வாசிப்பு கடிதங்கள்

1

வாசிப்பு என்பது போதையா?
வாசிப்பும் இலக்கிய வாசிப்பும்

அண்ணா,

வாசிப்பு என்பது போதையா படித்தேன். வழக்கம் போலவே விசாலமான பார்வை.

எந்த துறையில் இருந்தாலும் நீங்கள் சொல்வது போல அசாதாரணமான ஆர்வமும் அதற்காகவே தன்னை அர்ப்பணிக்கும் தன்மையும் தான் நிபுணத்துவத்தை அளிக்கிறது எழுத்துலகம் உட்பட. ஆனால் மற்ற துறைகளில் சாதிப்பவர்களும் சிந்தனையை வளர்த்துக் கொள்பவர்களுக்காக இலக்கியத்தை வந்தடைகிறார்கள். அப்படி வந்தடைந்து இலக்கியத்தில் அல்லது எழுத்தில் முழ்கிப்போய் செயலின்மை நிலைக்கு தள்ளப்பட்டு, இருக்கும் துறையில் ஆர்வமின்மை ஏற்படும்போது இது போன்ற சிந்தனைகள் வருகிறது.

இலக்கியம் மானுட சிந்தனை பற்றியது. இலக்கியம் வாசிக்கும்போது மனம் மானுடம் பற்றிய சிந்தனையில் முழ்கி லயிக்கும்போது தற்போது செய்து வரும் வேலையோ, துறையோ சாதரணமாக தோன்றி ஆர்வமற்று போகிறது. முக்கியமாக கணினி துறையில் இருப்பவர்களுக்கு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை இருப்பதற்கு வாய்ப்பில்லை. கலைத்துறை தவிர மற்ற துறைகளில் ஏற்படும் நிபுணத்துவம் ஆர்வத்தால் மட்டுமே ஏற்படுவதாக நான் நினைக்கிறேன். மற்ற துறைகளில் எதையாவது சாதிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி தற்காலிகமானதே. காரணம் அதற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு சிறிய காலகட்டமே போதுமானது. ஆனால் கலைத்துறையில் அப்படி இல்லை. கலைத்துறையில் மொத்த வாழ்க்கையும் அர்ப்பணிக்கப்பட்டு மனம் முழுமையில் நிறைகிறது. கலைத்துறையில் செய்யப்படும் வேலையால் கிடைக்கும் மன நிறைவு மற்ற துறைகளில் கிடைப்பதில்லை.

மற்ற துறைகளில் சாதித்துக் கொண்டு இருக்கும்போதும் இலக்கியத்தை வந்தடையும்போது ஏற்படும் செயலின்மை அல்லது வெறுமை, ஒன்று அவர்களை கலைக்குள் இழுத்து வருகிறது. அல்லது தற்போது இருக்கும் துறையில் வெறுப்பு வந்து விடுகிறது ஜீவனில்லாத எதோ ஒன்றுடன் உரையாடிக் கொண்டிருப்பது போல.

மனம் ஒவ்வொரு நாளும் கலையை நாடினாலும் பொருளாதார் ரீதியில் குடும்ப பொறுப்புகளுக்குள் சிக்கி இருப்பவர்கள் அதை தள்ளி போட்டாக வேண்டியிருக்கிறது. ஓரளவு சிந்தனை செய்யும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இந்த ஆர்வத்தை அவன் கடைசி காலத்திற்கு தள்ளி போட்டுக் கொள்கிறான்.

நானும் அந்த எளிய மனிதர்களில் ஒருவன்தான்.

தங்களின் சிறுகதைகளே இரண்டு மூன்று நாட்களுக்கு செயலின்மைக்கு தள்ளி விடுகிறது. விஷ்ணுபுரம், வெண்முரசை ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று தள்ளி வைத்து இருக்கிறேன்.
சோமசுந்தரம் ராஜகோபால்
ஜெமோ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் வாசிப்பு பற்றிய செங்கல்பட்டு உரையில் ஒரு ஸ்பானிஷ் தளபதியின் பெயரை ஞாபகத்திற்கு கொண்டுவர முயன்றீர்கள். அது Cortes தானே? Cortes பற்றி எனக்கு பிடித்த பாடல் இது.

https://www.youtube.com/watch?v=m-b76yiqO1E
நீங்கள் பங்குகொள்ளும் நிகழ்வுகளின் பதிவுகளை வெங்கட்ராமன் உடனுக்குடன் பகிர்வது ஒரு முக்கியமான முயற்சி. அவருக்கு நன்றிகள்.
இப்படிக்கு,

சண்முகம்

நீங்கள் செங்கல்பட்டில் ஆற்றிய உரையைக் கேட்டேன்.

” எங்கிருந்து தான் இவ்வளவு ஆற்றல் இவருக்கு…” என்று தான் எண்ணத் தோன்றுகிறது. ஒன்றரை மணிநேரமும் கொஞ்சம் கூட தொய்வேயில்லை.

அவ்வளவு செறிவான உரை. ஆதங்கமும் அக்கரையும் உரை முழுதும் நீடித்திருக்கிறது.

சோகம் தாங்காமல் பாதியில நிறுத்தியிருந்த தஸ்தயேவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” நாவலை மறுபடியும் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

அன்புடன்
முத்து

 

முந்தைய கட்டுரைநகலிசைக் கலைஞன்
அடுத்த கட்டுரைகண்ணன் பிறந்த நாளில்..