத்தாளர் — இளம் எழுத்தாளர் உரையாடல், எழுத்தாளர் — எழுத்தாளர் உரையாடல் ஆகியவை எப்போதுமே இருந்துவந்துள்ளன. அவை நம் சூழலில் ஓர் அறிவார்ந்த இயக்கத்தை நிலைநிறுத்துகின்றன. இலக்கியத்தின் தொடர்ச்சியை உறுதிசெய்கின்றன.

இதன்பின் உள்ள முதன்மையான கருத்தியல் என்னவென்றால் வாசகன் என்பவன் எழுத்தின் நுகர்வோன் அல்ல. பயன்பாட்டாளன் அல்ல. அவன் ஓர் அறிவியக்கத்தின் உறுப்பினன். எழுத்தாளனும் அவனும் ஒரே பெருக்கில் சென்றுகொண்டிருக்கிறார்கள். எழுத்தாளன் வாசகனிடம் பேசுவதில்லை, உரையாடுகிறான். சுந்தர ராமசாமி என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் நான் அவருடன் உரையாடிக்கொண்டே இருக்கிறேன்.

t.k.c
டி கே சி

 

சுந்தர ராமசாமி ஒவ்வொருநாளும் குறைந்தது இருபது கடிதங்களுக்கு மறுமொழி எழுதுவார். காலையில் இரண்டுமணிநேரம் அதற்கே செலவாகிவிடும். மிகக்கணிசமானவர்கள் அன்றைய இளம்வாசகர்கள். அருண்மொழிக்கே சுந்தர ராமசாமி பன்னிரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார். கோவை ஞானி வாழ்நாளெல்லாம் எழுதிய கடிதங்களை தொகுத்தால் அவருடைய எழுத்தைவிட மும்மடங்கு இருக்கலாம். எனக்கே நூறுகடிதங்களாவது அவரால் எழுதப்பட்டிருக்கும்

கி.ராஜநாராயணன் தொடர்ச்சியாக வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவரது பல கடிதங்கள் தொகுக்கப்பட்டதில்லை. ஏனென்றால் கணிசமானவற்றில் குடும்பவிஷயங்களும் உறவுச்சிக்கல்களில் ஆலோசனைகளும் இருக்கும். கூடவே அன்றைய வானிலை, விவசாயச் சிக்கல்கள், சங்கீதம், சாப்பாடு, நண்பர்களின் விசேஷங்கள், நூல்கள் பற்றிய சுவாரசியமான விவரணைகள்.

கி.ராவின் கடிதங்களில் புனைவுக்கு நிகரான அரிய வர்ணனைகள் வரும். சிலவரிகள் நினைவுக்கு வருகின்றன. ‘நாம் தூங்கியபின் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டு தூங்கிவிடும் குழந்தைபோல உங்கள் கடிதம் நான் விழித்தபோது பாயில் என்னருகே கிடந்தது’ கென்னடி என்னும் ரைஸ்மில் உரிமையாளருக்கு எழுதியகடிதம் என நினைக்கிறேன்.

thikasi
தி.க.சி.

 

முந்தைய தலைமுறையில் க.நா.சு அதேபோல எப்போதும் வாசகர்களுடனும் எழுத்தாளர்களுடனும் கடிதத் தொடர்பில் இருந்தார். டி.கெ.சிதம்பரநாத முதலியாரும், நா.வானமாமலையும் கடிதங்கள் வழியாக பெரிய உரையாடல்வலை ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். டி.கெ.சியின் கடிதங்கள் இதயஒலி என்னும் பேரில் நூலாக வெளிவந்துள்ளன. வல்லிக்கண்ணன், திகசி ஆகியோர் ஒவ்வொருநாளும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கடிதங்கள் எழுதியவர்கள்.அவை நூல்களாக தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. தமிழிலக்கியத்தின் காலகட்டப் பதிவுகள் அவை. திகசி எனக்கு கடுமையான வசைக்கடிதங்களும் எழுதியிருக்கிறார்.

அடுத்த தலைமுறையில் வண்ணதாசன். அவருடைய கடிதங்கள் நூல்வடிவம் கொண்டிருக்கின்றன.வண்ணதாசன் கடிதங்கள் பெரும்பாலும் தனிப்பட்டவை. வாழ்க்கையின் தருணங்கள் என்றே அவற்றைச் சொல்லமுடியும். எழுதப்பட்ட நாளை அப்படியே பதிவுசெய்பவை. அவருக்கு காஸர்கோட்டில் சவரத்தொழிலாளராகப் பணிபுரிந்த மலையப்பன் என்பவருடன் இருபத்தைந்தாண்டுக்கால கடிதத் தொடர்பு இருந்தது. காஸர்கோட்டிலிருந்து நான் அவருக்கு எழுதியதும் மலையப்பனைப் பற்றிச் சொன்னார். நான் மலையப்பனை அவருடைய சவரக்கடையில் சென்று பார்த்தேன். அவர் வண்ணதாசனைப் பார்த்ததே இல்லை. அவரிடம் வண்ணதாசன் கடிதங்கள் பல தொகுப்புகளாக தைக்கப்பட்டு பாதுகாப்பாக இருந்தன.

vannadasan-eruvadi7

ஆனால் எல்லா எழுத்தாளர்களும் அவ்வகையினர் அல்ல. உதாரணமாக ஜெயகாந்தன் கடிதங்களூகுப் பதில் போடுவதில்லை. சி.சு.செல்லப்பா உலகியல்ரீதியாகவே கடிதம் எழுதுவார். அசோகமித்திரன் அந்தரங்கமானவர்களுக்கு மட்டுமே எழுதுவார்

அன்று இலக்கியப்படைப்பாளர்களுக்கு ஊடகம் இல்லை. ஆகவே அவர்கள் இந்தக் கடிதவலையை உருவாக்கிக் கொண்டனர். ஊடகம் இருந்தவர்கள் அதிலேயே கேள்விபதில்களை எழுதியிருக்கிறார்கள். தீபம் இதழில் நா.பார்த்தசாரதி இருபதாண்டுக்காலம் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார். சுந்தர ராமசாமி குறுகியகாலம் கணையாழியில் வாசகர்களின் கேள்விகளை எதிர்கொண்டு பதிலளித்திருக்கிறார்

சுந்தர ராமசாமிக்கு கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி போன்று தன் சமகால இலக்கியவாதிகளுடன் பல்லாண்டுக்கால கடிதத் தொடர்பு இருந்தது. அழகிரிசாமி -சுந்தர ராமசாமி கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நான், யுவன் சந்திரசேகர், சுரேஷ்குமார் இந்திரஜித், பாவண்ணன் போன்ற பலருடன் தொடர்ச்சியான பல்லாண்டுக்காலக் கடிதத்தொடர்பு அவருக்கு இருந்தது.

suresh
சுரேஷ்குமார இந்திரஜித்

 

அவருக்கு வந்த கடிதங்களில் ஒருவர் பெரும்பாலும் விவசாயம் பற்றியே எழுதிக்கொண்டிருந்தார். தண்ணீர்ப்பிரச்சினை, ஆள்பற்றாக்குறை, சந்தைச்சிக்கல்கள். சுந்தர ராமசாமி பொதுவாக அவற்றுக்குப் பதில் அளிப்பார். பின்னாளில் அவரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு விழாவில் சந்தித்தேன். கதைகள் எழுதப்போவதாகச் சொன்னார். சு.வேணுகோபால் என்னும் படைப்பாளியாக மலர்ந்தார்

முகமறியா பலநூறுவாசகர்கள் அவருக்கு தங்கள் வாசிப்பு குறித்து, அன்றாடவாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து, அரசியல் பண்பாட்டுச் சூழல்குறித்து எழுதிக்கொண்டே இருந்தனர். சுராவுக்கு வந்த கடிதங்களில் ஒன்றில் ஒர் இளம்பெண் அவருடைய சிறுநகரில் சைக்கிளில் செல்வதற்குரிய இடர்பற்றி எழுதியிருந்ததை நினைவுகூர்கிறேன். அதன்பின் பலரிடம் சு.ரா அவர்கள் ஊரில் பெண்கள் சைக்கிளில் செல்வதுண்டா என்று கேட்பார்.ஒருகாலத்தில் அவருடைய இல்லத்தில் பெரிய தொகைகளாக அட்டைபோடப்பட்டிருக்கும் அக்கடிதங்களை வாசிப்பது எனக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது. அக்கடிதங்கள் பலவற்றுக்கு நான் மானசீகமாக பதிலளிப்பேன்.

பின்னர் அவருக்கு எழுதிக்கொண்டிருந்தவர்களுடன் நானே நேரடியாக கடிதம் வழியாகத் தொடர்புகொள்ளத் தொடங்கினேன். பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், யுவன் சந்திரசேகர், கோணங்கி, சுரேஷ்குமார இந்திரஜித், ந.ஜெயபாஸ்கரன் போன்ற என் சமகாலத்தவர்கள் ஒருவருக்கொருவர் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாகக் கடிதம் போட்டுக்கொண்டிருந்தோம். ஏறத்தாழ பத்தாண்டுக்காலம். ஒவ்வொருநாளும் காலையில் தபால்காரர் கடிதங்களுடன் வருவதற்காகக் காத்திருப்போம்.

suve
சு வேணுகோபால்

 

அன்றெல்லாம் நான் நூறுநூறாக உள்ளூர் கடித உறைகள் வாங்குவேன். படித்தவற்றைப்பற்றித்தான் அதிகமும் எழுதுவது. சுப்ரபாரதி மணியனின் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் என்னும் கதை அன்னம்விடுதூது என்னும் சிற்றிதழில் வெளிவந்தபோது நான் அறுபது பேருக்கு அக்கதையை வாசிக்கச்சொல்லி கடிதங்கள் எழுதி தபாலில் சேர்த்தேன். சுந்தர ராமசாமிக்கு நான் எழுதிய பல கடிதங்கள் நூறுபக்கம் கொண்டவை. அவருடைய 107 கவிதைகள் என்னும் நூலைப்பற்றி எழுதிய கடிதம் 300 பக்கம்.

அடுத்த தலைமுறையினர் வந்தபோது மனுஷ்யபுத்திரன், சு.வேணுகோபால். லக்ஷ்மி மணிவண்ணன். எம்.கோபாலகிருஷ்ணன், போன்றவர்களுடன் அதேபோன்ற தீவிரமான உரையாடல்கள் இருந்தன. மனுஷ்யபுத்திரனின் ஆரம்பகாலக் கவிதைகள் அனைத்தைப்பற்றியும் மிக விரிவாக கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அப்போதே குடியில் திளைத்துக்கொண்டிருந்த விக்ரமாதித்யனே எனக்கு ஏராளமான கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

அதுதான் அக்காலச் சிற்றிதழ்சார்ந்த வேகம். மிகக்குறைவான வாசகர்கள்தான். ஆனால் ஒவ்வொருவரும் உலகைப்புரட்டிப்போடும் வெறிகொண்டிருந்தோம். உண்மையில் எனக்கே என்னிடம் அந்தத் தீவிரம் கொஞ்சம் குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் அந்த அர்ப்பணிப்புடன் இப்போதும் எஞ்சும் சிலரில் நான் ஒருவன். என்னைப்பொறுத்தவரை இணையதளம் என்பது மின்சிற்றிதழ்தான்.

pavannan
பாவண்ணன்

 

இன்று எழுதுவதெல்லாமே இணையத்தில் சேமிக்கப்படுகின்றன. பலர் படிக்கிறார்கள். அவற்றில்பல நூல்களாகக்கூட வந்துவிடுகின்றன. அன்று அப்படி எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. நான் மனுஷ்யபுத்திரனுக்கோ லக்ஷ்மி மணிவண்ணனுக்கோ எழுதிய கடிதங்களை அவர்கள் சேமித்திருந்தால் நல்ல நூலாக ஆக்கியிருக்கலாம். ஆனால் அதுவல்ல அன்றைய இலக்கு. அது ஒரு கூட்டு உரையாடல். ஒரு கூட்டான கல்வி.

இந்தக் கடிதங்களின் உளவியல் என்ன? ஒன்று, அறிவார்ந்த இயக்கத்துடன் எவ்வகையிலேனும் ஒட்டிக்கொள்ளும் முயற்சிதான். அந்த உரையாடலுக்குள் நுழைவதற்காகத்தான் நான் அன்று சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் எழுதினேன். இன்று எனக்கு எழுதுகிறார்கள். நாளை இன்று கடிதம் எழுதுபவர்களுக்கு பிறர் எழுதுவார்கள்.

தன் சிந்தனைகளைத் தொகுத்துக்கொள்ள, சரிபார்க்க, விவாதித்துக்கொள்ள எழுதுகிறார்கள்.அத்துடன் தங்கள் உணர்வுகளை வேறு எவரையும்விட எழுத்தாளனிடம் பகிர வாசிப்பவர்கள் விரும்புவார்கள். இலக்கிய ஆக்கம் அத்தகைய அணுக்கத்தை வாசகனிடம் உருவாக்குகிறது. என் பெற்றோர் மறைவைப்பற்றி நான் எத்தனை நீண்ட கடிதங்களை சுந்தர ராமசாமிக்கும் அசோகமித்திரனுக்கும் எழுதியிருக்கிறேன். அருண்மொழியைக் காதலிப்பதைப்பற்றி முதன்முதலாக சுந்தர ராமசாமிக்குத்தான் எழுதினேன். வண்ணதாசனுக்கு அவளைப்பற்றி எழுதியிருக்கிறேன். எழுத்தாளனாகச் சந்திக்கும் சிக்கல்களைப்பற்றி எழுத்தாளன் என உணர்பவன் பிறரிடம் பேசவே முடியாது.

26-manushyaputhiran300
மனுஷ்யபுத்திரன்

இக்கடிதங்களில் இருவகை உவகைகள் இருந்தன. ஒரு படைப்பை அன்று வாசகர் வாசிப்பது குறைவு. சிற்றிதழ்கள் 300 பிரதிகள் அச்சிடப்பட்ட காலம். ஆனால் நுண்மையான வாசகராக சமகாலப் படைப்பாளி ஒருவர் எழுதும் மறுமொழி மிகவும் மதிப்புக்குரியதாக இருந்தது. அதேபோல அவர் குறிப்பிடும் விமர்சனங்களும். அன்றெல்லாம் பொதுவாக கடுமையாகவும் கறாராகவும் எழுதவேண்டும் என்பது ஒரு நெறியாகவே இருந்தது. நான் யுவன் சந்திரசேகரின் எல்லா கதைகளுக்கும் கடிதம் எழுதியிருந்தேன். நானே சொல்புதிதில் வெளியிட்ட தாயம்மா கிழவி சொன்ன 108 கதைகள் என்ற கதையைத்தான் முதல்முறையாகப் பாராட்டி எழுதினேன்

அன்றும் சரி ,இன்றும் சரி, பொதுப்புத்தி வாசகர்களுக்கு இது ஏளனத்துக்குரியதாகவே தெரியும். எண்ணிப்பாருங்கள். சுந்தர ராமசாமி வாழ்ந்தபோது அவருடன் ஏதேனும் வகையில் கடிதத் தொடர்பில் இருந்தவர்கள் அதிகம்போனால் இருநூறுபேர் இருக்கலாம். எஞ்சியவர்களுக்கு அப்படி ஓர் உலகம் இருந்ததே தெரியாது. அன்றைய வணிக எழுத்தாளர்களுக்குத் தெரிந்திருந்தால் இந்த உலகம் மாபெரும் வெட்டிவேலை என்றே தோன்றியிருக்கும். அவர்களின் வாரிசுகளுக்கு இன்றும் அப்படியே தோன்றும் அவர்களுக்கு இந்த உலகம் புரிதலுக்கு அப்பாற்பட்டது.இந்தச் சிறுவட்டத்திற்குள் வந்தவர்களுக்கே இது முக்கியமானது. பிறருக்கு இதை விளக்கவோ புரியவைக்கவோ முயலக்கூடாது. அவர்களின் உலகம் வேறு. இவை இரண்டும் ஒருபோதும் ஒட்டாது.

Lakshmi Manivannan
லக்ஷ்மி மணிவண்ணன்

 

இக்கடிதங்களை எழுதுபவர்களில் சிலர் எழுத்தாளர்களாக எழுந்து வரலாம். சிலர் நின்றுவிடலாம். பலர் வாசகர்களாக நீடிக்கலாம். ஆனால் எப்போதும் இங்கே இருந்துகொண்டிருக்கும் ஒர் அறிவியக்கத்தின் பதிவு இது. இன்று இணையம் இருப்பதனால் இதை அனைவரும் வாசிக்கமுடிகிறது.

தலைமுறைகளாக நிகழும் இந்த அறிவியக்கத்தை,  இதன் உணர்வுநிலையை உளஎழுச்சியை புரிந்துகொள்ள முடியாதவர்களால் இது வாசிக்கப்படுவது என்பது ஒரு பெரிய இடர்தான். அவர்களின் நக்கல்கள் ஒரு சிறு சங்கடத்தை அளிக்கின்றன. ஆனால் என்றும் நம்மால் பொருட்டாக எண்ணப்படாமல் புறக்கணிக்கப்படுபவர்கள்தானே அவர்கள்? கடிதம் எழுதாமல், ஆனால் இக்கடிதங்களை தாங்கள் எழுதியதாக எண்ணி, வாசிக்கும் வெளித்தெரியாத வாசகர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொரு பயணத்திலும் அப்படிச் சிலர் அறிமுகமாகின்றனர். அவர்களுக்காகவே இவை பிரசுரமாகின்றன

ஜெ

முதற்பிரசுரம் Aug 18, 2017

முந்தைய கட்டுரைகமலா விருத்தாசலம்
அடுத்த கட்டுரைமீனாட்சி திருக்கல்யாணம்- பாரதி பாஸ்கர்